Theneehead-1

   Vol:17                                                                                                                                05.07.2018

லா பாஸ் கடிகாரம்

நடேசன்


பொலிவியாவின் தலைநகரானன லா பாஸ் நகர அரச கட்டிடத்தில் உள்ள கla passடிகாரத்தை பார்த்தபடியே நின்ற எம்மைப் பார்த்து ‘இந்தக் கடிகாரத்தில் ஏதாவது விசேடமாகத் தெரிகிறதா? என எமது வழிகாட்டியாக வந்த பெண் கேட்டபோது

‘நேரம் பிழையாக இருக்கிறது’ என்றேன்.

இதுவரை எமக்கு வழிகாட்டியாக வந்தவர்கள் ஸ்பானிய வம்சாவளியினர் ஆனால் பொலிவியாவில் எமது வழிகாட்டி சுதேச அய்மாறா இனப்பெண் உயரம் குறைந்து குண்டானவர். 35 வயதிருக்கும் நகைச்சுவையான பெண்மணி. அவரது நடையும் பார்ப்பதற்கு உருட்டிவிட்ட உருளைக்கிழங்கு போல் இருப்பதால் தமிழில் அவரை உருளைக்கிழங்கு என எங்களுக்குள் கூறிக்கொண்டோம். வட்டமான தக்காளி போன்ற முகத்தை இரண்டு பக்கமும் ஆட்டியபடி

‘இல்லை ஆனால் இடதுபுறமாக ஓடுகிறது.’

‘அது ஏன்?’

‘எங்கள் அரச அதிபர் இடதுசாரி என்பதால்.’

‘சீனா, வியட்னாம், கியூபா எனப் பல நாடுகளுக்குச் சென்றேன் அங்கெல்லாம் கடிகாரம் வலது புறமாக ஓடுகிறதே?

‘நாங்கள் தனித்துவமான இடதுசாரிகள்’

அந்த தென்னமரிக்காவின முக்கிய ஆதிக்குடியான அய்மாறா(Aymara )இனப் பெண்ணிற்கு மெதுவான சிரிப்பு வந்தது.பொலிவியாவில் பெரும்பான்மையினராகவும், பல முறை ஸ்பானியருக்கு எதிராக அய்மாறா இனத்தவர் பல போராட்டங்கள் செய்தவர்கள்.

தற்போது வெனிசுவேலா, ஆர்ஜன்ரீனா, சிலி, மற்றும் பிரேசில் என இருந்த இடதுசாரி அரசாங்கங்கள் மாறியதால் வலதுசாரிகள் இடையே தனித்துவிடப்பட்ட இடதுசாரித் தலைவர் ஏவா மொறாலிஸ் ( Avo Morales). இவரும் அய்மாறா இனத்தைச் சேர்ந்தவர். மறைந்த லிபியத் தலைவர் கேணல் கடாபியின் நெருங்கிய நண்பர். பிடல் காஸ்ரோவின் மரணத்தால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்.

அமரிக்கா பல வழிகளில் முயன்றும் அசைக்க முடியாமல் மக்கள் ஆதரவுடன் பொலிவியாவின் அதிபராக மூன்றாவது தடவையாக இருப்பவர். சி ஐ ஏ பல வழிகளில் இவரை அகற்ற முயன்றார்கள். பரக் ஒபமா பதவிக்கு வந்தபின்பு சிறிது அமரிக்க –பொலிவிய உறவில் சீர்திருத்தம் ஏற்பட்டது.
evo-moralis
கொக்கோ அந்தீய பிரதேசமக்களுக்கு 5000 – 6000 வருடங்களாக, முக்கியமான அத்தியாவசிய மருத்துவப் பயிர். எலும்பு முறிவில் வைத்துக் கட்டுவார்கள். முக்கியமான மயக்க மருந்தாகவும், தொய்வு முடக்குவாதம் எனப்ப பல நோய்களுக்கும் மற்றும் தேநீர் போலவும் பாவிப்பார்கள்.அத்துடன் கலவியின்போது வயகராவைப்போல் இதைப்பாவிப்பார்கள். கொக்கோ இலையாகப் பாவிக்கும்போது 1 வீதத்திற்குக் குறைவான கொக்கையின் மட்டுமே இருப்பதால் எந்த அடிக்சனையும் உருவாக்குவதில்லை. இரசாயனப் பதார்தங்களைப் பாவித்துப் பிரித்தெடுத்து கொக்கையினைப் பசையாக்கி அதன்பின்பு தூளாக்கிப் பாவிக்க தொடங்கியது ஐரோப்பியரே. ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்ட கொக்கோ கொலாவில் கொக்கையின் இருந்தது. தற்போது கொக்கையின் நீக்கப்பட்ட கொக்கையின் சாறு உள்ளது.

