இரண்டுபட்ட ஊர்:  அரசியல் குளறுபடிகள்

- கருணாகரன்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு கட்சிசார் போட்டி அரசியல் காரணமென்கின்றனர் சிலர். வேறு சிலர் இது தனிப்பட்ட நலன்சார் விடயங்களோடு சம்மந்தப்பட்டது என்கிறார்கள். இன்னொரு சாரார் வெளிச்சக்திகளின் தலையீடு, உள்நாட்டில் ஏற்பட்ட அரசியல், 2016பொருளாதார   நெருக்கடி போன்ற காரணங்களின் விளைவுகளால் ஏற்பட்டது என்கிறார்கள். இன்னொரு தரப்பினர் இது அரசியல் அமைப்பிலுள்ள குறைபாடுகளின் விளைவானவை என்கிறார்கள். இதை விடவும் இன்னும் பல நோக்குகள் இருக்கக் கூடும். ஆனால், மேலே சொல்லப்பட்டிருக்கும் காரணங்கள் எவையும் புறக்கணிக்கக் கூடியவை அல்ல. இவற்றின் திரண்ட வடிவமே இன்றைய பிரச்சினை. அல்லது இவற்றின் செல்வாக்கே இன்றைய நெருக்கடிக்குக்காரணம்.

எதன் பேராலும் நெருக்கடிகளும் குழப்பங்களும் பிரச்சினைகளும் ஏற்படுவது வழமை. அது குடும்பத்திலும் சரி, சமூகத்திலும் சரி, நாட்டிலும் சரி. ஆனால், அந்தப் பிரச்சினைகளையும் குழப்பங்களையும் நெருக்கடிகளையும் தீர்க்கும் முறைமை முக்கியமானது. அவற்றைச் சரியாகச் செய்கின்ற தரப்புகளும் தலைமைகளுமே கவனத்திற்குரியவை. அவையே மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. வரலாறும் அவற்றையே ஏற்றுக்கொள்ளும்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கான பொறுப்பில் சரிபாதி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவுக்குரியது. இதையே பேராசிரியர் ஜெயதேவ உயன்கொடவும் கீழ்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார், 'தனது அரசியல் உயிர்வாழ்வுக்கான அடுத்த நகர்வுகளைத் திட்டமிடும்போது விக்கிரமசிங்க தற்போதைய அரசியல் குழப்பநிலைக்கு ஓரளவுக்கு தன்மீதும் குற்றப்பொறுப்பு இருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும். கூட்டரசாங்கத்தை நடத்துவதில் ஜனாதிபதியுடன் உறுதியானதும் நடைமுறைச்சாத்தியமானதுமான உறவுமுறையொன்றை ஏற்படுத்திக்கொள்வதில் விக்கிரமசிங்கவின் இயலாமை, ஊழலற்ற ஆட்சிமுறையையும் அரசியலையும் கொண்டுவருவதற்காக  2015 ஆம் ஆண்டில் சிறிசேனவும் தானும் கூட்டாக மக்களிடம் பெற்ற ஆணையை அக்கறையுடன் நோக்காமல் அலட்சியம் செய்தமை, அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் நல்லிணக்கச் செயன்முறைகள் தொடர்பில் காட்டிய மெத்தனப்போக்கு, சிறந்த பொருளாதார முகாமைத்துவத்துக்கான மக்களின் கோரிக்கைகளை முற்றாக அலட்சியம் செய்தமை எல்லாம் சேர்ந்து மக்கள் மத்தியிலான விக்கிரமசிங்கவின் மதிப்பை அருகச்செய்துவிட்டன' என்று.

இந்தத் தவறுகளே இன்று ரணில் விக்கிரமசிங்கவை நிலைகுலைய வைத்திருக்கின்றன. 49 உறுப்பினர்களோடு எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ரணில் 201 இல் பிரதமராகியதை யாரும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவு கூரலாம். அன்று இந்த மாற்றங்களுக்காக உச்ச விலையைக் கொடுத்திருந்தவர்கள் மைத்திபால சிறிசேனவும் ராஜித சேனரத்தினவும் மாற்றத்துக்காக வேலை செய்ய தரப்பினருமே. ஒப்பீட்டளவில் இதற்கான நலன்களையும் பலன்களையும் அனுபவித்தவர் ரணில் விக்கிரமசிங்கவே.

ஆனால் அவர் அதிகாரத்துக்கு வந்த பிறகு தன்னை (பிரதமர் பதவியை) மட்டும் பாதுகாப்பதிலேயே முனைப்புக் காட்டினார். இதன்படி 19 ஆவது திருத்தம் செய்யப்பட்டது. இதில், ஜனாதிபதி தன்னுடைய விருப்பத்தின்படி பிரதமரைப் பதவி நீக்கம் செய்ய முடியாது என்ற உத்தரவாதம் கிடைத்ததுடன் ஏனைய விடயங்களைக் குறித்து ரணில் கவலைப்படவில்லை. நாட்டில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளைப் பற்றியோ நாட்டிற்குத் தேவையான ஏனைய விடயங்களைப் பற்றியோ பெரிதாக அக்கறைப்படவில்லை.

