Theneehead-1

   Vol:17                                                                                                                               05.12.2018

மாவீரர்நாள் வியாபாரம்

நடேசன்


மரணித்த வீரனே
உன் சீருடைகளை எனக்குத் தா
உன் பாதணிகளை எனக்குத் தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா.
என்றவர்
முடிவில்
பிள்ளைகளுக்கும் சேர்த்து
கொத்துரொட்டி வாங்கிக் கொண்டு
வீடு ஏகினார்

நன்றி: ஜோர்ச் குருசேவ்

ரொபின் ஐலன்ட் சிறையை சில வருடங்கள் முன்பு சென்று பார்த்தபோது நெல்சன் மண்டேலா ரொபின் ஐலன்ட் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த காலத்தில், நல்லnelson mandela jailவேளையாக தற்கொலைக் கலாச்சாரம் தென் ஆபிரிக்காவில் இருக்கவில்லை . இருந்திருந்தால் அவரும் சயனைட்டை விழுங்கி மாவீரனாகியிருப்பார். தென் ஆப்பிரிக்க கறுப்பின மக்கள் இன்னமும் விடுதலை பெற்றிருக்கமாட்டார்கள் என்ற நினைவு என்னையறியாமல் வந்து தொலைத்தது .

இந்த சயனைட்டும் மற்றும் தற்கொலை விடயங்களும் விடுதலைப்புலிகளை நான் வெறுப்பதற்கான பல காரணங்களில் ஒன்று . எனது வாதம் தனது உயிரில் அக்கறையோ மரியாதையோ அற்றவன் மற்றவர்கள் உயிர் , உடைமைக்கு மாத்திரமல்ல, மற்றவர்களின் உரிமைக்கும் மதிப்பளிக்கமாட்டான் என்ற அடிப்படையான விடயத்தை தெளிவாகப் புரிந்துகொண்டேன். புலிகளின் தோற்றத்தில் இருந்து மறைவுவரை இவர்களின் செயல்கள் நோக்கங்களில் எந்தச் சந்தேகமும் எனக்கு இருக்கவில்லை.

இந்த நிலையில் மாவீரர் நிகழ்வு என்பதெல்லாம் அரசியல் பிரசாரம்தான்! இறந்தவனைப் போற்றுவதன் மூலம் பலர் மேலும் மேலும் இறக்கத் துணிவார்கள். வாழும் காலத்தில் நம்பிக்கை இல்லாதவன்கூட இறந்தபின் தனக்கு நடக்கும் மரியாதைகள் அவனை மரணத்தைத் நோக்கிச் செல்லத்தூண்டும்.

ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் போனபோது அங்கும் இறந்த போர்வீரர்கள் மரியாதைக்கு உட்படுத்தப்படுவதைக் கண்டேன் . உலகமெங்கும் ஆக்கிரமிப்பு நடத்தும் அரசாங்கங்களுக்கு மிகப் பெரிய இராணுவத்தின் தேவையிருக்கிறது. ஆனால், அந்த அரசுகள் அவர்களது குடும்பங்களை பராமரிப்பதிலும் உடல் ஊனமற்றவர்களுக்கு உதவுவதிலும். பல இடங்களில் அவர்களுக்கு முன்னுரிமையை தருகின்றன.

விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் வன்னியில் போரில் இறந்தவர்களுக்கு இலங்கை அரசின் ரேசனில்? மற்றும் பல விடயங்களிலும் முன்னுரிமை கொடுத்ததுடன் ஊனமுற்ற போராளிகளுக்கு கம்பியூட்டர் அறிவையும் மற்றும் பல திறமைகளையும் வளர்த்தார்கள். புலிகளை விமர்சிப்பவர்களும் கூட இப்படியான விடயங்களைப் பாராட்டவேண்டும்.

போர் நடக்கும்போது ஆயுதத்திற்கு வாரிக் கொடுத்தவர்கள் வெளிநாட்டுத்தமிழர்கள்தான். போரின்பின்பு மாவீரர் நாளுடன் தங்கள் விசுவாசத்தை நிறுத்திக் கொள்கிறார்கள். அந்த விசுவாசம் மலைபோன்று மெல்பனில் ஊதிப் பெருக்கப்படுகிறது. அத்துடன் அந்தக் கார்த்திகை மாதத்தில் தமிழர்கள் எதுவும் செய்யக்கூடாது என்று தடுக்கப்படுகிறார்கள். இது இன்று நேற்று அல்ல பலகாலமாக நடக்கிறது.

சமீபத்தில் நடந்த நிகழ்வொன்றினால் இதை எழுதுகிறேன்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த ஆங்கில நாடகக் கலைஞரான ஏர்னஸ்ட் தளையசிங்கம் மக்கின்ரயரின் நாடகங்களை ஆராய்ந்து முனைவர்பட்டம் பெற்ற தமிழகக் கவிஞர் சுமதி தமிழச்சி தங்கபாண்டியனது ஆய்வின் தமிழாக்கம் முள்ளிவாய்காலில் இறந்த சொந்தங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டதாகும். அந்தப் புத்தகத்தை கார்த்திகை 25 ஆம் திகதி ஞாயிறன்று நடத்துவதற்கு நான் சார்ந்த அவுஸ்திரேலிய கலை இலக்கியசங்கம் முடிவு செய்து, அனைத்து ஊடகங்களுக்கும் அறிவித்து, பல கலை இலக்கிய ஆர்வலர்களுக்கும் அழைப்பு அனுப்பியிருந்தது.

