Theneehead-1

   Vol:17                                                                                                                                06.08.2018

வெனிசூலா அதிபரைக் கொல்ல முயற்சி?

வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ பங்கேற்ற ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் குண்டுகள் வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியது.  வெடிபொருள் நிரப்பப்பட்ட ஆளில்லாvenensula சிறிய விமானம் மூலம் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள மடூரோ, இது தன்னைக் கொல்வதற்காக கொலம்பியா மேற்கொண்ட சதிவேலை என்று குற்றம் சாட்டினார்.

வெனிசூலாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிகம் நிறைந்த நாடாளுமன்ற அவைக்கு மாற்றாக, அதிபர் மடூரோவின் ஆதரவாளர்கள் நிரம்பிய புதிய அரசமைப்பு அவை கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. அந்த அவையின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டி, தலைநகர் கராகஸில் ராணுவ அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் மடூரோ கலந்துகொண்டு உரையாற்றினார். அவரது உரை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பட்டது. இந்த நிலையில், மடூரோ உரையாற்றிக் கொண்டிருந்த மேடைக்கு அருகே அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன.அந்த வெடிச் சப்தங்களைக் கேட்டு, மேடையிலிருந்த மடூரோ, அவரது மனைவி மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்டு, வரிசையாக நின்றிருந்த வீரர்கள் பதறியடித்து ஓடினர்.

இந்தச் சம்பவத்தில் 7 வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். "கொலை முயற்சி': இதுகுறித்து மடூரோ கூறியதாவது: ராணுவ அணிவகுப்பின்போது என்னைக் குறிவைத்து ஆளில்லா விமான குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தாக்குதலில் நான் உயிர் பிழைத்துவிட்டேன். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, எனது புரட்சிப் பயணத்தை தொடர்ந்து மேற்கொள்வதில் எனது உறுதி மேலும் அதிகரித்துள்ளது.

என்னைக் கொல்ல முயன்றவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றார் அவர்.இந்தத் தாக்குதலுக்கு எதிர்க்கட்சியினர்தான் காரணம் என்று கூறியுள்ள வெனிசூலா அரசு, அதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் துணைபுரிந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. எனினும், இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் மறுத்துள்ளார்.

55 வயதாகும் சோஷலிசவாதியான நிக்கோலஸ் மடூரோ, கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து வெனிசூலாவை ஆண்டு வருகிறார். அவரது ஐந்தாண்டுகால ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியைக் கண்டதால் அவருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டம் நடத்தினர். எனினும், ராணுவம், நீதித் துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் ஆதரவுடன் அந்தப் போராட்டங்களை நிக்கோலஸ் மடூரோ ஒடுக்கியதாகக் கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் அவர் அறிவித்த தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததையடுத்து, மேலும் 6 ஆண்டுகளுக்கு வெனிசூலாவின் அதிபராக அவர் எளிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கெனவே, மடூரோவுக்கு எதிராகப் போராடிய 248-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டுவெடிப்புக்கு அவர் எதிர்கட்சிகளைக் குற்றம் சாட்டியிருப்பது அவர்களுக்கு எதிரான மேலும் கடுமையான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.

"வெறும் விபத்தாக இருக்கலாம்'

அதிபர் மடூரோ பங்கேற்ற ராணுவ அணிவகுப்பில் நடந்த குண்டுவெடிப்புகள், வெறும் விபத்துகளாக இருக்கலாம் என்று பெயர் வெளியிட விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அருகிலுள்ள கட்டடத்தில் இருந்து அந்த சிறிய வகை ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டிருக்கலாம் என்றும், அவை தீப்பிடித்ததால் வெடித்துச் சிதறியிருக்கலாம் என்றும் தெரிவித்தார். இந்த சம்பவத்துக்கு எரிவாயு உருளை வெடிப்பு போன்ற பல்வேறு காரணங்களும் கூறப்படுகின்றன.