நிச்சயமற்ற நிலையில் இருந்து நெருக்கடியை நோக்கி.....

- பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட

இலங்கை ஜனாதிபதி கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவிநீக்கிவிட்டு அதற்கு முதல்நாள் வரை தனது அரசியல் எதிரியாக விளங்கிய  முன்mahin-ranilctnனாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்தார். இது தனக்கும் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் தீவிரமடைந்திருந்த ஆழமான அரசியல் தகராறைத் தீர்த்துக்கொள்ளுமுகமாக சிறிசேன மேற்கொண்ட அதிர்ச்சியான நடவடிக்கை. ஆனால், இந்த நடவடிக்கை முன்னென்றும் இல்லாதவகையிலான அரசியலமைப்பு நெருக்கடிக்குள் இலங்கையைத் தள்ளிவிட்டிருக்கிறது. மூன்று தலைவர்கள் மத்தியிலான மும்முனை அதிகாரப்போட்டியின் ஆபத்தானதொரு கட்டத்தின் தொடக்கமாக இது  அமையக்கூடியதாகும்.

பிரதமர் பதவிக்கு அரசியலமைப்பு ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வெற்றிடம் ஏற்படாத நிலையில் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுவதால் உணரப்படுகின்ற தெளிவின்மையே நெருக்கடியின் மையப்புள்ளியாக விளங்குகிறது.        

விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிய உத்தியோகபூர்வ  கடிதத்தில் சிறிசேன குறிப்பிட்டிருக்கும் அரசியலமைப்பு ஏற்பாடு பிரதமர் ஒருவரைப் பதவியில் இருந்து நீக்குவதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கவில்லை. அரசியலமைப்பின் 42 (4) பிரிவு பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பதற்கு மாத்திரமே வகைசெய்கிறது. பிரதமரை நியமிக்கும் அதிகாரத்தை தான் கொண்டிருப்பதால் அவரைப் பதவிநீக்குவதற்கான அதிகாரமும்  உள்ளார்ந்தமாக தனக்கு இருக்கிறது என்ற நிலைப்பாட்டை ஜனாதிபதி எடுத்திருக்கிறார். நியமிக்கும் அதிகாரத்தைக் கொண்டவரால் அவரது விருப்பப்படி பதவி நீக்கப்படுவதற்கு பிரதமர் ஒரு அரசாங்க உத்தியோகத்தர் அல்ல, பிரதமர்  பதவி என்பது நிறைவேற்று அதிகாரபீடத்திலிருந்து பாதுகாப்பைக் கொண்ட ஒரு அரசியலமைப்புப் பதவியாகும்.இதுவே அரசியலமைப்புத் தகராறின் மையப்பொருளாகும்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரிவினரை மாற்றியமைக்கும் முழு நடவடிக்கையுமே கடும் இரகசியமாகவும் அவசரமாகவும் நிறைவேற்றிமுடிக்கப்பட்டிருக்கிறது போலத்தோன்றுகிறது.சிறிசேனவின் கடிதம் ( பிரதமரைப் பதவி நீக்குவது தொடர்பானது)  ராஜபக்சவை அவர் பதவிப்பிரமாணம் செய்துவைப்பதற்கு முன்னதாக நேரகாலத்தோடு விக்கிமசிங்கவைச் சென்றடைந்ததா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.அதனால் நடந்தேறியிருப்பதை ஒரு ' அரசியலமைப்பச் சதி ' என்று சில அவதானிகள் வர்ணிக்கிறார்கள்.

விக்கிரமசிங்க எடுத்திருக்கும் நிலைப்பாடு அரசியலமைப்புத் தகராறின் பாரதூரத்தன்மையை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது.ஜனாதிபதியின் நடவடிக்கையின் அரசியலமைப்புத் தகுதியை நிராகரித்திருக்கும் அவர் தனக்கு பாராளுமன்றத்தில் இன்னமும் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக வாதிட்டிருக்கிறார். தான் பிரதமராக பதவியில் தொடரமுடியுமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு அரசியலமைப்பின் வழியாக அனுமதியளிக்கப்பட்ட அதிகாரம் பாராளுமன்றத்திற்கு மாத்திரமே இருக்கிறது என்பதே அவரது வாதத்தின் அடிப்படை.தனக்கும் அமைச்சரவைக்கும் எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படாதவரை தனது  பிரதமர் பதவியை ஜனாதிபதி தன் னெண்ணத்தில் செல்லுபடியற்றதாக்கமுடியாது என்றும் அவர் உறுதியாகக்கூறுகிறார்.      

