Theneehead-1

   Vol:17                                                                                                                               05.11.2018

சபாநாயகரின் சமநிலை சரியாப் பாத்திரம் அவசியம்

- பஸீர் சேகு தாவூத்

ஆசியப் பிராந்தியத்து நாடாளுமன்றச் சபாநாயகர்கள் அனைவரும் ஏதோவொbasheerரு கட்சியின் ஊடாக மன்றுக்கு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுபவர்களாகும். இதனால் அவர்கள் முக்கிய தீர்மானத்துக்குரிய தருணங்கள் வருகின்ற வேளைகளில், சபையில் தாம் சார்ந்த கட்சியின் பக்கமே நிற்கும் நிலையைக் கண்டிருக்கிறோம்.

இலங்கையைப் பொறுத்தவரை சில தடவைகள் சபாநாயகர்கள் தமது கட்சிக்கு எதிராக செயற்பட்டிருக்கின்றனர்.ஐக்கிய தேசியக் கட்சி மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகிய லொக்கு பண்டார அவர்களை அன்றைய எதிர்க்கட்சி பெரும் பிரயத்தனங்களின் பின்னர் பல கட்சிகளின் ஆதரவுடன் வாக்களிப்பில் வென்று சபாநாயகராக்கியது. இதில், முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க இருந்த தமது உறுப்பினர்களின் "கள்ளத் தொடர்புகளை" வென்று ரணிலுக்கு உதவியது. ஹக்கீம் சந்தேகமான ஒவ்வொரு உறுப்பினருக்கும் பக்கத்தில் விசுவாசம் மிக்க உறுப்பினர்களை அமர்த்தி இரகசிய வாக்கெடுப்பைக் கையாண்டது.இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைலாவின் பங்களிப்பு மிகப் பெரியது. ஆனாலும், காங்கிரசின் ஒரு உறுப்பினர் அன்றைய மஹிந்த அரசுக்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தார். லொக் குபண்டார ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைந்தார்.

சொற்ப காலத்தில் மஹிந்த அரசு உறுப்பினர்களைக் 'கையாண்டு' நாடாளுமன்றில் பெரும்பான்மையைப் பெற்றது. அன்றிலிருந்து லொக்கு பண்டார மஹிந்தவின் சபாநாயகரானார். அடுத்து வந்த தேர்தலில் லொக்கு பண்டார வயதின் நிமித்தம் போட்டியிடவில்லை, தனது மகன் உதித்த பண்டாரவை மஹிந்தவின் கட்சியில் வேட்பாளராக்கி வெற்றிபெற வைத்தார். லொக்கு பண்டார மாகாண ஆளுனராக அதிகாரத்தைச் சுகிர்த்தார். உதித்த இன்று மஹிந்தவின் தனிச் செயலராகப் பணியாற்றுகிறார்.இவர் எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வென்று அமைச்சராகவும் ஆகக்கூடும். அப்பா மீண்டும் ஆளுனராகவும் ஆகலாம்.

தற்போதைய சபாநாகர் கரு ஜயசூரிய அவர்கள் ஐ.தே.கட்சியின் சிரேட்ட உறுப்பினராகும். இவர் முன்னர் கட்சி மாறி மஹிந்த அரசில் ஒரு முறை அமைச்சராகவும் பதவி வகித்தவராகும்.மீண்டும் ஐ.தே. கட்சியுடன் இணைந்த போது, தான் கட்சி மாறியதற்கான காரணம் யுத்தத்தை வெல்வதற்காக மஹிந்த அரசுடன் கை கோர்க்க வேண்டிய தேவையே என்று சொன்னார்.இவர் உறுதியான பௌத்த தலைவர்களில் ஒருவராகும். ஜனாதிபதி மைத்திரி, வடக்கு கிழக்கு இணைவையும்- சமஷ்ட்டித் தீர்வையும் அனுமதிக்கமாட்டேன் என்று பகிரங்கமாகக் கூறியது சபாநாயகர் கருவைக் கையாளுவதற்காகத்தான் என்பதை நம்பவேண்டியுள்ளது.இன்று அவசரமாகத் திருப்திப்டுத்தவேண்டியது சபாநாயகரையே என்பதை அரசியல் ஞானமுடையோர் ஏற்பர்.

சாதாரண மக்களுக்குத் தெரிந்திருப்பதைப் போல கரு ஜயசூரியவுக்கும் நன்கு தெரியும் அடுத்து வரும் எந்தவொரு தேர்தலிலும் மஹிந்த தரப்பே வெற்றி பெறும் என்று. ஐ.தே.கட்சி ரணிலைத் தலைவராகக் கொண்டிருக்கும் வரை ஆட்சி பீடம் ஏறாது என்பதையும் கரு அறிவார். தனக்கு அமைச்சுப் பதவி வழங்காமல் கட்சி நடவடிக்கைகளில் பங்குகொள்ள முடியாதபடிக்கு சபாநாயகர் பதவியைத் தந்து ஒதுக்கி வைத்த கோபமும் ரணில் மீது இவருக்கு உண்டு.இப்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி நிலை கரு சூரியவுக்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பாகும். இந்த நிலை வருமென்று ரணில் அன்று நினைத்திருந்தால் சபாநாயகராக கருவையல்ல, அகிலவி ராஜ் அல்லது சாகல ரத்னாயக்காவையே நியமித்திருப்பார்.

