Theneehead-1

Vol: 14                                                                                                                                                05.01.2017

கரையில் மோதும் நினைவலைகள்

கள்ளவிசா

நடேசன்

62ஆவது பிறந்ததினம் கடந்த மார்கழி 23 ஆம் திகதியன்று மாலை 6.30 மணிவரையும் வேலை செய்தேன். வெளியே சென்று காலையில்; ரெஸ்ரோரண்ட் ஒன்றில் உணவருந்துவோம் என்று மனைவி கேட்டபோது மறுத்துaustraliaவிட்டேன். கோதில்லாத நண்டு வீட்டில் சமைக்கப்பட்டிருந்தது. வீட்டில் உணவு சிறந்ததாக இருக்கும்போது வெளியில்போகத்தேவையில்லையே? ஆனால், வாய்க்கு இதமாகவும் சமிப்பதற்கு வசதியாகவும் வெள்ளை வைன் போத்தல் ஒன்றை வாங்கிவருவதற்கு நினைத்தேன். நியூசிலாந்து ஓய்ரர் பே சவன் பிலாங் எனக் கேட்டேன். வெள்ளை வைனும் கடல் உணவுக்குப் பொருத்தமானது

எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள வைன்கடைக்குச் சென்று காரில் இருந்து இறங்கியதும், வெக்கை முகத்தில் அடித்தது. வெய்யில் எரித்தது. காற்றை யாரோ திருடிவிட்டார்களோ என்பதுபோல் மரங்கள் அசையவில்லை. மெல்பனின் கோடையில் 9 மணிக்குப் பின்பாகவே இரவு ஊர்ந்து வரும். வேறு ஒருவரும் இல்லை. மதுக்கடையில் வேலை செய்பவரை பல முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இதுவரை பேசியதில்லை. அவரது முகத்தில் ஏதோ சோகம் தெரிவதுபோல் எனக்குப் பட்டது. இரவு நேரங்களில் அதிகமாக வேலை செய்பவர். அவர் ஒரு வெள்ளை அவுஸ்திரேலியர். எனது வயதிருக்கும். கண்ணாடி போடாதவர் தீர்க்கமான பார்வையுடன் மிகவும் திடகாத்திரமானவர்.

‘உங்களுக்கு நத்தாருக்கு விடுமுறையில்லையா?”

‘நான் வருடம் முடிந்த பின்பாக பென்டிகோ போகவேண்டும். அதற்கு முதல் போக முடியாது. எனக்கு இங்கு வேலை உள்ளது’ என்றார்.

நத்தார்ப் பண்டிகையை இந்த மனிதர் தனிமையில் கழிக்கவேணடும் என்ற கழிவிரக்க உணர்வு எனக்குள் ஏற்பட்டது. நத்தார் விடுமுறையை எவ்வளவு ஆவலாக அவுஸ்திரேலியர்கள் கொண்டாடுவார்கள். நத்தாரில் இருந்து புதுவருடம்வரை வைத்தியசாலை ஹோட்டல் மற்றும் பொலிஸ் போன்றவற்றைத் தவிர எல்லா அலுவலகங்களும் மூடப்பட்டுவிடும். அவற்றிலும் எண்ணிக்கை குறைந்தவர்களே வேலை செய்யும் காலம். ஜனவரி மாதம் அதிகமாக வேலையிராது. பலர் விடுமுறைக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தங்கள் வசதிக்கேற்ற விடுமுறையைக் கழிக்கப் போய்விடுவார்கள். அப்படி திறந்திருக்கும் அலுவலகங்களிலும் எதுவித வேலையும் நடைபெறாது. பத்திரிகைகள் செய்திகளற்று எயிட்ஸ்நோய் வந்தவர்களாக மெலிந்துவிடும். தொலைக்காட்சிகளில் பழைய காட்சிகளை மீண்டும் காண்பிப்பார்கள்.

அந்த மனிதர் குடும்பத்தோடு இராமல் இந்த வயதில் 300 கிலோ மீட்டர்களுக்கப்பால் தனித்து இருப்பது என் மனதை வாட்டியது.

‘பெண்டிக்கோவில் வேலையில்லையா?’