பதிலாக வெளிச்சக்திகளுக்கு இசைவாக அரசாங்கத்தை வழிநடத்துவதற்கே முயற்சித்தார். இதையிட்டு மக்களுக்கு அதிருப்திகள் மேலோங்கின. இதைப்பற்றிய விமர்சனங்களை பலரும் முன்வைத்தபோதும் அவற்றைக் கவனத்திற் கொள்ளத் தவறினார். இதையே உயன்கொடவும் சுட்டிக்காட்டுகிறார்.

இதனால் எதிர்த்தரப்பாகிய பொதுஜன பெரமுனவினருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் ஆட்சியில் தலையீடுகளைச் செய்வதற்கான வாய்ப்புகள் தாராளமாக உருவாகின. இதுவே இன்றைய நெருக்கடிக்குப் பிரதான காரணம். இதைக் கையாண்ட முறை தொடர்பாக மைத்திரி – மகிந்த ராஜபக்ஸ ஆகியோர் மீது ஏராளம் விமர்சனங்கள் உண்டு. இதற்கு இலங்கையின் கலங்கலான – தெளிவற்ற அரசியலமைப்பே பிரதான காரணம் அல்லது கூடுதல் வாய்ப்பை அளித்தது எனலாம்.

இலங்கையின் அரசியலமைப்பு இந்த மாதிரிப் பல இடங்களில் குழப்பமானதாகவே உள்ளது. அண்மைய உதாரணம், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக வரையப்பட்ட உத்தேச அரசியல் யாப்பில் 'ஒற்றையாட்சி, ஒருமித்த ஆட்சி' என்ற வார்த்தைகளை மையமாக வைத்து நடத்தப்பட்ட குழப்பங்கள். இதில் சிங்களத்தில் ஒரு விதமாகவும் அதைத் தமிழில் இன்னொரு விதமாகவும் ஆங்கிலத்தில் இன்னொரு பொருளிலும் சித்திரிக்க முற்படுவது. இவ்வாறு பல ஓட்டைகளை வைத்து உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை சந்தர்ப்பத்துக்குத் தக்க மாதிரி, நிலைமை, சூழல் என்பவற்றுக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதிகாரத் தரப்பினர் கருதியிருந்தனர். இது இப்பொழுது அவர்களுக்கே பிரச்சினையாகி விட்டது.

உண்மையில் ஒரு அரசியலமைப்பானது,  நாட்டின் செழுமைக்கு  அடிப்படையானது. உயிர் நாடியைப் போன்றது. அரசியலமைப்பானது, தேவையான இடத்தில் நெகிழாத்தன்மையும் தேiவான இடத்தில் நெகிழ்ச்சித் தன்மையும் உடையதாக இருக்க வேண்டும். பல்லின மக்கள் வாழும் நாட்டிற்கேற்ப கூட்டாட்சியும்ஒருமுகத்தன்மையும் கொண்டதாயிருத்தல் அவசியம். பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையதாக அமைய வேண்டும். இந்த அடிப்படையில் பரந்த மனதோடு உருவாக்கப்படாத இலங்கை அரசியல் சாசனம் பெரும்பான்மை சமூகத்துக்கும் கேடாகவே உள்ளது.  இந்தச் சூழலோடு அரசியல் சாசனத்தை அனைத்துச் சமூகங்களின் மனங்களையும் வெல்லும் அளவுக்கு மாற்றும் முனைப்பை ஏற்படுத்த வேண்டும்.


சரி, இதெல்லாவற்றையும் இப்பொழுது என்ன செய்யலாம்? எப்படிக் கையாண்டு இந்தப் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வரலாம்? என்பதே இன்று மக்களுடைய எதிர்பார்ப்புகளாகும்.

இதற்குத் தீர்வைக் காணவேண்டுமானால் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்வோரினாலேயே முடியும். பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் தரப்புகளும் உயர் நீதிமன்றமுமே இதில் ஆகக் கூடிய சக்தியுடையனவாக உள்ளது. ஆகவேதான் பாராளுமன்ற உறுப்பினர்களை மையமாக வைத்து இரண்டு தரப்பும் காய்களை நகர்த்துகின்றன. கயிற்றை இழுத்துக் கொண்டிருக்கின்றன.

ஜனநாயக அடிப்படையில் இதுவே வழிமுறை.

