வீடு செல்லப்போவது யார்?

 -    கருணாகரன்


புதிய பிரதமர் நியமனத்தைத் தொடர்ந்து புதிய அமைச்சரவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய பிரதமர் நியமனத்துக்கான காரணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிveedu6றிசேன விளக்கியிருக்கிறார்.

அதில் அவர் தன்மீதான கொலை முயற்சிக்குத் திட்டமிட்டது தொடக்கம் நாட்டின் நலனுக்கு எதிராகச் செயற்பட்டது வரையிலான பல குற்றச்சாட்டுகளை ரணில் விக்கிரமசிங்க தரப்பினர் மீது சுமத்தியுள்ளார்.

இதன் மூலம்  ஏற்கனவே பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை தான் எதற்கான நீக்கியிருக்கிறேன் என்பதற்கான காரணத்தையும் நிறுவியிருக்கிறார்.

ஜனாதிபதியின் கூற்றுப்படி இவை பாரதூரமான குற்றச்சாட்டுகள். எதிர்காலத்தில் இவை தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளுக்கும் விவாதங்களுக்கும் இடமுண்டு.

ஆனால், இது தொடர்பாக தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கியுள்ளார் ரணில் விக்கிரசிங்க. தன்னைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கினாலும் தான் அலரிமாளிகையை விட்டு வெளியேற மாட்டேன் என அங்கேயே தங்கியிருக்கிறார் விக்கிரமசிங்க.

மட்டுமல்ல, பாராளுமன்றத்தில் தன்னுடைய பலத்தை நிரூபிக்க முடியும் எனவும் கூறியிருக்கிறார். இதோடு கொழும்பில் (30.10.2018) தனக்கான ஆதரவுப் போராட்டமொன்றையும் நடத்தியிருக்கிறார்.

இதில் கலந்து கொண்டவர்கள் 'ஜனநாயகத்தைக் காப்போம்' என்று குரல் எழுப்பியிருக்கிறார்கள். கொழும்பின் உயர் வர்க்கத்தினரும் சிவில் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இதில் முக்கியமான பங்கேற்பாளர்களாக இருந்துள்ளனர்.

இவர்கள் எல்லாம் இந்த நெருக்கடி நிலை அல்லது மாற்றத்துக்கான சூழல் உருவாகும் வரையில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? எங்கே இருந்தனர் என்ற கேள்விகளும் உண்டு.

இப்பொழுது அரசியலமைப்புப் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் நாடு முழுவதிலும் நடந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொருவரும் 19 ஆவது திருத்தம் என்றால் என்ன? அது எப்படியானது? என்பதை அக்குவேறு ஆணி வேறாக அலசிக் கொண்டிருக்கிறார்கள்.

19 ஆவது திருத்தத்தைப் பற்றி ஒவ்வொரு குடிமக்களும் தெரிந்து கொள்வதற்கு நடந்துள்ள இந்த (பிரதமர் பதவி நீக்க) விவகாரம் வாய்ப்பளித்துள்ளது.

இதை இவ்வளவு காலமும் தங்களுக்குரியதல்ல. ஏதோ தலைவர்களுக்குரிய சங்கதி என்ற மாதிரியே பெரும்பாலானவர்கள் கருதிக் கொண்டிருந்தனர்.

நெருக்கடிகள் தீவிர நிலையை எட்டும்போதே அதைப் பற்றிய புரிதலும் அதைத் தீர்ப்பதற்கான அக்கறையும் மக்களிடம் ஏற்படுகிறது. மக்களிடம் மட்டுமல்ல, நாட்டிற்கும் அப்பொழுதே ஏற்படுகிறது. தூர நோக்கோடு சிந்திக்கும் நிலை இருந்தால் இப்படியெல்லாம் கொந்தளிப்பும் தடுமாற்றமும் சீரழிவும் பதற்றமும் இருக்காது.
இருந்தாலும் அடுத்ததாக என்ன நடக்கும் என இப்போதைக்கு எதையும் அறுதியிட்டுக் கூற முடியாது. இலங்கையின் அண்மைக்கால அரசியல் யதார்த்தம் எந்தக் கணிப்புகளுக்கும் உட்படாத வகையிலானது.

