Theneehead-1

Vol: 14                                                                                                                                                01.01.2017

மன்னிப்பு கோருதல் அருங்குணம்

By ஆர். வெங்கடேஷ்  |  

எழுபதாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பேர்ல் துறைமுகத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2,403 பேர் மரணம், 19 கடற்படை கப்பல்கள் நாசம், 328 விமானப்படை விமானங்கள் அழிப்பு. 353 ஜப்pearl-1பானிய விமானப்படை விமானங்கள் ஏற்படுத்திய நாசத்தால் அமெரிக்கா, இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்துக் கொள்ள நேர்ந்தது.

இதற்குப் பதிலடியாகவே அமெரிக்கா, ஜப்பான் மீது அணுகுண்டு வீசியது. 1,29,000 பேர்களை பலிவாங்கிய ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதல் பேரழிவு மனிதகுலத்தையே கலங்கடித்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இவ்விரு நாடுகளும் வர்த்தக ரீதியான, அரசு ரீதியான உறவுகளை மேம்படுத்திக்கொண்டு வந்தாலும், அடிமனதில் ஆழமான வெறுப்புணர்வும் நம்பிக்கையின்மையும் வேருன்றி இருந்தன.
கடந்த சில ஆண்டுகளாக இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட நல்லெண்ண நடவடிக்கைகள் மூலம், இதுநாள் வரை தொடத் தயங்கிய ஒரு விஷயம், தற்போது தொடப்பட்டது.

சமீபத்திய தமது அமெரிக்கப் பயணத்தில், பேர்ல் துறைமுகத் தாக்குதலில் மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி பாவத்தைக் கழுவிக்கொண்டார் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே.ஏற்கெனவே அமெரிக்க அதிபர் ஒபாமா மேற்கொண்ட ஜப்பான் பயணத்தில் ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டு மரணமடைந்தவர்களின் நினைவுகளைப் போற்றினார். அதன் தொடர்ச்சியாக, அபேவின் அமெரிக்கப் பயணம் அமைந்தது.இருவரும், தத்தமது நாடுகள் செய்த கொடுஞ்செயல்களுக்கு, வரலாற்றுத் பிழைகளுக்கு மன்னிப்பு கோரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

மன்னிப்பு கோருவது, இருதரப்பிலுமே அவமானமாக கருதப்படுகிறது. தாம் தவறே செய்யவில்லை என்ற எண்ணம் தொடங்கி, குற்றவுணர்ச்சி மேலிட இருக்கும் பல்வேறு தரப்பு மக்களையும் அரசியல்வாதிகளையும் அமைப்புகளையும் இருநாடுகளுமே கொண்டிருக்கின்றன.பல்வேறு கருத்து நிலைப்பாடுகளில் எது சரி, எது தவறு என்ற குழப்பம் நீடிப்பதால் அரசுகள் அறம்சார்ந்த முடிவுகளை எடுக்க முடிவதில்லை.பொதுமக்களின் கருத்துகளுக்கு எதிராகப் போய்விடுவோமோ என்ற அச்சம் காரணமாகவே, அரசுகள் தங்கள் தவறுகளுக்கு மன்னிப்பு கோருவதில்லை.

பிற நாடுகளின் முன்னிலையில் தம் கௌரவத்தை விட்டுக்கொடுப்பதைவிட அமைதி காப்பதே புத்திசாலித்தனம் என்பதே எண்ணம். அதனால், தவறுகள் புறமொதுக்கப்படுகின்றன அல்லது உதட்டளவில் சமரசம், சமாதானம் என்ற வார்த்தைகளால் பூசி மெழுகப்படுகின்றன.

