திருச்செந்திநாதன்: மறைந்துபோன புன்னகை

-           கருணாகரன்

யுத்தகால மரணங்களும் இழப்புகளும் உண்டாக்கிய களைப்பு thiruநீங்கவில்லை. அதற்குப் பிறகும் தாங்கிக் கொள்ளவே முடியாதளவுக்குத் தொடர் மரணங்களும் இழப்புகளும். அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், பழகியவர்கள், நேசித்தவர்கள், உறவாக இருந்தவர்கள் எல்லோரையும் ஏதோ காரணங்களால் இழந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் விடைபெற்றாலும் நம்மால் சுலமாக விடைகொடுக்க முடியவில்லை. சின்னபாலா, சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) சத்தியமூர்த்தி, மலைமகள், பயஸ், கேசவன், திருமாவளவன், தமிழினி, ஜெகநாதன் என்று ஒரு நீள் வரிசை. இவர்கள் தங்களுடைய வயது மூப்பினால் மரணத்தைச் சந்தித்தவர்களில்லை. சின்னபாலாவும் சந்திரபோஸ் சுதாகரும் இனங்காட்ட முடியாதோரினால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். சத்தியமூர்த்தி இலங்கை அரசின் எறிகணைத்தாக்குதலில் கொலையுண்டார். மலைமகள் இறுதிப்போரின்போது பலியிடப்பட்டார். பயஸூம் ஜெகநாதனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். கேசவனும் திருமாவளவனும் தமிழினியும் எதிர்பாராத நோய்க்குப் பலியாகினர். இப்பொழுது திருச்செந்திநாதனையும் இழந்து விட்டோம். எந்த மரணமும் துக்கம் தருவதுதான். என்றாலும் திருச்செந்திநாதனின் மரணம் இன்னும் கூடுதல் வேதனையளிப்பது. இதற்கு ஓராண்டுக்கு முதல், அவருடைய மனைவி காலமாகியிருந்தார். இப்பொழுது திருச்செந்திநாதன். அடுத்தடுத்து இரண்டு மரணங்களை திருச்செந்திநாதனின் குடும்பத்தினராலும் அவருக்கு நெருக்கமானவர்களாலும் தாங்கிக் கொள்வதென்பது கடினமே.

திருச்செந்திநாதனோடு எனக்கு அறிமுகம் ஏற்பட்டது 1980 களின் நடுப்பகுதியில். அப்பொழுது அவர் மல்லிகையிலும் வீரகேசரியிலும் கூடுதலாக எழுதிக் கொண்டிருந்தார். அதற்கு முன்பு ஈழநாடுவில் அவருடைய கதைகளைப் படித்திருக்கிறேன். என்றாலும் நேரில் சந்தித்ததில்லை. டொமினிக் ஜீவாவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு கூட்டத்தில்தான் அவரை முதலில் சந்தித்தேன். அடக்கமான மெல்லிய புன்னகையோடு மென்குரலில் ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே கதைத்தார். திருச்செந்திநாதனின் இயல்பே இதுதான். அநேகமான சந்தர்ப்பங்களில் அதிகமாகக் கதைக்க மாட்டார். இருந்தாற்போல உற்சாகம் வந்து விட்டால் மட்டும் மலர்ந்து சிரிப்பார். அப்பொழுது குரலுயர்ந்து கதைகள் வரும். இப்படி அறிமுகமான உறவு முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இணங்கியும் பிணங்கியும் நீண்டது. அவருடைய ஊரான இணுவில் நண்பர்கள்  கந்தையா ஸ்ரீகணேசன், நாக. சிவசிதம்பரம், சிவகுமார், சூரி, ஸ்ரீகந்தவேள், செ.பொ.சிவனேஷ் போன்றவர்கள் எனக்கும் நெருக்கமான நட்பு வட்டத்திலிருந்தனர். இப்படி நீண்ட உறவில் ஒரு பத்தாண்டுகள் ஆண்டுகள் திருச்செந்திநாதனும் நானும் மிக நெருக்கமாக உறவாடிச் செயற்பட்டிருக்கிறோம். அது வெளிச்சத்தின் காலம்.