அந்தக்காலத்தில் பெண்டிக்கோ , பலரட் முதலான பிரதேசங்களில் தங்கச்சுரங்கங்களில் வேலைக்கு வந்தவர்களாலே மெல்பன் என்ற நகரமே உருவாகியது. தங்கம் தற்போது முடிந்துவிட்டது. தற்பொழுது பெண்டிக்கோ ஒரு விவசாய நகரம்.

‘பழத்தோட்டங்கள் இப்பொழுது இல்லை. எல்லாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள்.’

‘எப்படி மாடு வளர்ப்பு?’

‘அது பரவாயில்லை. பால் உற்பத்தி நடக்கிறது. பழத்தோட்டங்கள் இல்லாததால் தற்பொழுது வேலை கிடைப்பது கடினம்.’

‘அங்கிருந்த ஆரஞ்சுத் தோட்டங்களுக்கு என்ன நடந்தது?’

‘ஆரஞ்சு ஜுஸ் வெளியில் இருந்து வருகின்றது. சீனாவில் இருக்கும் எனது மகன் இந்த கோடைகால விடுமுறைக்கு அங்கு வரும்படி அழைத்தான். அந்த விமான டிக்கட் மிகவும் மலிவாக இருந்தது. ஆனால் அந்தப் பணத்தில் நமது நாட்டில் உள்ள குயினஸ்லாண்து போக முடியாத நிலைமை உள்ளது’ என்றார்

‘உண்மைதான். அவுஸ்திரேலியாவிற்கு நான் வந்து 30 வருடங்களாகிவிட்டது. பார்த்துக் கொண்டிருக்க எல்லாமே விலையேறியது. இங்கு ஒரு இடத்திற்கு செல்வதைவிட அதே பணத்தில் வெளிநாடு செல்ல முடியும். நான்கூட சிலமாதம் முன்பாக குயின்சிலாண்து சென்றேன். அந்த 3 நாட்களுக்கு செலவழித்த பணத்தில், எனது நாடான இலங்கைக்கு செல்ல முடியும். அவுஸ்திரேலியா தற்பொழுது உலகத்திலே எக்ஸ்பென்சிவ் நாடாக மாறியுள்ளது’

‘உண்மைதான்’

‘டோனால்ட் ட்றம்பின் கூற்றில் உண்மையிருக்கிறது’ என்றபோது அவர் சிரித்தார்.

‘நத்தார் வாழ்த்துக்கள்’ கூறி விடைபெற்றேன்

பொருளாதார நிலைமை பொதுவாக மேற்கு நாடுகளில் இன்று இப்படித்தான் உள்ளது. சாதாரண தொழிலாளர்களது வேலைகள் மறைந்து விட்டன. விவசாயப்பொருட்கள், உடை, உணவு மற்றும் எலக்ரோனிக் பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் நுகர்வோர் குறைந்த விலைகளில் பெற்று நன்மைகள் அடைந்தாலும், உள்ளுரில் பலருக்கு வேலை வாய்ப்பு போய்விட்டது. இதனால் மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதைப் பல உள்ளுர் அரசியல்வாதிகள் தங்களுக்கு ஏற்றவிதமாக பாவிக்கிறார்கள். திறந்த பொருளாதாரம், முதலாளித்துவம் என்பன தேவனின் கட்டளையாக இருந்தவை. அந்தக் கொள்கைகளுக்கு தற்போதைய நிலை எதிராக இருப்பதால் அரசாங்கத்தில் உள்ளவர்கள் இதைச் சமாளிக்கத் திணறுகிறார்கள். நான் அவுஸ்ரேலியாவுக்கு குடிவந்த எண்பதுகளில் விடயம் எதிர்மாறாக இருந்தது. ஒரு சந்ததியில் எதிர்காற்று வீசுகிறது