தமிழச்சி சுமதி தங்கபாண்டியனும் குறிப்பிட்ட இந்த கார்த்திகை மாதம்தான் தனது மெல்பன் பயணத்தையும் ஒழுங்குசெய்திருந்து வருகை தந்திருந்தார். நிகழ்சி நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்நிகழ்ச்சியை உடனடியாக தவிர்க்குமாறும் மெல்பனில் மாவீரர் நாளை ஒழுங்கு செய்யும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் முக்கியஸ்தர் ரமேஷ் பாலகிருஷ்ணன் என்பவர் எம்மைக்கேட்டிருந்தார்.!

இவரது மின்னஞ்சல், ஒரு வேண்டுகோளாக இருந்தாலும், முன்பெல்லாம் இதே நபர் நடந்துகொண்ட விடயங்கள் குறித்தும் தீவிரமாக எண்ணிப்பார்க்க வேண்டிதாக இருந்தது.

இதற்கு முன்னரும் இதர அமைப்புகள் தனிநபர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளின்போதும் விடுதலைப்புலிகளினது பெயரைச்சொல்லி, செய்யவிடாமல் தடுக்கும் செயல்களில் ஈடுபட்டவர்!.

2008 ஓகஸ்டில் மக்களைப் போர்முனைக்கு பலியாடுகளாக எடுத்துச் செல்லவேண்டாம் என்று பகிரங்கமாக எழுதிய இருவர் நானும் பத்திரிகையாளர் டி.பி.ஸ் ஜெயராஜ் அவர்களும் மட்டுமே. ஆனால், புலி ஆதரவாளர்கள் அம்மக்களை கவசமாக வைத்து விடுதலைப்புலிகள் தப்பிக்க வேண்டுமென போராட்டம் , உண்ணாவிரதம் போன்ற கவனஈர்ப்பு வேலைகளில் ஈடுபட்டனர். ஒருவராவது மக்களை போர்க்களத்திற்கு பலியாடுகளாக கொண்டு செல்லவேண்டாமென குரல் எழுப்பவில்லை. அவர்கள் புலி என்ற குதிரையில் பணம் கட்டியவர்கள். குதிரைக்கு காயமோ அதனை செலுத்தும் குதிரைப்பாகனுக்கு முதகெலும்புடைவது பற்றியோ கவலைப்படாதவர்கள்!

2009 மார்ச் மாதத்தில் நான் உட்பட அவுஸ்திரேலியாவில் இருந்து நான்கு பேரும் மற்றைய நாடுகளில் இருந்து 25 பேரளவிலும் போர்க்களத்தில் சிக்கிய மக்களின் சார்பாக ஏதாவது வழியில் அந்த போரை நிறுத்தமுடியுமா எனஇலங்கை அரசுடன் பேசுவதற்குச் சென்றோம் . அந்தப்பேச்சினால் உடனடியாக பலன் கிட்டது போனாலும், பிற்காலத்தில் பல விடயங்களை மக்களுக்கு ஆக்கபூர்வமாகச் செய்ய முடிந்தது.

அவ்வாறு அன்று போய் வந்ததும் “எங்களை துரோகிகளாக சித்திரித்து, எமது குடும்ப அங்கத்தவர்களையும் அவமதித்தது அக்காலத்தில் பொது மலசலகூடமாகத் திகழ்ந்த இன்பத்தமிழ்வானொலி ஒலிபரப்பு!

அக்காலப்பகுதியிலும் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதனையும் இந்தப்பத்தியில் நான் குறிப்பிடும் நமது நண்பர் ரமேஷ் பாலாகிருஷ்ணனிடமிருந்தே வந்திருந்தது .

“நான்கு நாட்டுப்பற்றாளர்களை உருவாக்கிய அவுஸ்திரேலியாவில் நான்கு துரோகிகளை நாங்கள் விட்டு வைத்திருக்கிறோம். இளைஞர் கூட்டம் பொங்கியெழுகிறது. அவர்களுக்க அனுமதி வேண்டும்” என்று திராவிட அரசியல் கோசம்போல் மறைந்த முன்னாள் ஈழத்தமிழ்ச்சங்கத்தலைவர் சோமசுந்தரத்திடம் அனுமதிகேட்டு அந்த அஞ்சல் எழுதப்பட்டிருந்தது.