1991 இல் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பொறுப்பில் வெளிச்சம் இதழை ஆரம்பித்தபோது அதன் ஆசிரியர் குழுவில் என்னோடு திருச்செந்திநாதன், பொன். பூலோகசிங்கம் ஆகியோரும் இணைந்திருந்தனர். இதழின் வடிமைப்புக்கு திருச்செந்திநாதன் பொறுப்பு. அது பத்திரிகையை அச்சிடும்  பொருட்களுக்குத் தட்டுப்பாடான காலம். என்றாலும் அதற்குள் தவணை தவறாமல் இதழைக் கொண்டு வரவேண்டும். இதழை அச்சிடுவதற்கான பேப்பரை எப்படியாவது நான் எடுத்து விடுவேன். படங்களை அச்சிடுவதற்கான “புளக்” தயாரிப்பது முதற் கொண்டு ஏனைய நெருக்கடியான வேலைகளை திருச்செந்திநாதனே செய்வார். இதற்காக அவர் யாழ்ப்பாணம் நாச்சிமார்கோயிலடியில் ஆனந்தனைக் கண்டுபிடித்தார். ஆனந்தன் மரப் பலகையில் படங்களையும் ஓவியங்களையும் செதுக்கித் தருவதில் வல்லவர். அப்படி அவர் செய்து தந்த செதுக்கல்களைப் பாவித்தே வெளிச்சத்தின் ஆரம்ப இதழ்களும் முத்தமிழ் விழா மலரும் அச்சிடப்பட்டன.

வெளிச்சம் இதழை அச்சிடுவோரின் கூட்டில் இன்னொருவராக இணைந்திருந்தவர் மரியதாஸ். அவருடைய ஏ.எஸ்.ஜே.பிரின்டேர்ஸிலேயே வெளிச்சத்தை அச்சிட்டோம். மரியதாஸ் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் சித்திரா அச்சகத்தின் உரிமையாளராக இருந்தவர். சித்திரா அச்சகத்தில் வைத்துத்தான் சுந்தரத்தைப் புலிகள் சுட்டிருந்தனர். அதற்குப் பிறகு பல சோதனைகளைச் சந்தித்த மரியதாஸ், அச்சகமே வேண்டாம் என்று கொஞ்சக் காலம் ஒதுங்கியிருந்தார். ஆனாலும் பழகிய பழக்கத்தையும் தெரிந்த தொழிலையும் கைவிட முடியுமா? மீண்டும் புதிய சித்திரா அச்சகம் என்ற பேரில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தார். அதை நடத்துவதில் அவருக்குச் சில நெருக்கடிகள் ஏற்பட்டன. இதனால் அதை ஈரோஸ் இயக்கத்தின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு, அதிலே முகாமையாளராக வேலை செய்தார். முகாமையாளராக வேலை செய்தாலும் மரியதாஸை எல்லோரும் மூனா என்றே அழைத்தனர். 1990 இல் ஈரோஸ் இயக்கம் கலைக்கப்பட்டதோடு அந்த அச்சகம் புலிகளின் கைகளில் மாறன் பதிப்பகமாக மாறியது. இதுக்குப் பிறகு, மல்லாகத்தில் ஏ.எஸ்.ஜே.பிரின்டேர்ஸை ஆரம்பித்திருந்தார் மரியதாஸ். வெளிச்சம் இதழை அச்சிடவேண்டும் என்று வந்தபோது “மரியதாஸிடம் செய்யலாம்” என்றார் சின்னபாலா. ஈரோஸின் அறிமுகத்தினால் நானும் திருச்செந்திநாதனும் மரியதாஸிடம் சென்றோம். இதழை அச்சிடவேண்டும் என்றபோது, மெல்லிய கோபமும் உரிமையோடான பகடியுமாக மரியதாஸ்  கேட்டார், ”நான் ஒழுங்காகத் தொழில் செய்யிறது உங்களுக்குப் பிடிக்கேல்லயா? இந்த அச்சகத்தையும் மூடப்போகிறீர்களா?” ஏன்ராப்பா, என்ன பாவமடா செய்தன் உங்களுக்கு?” என்று.

“உங்களைத் தவிர வேற ஆர் இந்த வேலைகளைச் செய்யிறதுக்கிருக்கு? அதுவும் ஒழுங்காகச் செய்யிறதுக்கு?” என்று கேட்டு அவரை மடக்கினோம்.  

