பொறியும் அரச கட்டமைப்பு மாற்றம் கோரும் வரலாறு!

சிறிதரன் (சுகு)

(1)

இலங்கையின் ஆளும் தரப்புக்கள் வழமையான முறையில்    ஆட்sri-2சி செய்வதற்கான அமைதிப்படுத்தல் நிகழவேண்டும் என்பதுபோல் பரவலாக ஒரு கருத்து நிலவுகிறது.  நாட்டை சூறையாடுவதற்கும் அதிகாரப்பகிர்வு என்று சொல்லி இலங்கையின் அனைத்து  சமூகங்களையும் ஏமாற்றுவதற்கும், வேலை கல்வி, சமூக பொருளாதார பாதுகாப்பு ,அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் அலட்சியம் காட்டிக் கொண்டு தமது ஆளும் வர்க்க உறவுகளுடன் சுமுகமாக இயங்குவதற்கும்  என  இலங்கையின் அரசியல் நெருக்கடி தீரவேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. வாராது வந்துற்ற இந்த நெருக்கடிக்கூடாக இலங்கையின் ஆளும்  தரப்புக்கள் அம்பலப்படுத்தப்படாவிட்டால்  மக்கள் சடங்காக வழமைபோல் வாக்களித்து விட்டு அலட்சியமாக இருந்து விடுவார்கள்.

இந்த ஆளும் வர்க்கங்களும் வழமை போல் ஏமாற்றி தமது நலன்களை பாதுகாத்துக் கொள்வார்கள். நவ தாராளவாத உலகில் இந்த ஆளும்வர்க்க நலன்கள் பணப்பட்டுவாடா என்பதெல்லாம் கடந்த காலம் போல் சாதாரண விடயங்கள் அல்ல. இந்த நாட்டு மக்கள் கற்பனை பண்ணிப்பார்க்க முடியாத பல மில்லியன்கள் மோசடியான பணப்பரிமாற்றங்களுடன் தொடர்புடையது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இங்கு பரிவர்த்தனைப்பண்டங்களாக!? பாராளுமன்றம் அடிதடி அராஜகமாக அடிக்கடி காட்சி அளிக்கிறது. இந்த அரசாங்க யந்திரம் மிக மோசமாக பழுதடைந்திருகிறது.

1978 அரசியல் யாப்பு உருவாக்கப்பட்ட காலத்திலே “ஆணைப்பெண்ணாக அல்லது பெண்ணை ஆணாக” மாற்றுவதை தவிர அனைத்தையும் செயய்முடியும் என்பது இதன் பிதாமகன் முன்னாள் ஜனாதிபதி ஜேஆரின் கூற்று. இந்த விசேட அதிகாரம், பயங்கரவாத தடைச் சட்டம் இரண்டும் ஒரே ஆண்டில் பிரசன்னமானவை. இவை இரண்டும் இலங்கையின் இரத்தம் தோய்ந்த வரலாற்றிற்கு பங்களித்திருக்கின்றன .

1978 இற்கு பிந்திய வரலாற்றின் தலை விதியை நிர்ணயிப்பதில் இந்த இரண்டிற்கும் முக்கிய பங்குண்டு.  தமிழ் மக்களும் இலங்கையின் அனைத்து சமூகங்களும் இவற்றின் பின்னரான 30 ஆண்டுகளில் பேரழிவுகளையும் அனர்த்தங்களையும் சந்தித்தது தான் வரலாறாக இருந்தது. குறிப்பாக சொல்லும்படியாக எந்த சமூக பொருளாதார அபிவிருத்தியும் நிகழவில்லை. அழிவும்-இடம்பெயர்வும் -புலம்பெயர்வும் -காணாமல் போதலும் -சிறையும் சித்திரவதையும-; இராணுவமயமாக்கலும்-அதிகார துஸ்பிரயோகமும் -யுத்தவியாபாரிகள் -போதைவஸ்து வியாபாரிகள்- அரச வளங்களை துஸ்பிரயோகம்- குடும்பமும் -உற்றமும் சுற்றமும் உறவுகளுமாக சேர்ந்து நாட்டை சூறையாடுதல் என்பதே பெரும் போக்காக இருந்தது.  மறுபக்கத்தில் சாதாரண குடும்பங்களின் பிள்ளைகள் வடக்கு கிழக்கிலும் தெற்கிலும் மரணித்தார்கள். அகதிமுகாம்கள் பெருக்கெடுத்தன. ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் புலம்பெயாந்து சென்று விட்டார்கள்.

