Theneehead-1

Vol: 14                                                                                                                                                07.01.2017

இராணுவத்துக்கு எதிராகப் போராடிய நாங்கள் இப்போது அதே இராணுவத்திடமே வேலை கேட்டு நிற்கிறோம்

முன்னாள் போராளிகளின் உள்ளக்குமுறல்கள்

-  -   கருணாகரன்

”எங்கே மறைந்திருக்கிறார்கள், வீரத்திருமகன்களான தமிழ் அரசியல்தலைவர்கள்? இப்போதாவது உங்கள் வேசங்களைக் கலைத்து விட்டு வாருங்கள். இனியும்தாமதித்தால், நிச்சயமாக இந்தப் போராளிகள் அடுத்த கட்டமாக படைகளில் இணைந்தே ஆகவேண்டிய நிலை வரும். ஆம், அவர் மறுபடியும் ஆயுதமேந்தும் நிலை உexltte-1ருவாகும். அந்த ஆயுதம் உங்களுக்கு எதிரானதாகவே இருக்கும். அவர்கள் மட்டுமல்ல, வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களும் இளைய பெண்களும் கூட படைகளில் பணியாற்றச் செல்லக்கூடிய சாத்தியங்களே உண்டு. இதெல்லாம் நிச்சயமாகத் தமிழ்த்தரப்பிற்கும் தமிழ் அரசியலுக்கும் எதிரானதாகவே இருக்கும். தன்னைத்தானே அழியக்கொடுக்கும் அரசியலை தமிழ்த்தரப்பு இனியேனும் கைவிட வேண்டும். இல்லையேல் முள்ளிவாய்க்காலில் சந்தித்த அழிவையும் விட மோசமான அழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும் தமிழ் மக்கள். ”

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மிகக் கடினமான வாழ்க்கைச் சூழலுக்குள்ளாகியிருக்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டி கடந்த வாரம் எழுதியிருந்தேன். போர் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்டது. இந்தப்போராளிகள் தடுப்பு முகாமிலிருந்து விடுதலையாகி வந்து அல்லது அரசாங்கம் பெருமிதமாகச் சொல்வதைப்போல புனர்வாழ்வு பெற்று வந்து ஐந்து ஆண்டுகளாகியுள்ளது. ஆனால், இன்னும் நிரந்தரமான எந்த வேலைவாய்ப்புமில்லாமல், தங்களுடைய வாழ்க்கையை ஒழுங்கு படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். மாகாணசபையோ தமிழ்த்தேசிய அரசியலாளர்களோ அரசாங்கமோ இவர்களுக்கு உதவவில்லை என்றெல்லாம்குறிப்பிட்டிருந்தேன். 

இந்தப் பத்தி வெளியாகி நான்காவது நாள் (02.01.2017) அன்று கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்புப் பிரிவு என்ற படையினரின் செயலகம் ஒன்றுக்கு முன்னே நூற்றுக்கணக்கான பெண், ஆண் போராளிகள் ஒருங்கிணைந்து தமக்கு“வேலை வாய்ப்பு வேணும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர். சிலர் கைக்குழந்தையுடனேயே வந்து நின்றனர்.  சில போராளிகள் தமது உடல் உறுப்புகளை இழந்தவர்களாக இருந்தனர். பொதுவாகப் பலரும் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலிருந்தனர். 2009 க்கு முன்னர் இவர்கள் இருந்த நிலையும் வாழ்க்கையும் வேறு. இன்றிருக்கின்ற நிலையும் எதிர்கொள்ளும் வாழ்க்கையும் வேறு. இந்த தலைகீழ் மாற்றம் இவர்களை நிலை குலைய வைத்துள்ளது.

கூடியிருந்தவர்கள் சிவில் பாதுகாப்புப் பிரிவு என்ற படையினரின் பிரிவிக்குப் பொறுப்பாக இருக்கும் அதிகாரியிடம், தாங்கள் புனா்வாழ்வு பெற்று வெளியில் வந்த காலம் முதல் நிரந்தர தொழில் இல்லாமல் பெரும் பொருளாதாரநெருக்கடிக்குள் வாழ்ந்து வருவதாகச் சொன்னார்கள். புனா்வாழ்வு பெற்ற காலத்தில் தங்களுக்கு பண்ணை பயிற்சியே வழங்கப்பட்டது என்றும் எனவே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் தமக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறும்கேட்டனர்.

“சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு புதிதாக ஆட்கள் எடுப்பதாக ஏற்கனவே எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஆனால், அது ஒரு சூழ்ச்சிகரமான பொறி என்று ஊடகங்களும் எங்களுடைய தமிழ் அரசியல்வாதிகளும் தெரிவித்தனர்.படைக்கு ஆட்சேர்ப்பதற்கான நடவடிக்கையாகவே சிவில் பாதுகாப்புப் பிரிவுக்கு ஆட்சேர்க்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. இதனால் நாங்கள் அப்போது இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கவில்லை. ஆனால் காலம் செல்லவே எங்களுக்குஉண்மை நிலைமை என்னவென்று விளங்கியது. இந்தப் பொய்யான பரப்புரையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அப்போது சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள் எல்லாம் இன்று நல்ல சம்பளம்பெறுகிறார்கள். அவர்களுடைய குடும்பங்கள் சிறப்பாக வாழ்கின்றன. நாங்கள் ஏமாந்து விட்டோம். எங்களைக் கவனிப்பார் யாருமே இல்லை. எங்களுடைய நிலைமையைக் குறிப்பிட்டு நாங்கள் பலருக்கும் கடிதங்கள் எழுதினோம்.பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என்று எல்லோரையுமே சந்தித்து எங்களுடைய நிலைமையை விளக்கினோம். ஆனால், யாருமே அதைக் கவனிக்கவில்லை.

இந்த நிலையில் இன்று (02. 01.2017) தேசிய அடையாள அட்டை,  புனா் வாழ்வு பெற்று விடுதலையான கடிதம் ஆகியவற்றுடன் வருமாறு தகவல் வந்தது. இந்தத் தகவல் எவ்வளவுக்கு உண்மையோ பொய்யோ என்று தெரியவில்லை. எப்படியாவது ஒரு வேலையைப் பெற வேண்டும் என்ற கட்டத்தில்தான் எங்களுடைய நிலைமை இருக்கிறது. ஆகவே அதற்காகவே இங்கே வந்திருகின்றோம். எனவே எங்களுக்கு வேலைவாய்ப்பை தாருங்கள்”என சிவில் பாதுகாப்புத் திணைக்கள கிளிநொச்சி கட்டளை அதிகாரி மேஜர் சாகர வீரசிங்கவிடம் கோரிநின்றனா் இந்தப் போராளிகள்.

மேலும் இந்தப் போராளிகள் தெரிவிக்கும்போது “வெளியில் நாங்கள் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்புக் கோரினோம். போராளிகளுக்குதானே சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் வேலை இருக்கிறது என்கிறார்கள். ஆனால் இங்கேயும் இப்போது போராளிகளான எங்களுக்கு வேலைவாய்ப்பு தர மறுகின்றார்கள். நாங்களும் படித்திருந்தால் டிப்ளோமா, டிகிரி எல்லாம் முடித்து விட்டு இன்று  உத்தியோகத்தில் இருந்திருப்பம். அல்லது சொந்தமாக ஏதாவது ஒரு தொழிலைச் செய்து முன்னேறியிருப்போம்.  ஆனால் அதை விட்டுவிட்டு, இளமைக் காலத்தில் பள்ளிக் கூடம் போகாமல் படிப்பைப் பாதியிலே நிறுத்திவிட்டு, நாட்டுக்காக என்றும்  மக்களுக்காக என்றும் இயக்கத்தில்இணைந்தோம். போராடினோம். அந்தப் போராட்டத்தில் விழுப்புண்களையும் அடைந்தோம். இப்படியெல்லாம் செய்து விட்டும்  இன்று தெருவில் நிற்கின்றோம். இராணுவத்துக்கு எதிராகப் போராடிய நாங்கள் இப்போது அதே இராணுவத்திடமே வேலை கேட்டு நிற்கிறோம்” என்றனர்.