1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் எனது மனைவியும், ஐந்து வயதில் மகனும் மூன்று வயதில் மகளுமாக சிட்னி விமான நிலயத்தில் வந்திறங்கியபோது எங்களிடம் ஒரு சூட்கேசில் துணிகளும், எனது பொக்கட்டில் அவுஸ்திரேலிய ஐம்பது டொலர் நோட்டும் இருந்தன. மிகக் குறைந்த பொதிகளோடு வந்து இறங்கியபோது விமான நிலையத்திற்கு வெளியே மழை பெய்தது. ஆனால் விமான நிலையத்தின் உள்ளே சீதோஷ்ணம் சூடாக இருந்ததால் குளிர் தெரியவில்லை. பல இனத்தவர்கள் பல விதமான உடைகளில் அங்கிருந்தார்கள். விமானப்பயணம் ஒரு புது அனுபவம் மனைவி ஏற்கனவே இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு விமானத்தில் பயணித்திருந்தார். சிங்கப்பூர் வழியாக வந்ததால் மலைப்பில்லாத போதும் புதிய உலகத்தில் சஞ்சரிப்பதாக இருந்தது.

சிட்னியில் இறங்கியதும், வரிசையில் காத்திருந்த எங்களது பாஸ்போட்டைப் பார்த்த அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரி தனது கண்ணாடிக் கூட்டினுள் இருந்து கவனமாக எமது இலங்கைப் பாஸ்போட்டுகளை திருப்பித் திருப்பி பார்த்து எமது முகத்தையும் உற்றுப்பார்த்து செய்த பரிசோதனையின் பின்பு ‘அவுஸ்திரேலியா உங்களை வரவேற்கிறது’ என்றார் சிரித்தபடியே. இப்பொழுது பார்த்தால் அது வழமையான அவுஸ்திரேலியரின் நடைமுறை எனத் தெரிந்தாலும், அன்று நீல சேர்ட்டும் முகக்கண்ணாடியும் அணிந்த அவரது சிரிப்பு சொர்க்கத்திற்கு கதவைத் திறக்கும் பரிசுத்த பீட்டரின் வார்த்தையாக இருந்தது.

விமானம் ஏறிய சென்னை விமான நிலயத்தில் எமது அனுபவம் மிகவும் துன்பகரமான நினைவு. இன்னமும் அந்த ஒரு மணிநேர விசாரணையை மறக்கமுடியாது. சித்திரவதை உபகரணங்களைப் பாவிக்காத இன்குசிசன்((Inquisition) எங்களது அவுஸ்திரேலிய விசா கள்ளவிசா என எங்களை இமிக்கிரேசனில் தடுத்து வைத்து பல கேள்விகளைக் கேட்டார்கள்.

‘எவ்வளவு காலம் இந்தியாவில் இருக்கிறீரகள்? ”

‘எந்த இடத்தில் இருந்தீர்கள்?”

‘எப்படி இந்த பாஸ்போட்டில் விசா வந்தது?”

‘உறவினர்கள் அவுஸ்திரேலியாவில் எங்கிருக்கிறார்கள்?”

எங்களுக்குப் பின்பாக வரிசையில் வந்தவர்கள் எல்லோரும் எம்மை கடந்த போனார்கள்.அவ்வாறு கடந்து போனவர்கள், எங்களைப் பின்னால் தள்ளுவதுபோல் உணர்வு. எர் கண்டிசன் இருந்தாலும் வேலை செய்யாதது மாதிரியாக வேர்த்தது. வயிற்றில் சில இரசாயன மாற்றங்கள்.இரைச்சலுடன் புறப்படும் ஒவ்வொரு விமானமும் எங்கள் வமானமாக இருக்குமோ என்றொரு எண்ணம் அதைவிட எம்மை ஏற்றிக்கொண்டு சென்றாலும் பஸ் மாதிரி நின்று கொண்டுபோக வேண்டுமோ என்ற சிந்தனை மனதைக் குடைந்தது. இல்லை எனத் தர்க்கித்தாலும் மனதில் மாறும் நினைவுகளுக்கு தடையில்லையே?

