Theneehead-1

Vol: 14                                                                                                                                                05.01.2017

இந்திய அகதிகள்

-           கருணாகரன்

மாயாண்டி கிருஸ்ணசாமி இந்தியாவிலிருந்து ஜெயபுரத்துக்கு வந்து ஆறு மாதங்கreturnளாகிவிட்டன. இன்னும் அவரால் ஒரு ஒழுங்குக்கு வர முடியவில்லை. ஒழுங்கென்றால், தன்னுடைய காணியைத் துப்புரவாக்கி, அதில் ஒரு வீட்டை அமைத்து, மீளவும் அங்கே வாழத் தொடங்குவது. அதாவது ஒரு மீள்குடியேறியாக வாழ்க்கையை ஆரம்பிப்பதாகும்.

இதற்கு ஆரம்ப உதவிகள் தேவை. பொதுவாகவே காணியைத் துப்புரவாக்கி, கிணற்றை இறைத்துக் கொள்வதற்கென மீள்குடியேறிகளுக்கு ஆரம்ப உதவியாக ஐம்பதினாயிரம் ரூபாயை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனம் வழங்குவதுண்டு. ஏனைய தொண்டு நிறுவனங்கள் தற்காலி வீட்டையும் மலசல கூடத்தையும் அமைக்க உதவும். நிரந்தர வீட்டுத்திட்ட உதவி கிடைக்கும்வரையில் இந்தத் தற்காலிக வீட்டில் இருக்கலாம். கூடவே வாழ்வாதார உதவிகளும் ஒரு குறிப்பிட்டளவில் கிடைப்பதுண்டு. ஆனால், இதெல்லாம் கிருஸ்ணசாமிக்குக் கிடைக்கவில்லை. அவர் பருவம் தப்பி விதைத்த பயிரைப் போல செழிக்க முடியாமல் தவிக்கிறார்.

கிராம அலுவலர், பிரதேச செயலர், மாவட்டச் செயலர், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று எல்லாருடைய கதவுகளையும் தட்டி விட்டார். “உங்களுடைய பிரச்சினையைப் புரிந்திருக்கிறோம். கொஞ்சம் பொறுத்திருங்கள். கூடிய கெதியில் முடிந்ததைச் செய்து தரலாம்” என்று பதில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், எப்போது அவருடைய தேவைகள் நிறைவேறும் என்று தெரியாது. அவை உரியவாறு நிறைவேறுமா என்பதற்கும் எந்த உத்தரவாதங்களுமில்லை. எவ்வளவு உதவிகள் கிடைக்கும் என்றும் தெரியவில்லை. அவருக்கு முன் ஊர் திரும்பியவர்களுக்கே இன்னும் சீரான உதவிகள் கிட்டவில்லை. அவர்களும் அங்குமிங்குமாக அலைந்து கொண்டேயிருக்கிறார்கள்.

எத்தனை ஆண்டுகள்தான் அகதியாக இன்னொரு நாட்டில் தங்கியிருக்க முடியும்? பிள்ளைகளுக்காவது ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுக்க வேணும். இப்போது யுத்தம் முடிந்து விட்டது. ஊரில் சனங்கள் மீள்குடியேறி வாழ்கிறார்கள். பாடசாலை பெரிதாகக் கட்டப்பட்டுள்ளது. மின்சாரம் வந்திருக்கு. ஆரம்ப சுகாதார நிலையம், கூட்டுறவுக்கடை, நூலகம், மாலை நேரக்கல்விக்கான நிலையம் என எல்லாம் இயங்கிக்கொண்டிருக்கின்றன. சந்தையைக் கூடப் புதிதாகக் கட்டியிருக்கிறார்கள். கடைத்தெருக்கூட நல்லாயிருக்கு. பொலிஸ் நிலையமும் வந்து ஊரே வேறுமாதிரி வளர்ச்சியடைந்துள்ளது. ஆகவே அகதியாக இந்தியாவில் இருப்பதை விட ஜெயபுரத்தில் போய், சொந்தக் காணியில் எதையாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று  எண்ணிக்கொண்டு ஊருக்கு வந்தால், இங்கே அவர் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் பிரச்சினைகள் கசப்பையே தந்து கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே மீள்குடியேறியவர்களை விடவும் இந்தியாவிலிருந்து வந்து மீள்குடியேறியவர்களின் பிரச்சினைகள் வேறாகவே இருக்கின்றன. பதிவுகள், உதவித்திட்டங்களை வழங்குவதிலுள்ள நடைமுறைகள் எல்லாம் வேறு. அதைவிடக் காலமும் பிந்தி விட்டது. அதனால் உதவித்திட்டங்களைப் பெறுவதில் ஏராளம் சிக்கல்கள். ஊரும் சனங்களும்  நல்லாயிருந்தாலும் வேர் விடுவதற்கு உதவிகளும் ஆதரவும் தேவையல்லவா! இன்னொரு நாட்டில் அகதியாக நீண்டகாலம் இருந்த ஒருவர் மீளத்திரும்பி ஊரில் வேர் விடுவதென்றால் லேசான காரியமா?