இது தொடா்பாக சிவில் பாதுகாப்புத் திணைக்கள கிளிநொச்சி கட்டளை அதிகாரி மேஜர் சாகர வீரசிங்க கருத்து தெரிவித்தார். “சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு புதிதாக ஆட்கள் எடுப்பதாக வெளியான தவறான தகவலைஅடிப்படையாக கொண்டு நூற்றுக்கணக்கான விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள்  ஒன்று கூடியுள்ளனர். சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைப் பொறுத்தவரை, தற்போதைக்குப் புதிதாக ஆட்கள் எவரையும் உள்வாங்கும்நிலையில் இல்லை. இந்த முன்னாள் விடுதலைப்புலிகள்உறுப்பினர்களைப் பார்க்கிற போது கவலையாக இருக்கிறது. இந்த விடயத்தில் எங்களால் எதுவும் செய்ய முடியாது. இது கொழும்பு மட்டத்தில் உயரதிகாரிகளால்தீர்மானிக்கப்படுகின்ற விடயம். ஆகவே இவர்களுடைய பிரச்சினையைப்பற்றி நான் உயரிடத்திற்குத் தெரியப்படுத்துகிறேன். அவர்கள் அரசாங்க மட்டத்தில் இந்தப் பிரச்சினையைப் பேசி முexltte-5டிவெடுத்துக் கொள்வார்கள். நிச்சயமாக அந்த வழியில் என்னால் உதவ முடியும்“ என்றார் மேஜர் சாகர வீரசிங்க. 

இதனையடுத்து அங்கிருந்து வெளியேறிய போராளிகள் இரணைமடுச் சந்தியில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு முன்பாக வேலைவாய்ப்பு கோரி ஒரு சிறிய கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கூடவே  170 போ் வரையில் கையெழுத்திட்ட வேலைவாய்ப்பு கோரிக்கை மகஜரை கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளித்தனர்.

இதையெல்லாம் பார்த்தபோது மிகக் கவலையேற்பட்டது. கையறு நிலை அல்லது சரணடைதலின் இறுதி நிலை என்று இதைச் சொல்லமுடியும். “போரின் தோல்வியே இப்படி இந்தப் போராளிகளை அவர்கள் எதிரிகளாகக் கருதியவர்களுடைய காலில் விழ வைத்துள்ளது” என்று யாரும் இதை ஒற்றை வரியில் சொல்லிக் கடந்து போக முயற்சிக்கலாம். அது ஒரு காரணமாக இருக்கலாமே தவிர, ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமில்லை. இந்தப் போராளிகள் இந்த நிலைமைக்கு இப்போது வந்திருப்பதற்கான முழுப்பொறுப்பும் தமிழ்த்தரப்பையே சேரும். கடந்த வாரம் குறிப்பிட்டதைப்போல அரசாங்கத்துக்கு இதில் ஒரு குறிப்பிட்டளவு பொறுப்பிருந்தாலும் நிச்சயமாக தமிழ்த்தரப்புக்கே கூடுதல் பொறுப்புண்டு.

தங்களுடைய அரசியலுக்கான ஆதரவைப் பெறுவதற்கும் தமது தவறுகளை மறைப்பதற்கும் புலிகள் இயக்கத்தையும் பிரபாகரனையும் பயன்படுத்திக் கொள்ளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதில் முதல் பொறுப்பாளியாகும். குறிப்பாக சாவடைந்த போராளிகளை மாவீர்களாகப் போற்றி, அவர்களுடைய நினைவுகளுக்குச் சுடரேற்றி ஆராதிக்க முற்படும் கூட்டமைப்பு அதே மாவீர்களோடு சேர்ந்து களமாடி, இன்று உயிரோடிருப்பவர்களைப் பராமரிக்க வேண்டியது அவசியமில்லையா? இதைக் குறித்து பல தரப்பினரும் சுட்டிக்காட்டியபோதும், அதையெல்லாம் காணாதமாதிரியே கூட்டமைப்பு கண்களை மூடிக் கொண்டிருக்கிறது. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் படுவான்கரை, வாகரை போன்ற பகுதிகளில் மிகவும் நொந்து போன நிலையில், வாழ வழியற்று ஏராளமான போராளிகள் உள்ளனர் என்று கடந்த ஐந்து ஆண்டுளின் முன்னர் ஆதாரபூர்வமான தகவல்களோடு சஞ்சயன் செல்வமாணிக்கம் உள்பட பலரும் தெரிவித்திருந்தனர். இதைக்குறித்த உண்மைப்பதிவுகளை சஞ்சயன் செல்வமாணிக்கம் தனியாக ஒரு நூலாகவே எழுதி வெளியிட்டிருந்தார். இருந்தும் அங்கே எத்தகைய மாற்று நடவடிக்கைகளையும் கூட்டமைப்பினரும் சரி, வேறு தரப்பினரும் சரி எடுக்கவில்லை. கிழக்கில் மட்டுமல்ல, வடக்கிலும் இதுதான் நிலைமை.