சில மாதங்களுக்கு முன்னர் தனக்கெதிராக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று தோற்கடிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியிருக்கும் விக்கிரமசிங்க, அதனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் தன்மீது நம்பிக்கை வெளிப்படுத்திய சூழ்நிலை மாற்றப்படாமல் தொடருகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.       

விக்கிரமசிங்கவின் வாதம் அவரினதும் சிறிசேனவினதும் கூட்டு அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின் பின்புலத்திலேயே அதன் முக்கியத்துவத்தைப் பெறுகிறது போலத் தோன்றுகிறது. 1978 அரசியலமைப்பின் கீழும் 2010 ஆம் ஆண்டில் அந்த அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட 18 ஆவது திருத்தத்தின் கீழும் ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரங்களை 19 ஆவது  திருத்தம் குறைத்துவிட்டது. அந்த திருத்தத்தினால்  அகற்றப்பட்ட ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களில் பிரதமர் மீது செலுத்தக்கூடியதாக இருந்த அதிகாரங்களும் அடங்கும்.         

இரட்டை நிறைவேற்று அதிகாரத்தை உருவாக்கிய 19 ஆவது திருத்தம் ஜனாதிபதியின் தன்னிச்சையான நடவடிக்கைகளில் இருந்து பிரதமர் பதவிக்கு பாதுகாப்பான ஒரு நிலையைக் கொடுக்கிறது. அதனால், பிரதமர் பதவி மட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் மாத்திரமே காலியாகும். அதாவது மரணம், தனாகவே பதவி விலகல், பாராளுமன்றத்தில் ஆதரவை இழத்தல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினராக இல்லாமல் போகும் நிலை ஆகிய சூழ்நிலைகளிலேயே பிரதமர் பதவி காலியாகும். ஜனாதிபதியினால் பிரதமர் பதவி நீக்கப்படுவது நிச்சயமாக இந்தப் பட்டியலில் இல்லை.       

இந்த மாற்றத்தினால், 19 ஆவது திருத்தம் அரச தலைவருக்கும் பிரதமருக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையேயான உறவுமுறை தொடர்பில் வெஸ்ட்மினிஸ்டர் கட்டமைப்பை திரும்ப ஏற்படுத்தியிருக்கிறது. இவையெல்லாம் சேர்ந்து சிறிசேனவின் நடவடிக்கைகளின் அரசியலமைப்பு ரீதிரான தகைமையையும் ஜனநாயக நியாயப்பாட்டையும்  தெளிவற்றதாக்குகின்றன.       

ஐக்கிய தேசிய அரசாங்கத்தின் ஒரு பங்காளியாக இருந்த  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆளும் கூட்டணியில்  இருந்து விலகுவதாக சபாநாயகருக்கு அறிவித்தபோது அமைச்சரவையும் இயல்பாகவே ககை்கப்பட்டதாகிறது.. அதனால் பிரதமர் பதவியும் காலியாகிறது என்பதே ஜனாதிபதி சார்பில் முன்வைக்கப்படுகின்ற ஒரு வாதமாகும். இது அரசியலமைப்பின் எந்தவொரு பிரத்தியேகமான ஏற்பாட்டை அடிப்படையாகக்கொண்டு எழுகின்ற வாதமல்ல. இது வெறுமனே ஒரு அரசியல் வாதமாகும்.கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற தரப்புகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை உறுதிசெய்வதைத் தவிர இந்த வாதம் வேறு எதையும் செய்யவில்லை. அமைச்சரவை அதன் அரசியலமைப்புத் தகுதியை தானாகவே இழப்பதற்கும் பிரதமராக இருப்பவர் அப்பதவியை தானாகவே இழப்பதற்கும் இது வழிவகுக்கவில்லை.