அமெரிக்க - ஜப்பானிய உறவில் சமரசம்தான் முன்னிலை வகிக்கிறது. இந்தச் சமரசமும் ரொம்பவும் காரியரீதியானது. அரசியல்ரீதியானது. உண்மையான மனமாற்றத்தால் எழுந்ததல்ல என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்து.ஏனெனில், அமெரிக்காவோடு மேற்கொள்ளப்படும் சமாதான, சமரச முயற்சிகளை சீனாவோடோ, தென் கொரியாவோடோ ஜப்பான் மேற்கொள்ளவில்லை.இவ்விரு நாடுகளிலும், ஜப்பான் முன்னெடுத்த பல்வேறு போர்முறைகள் அங்கே ஆழமான காயத்தை இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது என்பது கண்கூடு. அதற்கான வருத்தமோ, குற்றவுணர்ச்சியோ தெரியவில்லை.

ஜப்பான், அமெரிக்காவோடு மட்டும் சமரசம் ஏன்? அதற்கு முக்கிய காரணம், வளர்ந்து வரும் சீனாவும் அதன் ராணுவ பலமும்தான். மற்றொரு காரணம், அமெரிக்காவின் புதிய அதிபராக சமீபத்தில் தேர்வு பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் கொண்டுள்ள ஜப்பானுக்கு எதிரான நிலைப்பாடு.

ஒபாமா, டோக்கியோ சென்றபோது, டிரம்ப் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் தமது வெறுப்பைப் பதிவு செய்திருந்தார். தமது பிரசாரத்தின்போது, ஜப்பானைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா அதிகமாக செலவு செய்வதாகவும், அவர்களுக்குத் தேவையான அணு ஆயுதங்களை அவர்களே தயாரித்துக் கொள்ளட்டும் என்றும் பேசினார் டிரம்ப். பக்கத்தில் சீனா போன்ற  நாட்டை வைத்துக்கொண்டிருக்கும் ஜப்பானுக்கு, அமெரிக்க ராணுவ உதவி எப்போதும் தேவை. டிரம்ப், பாதுகாப்பு உதவிகளுக்கு முட்டுக்கட்டை போடும் நிலை ஏற்பட்டால், அதனால், இழப்பு ஜப்பானுக்கே.

இதனை உணர்ந்தே, டிரம்ப் அதிபராகத் தேர்வு பெற்றவுடன் சந்தித்தார் அபே. உலக அரசியல் தலைவர்களில் டிரம்ப்பை முதலில் சந்தித்தவர் என்ற பெருமை அபேவுக்கே உண்டு. அதற்குக் காரணம் ஜப்பானின் கையறு நிலை, இயலாமை.டிரம்ப் கட்டமைத்து முன்னிலைப்படுத்தும் அமெரிக்க தேசிய உணர்ச்சியினாலேயே தற்போது அவரது வெற்றி சாத்தியமாகி உள்ளது. இந்த உணர்வுக்குக் குந்தகம் விளைவித்த ஜப்பானுக்கு உதவிகளும் சலுகைகளும் தொடரவேண்டுமா என்ற கேள்வி நாளை எழலாம்.

இதனை எதிர்கொள்ளவே, பேர்ல் துறைமுக தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி தம் தவறில் இருந்து நாட்டை விடுவித்துக்கொள்ள முயன்றிருக்கிறார் அபே.

டொனால்ட் டிரம்ப் சீனா குறித்து, தெற்காசியா குறித்து என்ன நிலைப்பாடுகளை எடுக்கப் போகிறார் யாருடைய உதவிகள் அவருக்குத் தேவை அல்லது தேவையில்லை என்பதைப் பொருத்தே, ஜப்பானின் தலையெழுத்து அமையும்.பழைய தவறுகளை அங்கீகரித்து, ஏற்றுக்கொள்வது ஓர் அருங்குணம். ஆனால், முந்தைய தலைமுறை அரசியல்வாதிகளின் தவறான அணுகுமுறைக்காகத் தங்களைப் பொறுப்பாக்குவது அபத்தம் என்ற எண்ணம் இருவரிடமும் இருப்பது வேதனை.
வரலாற்று நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு விட்டோம், இனி போர்களில் ஈடுபடாமல் இருப்போம் என்றார் ஷின்ஷோ அபே. ஆனால், இருவரும் மன்னிப்பு கோரியிருந்தால், வரலாற்றில் நிரந்தர இடத்தைப் பிடித்திருப்பார்கள்.

Dinamani -

dantv