ஏவா மொறாலிஸ். ஆரம்பத்திலே கொக்கோ பயிர் செய்பவராகவும் பின்பு அமரிக்கா கொக்கோ பயிரை தடைசெய்ய முயற்சித்த போது களத்தில் நேரடியாக இறங்கி பல முறை சிறை சென்றார்.கொக்கோவை பயிர் செய்வது அந்தீய மக்களது உரிமை. அதில் இருந்து மற்றவர்கள் கொக்கையின் எடுப்பதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்பது அவரது வாதம். புதிதாக கட்சியைமைத்து மக்களாதரவுடன் பதவித்து வந்தவர். இப்படியாக அடிமட்டத்திலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் தற்பொழுது உலகத்தில் அருகிய நிலையில் தென்னமரிக்காவின் சுதேச மக்களிடையே இருந்து வந்தவர் ஏவா மொறாலிஸ்.

தித்திக்கா வாவியின் மூன்றில் ஒரு பகுதி பொலிவியாவுக்கு சொந்தமானது. பெருவின் புனா நகரில் இருந்து சொகுசுப் படகு மூலம் வாவியில் சென்று பொலிவியக்கரையில் உள்ள சன் ஐலண்டுக்கு சென்றோம். தித்திக்கா வாவியில் உள்ள இந்தத் தீவு தொன்மை வாய்ந்தது. இங்கிருந்துதான் இன்கா வம்சம் உருவாகியது என்கிறார்கள்.

படகில் இறங்கிய நாங்கள் கிட்டத்தட் 200 படிகள் ஏறிச் சென்றபோது படlapass3ிமுறையான தாவர இயல் தோட்டமொன்றிருந்தது. அதில் தென்னமரிக்காவின் உணவு பழ மற்றும் மருத்துவ தாவரங்களைப்ப பயிரிடுகிறார்கள். அதைக் கடந்தபோது இன்காக்களின் மூதாதையர் தோன்றிய இடமாக இந்தத்தீவு கருதப்பட்டாலும், 2200 வருடங்களாக இங்கு மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்தற்கான ஆதாரங்களைக் கண்டெடுத்திருக்கிறார்கள். தற்பொழுது 800 பேர் இங்கு வாழ்கிறார்கள்.


கல்லுகளும் பாறைகளும் நிறைந்த இந்தத் தீவின் உச்சிக்குச் சென்றபோது அழகான சிறிய மைதானம் இருந்தது. அங்கு நின்றபோது நீல நிறமாகக் கடல்போல் வாவி தெரிந்தது. அங்கு பல புல்லில் செய்த படகுகள் இருந்தன. அவற்றை பார்த்துக் கொண்டிருந்த எமக்கு எதிராக அய்மாறா ஷாமன்(மந்திரவாதி) என்பவர் பதினைந்து பேர் கொண்ட எங்களைச் சுற்றி இருக்கவைத்து நிலத்தைத் தொட்டு மந்திரங்களை உச்சரித்தார். சில நிமிடங்கள் அவரது சடங்கை செய்துவிட்டு எங்களுக்கு தண்ணீரைப் பருகத்தந்தார். இது தொடர்ச்சியாக நடக்கும் ஒரு சடங்கு. அரசியல்வாதிகள், வியாபாரிகள் இப்படியான சடங்கை நடத்தி ஆசிபெற்ற பின்பாகவே பதவியேற்பதோ, வியாபாரத்தைத் தொடங்கவோ செய்வார்கள். இப்படியான சடங்கு தற்பொழுது உல்லாசப் பிரயாணிகளுக்கும் நடத்துகிறார்கள். நான் மட்டும் அவர் தந்த தண்ணீரைக் குடிக்கவில்லை. எனக்கு அவரது சடங்கைவிட அவர் அணிந்திருந்த உடை கவர்ந்தது. தலையை மூடி கழுத்துவரை தொப்பி குல்லாய். அதை விடத் தொங்கும் கரும் சிவப்பு கம்பளம் இரண்டு பக்கமும் பறப்பதற்கான இறக்கைபோல்த் தொங்கியது. மலையின் ஓரத்தில் நின்றபோது மனிதன் அப்படியே பறந்து விடுவாரோ எனத் தோன்றியது. இவர்கள் மூதாதையர் ஆவிகளோடு பேசுதல், துர்தேவதைகளை அகற்றுதல் என்பனவற்றில் ஈடுபடுவதோடு வைத்தியத்திலும் ஈடுபடுபவர்கள். அந்தீஸ் மக்களைப் பொறுத்தவரையில் இவர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.

இந்தத்தீவில் நிலத்திற்குக் கீழ் ஒரு அருங்காட்சியகத்தை வைத்திருந்தார்கள். lapass4அங்கு இன்காக்களின் வாழ்வு பற்றிய விளக்கமும் அவர்களது போர்கருவிகள் இருந்தன.

