Theneehead-1

   Vol:17                                                                                                                                07.07.2018


அம்பாந்தோட்டை விமான நிலைய மேம்பாடு: இலங்கையுடன் இணைந்து மேற்கொள்ள இந்தியா சம்மதம்


இலங்கையின் அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மட்டாலா ராஜபட்ச சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்தும் பணிகளை அந்நாட்டுடன் இணைந்து மேற்கொள்ள இmatala airportந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.இந்தத் தகவலை இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிர்மல் சிறீபால டி சில்வா தெரிவித்தார். அதன்படி, நஷ்டத்தில் இயங்கி வரும் அந்த விமான நிலையத்தின் செயல்பாடுகளை வரும் காலத்தில் இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ள உள்ளன. இந்த கூட்டு முயற்சியின் பயனாக அந்த விமான நிலையத்தின் கட்டுப்பாடுகளில் பாதி இந்தியா வசம் இருக்கும் எனத் தெரிகிறது.

அம்பாந்தோட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நிலையில், தற்போது இந்தியா எடுத்திருக்கும் இந்த முடிவு அதற்கு பதிலடியாக இருக்கும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இலங்கை அதிபராக ராஜபட்ச இருந்தபோது ஏறத்தாழ 21 கோடி டாலர்கள் (சுமார் ரூ.1,300 கோடி) செலவில் அம்பாந்தோட்டை விமான நிலையம் கட்டமைக்கப்பட்டது. சர்வதேச விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் விமான நிலையமாக அது அடையாளப்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் 10 லட்சம் பயணிகள் வந்து செல்லும் வகையில் அது வடிவமைக்கப்பட்டிருப்பதாக இலங்கை ஆட்சியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த விமான நிலையம் மூலம் அரசுக்கு அதிக அளவில் வருவாய் கிடைக்கும் எனவும் அவர்கள் கூறினர். இந்நிலையில், அந்த விமான நிலையம் கடந்த 2013-ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், அங்கு குறிப்பிட்ட சில வசதிகள் இல்லாததால் பன்னாட்டு விமானப் போக்குவரத்தை சரிவர மேற்கொள்ளப்பட இயலவில்லை.

இதன் காரணமாக பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட விமான நிலையத்தை மேம்படுத்தவும், ஒருங்கிணைந்து அதன் செயல்பாடுகளை மேற்கொள்ளவும் அன்னிய முதலீடுகளை திரட்ட வேண்டிய அவசியம் இலங்கைக்கு ஏற்பட்டது. அதன்படி, அதற்கான அழைப்பை அந்நாடு விடுத்தது. ஆனால், அதை ஏற்று எந்த நாடும் இலங்கையில் முதலீடு செய்ய முன்வரவில்லை. இந்நிலையில், அம்பாந்தோட்டை விமான நிலையத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.