உடனே அதனைப்பார்த்துவிட்டு, ” ரமேஷ், நீ குண்டுவைக்கவா, கண்ணி வெடி வைக்கவா இல்லை, தற்கொலை போராளியை அனுப்பப்போகிறாயா? ” என கேட்டு எழுதிவிட்டு, ரமேஷின் மின்னஞ்சலின் பிரதியை விக்ரோரியா பொலிசுக்கு அனுப்பினேன். அன்று நான் நினைத்திருந்தால் வன்முறையை இவர் தூண்டுவதாக முறைப்பாடு செய்திருக்கலாம் . ” சின்னப்பொடியன் தவறு செய்கிறான்” என நினைத்தேன்.

அதன்பின்னர் – சிலவருடங்களின் பின்பு இலங்கையின் அவுஸ்திரேலியத் தூதராக திசரா சமரசிங்க மெல்பேன் வந்தபோது, நண்பர் சுந்தரமூர்த்தியுடன் அவரைச் சந்தித்தேன் . அந்தசந்திப்பையும் அவதூறுசெய்து, ” நாங்கள் தமிழர்களை காட்டிக்கொடுப்பவர்கள் என சித்திரித்து இதே ரமேஷ் பலருக்கும் மின் அஞ்சல் அனுப்பியிருந்தார். உடனே தாமதிக்காமல், நான் தொலைப்பேசியில் ரமேஷை தொடர்புகொண்டு, அதைப்பற்றி விசாரித்தபோது, ” மற்றவர்கள் அனுப்பியது, தனக்கும் வந்தது. அதை நான் அனுப்பினேன் என்று ஒரு கோழையைப்போல் பதில் சொன்னார். இந்த நபருக்கு தலைக்குள்ளும் ஒன்றுமில்லை! முதுகெலும்புமில்லாதவர் என முடிவு செய்துவிட்டேன்.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலை இலக்கியசங்கத்தில் இணைந்து இயங்கும் எழுத்தாளர் முருகபூபதி ஈழப்போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக 1988 ஆம் ஆண்டுமுதல் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை பல அன்பர்களின் ஆதரவுடன் தொடக்கி நடத்திவருபவர். முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்த அமைப்பு தங்கு தடையின்றி இயங்குகிறது.

முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின்போது இலங்கை அரசபடையிடம் சரணடைந்த 700 பெண் பேராளிகள் மற்றுடையற்று அவதிக்குள்ளாகியிருந்தபோது நான் எனது சொந்தப்பணத்தில் அவர்களுக்கு புதிய உடைகளை வாங்கி தாமதமின்றி இரண்டுநாட்களில் அவர்களிடம் விநியோகித்தேன். அதேபோன்று 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் புலிகள் இயக்கத்தில் இணைந்திருப்பதையும் அவர்களும் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதையும் அறிந்து, அவர்களையும் விடுவித்து, இலங்கை மணவர் கல்வி நிதியத்தின் ஊடாக பிரத்தியேகமாக படிக்கவைத்து, பெற்றோரிடம் ஒப்படைக்க உதவி செய்தோம்.

இவற்றை நாம் சொல்ல விரும்பவில்லை. ஆனால், ரமேஷ் பாலகிரrbுஷ்ணன் போன்றவர்கள் செய்யும் பரப்புரைகளை பார்க்கும்போது சொல்வதற்கு நேர்ந்துவிடுகிறது! விடுதலைப்புலி இயக்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைத்தாலும் அவர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்மால் இயன்றவரையில் உதவிகளை செய்தோம். செய்துவருகின்றோம்.

ஆனால், போரில் உயிர் நீத்தவர்களின் பேரில் வியாபாரம் செய்வதும் அவர்களுக்காக சேகரித்த பணத்தை எமது தலைவர் வந்தால் கொடுக்கிறேன் என்று சொல்லிவரும் இவர்கள், நாம் தொடரும் கலை, இலக்கிய மற்றும் சமூகப் பொதுப்பணிகளை செய்யவிடாமல் தடுக்க அல்லது கட்டுப்படுத்த வரும்போது எரிச்சல்தான் வருகிறது .

பொதுச்சேவையில் எங்களைப் போன்று கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக அவுஸ்திரேலியாவில் பலர் ஈடுபட்டுவருவதனால், ரமேஷ் பாலா போன்றவர்களது சலசலப்பு எதனையும் செய்யதுவிடாது . ஆனால், சாதாரணமான பொது மக்கள் மீது இவர்கள் தொடர்ச்சியக இத்தகைய அழுத்தங்களை சுமையாக சுமத்துவதை எப்படி அனுமதிப்பது..?

“மாவீரர் மாதத்திலும், முள்ளிவாய்க்கால் மாதத்திலும் திலீபன் உயிர்நீத்த மாதத்திலும் எமது தமிழ்ச்சமூகத்தினர் எந்தவொரு நிகழ்ச்சியும் செய்துவிடக்கூடாது ” என்று இந்த ரமேஷ் போன்றவர்கள் பரப்புரைகளை தொடர்ச்சியாகச்செய்து வருவதை பார்க்கும்போது, ஏன் இவர்கள் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்காக இதுவரையில் அஞ்சலி செலுத்தவில்லை? எனவும் கேட்கத்தோன்றுகிறது!
–0—