இவ்வளவுக்கும் வடக்கிலும் கிழக்கிலும் தனித்தனியாக இரண்டு மாகாணசபைகள் உள்ளன. இருந்தும் இவற்றினால் இந்தப் போராளிகளுடைய வாழ்க்கைக்கு வழிகாட்ட முடியவில்லை. இவர்கள் வேலை செய்து வாழக்கூடிய தொழில்வாய்ப்புகளை உருவாக்க இயலவில்லை. இந்த விவகாரத்தை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு போக முடியவில்லை. தனியான ஒரு நிதி ஒதுக்கீட்டைச் செய்து அதன் மூலம் மறுவாழ்வொன்றை உருவாக்குவதைப்பற்றிச் சிந்திக்க முடியாமலிருக்கிறது. இதில் வடக்கு மாகாணசபை புலிகளின் வீரயுகத்தை எப்போதும் தங்கள் மனப் பிம்பத்தில் மீளுருவாக்கம் செய்து கொண்டேயிருக்கிறது. இப்படிச் செய்கின்றவர்கள், தங்கள் மனப்பிம்பத்துக்கு உயிரூட்டம் செய்த போராளிகளைப் பற்றிச் சிந்திக்காமல் இருப்பது ஏன்?

 வடக்கு மாகாணசபைக்கு இதற்குரிய வாய்ப்புகள் கிடைத்திருந்தன. இந்தியப் பிரதமர் மோடியும் பிரித்தானியப்பிரதர் டேவிற் கமரூனும் தென்னாபிரிக்க, கனடிய, யப்பானிய, அவுஸ்ரேலிய அரசியல் பிரதிநிதிகளும் முதலமைச்சர்விக்கினேஸ்வரனைக் கடந்த ஆண்டுகளில் சந்தித்திருந்தனர். அவர்கள் சந்தித்தது, விக்கினேஸ்வரனுடக்குப் பக்கத்தில் நின்று படமெடுத்துச் சென்று தங்கள் வீட்டுச் சுவரில் அந்தப் படத்தை மாட்டிப் பெருமைப்படுவதற்கல்ல. அவர்களுடைய நோக்கமெல்லாம் வடக்கில் முதலீடுகளைச் செய்வதற்கானதாகவே இருந்தது. அதன் மூலமாக போரிலே பாதிக்கப்பட்டவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என்றிருந்தது.  இதன் மூலம் தமக்கும்லாபம். தமிழ் மக்களுக்கும் லாபம் என்ற இருநிலைக்கணக்கை அடிப்படையாகக் கொண்டே இந்தச் சந்திப்புகளை விக்கினேஸ்வரனுடன் இவர்கள் மேற்கொண்டிருந்தனர். போர் நடைபெற்ற இடங்களில் போருக்குப் பின்னரான சூழலில் எப்போதும் இப்படியான வேலை வாய்ப்புப் பிரச்சினையும் வாழ்க்கைப் பிரச்சினையும் ஏற்படுவதுண்டு. அதை வளர்ச்சியடைந்த தரப்புகள் பயன்படுத்திக் கொள்ள முற்படுவதுண்டு. இதைப் புரிந்து கொண்டு, இந்த வாய்ப்புகளை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது? அவற்றின் பாதகமாக அம்சங்களைக் குறைத்து நல்லம்சங்களை அதிகரித்துக் கொள்வது எப்படி என்று சிந்தித்திருக்க வேணும். அதுவே அரசியல் வெற்றியாகும். அரசியலில் வளைத்துப் போடுவது ஒரு முறைமை. வரும் வாய்ப்புகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வது இன்னொரு முறைமையாகும். விக்கினேஸ்வரனுக்குக் கிடைத்ததெல்லாம் வலிய வந்த வாய்ப்புகளாகும். 