அதற்குப் பிறகு வெளிச்சத்தின் முப்பத்தைந்துக்கு மேற்பட்ட இதழ்கள், முத்தமிழ் விழா மலர், வெளிச்சம் சிறுகதைகள், வெளிச்சம் கவிதைகள் எனப் பலவற்றை மரியாதாஸிடமே அச்சிட்டோம். யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்தபோது அச்சகத்தையும் காவிக் கொண்டு தென்மராட்சி, கிளிநொச்சி என்று வன்னிவரைக்கும் வந்தார் மரியதாஸ். வடிவமைப்பிலும் இதழின் உருவாக்கத்திலும் திருச்செந்திநாதன் கூடுதல் பொறுப்பெடுத்துச் செயற்பட்டுக் கொண்டிருந்தார். வேலைகளில் தாமதமோ நெருக்கடியோ வந்தால் மரியதாஸூக்கு ஹைபிரசர் ஏறிவிடும். எல்லாவற்றையும் தன்னுடைய மந்திரப்புன்னகையினால் சமாளித்துச் சமாதானமாக்கி விடுவார் திருச்செந்திநாதன்.

 வெளிச்சத்திற்கான பணிகளின்போது ஒரு மூத்த சகோதரனாக எங்களோடிருந்தவர் புதுவை இரத்தினதுரை. சகோதரவாஞ்சையோடு எங்கள் இருவரையும் இணைத்துப் பல வேலைகளைச் செய்தார். அந்த நாட்களில் எங்கள் நட்பு குடும்ப உறவாகவே மாறியிருந்தது. அப்பொழுது யாழ்ப்பாணக் கச்சேரியில் திருச்செந்திநாதனும் துணைவியும் வேலை செய்துகொண்டிருந்தார்கள். வேலை முடிந்த பிறகு வீடு செல்லும் வழியில் தினமும் கோண்டாவிலில் இருந்த வெளிச்சம் பணிமனைக்கு வந்து அரை மணிநேரமாவது பலதையும் பத்தையும் பேசிச் செல்வதுண்டு. இலக்கியம், அரசியல் என்று எங்களுடைய உரையாடல் நீண்டு பொழுது இருட்டிய நாட்களுமுண்டு. அத்தனையையும் சலிக்காமல் பொறுத்துக்கொண்டேயிருப்பார் இராஜநாயகி அக்கா. சிலவேளை மறுநாள் காலையில் வெளிச்சம் சம்மந்தமாக திருச்செந்திநாதனின் வீட்டுக்குச் செல்வேன். அப்பொழுது அவர்கள் மருதனார்மடத்திலிருந்தார்கள். அம்மா, அக்கா, தம்பி, தங்கைகள் என்று கூட்டுக்குடும்பமாக. நான் போகும்போது வேலைக்குச் செல்வதற்கான ஆயத்தப் பரபரப்பில் இருப்பார்கள். அந்த நேரத்தில் செல்வது சற்று மனச் சங்கடத்தைத் தந்தாலும் எனக்கும் வேறு தெரிவில்லை. அதற்குள்ளும் பொறுமையாகப் பேசி செய்ய வேண்டிய வேலைகளை ஒழுங்கு படுத்தித்தருவார் செந்திநாதன். செந்திநாதனின் அம்மா, அக்கா, தம்பிமார் எல்லோரும் அந்த நாட்களில் மிக நெருக்கமாகினார்கள்.


இலக்கியம் பற்றிய என்னுடைய புரிதலும் திருச்செந்திநாதனின் புரிதலும் வேறு வேறானவை. ஆனாலும் நாங்கள் அதையிட்டு என்றும் பேசியதுமில்லை. முரண்பட்டதுமில்லை. வெளிச்சத்தில் இருவரும் இணைந்து வேலை செய்வதற்கு முன்பு என்னுடைய கவிதைகளை உள்ளம், ஈழநாதம் ஆகியவற்றில் பிரசுரித்திருக்கிறார் திருச்செந்திநாதன்.

