அதிகரிக்கிறது பதற்றம்: ரஷியர்கள் வருகைக்கு உக்ரைன் திடீர் தடை

16 முதல் 60 வயது கொண்ட ரஷிய ஆண்கள் உக்ரைனுக்குள் வருவதற்கு அந்த நாடு வெள்ளிக்கிழமை தடை விதித்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பrussia-ukrainதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.  இதுகுறித்து அந்த நாட்டு எல்லைப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பெட்ரோ சிஹிகால் தொலைக்காட்சியில் கூறுகையில், 16 வயது முதல் 60 வயது வரை கொண்ட ரஷியர்கள் உக்ரைன் வருவதற்கு வெள்ளிக்கிழமை முதல் அனுமதி மறுக்கப்படும் என்று தெரிவித்தார். எனினும், உக்ரைனில் நடைபெறும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக வரும் இந்த வயதுக்குள்பட்டவர்களுக்கு மட்டும், மனிதாபிமான அடிப்படையில் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ தெரிவித்தார்.

 கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைன் உள்நாட்டுப் போர் தொடங்கியபோது, அந்த நாட்டுக்குள் ஊடுருவிய ரஷிய ஆதரவாளர்கள் கிளர்ச்சிப் படைகளை அமைத்ததாகக் கூறப்படுகிறது.  தற்போது சர்ச்சைக்குரிய கிரைமியா கடல் பகுதியில் உக்ரைன் போர்க் கப்பல்களை ரஷியா சிறைப்பிடித்து, அவற்றிலிருந்த வீரர்களைக் கைது செய்துள்ளதால் இரு நாடுகளுக்கும் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், மீண்டும் அதுபோல் ரகசியப் படைகள் உருவாக்கப்படுவதைத் தடுப்பதற்காகவே 16 முதல் 60 வயது வரை கொண்ட ஆண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.  இந்த நடவடிக்கை, ரஷியாவின் சீற்றத்தைத் தூண்டும் எனவும், இதற்குப் பதிலடியாக உக்ரைனைச் சேர்ந்தவர்களுக்கும் ரஷிய ஆளுகைக்குள்பட்ட பகுதிகளில் தடை விதிக்கப்படலாம் எனவும் பார்வையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

 கடந்த 2013-ஆம் ஆண்டில், உக்ரைன் அதிபராக விக்டர் யானுகோவிச் பொறுப்பு வகித்து வந்தார். ரஷிய ஆதரவாளராக அறியப்படும் அவரது ஆட்சிக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் ஆதரவு பெற்ற எதிர்க்கட்சியினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டு உக்ரைன் அரசு ஸ்தம்பித்தது.

 இந்தச் சூழலில், உக்ரைனின் அங்கமாக இருந்த கிரைமீயாவுக்கு கடந்த 2014-இல் படைகளை அனுப்பிய ரஷியா, அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதையடுத்து, புதிய அதிபர் பெட்ரோ பொரொஷென்கோவின் அரசுக்கு எதிராக, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டனர்.

 ரஷிய ராணுவ உதவியுடன் சண்டையிட்ட அவர்கள், கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லூஹான்ஸ்க் உள்ளிட்ட கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினர்.  இதனால், ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில், கிரைமீயா அருகே ஞாயிற்றுக்கிழமை வந்துகொண்டிருந்த உக்ரைன் போர்க் கப்பல்கள் மீது ரஷிய கடலோரக் காவல் படை தாக்குதல் நடத்தி, அவற்றை சிறைபிடித்தது.

 அந்தப் பிராந்தியத்தில் இதுவரை நடந்திராத இந்தச் சம்பவத்தால், ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டது.

 தங்களது கடல் எல்லைக்குள் உக்ரைன் போர்க் கப்பல்கள் அத்துமீறி நுழைந்ததாகவும், எனவே, அவற்றின் மீது ஆயுதங்களைப் பிரயோகிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும் ரஷியா விளக்கமளித்தது. எனினும், பொதுவான ஆஸோவ் கடல் பகுதியில் சென்ற தங்களது போர்க் கப்பல்கள் மற்றும் கடற்படை விசைப் படகுகள் மீது ரஷிய கடலோரக் காவல் படை அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், அது வெளிப்படையான ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்றும் உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது.

 இந்தச் சூழலில், உக்ரைனுக்குள் ரஷியப் படைகள் படையெடுக்கலாம் என்ற அச்சம் தெரிவித்த அந்த நாட்டு அரசு, ரஷியாவுடனான எல்லைப் பிரதேசங்களில் ராணுவச் சட்டத்தை புதன்கிழமை அமல்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, சண்டையில் ஈடுபடக்கூடிய வயது கொண்ட ரஷிய ஆண்களுக்குத் தடை விதிக்கும் அறிவிப்பை உக்ரைன் தற்போது வெளியிட்டுள்ளது.

Theneehead-1

   Vol:17                                                                                                                               01.12.2018