Theneehead-1

Vol: 14                                                                                                                                                06.01.2017

அவர்களது சர்வதேச சகாக்களைப் போலில்லாமல் ஸ்ரீலங்கா சிவில் சமூகம் பிடல் கஸ்ட்ரோவை பகிரங்கமாக நினைவுகூரத் தவறிவிட்டது.

                                     கலாநிதி.தயான் ஜயதிலக

“என்னை நம்புங்கள் அது ஒரு மகிழ்ச்சியான காலமாக இருக்கவில்லை!... அவர்களது மனிதாபிமான துணை துருப்புக்கள், மனித உரிமைகளில் தலையீடு செய்யும் உரிமையுடன் இணைந்திருந்தது, அதன் ஒரே ஆதாரமாக உதவி புரிதல் அமைந்திருந்தது, வயிறு நிறைந்திருந்த மேற்கத்தைய கோட்டைகள் உலகம் முழுவதும் பட்டினியால் வாடுபவர்களுக்கு தார்மீக பாடங்களை வழங்கி….தேசிய, இன, பாலியல், மத, மற்றும் கலாச்சார வழிபாட்டு அடையாளங்கள் மூலம் உலகளாவிய உரிமைகளை இல்லாதாக்க வழி தேடிக்கொண்டிருந்தன” -

அலன் பாடியோ, ‘தத்துவத்தின் இரண்டாவது அறிக்கை’

ஒரு உணர்வில் 2016ல் நாங்கள் பிடலை இழக்கவில்லை, ஏனென்றால் அவரது எடுத்துக்கfidal castroாட்டு மற்றும் வார்த்தைகள் சே குவேராவின் வார்த்தைகளைப் போல அழிக்க முடியாதவை. சன்டினிஸ்ற்றா தளபதியும் மற்றும் கவிஞருமான தோமஸ் போர்கே (பின்னாளில் ஒரு இராஜதந்திரி) யிடம் அவரது சிறை அதிகாரி அவரது தலைவரான கார்லோஸ் பொன்சேகா கொல்லப்பட்டு விட்டார் என்கிற செய்தியை கொண்டுவந்தபோது அவர் சொன்னார்:” இல்லை, அவர் இறந்தவர்களுக்குள் இறக்காத ஒருவர்” என்று. 

இது பிடலின் விஷயத்தில் பல தடவைகள் உண்மை. பழைய ஏற்பாட்டில் வரும் யூத தீர்க்கதரிசி அல்லது கத்தோலிக்க புனிதர்களைப் போல பிடலும் ஒரு அழிவற்றவர். ரவுல் கஸ்ட்ரோ சொன்னது போல, “பிடல் தோற்கடிக்க முடியாதவர், எங்களை விட்டுச் சென்று விட்டார், ஆனால் அவரது போராட்ட உத்வேகம் எங்கள் மனச்சாட்சிகளில் நிரந்தரமாக வீற்றிருக்கும்” (டிசம்பர் 27,2016).

எங்கள் மதிப்புகள், எங்கள் அரசியல் உணர்வுகள் மற்றும் இந்த உலகத்தில் இருப்பதற்கான வழி என்பதை உருவாக்குவதில் பிடல் பெரும் செல்வாக்கினைச் செலுத்தியுள்ளார். அவர் கிளர்ச்சியின் ஒரு நவீன வகை, புரட்சியின் புதுவடிவம் மற்றும் முன்னுதாரணமான தலைவர் - ஆட்சியாளர். சே குவேராவின் பிரியத்துக்குரிய தலைவர் என்பதினால், உண்மையில் பிடலின் பெருந்தன்மையுடன் எதையும் ஒப்பிட முடியாது. ஜீன் - போல் ஸாட்டர், சே “தனது காலத்தில் இருந்த பூரணத்துவமான மனிதர்” என விளக்குகிறார், மற்றும் ரவுல் கஸ்ட்ரோ அவரை “மனித பிறவிகளின் உயர் தன்மைக்கு அவர் முன்னுதாரணம்” என அழைத்தார்(1991). அந்த மனிதர்தான் இதயத்தை தொடும் தனது பிரியாவிடை கடிதத்தில் பின்வரும் வார்த்தைகளால் பிடலைப் பற்றி பின்வருமாறு விளக்கினார்:

“உங்களது சிந்திக்கும் முறை, ஆபத்து மற்றும் கொள்கைகளைப் பார்த்து அதை மதிப்பிடும் முறை என்பனவற்றை அடையாளம் கண்டு கொண்டதினால் எந்த வித தயக்கமுமின்றி உங்களைப் பின்பற்றியதற்காக நானும் பெருமைப்படுகிறேன்… நீங்கள் எனக்கு கற்றுத்தந்த விசுவாசத்தை,எனது மக்களின் புரட்சிகர உத்வேகத்தை, மிகவும் புனிதமான கடமைகளை நிறைவேற்றும் உணர்வுகளை: அது எங்கிருந்தாலும் இருந்தாலும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராட வேண்டும் என்பனவற்றை எல்லாம் நான் புதிய போர்க்களங்களுக்கு எடுத்துச் செல்கிறேன்….எனது இறுதி மணித்துளிகள் மற்றொரு விண்ணின் கீழ் என்னைக் கண்டால் எனது இறுதி எண்ணம் இந்த மக்களையும் மற்றும் மிகவும் விசேடமாக உங்களைப் பற்றியதாகவும் இருக்கும் என்று சொல்லும். உங்களது போதனைகளுக்கும் மற்றும் உங்களது உதாரணத்துக்கும் நான் நன்றியுடைவன், அதை நான் எனது நடவடிக்கைகளின் இறுதி விளைவுகளில் விசுவாசமாக இருப்பதற்கு பயன்படுத்த முயற்சிப்பேன்” (எணஸ்ட்டோ சே குவேரா, பிடலுக்கு எழுதிய பிரியாவிடைக் கடிதம்,1965).

ஸ்ரீலங்கா அரசியல் சமூகம் - அரசாங்கம் மற்றும் இடது முதல் வலது வரையான ஒவ்வொரு அரசியல் கட்சிகள் (ரிஎன்ஏ அல்லாத வடக்கு தீவிரவாதிகள் தவிர) - பிடலை நினைவு கூர்ந்தார்கள் அதேவேளை, ஸ்ரீலங்கா சிவில் சமூக அறிவாளிகளின் மௌனத்தைக்கண்டு நான் அச்சமடைந்தேனே தவிர ஆச்சரியமடையவில்லை. கிட்டத்தட்ட விதிவிலக்கு இல்லாமல் சிவில் சமூக முற்போக்கு பண்டிதர்கள், புத்திஜீவிகள், சமூக விஞ்ஞ}னிகள், சித்தாந்தவாதிகள், கலாச்சார மற்றும் கலையுலக பிரமுகர்கள் மற்றும் சுயமாக தங்களை தீவிரவாதிகள் எனப் பிரகடனப் படுத்திக்கொண்டோர், இடதுசாரிகள்,பெண்ணியவாதிகள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் இடது பக்கச் சாய்வுள்ளவர்கள் உட்பட அணிசேரா இயக்க காலத்து முன்னாள் இராஜதந்திரிகள், உலகெங்கிலுமுள்ள அவரது சகாக்களுக்கு முற்றிலும் மாறாக பகிரங்கமாக பிடலை நினைவு கூருவதைப்பற்றி ஒரு வார்த்தை எழுதவோ அல்லது பேசவோ இல்லை.

இந்த மாதிரியான நிலமையில் பிடல் என்ன சொல்வார் அல்லது செய்வார் அல்லது அவர் சொன்னதை ஒருவர் எவ்வாறு பிரயோகிப்பார் என்பதை நான் கண்ணாடி அரியத்தின் ஒரு முகத்தின் ஊடாக பார்க்கிறேன் - அடிப்படை கொள்கை சம்பந்தப்பட்டிருப்பது - கையில் உள்ள பிரச்சினையில். இது எந்தவித ஆ;சரியமும் இல்லாமல் வரவேண்டும் ஏனென்றால் வன்முறை பற்றிய உலகளாவிய ஒரு கருத்து மற்றும் தலையங்கத்துக்கு எனது சொந்த அறிவுஜீவியான பங்களிப்பு பிரிக்க முடியாத அளவிற்கு பிடலின் உருவத்துடன் பிணைந்து நிற்கிறது.