இங்கிருந்து சிறிது தூரத்தில் வாவியில் மூன் ஐலண்ட் உள்ளது வாவியில் இருந்த விரகோச்சா கடவுள் தோன்றி சூரியனையும் சந்திரனையும் உருவாக்கியது அவர்களின் பிள்ளைகள் இன்காக்கள் என்பதே இவர்களது ஐதீகம் ஆனால் இந்தப்பகுதியில் இன்காககளுக்கு முன்பு வாழ்ந்தவர்களால், இந்த இடங்கள் புனிதமாக பார்க்கப்பட்டது. அதைவிட சன் தீவுக்கு அருகே தித்திக்கா வாவியில் புராதனமான கோயில் ஒன்றையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த வாவியில் இருந்து மீண்டும் படகு மூலம் பொலிவியாவின் கரைக்கு சென்றோம் நாங்கள் சென்ற சிறிய நகரம் கொப்பகபானா (Copacabana) என்ற நகரத்திற்குச் சென்றோம் அங்கு பிரசித்திபெற்ற மாதா தேவாலயம் உள்ளது. இது 15ம் நூற்றாண்டிற்கு முன்பாக அய்மாறா இனத்தவர்களது கோயில் இருந்த இடம். ஸ்பானியர்கள் இங்கு மாதா கோயில் ஒன்றைக் பின்பு கட்டினார்கள். இது அழகான தேவாலயம் என்பதைவிட மேலான விடயமும் இருந்தது.

இங்கு எமது முருகண்டிபோல் ஒரு விடயம் நடக்கும். யாராவது புதிதாக கார் அல்லது வீடு வாங்கினால் இங்குள்ள மதகுரு அவர்களை ஆசீர்வதிப்பார். காரை தேவாலயத்தின் வாசலுக்கு கொண்டு நிறுத்திவிட்டால் மதகுரு புனித நீரையும் மற்றும் பியரையும் காரின் மேல் ஊற்றி ஆசீரவதிப்பாரகள். எங்களுக்கு இதை விளங்க வைத்த வழிகாட்டிப் பெண்ணிடம் ‘புதிதாக வாங்கிய வீட்டிற்கு என்ன நடக்கும்?’ என்றபோது ‘மதகுரு அங்கு சென்று ஆசீர்வதிப்பார்’; என்றார்

எமது முருகண்டியில் நடப்பதுபோல் மெல்பேனிலும் நடப்பதைப் பார்த்திருக்கிறேன். இங்கு ஐயர் தேங்காயுடைத்து பூஜை செய்தபின் எலுமிச்சை பழத்தை சக்கரத்தின் கீழ் போட்டு நசித்துவிட்டு நம்பிக்கையோடு காரை செலுத்தியபடி போவார்கள் கொப்பகபான தேவாலயத்தில் புனித நீர் கத்தோலிக்க சடங்கு. பியர் தெளிப்பது இன்கா மற்றும் சுதேச மக்களின் சடங்கு. பாரபட்டசமில்லாமல் இரண்டையும் ஒன்றாக செய்கிறார்கள்.lapass6

இங்கிருந்து வாகனத்தில் தலைநகரான லா பாஸ்சுக்கு செல்லவேண்டும். வழியில் பாதையில் ஒருவரைப் புதைக்கும் ஆழத்தில் குழியிருந்தது. சின்ன வாகனங்கள் அந்தக் குழியை சுற்றி பாதையற்ற பகுதியால் சென்றன. பெரிய லாரி போன்ற வாகனங்கள் அந்தக் குழியில் ஏறிச் சென்றன எமது வாகனம் நடுத்தரமான சொகுசு வாகனம் ஆனதால் இரண்டையும் செய்ய முடியாது மீண்டும் பின்னோக்கிச் சென்று இடத்தில் பாதையை மாறிப் போகமுடியுமா எனப் பார்த்தார்கள்.

வாகனத்தில் கிளீனர்போல் இருந்தவர்கள் பல திசைகளில் சென்று பாதையைப் பார்த்தபோது மாலை கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் சென்று விட்டது. மாலை ஆறு மணியாவிட்டது 4000 மீட்டர் உயரமான சுற்று வட்டாரம் முழுவதும் வெறுமனே பொட்டல்வெளி.

எனக்கு அந்த நேரம் பார்த்து எப்போதோ பார்த்த ஹாலிவூட் திரைப்படம் நினைவுக்கு வந்தது. அமரிக்கர்களது கார்கள் மெக்சிகோ செல்லும் பாதையில் ஏதோ ஒரு காரணத்தால் நிற்கும்போது, வழிப்பறி கொள்ளையர்கள் சூழ்ந்துகொண்டு பொருட்களை எடுப்பதும் பின்பு அந்த மனிதர்கள் திடீரென சொம்பிகளாக மாறுவதும் நினைவுக்கு வந்தது. அதிதீவிர கற்பனைகளில் மிதந்து கொண்டிருந்தபோது அருகில் உள்ள முள்புதர்களுடாக எமது வாகனம் சென்று மீண்டும் பாதையில் ஏறியபோதுதான் நிம்மதியாக இருந்தது.