தெளிவாக்கல் இல்லை      

கடந்த ஞாயிறன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன தற்போது தோன்றியிருக்கும் அரசியலமைப்புப் பிரச்சினையை தெளிவுபடுத்தவில்லை. பிரதமர் என்ற வகையில் விக்கிரமசிங்கவுடன் ஆட்சியில் பங்காளியாக தன்னால் ஏன் செயற்படமுடியவில்லை என்பதற்கான அரசியல் மற்றும் தனிப்பட்ட காரணங்களையே ஜனாதிபதி எடுத்துக்கூறினார். முழுமையாக அரசியலமைப்பின் பிரகாரமே செயற்பட்டிருப்பதாக அவர் கூறியிருப்பது ஒரு உரிமைகோரும் அறிவிப்பேயாகும். அது தெளிவாக்கத்தை வேண்டிநிற்கிறது. இரு தலைவர்களுக்கும் இடையிலான உறவுமுறை முற்றுமுழுதாக முறிந்து அவர்களது கூட்டணி நிலைகுலைந்து போனதல்ல இங்குள் தகராறு. சிறிசேன வெள்ளிக்கிழமை மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் அரசியலமைப்புத் தகுதியே இங்கு சந்தேகத்துக்குள்ளாகிறது. அந்த நடவடிக்கைகள் எல்லாமே செல்லுபடியாகக்கூடியவை என்றால் அவை இலங்கையின் எதிர்கால அரசியலமைப்பு ஆட்சிமுறைக்கு தவறான ஒரு முன்னுதாரணத்தை வகுத்துவிடும்.19 ஆவது திருத்தத்தின் உண்மையான அர்த்தத்திற்கும் உணர்விற்கும் முரணாக அமையக்கூடியதாக எந்தவொரு பிரதமருமே  ஜனாதிபதியினால் தன்னிச்சையாக பதவிநீக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பாக இருக்கப்போவதில்லை. இத்தகைய சூழ்நிலைகள் அரசியலமைப்புச் சந்தேகங்களைத் தீர்த்துவைப்பதற்கு நீதித்துறையின் தலையீட்டையும் அவசியப்படுத்தும்.         

இதனிடையே சிறிசேனவுக்கும் ராஜபக்சவுக்கும் இடையிலான புதிய கூட்டணிக்கும் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையியான அரசியல் தகராறு வெளிப்படையான மோதல் கட்டமொன்றை இப்போது எட்டிவிட்டது. விக்கிரமசிங்க கொழும்பில்  பிரதமரின் அலுவலகத்தில் இருந்தும் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்தும் வெளியேறுவதற்கு மறுப்புத்தெரிவித்திருக்கிறார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய ஒருவர் பிரதமராக வெளிக்கிளம்பும் வரை விக்கிரமசிங்கவின் உரிமைகளும் வரப்பிரசாதங்களும் பாதுகாக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்து சபாநாயகர் கரு ஜெயசூரிய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அரசியலமைப்பு ரீதியாக பிரதமராக விக்கிரமசிங்கவே இன்னமும் பிரதமராக இருக்கிறார் என்பதை இதன் மூலமாக உள்ளார்ந்தமாக சபாநாயகர் அங்கீகரித்திருக்கிறார்.      