ஆனால், இதையெல்லாம் விக்கினேஸ்வரன் புரிந்து கொள்ளவே இல்லை. அவர் எல்லா வாய்ப்புகளையும் கோட்டை விட்டார். இறுகப்பற்றிய கைகளையெல்லாம் தவற விட்டார். இதற்குக் காரணம், எத்தகைய அரசியல் முதிர்ச்சியும் பக்குவமும் அவருக்கு இல்லாததேயாகும். விக்கினேஸ்வரனுக்கு மட்டுமல்ல, தமிழ்த்தரப்பே இப்படியான அரசியல் சிந்தனைப் பாரம்பரியத்திலும் அரசியலை வெற்றிகரமாகக் கையாண்ட அனுபவத்திலும்வந்ததில்லை.  என்பதால் எல்லா வாய்ப்புகளும் கோட்டை விடப்பட்டன. சரி, இதைத்தான் விடுவோம்.  “அந்நிய முதலீடுகளுக்கு இடமளியோம்” என்ற சுயகௌரவக் கொள்கை இருந்திருக்குமாக இருந்தால், அதற்குப் பதிலாகத் தாமாகவே தொழில் வாய்ப்புகளை உருவாக்கியிருக்கலாமல்லவா! அல்லது, புலம்பெயர் தமிழர்களைக் கொண்டு, முதலீடுகளைச் செய்து தொழில் வாய்ப்புகளை உண்டாக்கியிருக்க முடியும். எதையும் செய்யாதபடியால்தான் இன்று இந்தப் போராளிகளுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் போராளிகள் அனைவரும் இறுதிப்போர் வரை போர்க்களத்தில் நின்று போராடியவர்கள். இறுதியில் தவிர்க்க முடியாத நிலையில், உடற்காயங்களோடும் மனக்காயங்களோடும் படையினரிடமும் சரணடைந்தவர்கள். தாம் விரும்பாத, தாம் எதிர்பார்த்திராத ஒரு நிலையைச் சந்திக்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள். இவர்களே இன்று நம் கண்முன்னால் வாழ வழியற்றிருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு தெருவிலும் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு வழியைக் காட்ட முடியாத கையறு நிலையில் இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் பேரவையும் உள்ளன. அரசியல் பிரகடனங்களைச் செய்வதில் இவர்களுக்கிருக்கிற உற்சாகம், மக்களுக்கான பணிகளைச் செய்வதிலும் போராளிகளைப்பராமரிப்பதிலும் இருப்பதில்லை. இதைத்தான் “நடிப்புச் சுதேசிகள்“ என்று கடந்த பாரதியார் உள்ளக் கொதிப்போடு பாடியிருந்தார். ”கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி, நாட்டம் கொள்ளாரடி கிளியே என்று அவர் பாடியது இவர்களுக்கேயன்றி வேறு எவருக்குமில்லை. எப்படியோ இன்று ஒட்டுமொத்தமாக இந்தப் போராளிகளைப் படையினரின் காலடியில் விழ வைத்திருக்கிறது தமிழ்ச் சமூகம்.

இப்படி இவர்கள் படையினரின் முன்னே தங்கள் வாழ்நிலையைக் கண்ணீர் விட்டுச் சொல்லிக் கதறியழுவதற்கு முன் வந்தபோது எத்தகைய மனநிலையில் இருந்திருப்பார்கள் என்று  ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் பிள்ளைகள், உங்கள் மனைவியர்கள், உங்கள் சோதரர்கள் இவர்கள் என்று நினைத்துப் பாருங்கள். அப்போது உங்களுக்கு அந்த வலியும் வேதனையும் நிராதரவான நிலையும் புரியும். வேறு வழியில்லை என்ற நிலையிலேயேபடையினரிடமாவது ஒரு தொழில் வாய்ப்பைக் கேட்டுப்பா்ரக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர். நல்லாட்சி என்று கூறும் அரசாங்கமும் இது நல்லாட்சியே என்று நம்பி வாக்களித்த மக்களும் அப்படி மக்களை வாக்களிக்கக்கோரிய தமிழ்த்தலைவர்களும் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

எங்கே மறைந்திருக்கிறார்கள், வீரத்திருமகன்களான தமிழ் அரசியல்தலைவர்கள்? இப்போதாவது உங்கள் வேசங்களைக் கலைத்து விட்டு வாருங்கள். இனியும்தாமதித்தால், நிச்சயமாக இந்தப் போராளிகள் அடுத்த கட்டமாக படைகளில் இணைந்தே ஆகவேண்டிய நிலை வரும். ஆம், அவர் மறுபடியும் ஆயுதமேந்தும் நிலை உருவாகும். அந்த ஆயுதம் உங்களுக்கு எதிரானதாகவே இருக்கும். அவர்கள் மட்டுமல்ல, வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களும் இளைய பெண்களும் கூட படைகளில் பணியாற்றச் செல்லக்கூடிய சாத்தியங்களே உண்டு. இதெல்லாம் நிச்சயமாகத் தமிழ்த்தரப்பிற்கும் தமிழ் அரசியலுக்கும் எதிரானதாகவே இருக்கும். தன்னைத்தானே அழியக்கொடுக்கும் அரசியலை தமிழ்த்தரப்பு இனியேனும் கைவிட வேண்டும். இல்லையேல் முள்ளிவாய்க்காலில் சந்தித்த அழிவையும் விட மோசமான அழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும் தமிழ் மக்கள்.

dantv