வார்த்தைகளில் நான் புதையலாக கருதும் உலகளாவிய மதிப்புவாய்ந்த சிந்தனையாளர், பிறின்ஸ்டனில்  சர்வதேச சட்டம் பற்றி பாடம் நடத்திய ஓய்வுபெற்ற பேராசிரியர் (40 வருடங்களாக அங்கு கல்வி போதித்துள்ளார்), 40 புத்தகங்களுக்கு மேல் எழுதிய எழுத்தாளர், உதவி எழுத்தாளர் அல்லது பத்திரிகை ஆசிரியர், மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் பிரதேசத்திற்கான முன்னாள் ஐநா விசேட அறிக்கையாளர் எனும் சிறப்புக்களை உடைய றிச்சட் பேக் எனக்கு அன்பாக மேற்கோள் காட்டியதையும் மற்றும் ஓய்வு பெற்ற சட்டப் பேராசிரியர் மற்றும் அமெரிக்க தேசிய சட்டவாளர்கள் சங்கத்தின் தலைவரான மார்ஜோரி கோன், பிடல் கஸ்ட்ரோவின் மறைவுக்குப் பின்னர் வெளிநாட்டு கொள்கை சஞ்சிகையிலும் மற்றும் அதேபோல அவரது வலைப்பதிவிலும் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதையுமே.

பிடல் கஸ்ட்ரோவின் மரணத்தில்” என்ற தலைப்பில் 2000 க்கும் மேற்பட்ட வார்த்தைகள் உள்ள அந்தக் கட்டுரையில் போக் பின்வருமாறு எழுதுகிறார்:

மேற்கு தனது உயர்நிலையில் இருந்து கீழிறங்கி தாராள மனதுடன் மதிப்பீடு செய்துள்ளவைக்கு மாறாக,எனது பிரியமான நண்பர்கள் எழுதியுள்ள  இரண்டு அசாதாரண பாராட்டு கட்டுரைகளில் நான் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். ஒன்று ஸ்ரீலங்காவின் முன்னணி இராஜதந்திரி மற்றும் கலாச்சார விமர்சகரான தயான் ஜயதிலக கொழும்பு ரெலிகிராப் பத்திரிகையில் பொருத்தமான தலைப்பான “பிடலுக்கு ஒரு பிரியாவிடை: காவிய நாயகர்களில் கடைசி” நவம்பர்26, 2016 என்பதின் கீழ் எழுதியது. தயான், பற்றிஸ்ராவின் காலத்தில் ஒரு குண்டர்கள் தேசமாக இருந்த கியுபாவை, கஸ்ட்ரோ தனது வீரம் நிறைந்த புரட்சிகரமான சாதனைகளால் மூன்றாம் உலகின் முற்போக்கான கொள்கை நிறைந்த முக்கிய நாடாக உருமாற்றியதற்காக அவரை பாராட்டுவது மட்டுமல்லாமல், அப்பாவி பொதுமக்களின் வாழ்க்கையில் ஒழுக்கமான மதிப்பைக் காண்பிக்கும் வழிகளில் கஸ்ட்ரோவின் புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவிய ஆச்சரியமான வன்முறைத் தத்துவங்களையும் கோடிட்டுக் காண்பிக்கிறார். இன்னும் அதிகளவிலான விபரங்களுக்கு ஜயதிலகாவின் அருமையான பாராட்டு ஆய்வான, ‘பிடலின் வன்முறை தத்துவங்கள்: பிடல் கஸ்ட்ரோவின் அரசியல் சிந்தனைகளின் நெறிமுறைப் பரிமாணங்கள் (லண்டன்: புளுட்டோ பதிப்பகம்,2007) என்பதை படியுங்கள். அரசியல் வன்முறை தத்துவங்கள் என்பதின் கரு, பயங்கரவாதிகள் குழு மற்றும் இறையாண்மையுள்ள நாடு என்பனவற்றுக்கு இடையே பல்வேறு போராட்ட வலயங்களிலும் நடக்கும் போராட்டத்தின் தன்மையில் விசேடமாக 9ஃ11 தாக்குதலில் இருந்து முக்கியமாக காணாமற் போய்விட்டது. ஜயதிலகாவின் மதிப்பீடுகள், நிக் ஹியுலற் சமீபத்தில் பிரசுரித்த “ இரத்தமும் மற்றும் முன்னேற்றமும்: விடுதலையை முன்னெடுப்பதில் உள்ள வன்முறை’  (எடின்பரோ, ஸ்கொட்லாந்து: எடின்பரோ பல்கலைக்கழக பதிப்பகம், 2016) என்கிற தலைப்பிலான நூலில் நீட்டிக்கப்பட்டு உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