3650 மீட்டர் உயரத்தில் உள்ள லா பாஸ் நகரத்தில் 2.3 மிலியன் மக்கள் வாழ்கிறார்கள். உலகில் உயர்ந்த தலைநகரம். மலைக் குன்றுகள் நிறைந்த நகரமானதால் 2014ல் கேபிள் கார்களால் நகரத்தை இணைத்திருக்கிறார்கள். மின்சாரத்தில் இயங்கும் இந்த கேபிள் கார் ஒவ்வொன்றும் எட்டுப் பேரை கொண்டு செல்வதால் இதுவே நகரத்தின முக்கிய போக்குவரத்தாகிறது. தற்போது மூன்று லைன்களில் செல்வதை இன்னமும் இரண்டு லைன்ககளாக அதிகரிக் இருக்கிறார்கள் . நியுசிலண்ட், சுவிஸ்சலாண்ட் என நான் போன இடங்கள் கேபிள் காரை ஒரு உல்லாசப் பயணத்திற்காக பாவிக்கிறார்கள் ஆனால் இங்கு இதுவே முக்கிய போக்குவரத்துச் சாதனமாக இருந்தது. இந்தப் பயணத்தில் முழு நகரத்தையுமே கண்ணாடியூடாக 360 டிகிரியில் பார்த்தபடி பயணம் செய்யலாம். ஒவ்வொரு நாளும் செல்பவர்களுக்கு எப்படியோ. எங்களுக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது. நகரத்தை நடந்து மற்றும் வாகனங்களில் செல்லுவதோடு ஒப்பிடும்போது பறவைபோல் அரைமணிநேரத்தில் முழுநகரையும் பார்க்க முடிந்தது.


லா பாஸ் நகரத்தின் மத்தியில் இருந்து 10 கிலோமீட்டர் துரரத்தில் மூன் வலி என்ற பகுதியிருந்தது. மதியவெயில் சென்றபோது மலைக்குன்றுகள் நடுவே ஒரு பிரதேசம் இருந்தது. அது வித்தியாசமான தோற்றத்தைக் கொடுத்தது. இது களிமண் மற்றும் கல்லுகளால் பாரிய கரையான புற்றுகள்போல் இருக்கும் அதனால் சந்திரனின் தரையுடன் ஒப்பிடுவார்கள். இது தொடர்ச்சியான காற்றாலும் மழையின் அரிப்பாலும் நடந்தது இங்கு கனிமப்பொருட்கள் இருப்பதால் பல வர்ணத்தில் மினுங்கும. தாவரங்கள் வளராத பிரதேசம் ஆனால் சில கற்றாழைகள் (San Pedro cactus) உள்ளதுlapass7

cactus

இது நமது நாட்டு கற்றாளை வகை இது அந்தீஸ் பகுதியில் மட்டும் விளைவதுடன் போதைவஸ்தாகவும் மருந்தாகவும் தென்னமரிக்க ஆதிக்குடிகளால் பாவிக்கப்பட்டது. இதனது தோலில் உள்ள பதார்த்தத்தை அவித்தோ அல்லது தோலை பொடியாக்கி பாவிப்பார்கள். இதைக் குடித்தவர்கள் போதையேறி கனவுலகத்திற்கு செல்வதுபொல் இருக்கும். பலர் கடவுளுடன்,மூதாதையர்களுடன் பேசுதல் போன்ற விடயங்கள் நடப்பதாக நம்புவார்கள்.குறைந்த அளவில் பாவித்தால் காச்சலுக்கு மற்றும் ஈரல் சலப்பை நோய்களுக்கு மருந்தாக இருக்கும் அத்துடன் குடிபோதைக்கு அடிமையாக உள்ளவர்களுக்கு மாற்றுமருந்தாகப் பாவிக்கப்படும் இதில் உள்ள முக்கிய இரசாயனப் பொருள் (mescaline) மூளையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மூன் வலியில் இருந்து மீண்டும் ஹோட்டேலுக்குப் போகும் வழியில் பொலிவியாவிற்கு வந்து புரட்சியை உருவாக்க முயன்று உயிர் விட்ட சேகுவராவை பற்றிக் கேட்டபோது ‘எனக்கு இப்ப அழுவதற்கு விருப்பமில்லை. நாளைக்குக் காலையில் உங்களை விமானத்தில் ஏற்ற வரும்போது சொல்கிறேன்’ என்றார்.