இப்போது ரணில் நாடாளுமன்றத்துள் எதிர்நோக்கும் நெருக்கடிக்குச் சமனான அளவு தொல்லையைக் கட்சிக்குள்ளும் சந்தித்துக்கொண்டிருப்பார். கரு ஜயசூரியவுக்கு பிரதமர் யார் என்றாலும் பிரச்சினையில்லை, தனது கட்சியின் தலைவர் யார் என்பதை தீர்மானிப்பதில் இந்த அரசியல் நெருக்கடியை அவர் எவ்வாறு உபயோகிப்பது என்பதில்தான் கரிசனையாக இருப்பார். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் கதாநாயகத் தலைவர் காமினி திசாயக்காவின் மகனும் தனது மருமகனுமான நவீன் திசாநாயக்கா முன்னர் ஒருதடவை கட்சி மாறியவராக இருந்தாலும் கட்சிக்குள்ளும் ஆதரவாளர்களுக்குள்ளும் சிங்கள உயர்சாதியினரின் செல்வாக்கு இவருக்கு உள்ளது. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசாவுக்கு கட்சிக்குள்ளேயும் ஆதரவாளர்கள் மத்தியிலும் உன்னதம் குறைந்த சாதியினரின் செல்வாக்குதான் உண்டு. முன்பு குறிப்பிட்டதைப் போல கரு ஜயசூரிய, பௌத்த கோட்பாட்டாளர்களினதும், கணிசமான சாதாரண பௌத்தர்களினதும் ஆதரவுத்தளத்தைக் கொண்டவராகும். எனவே, சபாநாயகர் தனதும், நவீனினதும் ஆதரவு எடையை இணைத்து மருகருக்கு கட்சியில் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் நிகழ்ச்சி நிரலில் இயங்கவும் கூடும்.

இச்சூழலினால்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கட்சியைச் சேர்ந்த சபாநாயகரிடம் தங்களுக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்று இரண்டாவது முறையாகவும் சந்தித்துச் சொல்லும் அவசியம் எழுந்துள்ளது.

மேற்குலக இராஜதந்திரிகள் சபாநாகரைச் சந்தித்தனர், பின் அன்றே ஜனாதியையச் சந்தித்தனர், அன்றுதான் சபாநாயகரும் ஜனாதிபதியும் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினர். இச்சந்திப்புகள் ஒரு அஞ்சலோட்டத்தை ஒத்ததாக இருந்தது. மூன்று தரப்புக்களும் கருத்துகள் எனும் தடிகளைப் பரிமாறியிருக்கும். இச்சந்திப்புகளின் பின்புதான், மஹிந்தவைப் பிரதமராக அங்கீகரித்து நாடாளுமன்றில் பிரதமர் அறையையும்,கூடத்தில் ( Chamber) பிரதமர் கதிரையையும் மஹிந்தவுக்கு ஒதுக்கத் தயார் என்ற சபாநாகரின் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

இனி என்ன, ரணில் அலரிமாளிகையை விடமாட்டேன் என்று அடம்பிடித்தாலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனத்தில்தானே அமரவேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்தராஜபக்‌ஷ, சபாநாயகர் கருஜயசூரிய ஆகிய நாட்டின் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமை அந்தஸ்தில் இருக்கும் மூவரின் நோக்கமும் ஒரு புள்ளியில் சந்தித்தால் என்னதான் செய்ய முடியாது? அதுவும் - ஜனாதிபதி ரணிலைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கி புதிய பிரதமராக மஹிந்தவை நியமித்தது பற்றிய அபிப்பிராயத்தை சபாநாயகர் கேட்ட போது இதற்கு தான் கருத்துக் கூறுவது பொருத்தமற்றது என்று சட்ட மாஅதிபர் சொன்னதன் பின்பு சபாநாயகர் தன்னால் என்னதான் செய்ய முடியுமோ அதனைத்தான் செய்வது போல தெரிகிறது.

மூவரும் சந்திக்கும் புள்ளி நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலுக்குச் செல்வதாக இருக்குமோ?

அரசமைப்பில் சொற்களின் கூட்டங்களே உண்டு, பொருள் கோடலுக்கே அதிகாரம் உள்ளது போல் தெரிகிறது. பொருள் கோடலை நீதிமன்றுதானே தரவேண்டும்.இவ்விடத்தில் ரணில் தன் பதவியைக் காத்துக்கொள்ள ஏன் இன்னும் நீதிமன்றம் செல்லவில்லை என்ற கேள்வி எழுகிறதல்லவா?

நியாயாதிக்கம் என்று எதுவுமில்லை,ஆதிக்கம் மட்டுமே உள்ளது உலகில்!