கஷோகி படுகொலை: சவூதி இளவரசரின் கூட்டாளிகளை கைது செய்ய துருக்கி அரசு கோரிக்கை

துருக்கியிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் சவூதி பட்டத்து இளவரசரின் நெருங்கிய jamal5கூட்டாளிகள் இருவருக்கு எதிராக கைது ஆணைகளை பிறப்பிக்கக் கோரி, நீதிமன்றத்தில் துருக்கி அரசு மனு தாக்கல் செய்துள்ளது.சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகி, சவூதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வந்தார். இதனால் ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கு வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் அவர் கட்டுரைகள் எழுதி வந்தார்.

இந்தச் சூழலில், துருக்கி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு, அந்த நாட்டுச் சட்டப்படி அவரது முன்னாள் மனைவியிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்றதற்கான சான்றுகள் தேவைப்பட்டன. அதனைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்றார். ஆனால், அதன் பிறகு அவரைக் காணவில்லை.

தூதரகத்துக்குள்ளேயே அவர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக துருக்கி குற்றம்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுகளை முதலில் மறுத்த சவூதி அரேபியா, பின்னர் தங்களது தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்டது. எனினும், இக்கொலையில் பட்டத்து இளவரசருக்கு தொடர்பில்லை என்று சவூதி அரசு மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், கஷோகியை கொலைக்கு திட்டமிட்டதாக, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் நெருங்கிய கூட்டாளிகள் இருவர் மீது துருக்கி குற்றம்சாட்டியுள்ளது. அவரது கூட்டாளிகளான அகமது அல் அஸ்ஸிரி, சௌத் அல் கதானி ஆகிய இருவருக்கும் எதிராக கைது ஆணைகளை பிறப்பிக்க வலியுறுத்தி, துருக்கி நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசின் தலைமை வழக்குரைஞர் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Theneehead-1

   Vol:17                                                                                                                               06.12.2018