ஆனால் இதற்குள்  பாராளுமன்ற வழிமுறையைத் தமது கட்டுப்பாட்டுக்குள் அல்லது செல்வாக்கு வலயத்துக்குள் கொண்டு வருவதற்கு வெளிச்சக்திகள் முயற்சிக்கின்றன. இதில் வெளிப்படையாக அமெரிக்காக தலைமையிலான மேற்குலகும் இந்தியாவும் ஈடுபட்டுள்ளன. இதை ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும் தெளிவாகவே இனங்காட்டியிருக்கின்றனர்.

ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கு நாட்டிற்குள், நாட்டு விதிமுறைகளுக்குள் தீர்வைக்காணுவதே சரியானது. அதையே ஒரு ஆளுமையுள்ள தலைவர் செய்வார். இப்படி ஊரையும் உலகத்தையும் கூட்டி வைத்துக் கொண்டு, அழுது புலம்ப மாட்டார். இதிலிருந்தே ரணில் ஆளுமைக்குறைபாடு தெளிவாகவே தெரிகிறது. மட்டுமல்ல, வெளியாரிடம் ஒரு தகவலையும் சொல்லி விடுகிறார். 'உங்களுக்காகவே நான் நாட்டில் வேலை செய்தேன். இப்பொழுது எனக்கு நெருக்கடி வந்திருக்கிறது. ஆகவே நீங்கள்தான் ஓடி வந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்' என்றவாறாக.

ரணில் விடுத்த கோரிக்கையை ஒரு வழியாகவும் வாய்ப்பாகவும் எடுத்துக் கொண்ட வெளிச்சக்திகள் முழுதாகக் களத்தில் இறங்கி வேலை செய்கின்றன.

இதன் அடுத்த கட்ட வளர்ச்சி இலங்கைக்கு பல நெருக்கடிகளை உண்டாக்கப்போகிறது. ரணில் தரப்பு இந்தப் பிரச்சினையில் வெற்றி பெற்றாலும் அது மேற்கிற்கும் அமெரிக்காவுக்கா உள்ளிட்ட பங்காளிகளுக்கும் கட்டுப்பட்டே வேலை செய்ய வேண்டியிருக்கும். இல்லாது மைத்திரிபால சிறிசேன – மகிந்த ராஜபக்ஸ தரப்பு வெற்றியடைந்தால், இதே வெளிச்சக்திகள் பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியாகவும் பல நெருக்கடிகளை அந்த ஆட்சிக்கு ஏற்படுத்தும். அந்த நெருக்கடிகள் ஆட்சியாளர்களை விடவும் மக்களையே கூடுதலாகப் பாதிக்கும்.

ஆகவே இன்று உருவாகியுள்ள நெருக்கடி என்பது அரசியலமைப்பு மற்றும் ஆட்சித்தரப்பின் குறைபாட்டின் விளைவானவையே. அதேவேளை எதிர்த்தரப்பின் தலைமைத்துவப் போட்டியின் விளைவும் கூட. இதற்கான வாய்ப்பை அளித்திருப்பது பலவீனமான அரசியலமைப்பு.

இதை உணர்ந்து நாட்டிற்குள்ளே தீர்வைக்காண வேண்டிய பொறுப்பு அனைத்துத் தரப்பிற்கும் உண்டு. அதிகாரவெறி தலைக்குள்ளே நிரம்பியிருக்கும்போது எந்த ஆலோசனைகளையும் யாருடைய பேச்சையும் யாரும் கேட்க மாட்டார்கள். ஆனாலும் நாம் தேவையானவற்றைச் சொல்வதும் அவசியமானவற்றை அவர்கள் ஏற்றுக்கொள்வதும் தவிர்க்க முடியாது.

முன்பு இனமுரண்களால் நாடு நெருக்கடியில் சிக்கியிருந்தபோது அதை வாய்ப்பாகப் பயன்படுத்தி இந்தியாவும் மேற்குலகும் சீனாவும் நாட்டிற்குள்ளே நேரடியாகவும் மறைமுகமாகவும் நுழைந்தன, தலையிட்டன. இப்பொழுது ஆட்சிக்குள்ளே ஏற்பட்டிருக்கிற நெருக்கடியைப் பயன்படுத்தி வெளிச்சக்திகள் உள் நுழையப்பார்க்கின்றன.

ஊரும் வீடும் இரண்டு பட்டால் வெளியாட்களுக்குத்தான் கொட்டாட்டம் என்று தெரியாமலா சொன்னார்கள்.

நமக்குள் விட்டுக்கொடுப்புகளைச் செய்யத் தெரியவில்லை. நமக்குள் உடன்பாடுகளைக் காண முடியவில்லை. நமக்குள் ஒருவரை ஒருவர் மதிக்கத் தெரியவில்லை. ஆனால், யார் யாருக்கோவெல்லாம் மதிப்பைக் கொடுக்கிறோம். இதை என்னவென்று சொல்வது?

Theneehead-1

   Vol:17                                                                                                                               04.11.2018