அரசியற் பாரம்பரியம், அரசியல் மரபு, கண்ணியம், அரசியல் நாகரீகம், மக்கள் நலன் போன்றவையைப் பின்பற்றும் ஒரு அரசியல் சூழலில் அந்தப் பாரம்பரியத்தை அல்லது அரசியல் நாகரீகத்தை அடிப்படையாகக் கொண்டு  மதிப்பீடுகளைச் செய்ய முடியும்.

இங்கே அந்தத் தன்மை வழக்கொழிந்த நிலைக்குள்ளாகி விட்டது. இதற்கு ஒரு வகையில் மக்களும்தான் காரணம். மக்கள் சரியானவர்களை இனங்கண்டு தெரிவு செய்தால் தவறானவர்கள் அதிகாரத்துக்கு வரமாட்டார்கள். தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகளும் இருக்காது. தவறானவர்களைத் தெரிவு செய்தால் தவறுகளே நடக்கும்.

தற்போது அரசியல் அதிகாரப் போட்டியில் மோதிக் கொண்டிருக்கும் ஐ.தே.கவும் சு. கவும் கடந்த எழுபது ஆண்டுகாலமாக மாறி மாறி ஆட்சி செய்து வந்திருக்கின்றன. இந்தக் காலத்தில் எத்தனை லட்சம் உயிர்கள் பலியிடப்பட்டன என்பதை ஒரு கணம் புத்தியுள்ளவர்கள் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும்.

இன்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டலாம். மோசமான அழிவுகளுக்கும் அந்நிய சக்திகளின் தலையீட்டுக்கும் இவை இரண்டு தரப்புமே பொறுப்பு. இவை இரண்டு தரப்புமே வழியேற்படுத்தின.

ஆனால் இதைத் தொடர்ந்து நாம் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கவும் முடியாது. அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேணும். அதுவே இன்று அவசியமானது.

இன்றைய சூழலைப் பயன்படுத்தி வெளிச்சக்திகள் நாட்டின் உள்  விவகாரங்களில் தலையிடக் கூடிய சாத்தியங்கள் தென்படுகின்றன. இது நாட்டின் இறைமையைப் பாதிக்கும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அது உள்நாட்டில் உள்ள சக்திகளோடும் மக்களோடும் பேசித் தீர்க்கப்பட வேண்டும். இதுவே ஒரு நாட்டுக்குரிய மரபும் பாரம்பரியமாக இருக்க வேணும்.

ஆனால், அண்மைக்காலமாக எந்தப் பிரச்சினையையும் வெளிச்சக்திகளோடு பேசும் வழக்கம் உருவாகியுள்ளது. இது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல.பொறுப்பான பதவிகளில் இருப்போரும் கட்சிகளும் இதைச் செய்யக் கூடாது. தங்களுக்கு நெருக்கடி என்பதற்காக நாட்டுக்கே நெருக்கடியைத் தரும் விதமாக நடக்கக் கூடாது.

இப்போதைய நிலையில் நடைமுறையில்  புதிய பிரதமரான மகிந்த ராஜபக்ஸவிடமே அதிகாரம் உள்ளது. அவரின் கீழ் புதிய அமைச்சரவையும் உள்ளது. ஆனால், பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையை விட்டு வெளியேறப்போவதில்லை என்று ரணில் விக்கிரசிங்க கூறியிருக்கிறார்.

இவற்றின் அடுத்த கட்டம் எப்படி அமையும் என்று உறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. எல்லாவற்றுக்கும் பாராளுமன்றத்தைக் கூட்டும்போது முடிவு தெரியும். 