பிடலின் முன்னுதாரணங்களுக்கு வருவதற்கு, ஒருவர் பிடலைப் பிரயோகிக்க வேண்டும் - பிடலை பிரயோகிப்பதற்கு ஒருவர் பிடலின் சித்தாந்தத்தின் உயிர்நாடியையும் மற்றும் நடவடிக்கையையும் விளங்கிக்கொள்ள வேண்டும். இதைச் செய்வதற்கு ஏணஸ்ட்டோ சே குவேராவை தவிர அதிகம் நம்பிக்கையானவர் வேறு எவருமில்லை, மற்றும் பிடலுக்கு அவர் எழுதிய பிரியாவிடைக் கடிதத்தில்… நீங்கள் எனக்கு கற்றுத்தந்த விசுவாசம், எனது மக்களின் புரட்சியின் உத்வேகம், மற்றும் எங்கு இருந்தாலும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராட வேண்டும் என்கிற மிகவும் புனிதமான கடமைகள் என்பனவற்றை நான் எனது புதிய யுத்தமுனைகளுக்கு எடுத்துச் செல்வேன்… என எழுதியுள்ளார்.

இதன்படி குவேராவுக்கு “எங்கு இருந்தாலும்கூட ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடவேண்டும்”  என்கிற பிடலிசத்தின்  கொள்கை இதயத்தில் பதிந்திருந்தது. பிடல் எப்படி இந்த பணியை மிகவும் விதியாசமான சோவியத் காலத்துக்குப் பின்னான சமகால வரலாற்றுக்கு மாற்றீடு செய்தார்?

மார்கொட் பெப்பரின் கியுபாவை பற்றிய புத்தகம் 2006 அமெரிக்க புத்தகப் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது, அதில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப பிறகு பிடல் மற்றும் லூலா ஆகியோர் கூட்டாக நிறுவிய சாவோ போலோ மன்றத்தில் பிடல் நிகழ்த்திய இறுதிப் பேச்சு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.(எனது மிகவும் உயர்ந்த பரிசாக நான் கருதுவது, அந்த நேரம் பிடல் பற்றிய எனது நூலை ஜனாதிபதி லூலா என்னுடன் பார்வையிடும் புகைப்படத்தையே, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைவரும் அருகில் நிற்கிறார்.)அதில் எழுதப்பட்டுள்ளது, “தனது இறுதிப் பேச்சில் பிடல் அந்த கொள்கைக்கு எதிராக எச்சரிக்கை செய்தார், அந்த மன்றத்தில் நேரடியாக அவர் பேசியதை நான் கேட்டேன்” என்று, அவரது வார்த்தைகளை அந்தப் பெண்மணி கீழுள்ளவாறு மறுபதிப்பு செய்கிறார்:

“சோசலிசத்தை கட்டியெழுப்புவதற்கு சாதகமான நோக்கம் அல்லது இலக்கான நிலமைகள் பற்றி இந்த நேரத்தில் யாராலும் கூற முடியாது. இந்த நேரத்தில் வேறு முன்னுரிமைகள் உள்ளதாக நான் நினைக்கிறேன்… இன்றைய மிக முக்கியமான யுத்தம் லத்தீன் அமெரிக்காவினுடையது, என்பது எனது கருத்து, நவதாராண்மைவாதத்தை முறியடிப்பது என்பதாகவே உள்ளது, ஏனென்றால் நாங்கள் அதைச் செய்யாவிட்டால், நாங்கள் சுதந்திர நாடுகளாக இருப்பது மறைந்துவிடும் மற்றும் நாங்கள் மூன்றாம் உலகம் ஒருபோதும் இருக்கக் கூடாத ஒரு காலனியின் நிலைக்கு வந்துவிடுவோம்”

லெனின் ஒருமுறை எழுதியிருந்தார், மார்க்ஸ் சுத்தப்படுத்தப்பட்டு பதப்படுத்தி  அடைக்கப்பட்டு விட்டார், எனவே அவரது சிந்தனைகள் தாராண்மைவாத சமூகநிலைக்கு இணக்கமான வகையில் குறைக்கப்பட வேண்டும் என்று. அத்தகைய ஒரு நிலையில் இருந்து பிடல் கஸ்ட்ரோவை காப்பாற்ற வேண்டியது முக்கியம்.