இந்தியாவுக்குச் சென்றவர்களை விட உள்ளுரில் இடம்பெயர்ந்தவர்கள் ஓரளவுக்கு ஊரில் வேர் விட்டிருக்கிறார்கள். முதியோரையும் தனியாட்களையும் தவிர மற்ற எல்லோருக்கும் வீட்டுத்திட்டங்கள் கிடைத்துள்ளன. இலவச மின்னிணைப்பை எல்லோரும் பெற்றுள்ளனர். குடிநீரைப் பெறுவதற்கான ஏற்பாடுகளும் நடந்துள்ளன. காணிகளைத் துப்புரவாக்கிப் பயிரிட்டிருக்கிறார்கள். சிரமங்களின் மத்தியிலும் அவர்களுடைய வாழ்க்கை மெதுவாக நகரத்தொடங்கியுள்ளது.

ஆனால், கிருஸ்ணசாமியின் நிலைமை அப்படியல்ல. அவர், 1990 இல் யுத்தம் தீவிரமாகியபோது ஜெயபுரத்திலிருந்து வெளியேறி அகதியாக இந்தியாவுக்குப் படகில் சென்றவர். அவரைப்போல அந்த நாட்களில் ஜெயபுரத்திலிருந்து 257 குடும்பங்கள் இந்தியாவுக்குச் சென்றன. அங்கே சென்றவர்களை இராமநாதபுரம், திருச்சி எனப் பிரித்து அகதி முகாம்களுக்கு அனுப்பினார்கள். அந்த அகதி முகாம்களில் ஏறக்குறைய 25 வருடங்கள் – கால் நூற்றாண்டைக் கழித்தவர்கள், இனியும் அங்கிருந்து என்னதான் செய்ய முடியும் என இப்போது இங்கே வந்திருக்கிறார்கள். இப்படி வந்தது ஏழு குடும்பங்கள் மட்டும்தான். அதிலொன்றே கிருஸ்ணசாமியின் குடும்பமும். இன்னும் வருவதற்காக இருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 500 க்கு மேல். 1990 இல் வெளியேறும் பொது 257 குடும்பங்களாக இருந்தவை இடையிலிருந்த இருபத்தைந்து ஆண்டுகளில் 500 குடும்பங்களுக்கு மேலாகி விட்டன. இவையெல்லாம் ஊர் திரும்ப வேண்டுமானால் கிருஸ்ணசாமி போன்றவர்களின் வாழ்க்கையும் மனதும் செழித்துக்  களிக்க வேணும். இல்லையென்றால், மிஞ்சியிருப்பவர்கள் இந்தப் பக்கம் முகமே திருப்ப மாட்டார்கள்.

யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறியவர்கள், யுத்தம் முடிந்த பிறகு சொந்த நாட்டுக்குத் திரும்புவது வழமை. அப்படித்தான் கிருஸ்ணசாமியும் குடும்பத்தோடு ஜெயபுரத்துக்கு மீண்டும் வந்திருக்கிறார். ஆனால், அப்படி வந்தவருக்கு உரிய உதவித்திட்டங்களும் பிற வசதிகளும் கிடைப்பது தடையாகவும் தாமதமாகவும் இருப்பதால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளும் கசப்பான அனுபவங்களும் அவருடைய மனதில் குழப்பங்களையும் கவலையையும் உண்டாக்கியிருக்கிறது. பிள்ளைகளின் படிப்பைக் கூடச் சரியாக ஒழுங்கு படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில்,  “இதைவிடப் பேசாமல் அங்கேயே – (திருச்சியில் உள்ள அகதி முகாமிலேயே) இருந்திருக்கலாம்” என்று கிருஸ்ணசாமியின் மனைவி அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறாள். இதைக் கேட்க கிருஸ்ணசாமிக்கு எரிச்சலாயிருக்கு. அவள் சொல்வதில் நியாயமுண்டு என்பதால் அவர் மறுபேச்சுப் பேசுவதில்லை. அவர்தான், “அங்கே எல்லாம் நல்லாயிருக்கு. ஊருக்குப் போயிட்டால், ஐந்தாறு வருசத்தில் சொந்தமாக எதையாவது செய்யலாம்” என்று சொல்லிக் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வந்தவராச்சே. பிறகெப்படி, அவளை மறுத்துப் பேச முடியும்? 