விக்கிரமசிங்கவும் ஐக்கிய தேசிய கட்சியும் போராட்டத்தை பாராளுமன்றத்துக்கு எடுத்துச்செல்லவே விரும்புகிறார்கள். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெறமுடியும் என்று ஐ.தே.க. உணருகிறது. அதேவேளை பாராளுமன்றம் நவம்பர் 16 வரை ஜனாதிபதியினால் இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. தற்போதைய எண்ணிக்கை நிலைவரங்களின்படி ராஜபக்சவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லை. எதிர்வரும் நாட்கள் எம்.பி.க்களை விலைபேசுவதற்கு சிறிசேனவுக்கும் புதிய பிரதமருக்கும் போதுமான அவகாசத்தைக் கொடுக்கும். கடந்த வெள்ளிக்கிழமை முதல் அரச அதிகாரம் மற்றும் நிறுவனங்கள் மீதான பிடியை வலுப்படுத்திக்கொண்டிருக்கும் சக்திமிக்க ( சிறிசேன--  ராஜபக்ச ) கூட்டுக்கு எதிராக வரிந்துகட்டிக்கொண்டு நிற்கும் விக்கிரமசிங்கவுக்கும் ஐ.தே.க.வுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட தெரிவுகள் மாத்திரமே இருக்கின்றன. அதாவது சபைக்குள் பலத்தை நிரூபிப்பது, ராஜபக்சவுக்கு எதிராக பிரேரணையொன்றைக் கொண்டுவருவது, அரசியல் ரீதியாக அடிபணிய மறுப்பது. அத்துடன் விக்கிரமசிங்க நீதிமன்றத்தையும் நாடக்கூடும்.         

ஐ.தே.க. இவ்வாறு செய்யுமானால் நிறுவன ரீதியான தனது சுதந்திரத்தையும் சுயாதிபத்தியத்தையும் மீளப்பெறும் பாதையில் சென்றுகொண்டிருக்கும் உச்சநீதிமன்றத்திடம் அதியுயர் மட்ட அரசியல்வாதிகள் மத்தியிலான மிகுந்த சர்ச்சைக்குரிய அதிகாரப்போட்டி தொடர்பாக தீர்ப்புக் கூறுமாறு கேட்கப்படும். எதிர்வரும் நாட்கள் நீதித்துறைக்கும் கூட கஷ்டமானவையாகவே இருக்கலாம்.   

 மறு பக்கம்      

அதேவேளை, தனது அரசியல் உயிர்வாழ்வுக்கான அடுத்த நகர்வுகளைத் திட்டமிடும்போது விக்கிரமசிங்க தற்போதைய அரசியல் குழப்பநிலைக்கு ஓரளவுக்கு தன்மீதும் குற்றப்பொறுப்பு இருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும். கூட்டரசாங்கத்தை நடத்துவதில் ஜனாதிபதியுடன் உறுதியானதும் நடைமுறைச்சாத்தியமானதுமான உறவுமுறையொன்றை ஏற்படுத்திக்கொள்வதில் விக்கிரமசிங்கவின் இயலாமை, ஊழலற்ற ஆட்சிமுறையையும் அரசியலையும் கொண்டுவருவதற்காக  2015 ஆம் ஆண்டில் சிறிசேனவும் தானும் கூட்டாக மக்களிடம் பெற்ற ஆணையை அக்கறையுடன் நோக்காமல் அலட்சியம் செய்தமை, அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் நல்லிணக்கச் செயன்முறைகள் தொடர்பில் காட்டிய மெத்தனப்போக்கு, சிறந்த பொருளாதார முகாமைத்துவத்துக்கான மக்களின் கோரிக்கைகளை முற்றாக அலட்சியம் செய்தமை எல்லாம் சேர்ந்து மக்கள் மத்தியிலான விக்கிரமசிங்கவின் மதிப்பை அருகச்செய்துவிட்டன.    

இதுவே மிகப்பெரிய அரசியல் முரண்நகை. 2015 ஆண்டுக்கு விசுவாசமாகச் செயற்படுவதில் சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் கண்ட கூட்டுத் தோல்வி ராஜபக்சவை அதிகாரத்தில் இருந்து இறக்கிய கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் அழைப்பின் பேரில் அவரை இப்போது மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. தற்போதைய நெருக்கடி எந்தவிதமான திருப்பத்தை எடுத்தாலும் இலங்கையின் நலிவான ஜனநாயக மீட்சிச் செயன்முறைகள் ஆபத்தில் சிக்கியிருக்கின்றன என்று தான் கூறவேண்டியிருக்கிறது.

தமிழில்: வீரகேசரி

Theneehead-1

   Vol:17                                                                                                                               01.11.2018