சிலர், பிடலின் புரட்சிகரத் திட்டத்தை பற்றிஸ்ற்றா விதமான ஆட்சிக்கு எதிரான ஒரு கலகம் என குறைத்துக்கூற முயற்சிக்கிறார்கள் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப ஆயுதம் தாங்க நிர்ப்பந்திக்கப்பட்ட  ஒரு சமூகநிலை தாராண்மைவாதி என குறைத்து மதிப்பிடுகிறார்கள், அதேவேளை தீவிரமான எந்த ஒரு மாணவனும், உயர் பிடலிசம் - குவேராசம் பற்றி வரையறை செய்யும் காலத்தை ஹவானா பிரகடனம் முதல் திரிகண்ட மற்றும் லத்தீன் அமெரிக்கா ஒற்றுமை இயக்க (ஓ.எல்.ஏ.எஸ்) மாநாடுகள் வரை, முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் (அதாவது சோசலிஸ்டுகள்) அமெரிக்க கைப்பாவைகளான போலி தேர்தல் ஜனநாயகவாதிகளுக்கு எதிராக நடத்தும் ஆயுதப் போராட்டத்தைப் பற்றி பதாகைள் ஏந்தி நின்றதை நினைவு கொள்வான் மற்றும் அந்த அந்த முதலாளித்துவ மன்றம்(ஏஜ.எப்.கே யின் முன்னேற்றத்துக்கான கூட்டணி) புரட்சி விரோத திட்டத்தின் ஒரு பகுதியாகும். வெனிசுவெலா தான் முதல் உதாரணம், மற்றும் கெரில்லாப் போராட்டம் பற்றிய நிகழ்ச்சி றெஜிஸ் டெப்ரேயின் கட்டுரையான “பிடலிசம்: லத்தீன் அமெரிக்காவில் நீண்ட பயணம்” என்பதில் விபரிக்கப் பட்டுள்ளது. உருகுவேயின் டப்பாமரோஸ், ஆhஜன்ரீனாவின் மொன்ட்டனிரொஸ் மற்றும் ஈ.ஆர்.பி , மற்றும் கொலம்பியாவின் ஈ.எல்.என், மற்றும் எம்19 போன்ற பிடலிச இயக்கங்கள் உருவாக்கப்பட்டன மற்றும் தெரிவு செய்யப்பட்ட ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி நடத்தின, அதேவேளை சல்வடோரின் எப்.எம்.எல்.என் புரட்சியாளர்கள் கூட, 1980களின் தொடக்கத்தில் ஜோஸ் நெப்போலியன் டுராட்டேயின் தேர்வுசெய்யப்பட்ட அரசாங்கத்துடன் தொடர்ச்சியாக யுத்தம் நடத்தினார்கள்.

நிச்சயமாக லெனிஸ்ட் இயக்கங்கள் லத்தீன் அமெரிக்காவை கடந்தபோது, 1920க்குப் பின்னர் லெனின் தானே தனது மூலோபாயங்களை மாற்றியதுபோல பிடலும் தனது மூலோபாயங்களை மாற்றினார். அவர் எதிர்வு கூறியதைப் போல சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், உலக சக்திகளின் சமநிலையின் வியத்தகு மாற்றத்திற்கு ஏற்ப மேலும் மாற்றத்தை ஏற்படுத்தினார். முக்கியமான சிந்தனையாளர்கள் பகுதியில் எட்வேட் சைட் “பிந்தைய பாணி” பற்றி குறிப்பிடுகிறார். சைட் இன் யோசனை கலைஞர்கள் பற்றிய விமர்சனத்தை எழுப்பும் “பிந்தைய காலம்” என்கிற காலத்துக்கான மீள்வேலைத்திட்டமாகும். சைட் மேலும் அவதானித்திருப்பது பிந்தைய பாணியில் தொடர்ச்சியான தடங்கள் உள்ள ஒரு பாத்திரத்தை. பிடலின் பிந்தைய பாணி சொல்வது என்ன இன்றைய ஸ்ரீலங்காவுக்கு அது பொருத்தமானதா?

