Theneehead-1

   Vol:17                                                                                                                               03.12.2018

கொலை செய்யப்பட்ட காவல்துறை அலுவலகர் நிரோஷனனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதியஞ்சலி

வவுணதீவில் கொலை செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்களில் ஒருவரான நிரோஷன் இந்திக்க பிரசன்னவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பூதவுடல் வைக்கப்பட்டுள்ள காலி - உடுகம பிரதேசத்திலுள்ள அவரது இல்லத்திற்கு இன்று முற்பகல் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குறித்த காவல்துறை உத்தியோகத்தரின் மனைவி உட்பட குடும்ப உறவினர்களுக்கும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை, 6.00 மணியளவில் மட்டக்களப்பு - வவுணதீவு வீதியில் வவுணதீவிற்கு அருகில் உள்ள காவல்துறை அரணில் வைத்து குறித்த இரு காவற்துறை அதிகாரிகளின் சடலங்களும் மீட்கப்பட்டிருந்தன.

அவர்கள் மீது டீ -56 ரக துப்பாக்கியினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்தது.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து மீட்கப்பட்ட டீ 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற சில தோட்டாக்கள் இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுணதீவு காவல் நிலையத்தில் பணியாற்றிய குறித்த காவல்துறை அதிகாரிகள் இருவரும், கல்முனை மற்றும் காலி பிரதேசங்களை சேர்ந்த 32 மற்றும் 28 வயதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.