இங்கே வந்து பார்த்தால், காணியில் புதர் நிறைந்து காடாக இருந்தது. இருபத்தைந்து ஆண்டுகள் பராமரிப்பில்லாத காணி வேறு எப்படியிருக்கும்? தெரிந்த நண்பர் ஒருவரின் வீட்டிலிருந்து கொண்டு காணியைத் துப்புரவு செய்துவிட்டார். வீட்டுத்திட்டத்துக்குப் பதிந்து தரலாம் என்று அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். ஏனைய உதவிகளுக்கான வாய்ப்புகள் குறைவு. மீள்குடியேற்றக் காலம் ஏறக்குறைய இந்தப் பகுதிகளில் முடிந்து விட்டதால், இனி வருகின்றவர்களுக்குரிய உதவிகளைச் செய்வதில் சாத்தியக்குறைவே உண்டு. இருந்தாலும் முடிந்தளவு ஒத்துழைப்பையும் ஆதரவையும் செய்யமுடியும் என்பது அதிகாரிகளின் நிலைப்பாடு. ஆனால், “இந்தியாவிலிருந்து நாடு திரும்புகின்றவர்களின் நலன்களைக் கவனிக்கவும் அவர்களுக்கு உதவவும் கொள்கை ரீதியான தீர்மானங்களே தேவை. அப்படித் தீர்மானங்கள் எடுக்கப்பட்டால்தான் உரிய திட்டங்கள் உருவாக்கப்படும். அப்படியான திட்டங்களின் மூலம்தான் இவர்களுடைய நலன்களைக் கவனிக்க முடியும்” என்கிறார் திட்டமிடல் அதிகாரியொருவர். ஆனால், ”ஒப்பீட்டளவில், முன்னரை விட தற்போதைய மீள்குடியேற்ற அமைச்சில் சில மாறுதல்கள் தெரிகின்றன” என்றும் அவர் கூறுகிறார்.

இருந்தாலும் இவையெல்லாம் மந்த கதியில்தான் நடக்கின்றன. கிருஸ்ணசாமி போன்றவர்களின் தேவையோ உடனடிக்குரியவை. அவசரமானவை. அவசியமானவை. இல்லையென்றால், அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாது. நிலைமை மோசமாகி விடும். அடிப்படை உதவிகள் கிடைத்து, குடும்பத்தை ஓரிடத்தில் இருத்தினால்தான் அவரால் தொழிலொன்றைத் தேடவோ, ஆரம்பிக்கவோ முடியும். இந்த மாதிரியான சவால்களுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய அகதிகள். இந்த அகதிகள் இந்தியாவில் இருக்கும்போதும் நெருக்கடி வாழ்க்கையைத்தான் வாழ்ந்தனர். அந்த நெருக்கடி வாழ்க்கையிலிருந்து மீளலாம் என்று நாடு திரும்பினாலும் இங்கும் நெருக்கடி நிறைந்த வாழ்க்கையையே எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதைக்குறித்து அக்கறைப்படுவதற்கும் உரிய ஒழுங்குகளைச் செய்வதற்கும் அரசியல் தலைவர்கள் யாரும் இல்லை.