எல்லாவற்றையும் வெளியிட்டிருக்கிறாரே தவிர, ஒருபோதும் அவற்றைக் குறித்து அவர் கருத்தோ அபிப்பிராயமோ சொன்னதில்லை. வெளிச்சத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஆதாரம் என்று சமூக, பொருளியல் இதழின் ஆசிரியப் பொறுப்பையும் தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பையும் ஏற்றார் திருச்செந்திநாதன். ஒரு கட்டத்தில் அந்தப் பணிகளின் சுமை காரணமாக வெளிச்சத்தின் பணிகளைக் குறைக்கும் நிலை ஏற்பட்டது திருச்செந்திநாதனுக்கு. அதோடு யாழ்ப்பாண இடப்பெயர்வின் பிறகு நிலைமைகள் முற்றாகவே மாறித் தொடங்கின. வன்னிக்குச் சென்ற திருச்செந்திநாதன், கிளிநொச்சி, மாங்குளம், புதுக்குடியிருப்பு என ஒவ்வொரு இடமாக மாறத்தொடங்கினார். இதற்கிடையில் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டது. இதனால் திருச்செந்திநாதன் ஆதாரத்திலிருந்து வெளியேறி, ஈழநாடுவில் பணியாற்றினார். பிறகு ஈழநாடுவின் ஆசிரியர் மற்றும் நிர்வாகப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். இந்த நாட்களில் அவர் பணிச்சுமை, குடும்பச் சுமை போன்றவற்றினால் நெருக்கடிக்குள்ளாகியிருந்தார். ஆனாலும் எல்லாவற்றிலும் அவருக்கு ஆறுதலாகவும் பங்காளியாகவும் ஊக்கியகவும் இருந்தார் இராஜநாயகி. அந்த நாட்களில் புதுக்குடியிருப்பில் திருச்செந்திநாதனை மையப்படுத்தி எழு கலை இலக்கியப் பேரவை என்றொரு அமைப்பு உருவானது. அதில் பு.சத்தியமூர்த்தி, முல்லைக்கோணேஸ், ந.மயூரரூபன், வேலணையூர் சுரேஸ், யோசேப், கை.சரவணன், தமிழ்மாறன், ஆவரங்கால் சுதன், நந்தினி, ஓவியர் பயஸ், நிஸாகரன் போன்றவர்கள் பங்கேற்றிருந்தனர். ஏனோ தெரியவில்லை, அந்த நாட்களில் திருச்செந்திநாதனுக்கும் எனக்கும் இடையில் இடைவெளியொன்று ஏற்பட்டிருந்தது. அதற்கான காரணத்தை இன்றுவரை தேடிப் பார்த்திருக்கிறேன். துலக்கமான காரணங்கள் எதையும் தெரிந்து கொள்ளவே முடியவில்லை. இதையிட்டு நானும் முல்லைக்கோணேசும் பல தடவை கதைத்திருக்கிறோம். ஒரு நாள் திருச்செந்திநாதனிடமே இதைப்பற்றிக் கேட்டிருக்கிறேன். ஆனால், அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை. பதிலாக வழமையைப் போல ஒரு மெல்லிய புன்னகையை மட்டுமே வெளிப்படுத்தினார். அதற்கு மேல் நாம் அதையிட்டுப் பேசியதில்லை.


2005 இல் தனிப்பட்ட சூழ்நிலையினால் நான் வெளிச்சம் இதழில் இருந்து வெளியேற வேண்டியேற்பட்டது. அதற்குப் பிறகு சிறிது காலம் வெளிச்சத்தின் வேலைகளில் திருச்செந்திநாதன் இணைந்து பங்களித்தார். இறுதி யுத்தத்தின்போது திருச்செந்திநாதன் மிகச் சிரமப்பட்டார். ஒரு பக்கம் அவருடைய நீரிழிவு நோய்ப்பாடுகள். மறுபக்கத்தில் குடும்பத்தைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டிய நிலை. போர்க்கால நெருக்கடியில் மூத்த மகள் குறித்த கவலைகள். இதனால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி சில நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். அந்த நாட்களில் மிகுந்த ஆற்றலுடன் இயங்கியவர் இராஜநாயகி. இப்படியிருந்த வேளையில் திருச்செந்திநாதனுக்கு மிகுந்த அணுக்கமாக இருந்த பு. சத்தியமூர்த்தி எறிகணைத்தாக்குதலுக்குள்ளாகிப் பலியாகியிருந்தார். சத்தியமூர்த்தியின் இழப்பு திருச்செந்திநாதனை நிலைகுலைய வைத்தது. ஆனாலும் அதை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. எப்படியோ இறுதியுத்தத்திலிருந்து மீண்டது அவருடைய குடும்பம். திருச்செந்திநாதனை மறுபடியும் அவர் முன்பிருந்த மருதனார்மடம் வீட்டில் 2009 இல் ஸ்ரீகுமரனோடு (இயல்வாணனோடு) சந்தித்தேன். அவருடைய எல்லாத் துயரங்களுக்கும் வலிகளுக்கும் ஆறுதலாக அம்மா, சகோதரிகள், சகோதரர்கள் என்ற கூட்டுக் குடும்ப உறவிருந்தது. ஆனாலும் மனதளவில் சலித்துப் போயிருந்தார். “நாங்கள் நம்பியதற்கும் எழுதியதற்கும் அர்த்தமில்லாமல் போய் விட்டது” என்று துக்கத்தோடு சொன்னார். எதையும் எழுதும் மனநிலையில் அப்பொழுது அவரிருக்கவில்லை. அதற்கான காரணங்களைத் தெரிந்தவன் என்பதால் அதையிட்டு நான் எதுவுமே பேசவில்லை. ஆனால், “இந்த நிலை மாறும். நீங்கள் எப்படியோ இதிலிருந்து மீண்டு மீளவும் இயங்குவீர்கள். அது அவசியமும் கூட” என்று சொன்னேன். அவர் பதிலேதும் சொல்லவில்லை. 

