மனித உரிமையா? பொருளாதாரமா?

ஜமால் கஷோகி அமெரிக்காவின் நிரந்தரக் குடியுரிமை பெற்ற பத்திரிகையாளர். ஒரு காலத்தில் சவூதி அரேபிய அரச குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். ஆனjamal-justiceால், எம்பிஎஸ் என்று பரவலாக அழைக்கப்படும் முகம்மது பின் சல்மான் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டது முதல் இவருக்கும் அரச குடும்பத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன. இஸ்தான்புல்லில் உள்ள சவூதிஅரேபியத் தூதரகத்தில் அவர் கொல்லப்பட்டிருப்பது சர்வதேச அளவில் மிகப்பெரிய பரபரப்பையும், சவூதி அரேபிய இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு எதிரான விமர்சனங்களையும் எழுப்பியிருக்கிறது.

கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி ஜமால் கஷோகி, இஸ்தான்புல்லில் உள்ள சவூதி அரேபியத் தூதரகத்திற்கு அழைக்கப்பட்டார். அங்கே நடந்த வாக்குவாதமும், கைகலப்பும் அவரது படுகொலையில் முடிந்திருப்பதாகத் தெரிகிறது. கஷோகி சவூதி அரேபியத் தூதரகத்தைவிட்டு வெளியேறினார் என்று முதலில் கூறிய சவூதி அரேபியா, துருக்கி அரசால் கசியவிடப்பட்ட தகவல்களில் தூதரக அதிகாரிகளுடனான கைகலப்பில் அவர் இறந்ததாக அறிவித்தது. இதிலிருந்து ஜமால் கஷோகியின் படுகொலை சவூதி அரேபியாவால் மறைக்கப்படுகிறது என்பது வெளிப்பட்டது.

சவூதி அரேபியத் தலைநகர் ரியாதிலிருந்து 15 பேர் கொண்ட குழு இஸ்தான்புல்லுக்கு இரண்டு தனி விமானங்களில் அனுப்பப்பட்டதும், ஜமால் கஷோகியை ரியாத்துக்கு கடத்தி வரப் பணிக்கப்பட்டதும் இப்போது தெரியவந்திருக்கிறது. இதுபோல, சவூதி அரேபிய அரசுக்கு எதிராக செயல்படுபவர்களை வெளிநாடுகளிலிருந்து கடத்திக் கொண்டுவருவது புதிதொன்றுமல்ல.

இஸ்தான்புல் தூதரகத்தில் நடந்த கைகலப்பின்போது, 59 வயது ஜமால் கஷோகியின் கழுத்து நெரிக்கப்பட்டதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் தகவல் கசிந்திருக்கிறது. ஜமால் கஷோகியை உயிருடன் பிடித்து ரியாத்துக்குக் கொண்டுவந்து அதன் பிறகு தண்டிப்பது என்பதுதான் திட்டமென்றும், ஆனால் ஜமால் கஷோகி அதற்கு உடன்படாததால்தான் இந்தப் படுகொலை நடந்திருக்கிறது என்றும் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அவரது உடல் சிதைக்கப்பட்டு சில எலும்புத் துண்டுகள் நினைவுப் பரிசாக ரியாத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. கஷோகியின் சிதிலமடைந்த உடல் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி அரேபியத் தூதரின் வீட்டுத் தோட்டத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

ஜமால் கஷோகி படுகொலை தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 5 மூத்த அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் சவூதி அரேபியா தெரிவித்திருப்பது பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை இந்தப் பிரச்னையிலிருந்து அகற்றி நிறுத்துவதற்காகத்தான் என்று கூறப்படுகிறது. சவூதி அரேபியத் தரப்பு கூறும் விளக்கங்களில் பல ஓட்டைகள் காணப்படுவதே அதற்குக் காரணம்.