இன்று வரை இங்கு வர்க்க இடைவெளி பிரபஞ்சவிரிவு போல் அதிகரித்து செல்கிறதே தவிர சாதாரண மக்களின் வாழ்வு நேர்த்தியாக இல்லை. அலங்கோலமாக இருக்கிறது. தமிழர்கள் மாத்திரமல்ல. சிங்கள, மலையக, முஸ்லீம் இளைஞர்யுவதிகள் இந்த நாட்டில் வாழ்வதையே வெறுப்பாக கருதும் அளவிற்கு இங்கு சமூக பாதுகாப்பு நலிவடைந்துள்ளது. இதனால் தான் இந்த நாட்டில் ஒரு  பகுதியினர் ஐரோப்பிய வட அமெரிக்க நாடுகளுக்கும் இன்னொரு பெரும்பகுதியினர் பகுதியினர் மத்திய கிழக்கு மேற்கு ஆசியாவிற்கும் பிழைப்பு தேடி சென்றார்கள்.சென’று கொண்டிருக்கறார்கள்.

இன்றளவில் இது உண்மையே.

 யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலையில் அம்பாந்தோட்டையில் இருந்து இலங்கையை சுற்றி பொத்துவில் வரை கரையோரங்கள் ஊடாக அபாயகரமான அவுஸ்திரேலிய பயணங்கள் நேர்ந்தன.   இங்கு வாழ்வதற்கான நிபந்தனைகள் குறைவாக இருக்கின்றன. அரசியல் ஜனநாயக இடைவெளி மாத்திரமல்ல ,சமூக பொருளாதார வளர்ச்சிக்கான இடைவெளியும் போதியதாக இல்லை. இன மேலாதிக்கவாதம், மதவாதம், சாதாரண மக்களின் நலன்களின் மீதான அலட்சியம் அவ நம்பிக்கையை வியாபிக்கச் செய்கின்றன.

1978 அரசியல் யாப்பு கொண்டு வரப்பட்டு அடுத்த ஆண்டிலேயே 40 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையை விட்டு துரத்தப்பட்டார்கள். காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ  அவர்களின் அடிப்படை உரிமைகள் 5 வருடங்களுக்கு பறிக்கப்பட்டன. 1981 நூல் நிலையம் தீயிடல் , பாரிய இனசங்காரம் 1983 இல் நாடு தழுவிய அளவில். பாராளுமன்றத்தின் ஆயுட் காலம்  சர்வசன வாக்கெடுப்பு மூலம்  மேலும் 6 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.

வடக்கு- கிழக்கில் தெற்கில் ஆயுதமேந்திய  இளைஞர் கிளர்ச்சி .தொடர்ச்சியான சமூகச பொருளாதார வரலாற்று காரணிகள் இருந்தாலும் 1978 1979 இலங்கையின் அரசியல் நிகழ்வுப் போக்குகளில் ஒரு சிதைவியக்கத்திற்கான  ஒரு நிலைமாறு கட்டமாக அமைந்தது. இந்த துஸ்பிரயோகங்களின்  அளவு ரீதியான மாற்றங்களின் குணாம்ச மாற்ற நிலை தான் இன்றைய ஜனாதிபதி  மைத்திரியின் அரசியலமைப்பு மீறல்கள். ஆனால் இந்த காலத்தினூடே ஒன்றும் நிகழவில்லை  என இலங்கையின் ஆளும் வர்க்க அரசியல் வாதிகள் நாடகம் ஆடுவது தான் விசனத்தை ஏற்படுத்துகிறது.இந்திய இலங்கை ஒப்பந்தத்தினடிப்படையில் உருவான 13 வதன் அதிகாரங்கள் 30 ஆண்டுகளாக மீறப்படுகின்றன.

தேசிய கொள்கைகள்,“திவிநெகும” என அவ்வப்போது மாகாணங்களுக்கு பகிரப்பட்ட விடயங்களான நிலம் பொலிஸ் நிதி அதிகாரங்கள் பறித்தெடுக்கப்படும் போது இவர்களது பிரக்ஞையில் இவை எல்லாம் அரசியலமைப்பு மீறலாக பொறி தட்டவில்லை. பாராளுமன்ற மேசையில் வைத்து முன்னாhள் ஜனாhதிபதி சந்திரிகாவின் அரசியல் யாப்பு தீர்வுப் பொதி தீ வைக்கப்பட்ட போது அதற்கு நேரடி மறைமுக ஆதரவு வழங்கியவர்கள் தான் இன்றைய பாராளுமன்ற ஜனநாயக வாதிகள்.பிரதான தமிழ் ஆளும் தரப்பு அந்த தீயிடலின் பங்குதாரராக இருந்தது.

தொடரும்

Theneehead-1

   Vol:17                                                                                                                               02.12.2018