வரலாற்றின் புதிய காலகட்டத்தில் பிடலின் மிகவும் முக்கியமான யுத்தம் என்பது  சோவியத்துக்குப் பின்னான ஒற்றைத்துருவ காலத்தில் நவதாராண்மைவாதத்தை தோற்கடிப்பதாக இருந்தது, எனவே “நாங்கள் சுதந்திரமான நாடுகளாக இல்லாமல் மறைந்துவிடுவோம்”; மற்றும் “மூன்றாம் உலக நாடுகள் ஒருபோதும் இருந்திராத வகையில் அதிகம் ஒரு காலனியாக மாறிவிடுவோம்” என்கிற அச்ச நிலை தவிர்க்கப் படுவதற்கான முன்னேற்பாடாக அது இருந்தது. பிடலின் சுயசரிதையை எழுதியவரான இக்னாசியோ றமோனட், ‘மன்டே டிப்ளோமற்றிக்கின்’ முன்னாள் ஆசிரியர், உறுதிப்படுத்துவது “ தனது 90வது வயதில், தனது மரணத்திற்கு முன்பு வரை பிடல் உற்சாகமாக நவதாராண்மைவாத உலகமயமாக்கல் பற்றி தொடர்ச்சியாக கண்டனம் செய்து கொண்டிருந்தார்”…. என்று.( “நான் அறிந்த பிடல்”, கிரான்மா, டிசம்பர் 28, 2016).

பிடலுக்கு முக்கியமான சவாலாக இருந்ததும் மற்றும் நாங்கள் எதிர்நோக்கும் ஆபத்தாகவும் இருப்பது, சுதந்திரமான ஒரு நாடாக இருப்பது மறைந்துபோவது, மூன்றாம் உலக நாடுகள் இருந்ததைவிட அதிகமான ஒரு காலனியாக மாறுவதும்தான். நாங்கள் இதை ஒரு’பிந்தைய மீள் காலனியாக்கம்’ என்று அழைக்கலாம் - ஏகாதிபத்தியத்தின் நவீன கட்டம். “பிந்தைய ஏகாதிபத்தியம்”. ஒரு பிடலிஸ்ராவுக்கு, மிகவும் சமகால முக்கிய பணி மற்றும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போரின் உருவாக்கத்தக்கு தேவையானது, எங்கள் அந்தஸ்தை ஒரு சுயாதீன நாடாக வைத்திருப்பது அல்லது மீண்டும் உருவாக்குவது ஆகும். ஒரு சுதந்திரமான நாடு ஒன்றில் போராட தகுதியற்றது என அதிகமாக சிந்திக்கிறார்கள் ஏனெ;னறால் சோசலிச நாடுகளாக இல்லா விட்டால் அது நல்லதல்ல மற்றும் ஒரு நாட்டின் சுயாதீனம் உலகமயமாக்கலின் கீழ் சாத்தியமற்றதாகலாம்( சோசலிசத்துக்கு மாறும் ஒரு வகையில்).

தனது ஓய்வினைத் தொடர்ந்து பொதுசன தொடர்பாடலை ஏற்படுத்தும் அவரது பிரதான ஒரு முறையாக இருந்த பிடலின் பத்தியின் பிரதிபலிப்பை கொண்ட எந்த ஒரு மாணவனும், தற்போதைய உலக வரலாறு பற்றிய அவரது மதிப்பீடுகளில், அவர் சாத்தியம் என்று கணக்கிட்டுள்ள  பிரதான சர்வதேச காரணிகள், சீனாவின் வலுவான வளர்ச்சி மற்றும் ரஷ்யாவின் மீள் எழுச்சி என்பனவற்றைக் காண்பான். அவர் மரணமடைவதற்கு முந்திய வருடம் ஹிட்லரின் பாசிசத்துக்கு எதிராக சோவியத் ஒன்றியம் நடத்திய மாபெரும் தேசப்பற்று போரின் வெற்றியின் 70 வருட நினைவு பற்றி கிரான்மாவில் பிடல் எழுதிய ஒரு பத்தியில் சொல்லியிருப்பது:

“…. இன்று ரஷ்ய ஒன்றியத்தின் மக்களுக்கும் மற்றும் உலகின் விரைவான பொருளாதார வளர்ச்சி பெறும் நாடான : சீன மக்கள் குடியரசுக்கும் இடையே உள்ள உறுதியான கூட்டினை நாங்கள் காண்கிறோம், இரண்டு நாடுகளும் தங்கள் நெருங்கிய ஒத்தழைப்பு, நவீன விஞ்ஞ}னம், மற்றும் சக்தியான இராணுவம் மற்றும் வீரமான துருப்புக்களைக் கொண்டு உலக சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றுக்கு ஒரு சக்தியான கவசத்தை உருவாக்கியுள்ளன, அதனால் எங்கள் இனங்களின் வாழ்வு பாதுகாக்கப் பட்டுள்ளது” (பிடல் கஸ்ட்ரோ, மார்க்ஸிட்; லெனிஸ்ட்டு க்கான எங்கள் உரிமைகள் 8 மே, 2015).

தற்போதைய வரலாற்றுக்காலத்துக்கு சோசலிசம் இல்லையென்றால் நவதாராண்மைவாத உலக மயமாக்கலுக்கு மாற்றீடு எது? உலகின் மிகப்பெரும் மார்க்ஸிய அரசியல் பொருளாதார நிபுணரும் சிந்தனாவாதியுமான சமீர் அமீன், அடையாளப்படுத்தவது “ஏகாதிபத்தியத்துக்கு பதிலளிக்கத் தக்கதாக இன்று எங்களிடம் உள்ள சிறந்த ஒரு மாதிரியை”:

“சீனாவின் பங்கு மிகப் பெரியது, ஏனென்றால் அதுதான் ஒருவேளை  உலகத்திலேயே இன்று ஒரு இறையாண்மை திட்டத்தை கொண்டுள்ள ஒரே ஒரு நாடு. அதன் அர்த்தம் அது நவீன தொழிற்சாலை மாதிரியை நிறுவ முயற்சித்து வருகிறது, நிச்சயமாக அதில் தனியார் முதலீடுகளுக்கு பரந்த இடம் உள்ளது, ஆனால் அது அரசாங்கத்தின் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்கும். அதே நேரத்தில தற்போதைய கலாச்சாரத்துக்கும் அது ஒரு கண்ணோட்டத்தைக் கொடுக்கும். சீனப் பொருளாதாரக் கலாச்சாரத்தின் மற்றைய வடிவம் குடும்ப உற்பத்திகளை அடிப்படையாக கொண்டிருக்கும். சீனா, பாரம்பரிய மரபுகளை பின்பற்றிக்கொண்டு உலகமயமாக்கலிலும் பங்குபற்றிக்கொண்டு இரண்டு கால்களாலும் நடக்கிறது. அவர்கள் வெளிநாட்டு முதலீடுகளை ஏற்றுக் கொள்கிறார்கள், ஆனால் அவர்களது நிதி முறையையும் சுயாதீனமாக வைத்துள்ளார்கள். சீனாவின் வங்கி முறை பிரத்தியேகமாக அரச கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஒரு குறிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே யுவான் மாற்றத்தக்கது, ஆனால் பாங் ஒப் சைனாவின் கட்டுப்பாட்டின் கீழேயே மாற்றலாம். உலக மயமாக்கலின் சவாலுக்கு பதிலளிக்க தக்கதாக எங்களுக்கு இன்றுள்ள சிறந்த மாதிரி அதுதான்”.

புட்டினை, சீன மாதிரியை, மற்றும் சுதந்திரத்துக்கான சிரியாவின் போராட்டத்தை அதிகமாக் ஸ்ரீலங்கா இடதுசாரிகள் வெறுக்கிறார்கள். இதன்படி  ஏகாதிபத்தியத்துக்கு எதிரான யுத்தம், சுதந்திரமான நாடுகளுக்குஃநாடுகளின் சுதந்திரத்துக்கு பாதுகாப்பாக,சீனா மற்றும் ரஷ்யாவின் வலிமையை அதிகப்படுத்திக் கொண்டுள்ள வலிமையான அமைப்பில் உள்ள ஒரு யுத்தம், என்கிற ஒரு நியாயமான முடிவுக்கு நாங்கள் வரலாம், பிடலின் கடைசி தசாப்தங்களில் உலக வரலாறு பற்றிய முன்னோக்கமும் அதுதான்.

இது மிகவும் உறுதியாக ஸ்ரீலங்காவின் போராட்ட வருடமான 2017ல் நடைமுறைக்கு நிச்சயம் மாற்றப்பட வேண்டும்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
 

dantv