திரைகளை விலக்கி ஒரு பயணம்

ரிஷான் ஷெரீப்: சிங்கள மொழிபெயர்ப்புக்கவிதைகள்

-        கருணாகரன்

நம் சமகாலத்தில் ஆடும் திரைகளை விலக்குவதே இன்று நமக்கு முன்னால் உள்ள பெரும் சவால். எண்ணற்ற திரைகள் எங்களைச் சுற்றித் தொங்கவிடப்பட்டுள்ளன; அவை இடையறாது ஆடிக்கொண்டிருக்கின்றனrizan. வரலாற்றுத்திரை, இனத்திரை, மதத்திரை, சமூகத்திரை, பண்பாட்டுத்திரை, சாதியத்திரை என எண்ணற்ற திரைகள். இந்தத்திரைகள் பெரும்பாலும் அந்தந்தத் தரப்பிலுள்ள  அதிகார சக்திகளுடைய நலன்களின் நிமித்தம் தொங்கவிடப்படுகின்றன. இந்தச் சக்திகள் தமது நலன்களை மேம்படுத்திக்கொள்வதற்கும் ஸ்திரப்படுத்திக்கொள்வதற்கும் மேலும் மேலும் இந்தத் திரைகளின் மீது  வண்ணங்களைத் தீட்டுகின்றன. மேலும் மேலும் சித்திரங்களை வரைகின்றன. ஒரு கட்டத்தில் இந்தத் திரைகளின் ரசிகர்களாக, அபிமானிகளாக, அடிமைகளாக மக்கள் மாறிவிடுகிறார்கள். அல்லது சனங்கள் அப்படி ஆக்கப்படுகிறார்கள். இன்றைய வெகுஜன ஊடகங்களின் இயக்கம் இந்தநோக்கிலேயே அமைந்துள்ளது. இதனால், மனிதர்கள் இத்தகைய திரைகளால் வகைப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கின்றனர். பிரிகோடுகளும் வேறுபாடுகளும் வலிமையாகத் துருவப்படுத்தப்படுகின்றன.

ஒருபுறத்தில் திரைகளின் உருவாக்கமும் நிறந்தீட்டலும் நடந்துகொண்டிருக்கும் போது மறுபுறத்தில் திரைகளை விலக்கும் காரியங்கள் அல்லது முனைப்புக்கள் நடக்கின்றன. நவீன யுகம் என்பது ஏறக்குறைய அறிவுசார் நடத்தைகளின் மூலம் இந்தமாதிரியான திரைகளை விலக்கும் முயற்சிகளையே கொண்டுள்ளது. இது பல வடிவங்களில் பல தளங்களில் நடக்கிறது. மனித உரிமை, அரசியல் உரிமை, பெண்ணுரிமை, சிறுவர் உரிமை சார்ந்த அமைப்புகளாகவும் போராட்டங்களாகவும் சட்டம், நீதி போன்ற அடிப்படை உரிமைகளைப் பேணுவதற்கான நிறுவன வடிவங்களாகவும் உள்ளது.  எனவே, திரைகளின் உருவாக்கத்திற்கும் திரை விலக்கத்துக்கும் இடையில் பெரும் போட்டியும் போராட்டமும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

நம்வாழ்விலும் ஏராளம் திரைகள் உண்டு. இன்னும் அழுத்தமாகச் சொன்னால், நம் வாழ்வும் ஆயிரமாயிரம் திரைகளை எதிர்கொள்ளவே வேண்டியுள்ளது. இனத்திரை, சாதியத்திரை, தேசியத்திரை, மதத்திரை, பிரதேசத்திரை, நிறவாதத்திரை இப்படிப் பல திரைகள். இந்தத் திரைகளுக்கு நிறந்தீட்டும் அதிகாரத்தரப்புகளின் தீவிரமுனைப்பும் தொடர்ந்து உச்ச நிலையிலேயே  உள்ளது.  இந்தத்தீவிர  முனைப்பை முறியடித்துத் திரைகளை விலக்கும் முயற்சியில் மக்கள் ஓய்வில்லாமல் ஈடுபடவேண்டியிருக்கிறார்கள்.  இதன் நிமித்தமாக அவர்கள் சவால்களை ஏற்கவேண்டியுள்ளது. இங்கே ரிஷான் ஷெரீப், திரைகளை விலக்கும் ஒரு போராளியாக, ஒரு செயற்பாட்டாளராக, ஒரு முயற்சியாளராக இயங்குகிறார். ரிஷான் ஷெரிப்பின் தளம் இலக்கியமாகும். திரைகளை விலக்கும் அவருடைய கருவியும் இலக்கியமே. எனவே, தான் வாழும் காலத்தில், தன்முன்னே, தன் வாழ்வின் இயக்கத்தில் இடையீடு செய்து பலவற்றுக்கும் தடையாக இருக்கும் திரைகளை விலக்குவதை தன்னுடைய வழிமுறையாகவும் நம்பிக்கையாகவும் கொண்டிருக்கின்றார் ரிஷான் ஷெரிப். இவ்வாறு திரைகளை விலக்குவதன் மூலம் உண்மைகளை அடையாளப்படுத்தலாம், யதார்த்தத்தை அறிய வைக்கலாம், புனைவுலகத்தையும் தவறான கற்பிதங்களையும் போக்கலாம் என்பதே ரிஷானின் கவனமாக உள்ளது. இதன்மூலம் பிரமைகளை உடைக்கலாம். பிரமைகள் உடையும்போது புதிய வெளிச்சம் பிறக்கும். புதிய காட்சிகள் புலப்படும். அந்தத் தருணத்தில் நமது முகம் மட்டுமல்ல அகமும் ஒளிரும் என்பது ரிஷானின் நம்பிக்கை. இது ஒரு படைப்பாளியின் ஆதார நம்பிக்கை. இதற்காக அவர் இலக்கியத்தை ஒரு வழிமுறையாகத் தேர்ந்தெடுத்துள்ளார்.