“தாய் மண்ணை வளப்படுத்த வேணும். மக்கள் தொகையை அதிகரிக்கmayuran வேணும். பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கூட்ட வேணும்” என்றெல்லாம் மனக்கணக்குப்போடும் அரசியல் தலைவர்கள், நாட்டை விட்டு வெளியேறியவர்கள், நாட்டுக்குத் திரும்பும்போது அவர்களை உரிய முறையில் வரவேற்றுப் பராமரிப்பதில்லை. அவர்களுக்கான உதவிகளைச் செய்ய முன்வருவதில்லை. வழமையைப்போல புல்லுப்போடாமலே பாலைக்கறந்து விடலாம் என்ற நிகரலாபக் கணக்கிலேயே தங்கள் அரசியலை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் அரசியல் பாரம்பரியத்தின் குணமே இதுதான். இதை இனியாவது மாற்றிக் கொள்ள வேணும் என இவர்கள் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் கிளிநொச்சியில் மட்டுமல்ல, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், முலலைத்தீவு, திருகோணமலை போன்ற மாவட்டங்களிலும் உள்ளனர். இன்னும் திரும்பாமல் உள்ளவர்கள் பல மடங்குண்டு. திரும்பியவர்களின் நலனையே கவனிக்க முடியாமலிருக்கின்றன அரசாங்கமும் மாகாணசபைகளும். இந்த நிலையில் ஏனையவர்களும் திரும்பிவந்து என்ன செய்வது? மீள்குடியேற்ற அமைச்சு இந்தியவிலிருந்து திரும்புவோரைக் குறித்து ஒரு சிறப்பு ஏற்பாட்டையும் விசேட திட்டத்தையும் உருவாக்க வேணும். அந்தத்திட்டத்தின்படி விரைவாக நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஏற்கனவே நாடு திரும்பியிருப்போருக்கான உதவிகளைச் செய்ய முயற்சிப்பது அவசியம். இதில் கூடிய கவனத்தை அமைச்சர் சுவாமிநாதன் மேற்கொள்வார் என்ற நம்பிக்கை உண்டு. அண்மையில் கிளிநொச்சி நகரத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிப்படைந்த சந்தை வர்த்தகர்களுக்கு நஷ்ட ஈட்டைக் கடந்த வாரம் வழங்கியதுடன், அவர்களுக்கான கடைத்தொகுதியை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான முயற்சியை சுவாமிநாதன் எடுத்திருக்கிறார். இதைப்போல இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களின் மீதும் அவருடைய கவனம் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மீள்குடியேற்ற அமைச்சுக்குச் சமாந்தரமாக மாகாணசபைகளும் இந்த அகதிகள விசயத்தில் கூடிய அக்கறையைச் செலுத்துவது அவசியம். மாகாணசபை உறுப்பினர்கள் தங்கள் நிதி ஒதுக்கீட்டில் கட்சியை வளர்ப்பதற்கான, அரசியல் ஆதரவாளர்களைத் தேடும் முயற்சிகளை மேற்கொள்ளாமல், மனிதாபிமான ரீதியில் இவர்களுடைய தேவைகளுக்கு உதவ முன்வர வேண்டும். ஊடகங்களும் ஆய்வாளர்களும் இவர்களுடைய பிரச்சினைகளின் மீது தங்களின் கவனத்தைச் செலுத்துவது அவசியம். இப்படிப் பல தரப்பிலும் பல முனைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போதுதான் இவர்களுடைய வாழ்க்கை பலமடையும்.

வடக்கு மாகாணசபை இந்தியாவிலிருந்து திரும்புவோருக்கான உதவித்திட்ட வரைவது அவசியம். அந்தத்திட்ட வரைபையும் அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் செய்யும்போது, அதனால் ஏற்படும் முன்னேற்றங்கள் ஏனைய அகதிகளையும் இங்கே வரவழைக்கும்.

வடக்கின் சனத்தொகையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி அரசியல் பிரதிநிதித்துவதிலும் வீழ்ச்சியை உண்டாக்கியிருக்கிறது என்பது தமிழ்த்தரப்பினரின் கவலை. அப்படியான கவலையைப் போக்குவதற்கும் இது உதவும். ஏனென்றால் ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்தியாவில் அகதிகளாக இருக்கிறார்கள் என்கின்றன தமிழ்நாட்டின் புள்ளி விவரங்கள். இந்தத் தொகை நாடு திரும்பும்போது அது கணிசமான அளவில் சனத்தொகை மாற்றத்தை உண்டாக்கும். மட்டுமல்ல பொருளாதார உயர்விலும் உழைப்பு வீதத்திலும் மாற்றங்களை உருவாக்கும்.


தவிர, இந்தக் காலகட்டத்தில் நாட்டுக்கு வெளியேயிருக்கும் அகதிகளை சொந்த இடத்தில் மீள்குடியேற்றம் செய்வதன் மூலமாக ஊர்களையும் ஒருங்கிணைந்த வளர்ச்சிப்போக்கில் வளர்த்தெடுக்க முடியும். ஜெயபுரத்தில் மட்டும் இன்னும் 250 க்கு மேற்பட்ட குடும்பங்கள் திரும்பி வரவில்லை என்பதால், அவர்களுடைய அத்தனை காணிகளும் திருத்தம் செய்யப்படாமல் காடாகவே உள்ளன. இதைவிட பின்னர் உருவாகிய குடும்பத்தினரும் திரும்பினால் அந்தப் பிரதேசத்தின் சனத்தொகை வளர்ச்சியும் அதிகரிக்கும். ஒரு பிரதேசத்தின் வளர்ச்சிக்கு சனத்தொகை அதிகரிப்பு அவசியமாகும். ஆகவே பல முனைகளிலும் இந்தியவில் அகதிகளாக இருப்போர் இங்கே திரும்புவது தேவையாக உள்ளது. இதற்கான சாத்தியங்களை உண்டாக்கி, இதை வெற்றிகரமாக மாற்றுவதற்கு அனைத்துத்தரப்பின் பங்களிப்பும் அவசியமாக இருக்கிறது. இதற்கான கவனத்தை உண்டாக்குவது இதனுடைய முதற்கட்டப்பணியாகும்.

dantv