நான் எதிர்பார்த்ததைப்போலச் சில ஆண்டுகளிலேயே மறுபடியும் எழுதத் தொடங்கினார் செந்திநாதன். அவருடைய தம்பிகள் என்று சொல்லப்படும் கை.சரவணன். ந.மயூரரூபன், நிஸா போன்றோர் ஊக்கமாக இருந்தனர். இன்னொரு பக்கத்தில் இணுவில் கலை இலக்கிய நண்பர்கள் வட்டமிருந்தது. யாழ்ப்பாணத்தின் பழைய இலக்கியத் தொடர்புகளும் புதுப்பிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து தளவாசல் என்ற புதிய இலக்கிய இதழை உற்சாகத்தோடு ஆரம்பித்தார். சிறுகதைகளையும் எழுதினார். துயரக் கிடங்கிலிருந்து திருச்செந்திநாதன் மீண்டு விட்டார் என இதையிட்டு நான் உட்படப் பலரும் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால், இதற்கு எதிர்மாறாக – எதிர்பாராதவிதமாக திருச்செந்திநாதனுக்கு இன்னொரு பெரிய நெருக்கடி ஏற்பட்டது. பேரிடியாக அவருடைய இணையான இராஜநாயகி மரணமடைந்தார். மீண்டும் ஒரு நிலைகுலைவு. அதிலிருந்து மீள்வதற்கிடையில் அவரே மரணத்தைச் சந்தித்தார். யுத்தத்திலே தப்பிப் பிழைத்தவர்கள் இப்படி மரணத்தைத் தழுவிக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இலக்கியத்திலும் இதழியல் துறையிலும் இயங்கியவர் திருச்செந்திநாதன். பல புதியவர்களின் வளர்ச்சிக்கு ஊக்கமாக இருந்தவர். பல்வேறு இதழ்களின் வருகையில் பங்களித்தவர். நாவல்கள், சிறுகதைகள், பத்திகள் என ஏராளமாக எழுதியவர். பத்துக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டவர். சில நூல்களின் வருகைக்குக் காரணமாக இருந்தவர். இப்பப் பல நிலைகளில் நினைவு கொள்ளத்தக்க படைப்பாளியை, மனிதரை, நண்பரை, சக பயணியை இழந்திருக்கிறோம். வெல்லமுடியாத மரணத்தின் கால்களில் இன்னொரு இழப்பு இது. விழிகளிலிருந்து வடியும் நீரைத் துடைத்து விடுவதைப்போல எளியதல்ல, இழப்பின் துயரைக் கடப்பதும் அது உண்டாக்கிய வெற்றிடத்தை நிரப்புவதும்.


திருச்செந்திநாதனின் அடையாளமான அந்தப் புன்னகை என்னை எப்போதும் தொடர்கிறது. அதுவே அவருடைய மருந்து. அந்த மருந்து எங்களுக்கு இன்றில்லை.

 

Theneehead-1

   Vol:17                                                                                                                               06.12.2018