குடும்ப உறவினரான மனைவியின் அண்ணரால் அழைக்கப்பட்ட நிரந்தர குடியுரிமையுடன் வருகிறோம் என்றால் அவர்கள் நம்பவில்லை. அது ஒரு இரவு நேரப் பயணமானதால் புது டில்லியில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்திற்குத் தொடர்பு கொண்டு கேட்க வழியில்லை. இந்தியாவை விட்டுப் போக நினைத்து வீட்டையும் காலிபண்ணி பொருட்களை எனது நண்பர்களிடம் கொடுத்துவிட்டேன். ஏற்கனவே அண்ணன் தம்பி பெற்றோர்கள் அவுஸ்திரேலியாவில் இருப்பதால் வர்ணமான கனவுகளுடன் இருந்த மனைவிக்கு ஆத்திரம். அன்றைக்கு அதை என்னில் காட்டமுடியாது. நான் மட்டுமே இமிகிரேசன் ஆபீசருடன் பேசியபடி இருப்பதால் மகளை இடுப்பில் வைத்தபடி அவள் தலையில் கண்ணீரால் ஈரமாக்கினாள். அதைப் பார்த்த மகனுக்கு எதுவும் புரியவில்லை. தாயை பார்த்தபடி நின்றான். மகளுக்கு எதுவும் புரியாத இரண்டு வயது. நான் மனைவியை சமாதானப்படுத்தியபடி இமிகிரேசன் ஆபிசரிடம் தர்க்கம் செய்தபோது விமானம் புறப்படும் நேரமாகிவிட்டது. ஒரு மூலையில் நிற்கச் சொல்லிவிட்டு இதுவரையும் கேள்வி கேட்ட அதிகாரி நகர்ந்துவிட்டார்.

அந்த இடைவெளியில் எந்த வழியால் அவுஸ்திரேலிய விசா உண்மையானது என்று அவர்களை நம்பச் செய்யமுடியும் என்பதை நான் யோசித்துக் கொண்டிருந்தேன். இவர்கள் எங்களை நிறுத்துவதற்கு முடிவு செய்து விட்டார்கள் என நினைத்திருந்தபோது இறுதியில் ஒருவர் வந்து எங்களைப் போகலாம் என்றார்.

அந்த சித்திரவதையின் பின்பாக அவர்கள் சொன்ன வார்த்தை ஆறுதலாக இருந்தாலும் ஆத்திரத்தையே அளித்தது. எந்த ஒரு தேவையும் இல்லாமல் ஏன் எங்களை இவர்கள் இப்படிச் செய்யவேண்டும் என்ற கேள்வியுடன் சென்னை இமிக்கிரேசன்காரனைத் திட்டியபடி அந்த சிங்கப்பூர் விமானம் எங்களை விட்டுப் போய்விடுமோ என்ற அவசரத்தில் சென்றபோது வாசலில் ஒருவர் மிகுதியான இந்தியப் பணத்தை தன்னிடம் தரும்படி கேட்டார். என்னிடம் சிறிது இந்தியப் பணம் இருந்தது ஆனால் என்னிடம் இல்லை என வெடுக்கெனச் சொன்னேன். உண்மையில் எங்கோ காட்டவேண்டிய ஆத்திரத்தை யாரிடமோ கட்டியதற்கு பிற்காலத்தில் வெட்கப்பட்டேன்.

விமானத்தில் ஏறி அமர்ந்து ஆர அமர யோசித்தபோது இந்திய இமிகிரேசேன் எங்களுக்கு வைத்த அந்த விசாரணையில் எங்களிடம் போலியான அவுஸ்திரேலிய விசா இருந்திருந்தால் அந்த இடத்தை விட்டு விலகியிருப்போம். ஒருமணி நேரமாக எல்லோரும் போனபின்பும் எங்களை வைத்திருந்தபோது நாங்களும் சளைக்காமல் தொடர்ச்சியாக நின்றதால் அது உண்மையான விசாதான் என அவர்களை நினைக்க வைத்தது. அக்காலத்தில் போலி விசாக்களில் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் இருந்து ஐரோப்பாவிற்கும் மற்றைய நாடுகளுக்கும் சென்றார்கள். அக்காலத்தில் எலக்ரோனிக் அல்லது தற்போதைய அவுஸ்திரேலிய பாஸ்போட்டில் உள்ள மைக்கிரோசிப் Microchip) )முறை இருக்கவில்லை. அப்படியாக இருந்திருந்தால் என்ன நிலை என இப்பொழுது திரும்பிப் பார்க்க முடிகிறது.