'எதிர்வரும் 16 ஆம் திகதி பாராளுமன்றம் சம்பிரதாயபூர்வமாக கூடவுள்ளது. அதன்போது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை எனத் தெரிவித்திருக்கிறார்கள் அமைச்சரவை பேச்சாளர்களான கெஹெலிய ரம்புக்வெல்லவும் மற்றும் மஹிந்த சமரசிங்கவும். எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற  அமர்வில் ஜனாதிபதி உரையாற்றுவார் எனவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் குறிப்பிடும்போது  'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  ஆகியோர் தலைமையிலான  அரசாங்கத்திற்கு   121  பேரைக்கொண்ட  பெரும்பான்மை பலம் இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

இந் நிலையில் புதிய அரசாங்கம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமாயின்  ஐக்கிய தேசியக்கட்சி  பிரதமருக்கு எதிராக  நம்பிக்கையில்லாப் பிரேணையை கொண்டுவரலாம்.  அவ்வாறு கொண்டுவந்தால் நாங்கள்   சரியான முறையின் அடிப்படையில்   பெரும்பான்மையை நிரூபிப்போம். அதில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு   113 பேர் ஆதரவளித்தால்   நாம்  வீடுசெல்ல தயாராக இருக்கின்றோம்' எனவும் கூறியிருக்கிறார்கள்.

இதேவேளை 'ஜனாதிபதி  அரசியலமைப்பின் பிரகாரமே  புதிய அரசாங்கத்தை உருவாக்கியிருக்கின்றார். அதுதொடர்பில்  யாருக்காவது பிரச்சினைகள் இருந்தால்  அவர்கள்   உயர்நீதிமன்றத்தை  நாட முடியும்.    இல்லாவிடின் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு  எம்மை  கோரமுடியும்' என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

இதை ஒத்ததாக எதிர்த்தரப்புகளிலும் யாரும் கருத்துகளை முன்வைக்கக் கூடும். இந்த நிலைமைகளைக் குறித்து சபாநாயகர் கரு ஜெயசூரிய ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். பாராளுமன்றத்தைக் கூட வேண்டும் என கட்சித்தலைவர்களில் ஒரு சாரார் கேட்டிருக்கிறார்கள்.

 ஆனால் நாட்டின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு, நிர்வாக ஏற்பாடுகள் என்பவற்றைக் கவனத்திற் கொண்டே தாம் தீர்மானம் எடுத்திருப்பதாகவும் அதை நாட்டிலுள்ள அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டிருக்கிறார்.

இப்பொழுது எது நடந்தாலும் அதற்குப் பொறுப்பு ஜனாதிபதி என்ற வகையில் அவர் தன்னுடைய பொறுப்பின் மீதே அதிக கவனம் செலுத்தக் கூடும்.

இதற்கிடையில் எப்போதும் பொதுத் தேர்தலை நடத்தக் கூடிய நிலை ஒன்று ஏற்படக் கூடும் என்ற வகையில் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்திருக்கிறார். அப்படியென்றால் நாடு உண்மையிலேயே தேர்தல் ஒன்றை எதிர்பார்க்கிறதா? என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன. இதேவேளை தமது நிர்வாகம் பொறுப்பேற்ற கையோடு மாகாணசபைத் தேர்தல்கள் நடக்கலாம் என புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்திருக்கிறார்.

எப்படியோ மாற்றங்களை எதிர்பார்த்திருக்கிறது நாடு. அது எப்படியான மாற்றங்கள் என்பதைத் தீர்மானிக்க வேண்டியவை எதிர்வரும் நாட்கள். அதை உருவாக்குவது மக்கள். ஆமாம், எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் படித்துக் கொண்டும் இருக்கும் மக்களாகிய நாமே. எங்களுக்கே கூடுதலான பொறுப்பும் கடமையும் உண்டு. ஏனெனில் இது எங்கள் நாடு. நாம் இந்த நாட்டின் மக்கள்.

Theneehead-1

   Vol:17                                                                                                                               01.11.2018