சவூதி அரேபியாவுடன் இணக்கமான உறவில்லாத ஓர் அந்நிய நாட்டில் இப்படியொரு திட்டத்தை தலைமையின் உத்தரவில்லாமல் தளபதிகள் யாரும் செய்திருக்க முடியாது. தலைமைக்குத் தெரியாமல் நடைபெற்ற ஒரு திட்டம் தவறுதலாகக் கொலையில் முடிந்திருந்தால், ஜமால் கஷோகி விவகாரம் சவூதி அரேபிய அரசால் ஏன் மறைக்கப்படவும், திசை திருப்பப்படவும் முயற்சிகள் நடந்தன என்பது அடுத்த கேள்வி.

ஜமால் கஷோகி தூதரகத்திலிருந்து வெளியேறினார் என்கிற வாதம் அதற்கு எதிராக செய்திகள் கசியத் தொடங்கிய பிறகுதான் சவூதி அரேபிய அரசால் மறுக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதிலிருந்து கஷோகியின் படுகொலையும் அதைத் தொடர்ந்து சவூதி அரேபியாவின் பதற்றமான முடிவுகளும் அரச குடும்பத்தின் தொடர்பை உறுதிப்படுத்துகின்றன. சவூதி அரேபிய அரசின் மனித உரிமை மீறல்கள் உலகுக்கு தெரியாததல்ல. சவுக்கால் அடித்தல், மரண தண்டனை விதித்தல், கடுமையான தண்டனைகள் இவையெல்லாம் தொடர்ந்து பலராலும் விமர்சிக்கப்பட்டு வந்த செயல்பாடுகள்தான். முகம்மது பின் சல்மான் பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டதும், ஆட்சி அதிகாரம் 82 வயது அரசரிடமிருந்து அவருக்கு மாறியிருப்பதும் ஜமால் கஷோகியின் படுகொலைக்கு முக்கியமான காரணம். தனக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த முகம்மது பின் சல்மான் எடுத்திருக்கும் நடவடிக்கை இது என்றுதான் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

ஆரம்பத்தில் முகம்மது பின் சல்மானை ஆதரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இப்போது ஜமால் கஷோகி படுகொலை குறித்த உண்மை வெளிப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். பிரிட்டன், பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகளும் ஜமால் கஷோகியின் படுகொலையை கண்டித்திருக்கின்றன.

சவூதி அரேபியா உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளர் என்பதையும், மத்திய ஆசியாவின் சக்தி வாய்ந்த நாடு என்பதையும் மறந்துவிடக் கூடாது. அடுத்து வரும் ஆண்டுகளில் அமெரிக்காவிடமிருந்து 110 பில்லியன் டாலர் அளவிலும், ஐரோப்பாவிலிருந்து 66 பில்லியன் டாலர் அளவிலும், ஜப்பானிடமிருந்து 45 பில்லியன் டாலர் அளவிலும் ஆயுதங்கள் வாங்க சவூதி அரேபியா ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஏறத்தாழ 500 பில்லியன் டாலர் வளர்ச்சிப் பணிகள் சவூதி அரேபியாவில் நடக்க இருக்கின்றன.

இந்தப் பின்னணியில் எந்த ஒரு வல்லரசும் சவூதி அரேபியாவைப் பகைத்துக் கொள்ளுமா, பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை நேரடியாகக் குற்றம் சாட்டுமா என்பது சந்தேகம்தான்.

பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். இது வெளிப்படையான திட்டமிட்டப் படுகொலை என்பது நன்றாகவே தெரிகிறது. ஜமால் கஷோகியின் படுகொலை பத்திரிகை சுதந்திரத்துக்கும், மனித உரிமை மீறலுக்கும் எதிராக நடைபெற்றிருக்கும் மிகப்பெரிய தாக்குதல். உலக நாடுகள் இந்தப் பிரச்னையை எப்படி அணுகப்போகின்றன?

தினமணி தலையங்கம்

Theneehead-1

   Vol:17                                                                                                                               05.11.2018