Theneehead-1

Vol: 14                                                                                                                                                01.01.2017

சமத்துவ சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின்  புதுவருட வாழ்த்துக்கள்

மு. சந்திரகுமார்

chandrakumarஆற்றலினாலும் அர்ப்பணிப்பு நிறைந்த உழைப்பினாலும் மாற்றங்களை உண்டாக்கும் உறுதியோடு புதிய ஆண்டினை வரவேற்போம். புத்தாண்டு என்பது மகிழ்ச்சியை நம் முற்றங்களிலும் நம்முடைய மனதிலும் உண்டாக்குவதாகும். அந்த மகிழ்ச்சியையே நாம் கொண்டாடுகிறோம். ஆனால், அந்த மகிழ்ச்சியானது ஒரு நாளுடன் முடிந்து விடாமல், ஆண்டு முழுவதும் நீடித்திருக்க வேண்டும். வாழ்க்கை முழுவதும் நீடித்து நிலைக்க வேண்டும். அதுவே சிறப்பானது. புத்தாண்டை நாம் வரவேற்பதன் அர்த்தம் அப்படியானதாகவே அமைய வேண்டும். வெறுமனே சம்பிரதாயமான ஒரு நாள் மகிழ்ச்சியாகவோ ஒரு நாள் கொண்டாட்டமாகவோ அமைந்து விடாமல், ஆண்டு முழுவதும் நம் வாழ்க்கை முழுவதும் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்துழைக்க வேண்டும்.

நம்முடைய கனவுகளையும் நம் முன்னே உள்ள சவால்களையும் நாம் வென்றெடுக்கும்போதே வாழ்க்கை இனிமையாகும். தாயக விடுதலை என்பதும் சமூக விடுதலை என்பதும் எமது கனவாகும். அந்தக் கனவை நிறைவேற்றுவதற்கு நம்முன்னே ஆயிரமாயிரம் சவால்கள் உள்ளன. அந்தச் சவால்களை வெற்றிகொள்வதற்காக நாம் இரத்தம் சிந்தியிருக்கிறோம். கடுமையாக உழைப்பைச் செலுத்தியிருக்கிறோம். எனினும் எங்களால் அந்த இலக்கை இன்னும் எட்டமுடியாதுள்ளது. ஆகவே நம் சிந்தனையிலும் செயற்பாடுகளிலும் மாற்றங்களை உண்டாக்க வேண்டியுள்ளது. அந்த மாற்றங்களே உண்மையான மாற்றங்களையும் வெற்றியையும் தரும். புதிய ஆண்டில் இந்தச் சிந்தனை மாற்றத்தையும் செயற்பாட்டு மாற்றத்தையும் நிகழ்த்தி, நம் வாழ்க்கையிலும் வரலாற்றிலும் மாற்றங்களை உண்டாக்குவோம். புதிய ஆண்டு என்பது மாற்றங்களுக்கான ஆண்டாக, அந்த மாற்றத்தின் வெற்றிக்கான ஆண்டாக அமையட்டும். உண்மையான அரசியல் மாற்றங்களையும் சமத்துவ, சமூக வாழ்வையும் உருவாக்கும் ஆண்டாக மலர வைப்பதற்கு சமத்துவ சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு உழைக்கும் என்ற மகிழ்சியான சேதியை இந்த நன்னாளில் தந்து வாழ்த்துகிறது. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

மு. சந்திரகுமார்

முன்நாள் பாராளுமன்ற உறுப்பினர்,

அமைப்பாளர்,

சமத்துவ, சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு

dantv