7 பேரின் விடுதலைக்காக போராடுவதற்கு கண்டனம்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக யார் போராடுவார்கள்? ஓய்வு பெற்ற பெண் போலீஸ் அதிகாரி ஆதங்கம்

ராஜீவ்காந்தி கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்anusiaகளுக்காக யார் போராடுவார்கள்? என்று ஓய்வு பெற்ற பெண் போலீஸ் அதிகாரி அனுசியா எர்னஸ்ட் ஆதங்கத்துடன் கூறினார்.

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி குண்டு வெடிப்பில் பலியான சம்பவத்தின் போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனுசியா எர்னஸ்ட் படுகாயத்துடன் உயிர் பிழைத்தார். பின்னர் அவர் விழுப்புரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இவர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தற்போது 7 பேரின் விடுதலைக்காக நடத்தப்படும் போராட்டங்களுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அனுசியா எர்னஸ்ட் ஆதங்கத்துடன் கூறியதாவது:-ராஜீவ்காந்தி கொலைவழக்கில் நீதிமன்றத்தை நம்பி இருந்தோம். ஆனால் கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை, ஆயுள்தண்டனை, விடுதலை என்று பல மன்னிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு பாவமும் செய்யாத 16 பேர் உயிரிழந்தனர். 45 பேர் படுகாயமடைந்தனர். இதன் மூலம் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கும், அவர்களுடைய குடும்பங்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் புலன் விசாரணைக்காக செலவு செய்யப்பட்ட மக்களின் வரிப்பணம் வீணாகி உள்ளது. கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசியல்வாதிகள், பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காக பேசினார்களா?. ஒருவர் கூட கேள்வி கேட்கவில்லையே? பாதிக்கப்பட்ட எங்களுக்காக யார் போராடுவார்கள்?

ஒருவரை கத்தியால் வெட்டுபவருக்கும், கத்தியை எடுத்துக் கொடுபவருக்கும், வெட்டு என்று சொல்பவருக்கும் ஒரே தண்டனை தான் என்று இந்திய தண்டனை சட்டம் 302 பிரிவு சொல்கிறது.

தற்போது ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவாக போராடும் இவர்களுடைய ஒத்துழைப்பு, பின் புலத்துடன் தான் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கும் என்று எண்ண தோன்றுகிறது. குற்றவாளிகளுக்கு இவர்கள் உடந்தையாக இருந்து இருப்பார்களோ? என்ற சந்தேகமும் எழுகிறது.

அரசியல்வாதிகள் தங்களுடைய குடும்பத்தினர் இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால், இப்படி போராடுவதற்கு முன் வருவார்களா?. பாதிக்கப்பட்ட மக்கள் யாரோ? என்று தானே போராட வருகிறார்கள். அப்படி என்றால் எல்லா கொலை குற்றவாளிகளுக்கும் ஆதரவாக போராட வேண்டியது தானே?.

விடுதலைப்புலிகள் தான் காரணம்

ஒரு பிரதமரை கொலை செய்தவர்களுக்கு எதிராக போராடாமல், ஆதரவாக போராடுகிறார்கள் என்றால், இது நாடா? அல்லது சூடுகாடா? என்று மனம் வெம்புகிறது.ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 1,444 சாட்சியங்கள், புகைப்பட ஆதாரங்கள், பல்வேறு துறைகள் புலன் விசாரணையில் விடுதலைப்புலிகள் இயக்கம் தான் இந்த சதியில் ஈடுபட்டது நிரூபணம் ஆகி உள்ளது. எனவே ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் கொலை செய்யவில்லை என்று தற்போது கூறுவது தவறான தகவல். அப்பட்டமான பொய் ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Theneehead-1

   Vol:17                                                                                                                               04.12.2018