மறுநாள் காலை சிட்னி விமான நிலையத்தில் எனது மனைவியின் தாய் தந்தை மற்றும் மனைவியின் அண்ணா மோகன், அண்ணி மாலா ஆகியோர் வரவேற்க வந்திருந்தார்கள். மனைவியைப் பொறுத்தவரை அவர்கள் பலர் பல வருடங்களின் பின்பாக குடும்பத்தில் ஒன்றாகும் சந்தர்ப்பம். நான் ஏற்கனவே மனைவியின் தாயாருடன் இந்தியாவில் மனஸ்தாபப்பட்டவன். அவரைப் பொறுத்தவரை இந்தியாவில் தனது மகளை வைத்து கொடுமைப்படுத்தும் அந்த ஏழுநாட்கள் கணவன் என்பதும் பேரப்பிள்ளைகளையும் இளைய மகளையும் தங்களிடம் இருந்து பிரித்தவன் என்ற பலதரப்பட்ட நல்லெண்ணங்களுடன் இருப்பவர்கள். அவுஸ்திரேலியாவுக்கு நாங்கள் வந்தது அவர்களுக்கு மிகவும் சந்தோசமான விடயம். அவர்கள் மகளைத்தேடி மழைக்கால அட்டைமாதிரி வந்து விட்டார்கள் ( அசோகனின் வைத்தியசாலையில் இந்த மழைக்கால அட்டையாக ஒட்டிக்கொண்டார்கள் என்ற படிமத்தை பாவித்துள்ளேன்)
விமான நிலயத்திற்கு வந்தவர்கள் எங்களுக்குத் தேவையான குளிருடுப்புகளைக் கொண்டு வந்திருந்தார்கள். அவற்றைப் போட்டுக்கொண்டு வெளியே வந்தபோது இரும்புக் கம்பிகளாக மழை, வானத்தை புவியுடன் இணைத்தது. குளிர் என் விரல்கள்மீது ஊசியாகியது. விமான நிலையக் கார் பார்க்கில் இதுவரை பார்க்காத அளவு பலதரப்பட்ட கார்கள் மழையில் குளித்தபபடி நின்றன. கண்ணுக்கு மழை மூட்டமான அந்தக்காலை நேரத்தில் அந்தக் கார்களில் ஒன்றில் எல்லோரும் ஏறிக் கொண்டோம்.

பின் சீட்டில் ஒடுங்கியபடி இருந்தேன். எனது பொக்கட்டில் ஜம்பது டொலர் நோட்டுடன், எனது கையில் வைத்திருந்த பெட்டியில் மிருகவைத்தியர் என்ற கடுதாசியும் இருந்தது. இவைகள்தான் எனது சொத்து. இவற்றைக்கொண்டு எனது குடும்பத்தை கொண்டு செல்லமுடியுமா என சிந்தித்தேன். எனது மனைவியும் படித்தவர். அவளின் உதவியும் பயன்படும் என்ற சிந்தனை எனக்கு அன்று வரவில்லை. ஆண் வர்க்கத்திற்கே உரிய பொறுப்பை ஏற்று நடத்தும் தன்மை என்னிடம் இருந்தது. குடும்பத்தில் மூத்தவனாக பிறந்ததால் எனது குடும்பத்தை சுமார் நான்கு வருடங்கள் பார்த்த நான் இப்பொழுது மற்றவர்கள் தயவில் வாழம் நிலை வந்துவிட்டது என்பது திடீரெனத் தாக்கிய நோயாகத் தெரிந்தது. அதிலும் மனைவியின் உறவினர்கள் தயவில் வாழ்வதா?

எனது எதிர்காலத்தை அன்றைய சிட்னியின் குளிர்கால நிலை பிரதிபலித்தது என எனக்குத் தோன்றியது.
எனது சிந்தனையோட்டத்திற்கு ஏற்ற வேகத்துடன் கார் சிட்னியின் மேற்குப் பிரதேசமான துங்காபேயை நோக்கிச் சென்றது.

uthayam12@gmail.com

dantv