ரிஷான் ஷெரீப் அடிப்படையில் ஒரு படைப்பாளி. அதேவேளை அவர் ஒரு மொழிபெயர்ப்பாளரும் கூட. தன்னுடைய படைப்புக்களின் வழியாக அவர் காட்டுவது ஓருலகம். சமநேரத்தில் தான் செய்யும் மொழிபெயர்ப்புக்களின் வழியாக அவர் இன்னோர் உலகத்தையும் காட்டுகிறார். திரைகளால் வகைப்படுத்தப்பட்ட உலகங்களின் உண்மைகளையும் யதார்த்தத்தையும் திரைவிலக்கிக் காண்பிப்பதே படைப்பாளிகளின் பொறுப்பாகும். எழுத்தாளரின், கவிஞரின், கலைஞரின் தரிசனம் என்பது இதில்தான் தங்கியுள்ளது. அவர்களுடைய சவாலும் இந்தத் தரிசனங்களைக் காண்பதிலேயே உண்டு. இதேவேளை திரைகளை உருவாக்கும் படைப்பாளிகளளும் உள்ளனர். அவர்கள் ஆடிக்கொண்டிருக்கும் திரைகளுக்கு வண்ணம் தீட்டுவோராக, புதிய திரைகளின் உருவாக்கத்திற்கு உவப்பாகச் செயற்படுவோராக இயங்குகின்றனர். அவர்கள் பின்னோக்கிய பயணிகள். காலத்தைப் பின்னிழுத்துச் செல்வோர். ஆனால், ரிஷான் ஷெரிப் சந்தேகமின்றி, தன் முன்னேயுள்ள திரைகளை விலக்கி உண்மைகளையும் யதார்த்தத்தையும் காண்பிக்கின்றார். பலரும் அறியத்தவறுகின்ற, திரைகளால் மூடப்பட்ட ஓருலகத்தை வெளியே காட்டுகின்றார். இதன் மூலம் உண்மைக்கும் யதார்த்தத்திற்கும் நெருக்கமாக நம்மை அழைத்துச் செல்கிறார். அவருடைய கால்கள் முன்னோக்கிப் பதிகின்றன.

இங்கே ரிஷான் ஷெரீப் விலக்கும் திரை என்பது சிங்கள சமூகம் பற்றியது. இன்றைய தமிழ்மொழி பேசும் சமூகங்களிடையே சிங்களச்சமூகம் பற்றிய புரிதலானது எதிர்மறை அம்சங்களையே அதிகமாகக் கொண்டது. அவ்வாறே தமிழ்மொழிச் சமூகங்களைப் பற்றிய சிங்களச் சமூகத்தின் புரிதலும். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான இனமுரண்களின் வளர்ச்சி சமூக இடைவெளிகளை அதிகரித்து விட்டது. வரலாற்றுப் புனைவுகளும் நிகழ்ச்சிகளும் இதற்கு மேலும் துணைசெய்திருக்கின்றன, செய்து வருகின்றன. இதனால் ஒவ்வொரு சமூகமும் மற்றச்சமூகத்தைக் குறித்து அதீத பிரமைகளைக் கொண்டுள்ளது. சிங்களச்சமூகத்தைப் பற்றி தமிழ்ச்சமூகத்தின் மனதின் படிமமானது பகைமைத் தன்மை நிரம்பியது. ஆட்சியதிகாரத்திலும் பெரும்பான்மையிலும் சிங்களத்தரப்பு இருப்பதால் அது தம்மைவிட அதிக வளத்தோடும் வாய்ப்புக்களோடும் உரித்துகளோடும் உள்ளதாக தமிழர்களிடையே வலுவான மனப்பதிவு உண்டு. அரசொன்றின் முழுச்சொந்தக்காரராக அல்லது அரசின் உரித்தாளராக சிங்களவர் இருப்பதால் அவர்களுக்கு எந்தப்பிரச்சினையும், எந்தக்குறைபாடுகளும் இல்லையெனத தமிழர் கருதுகின்றனர். இதேவேளை தமிழ் மக்கள் பிராந்திய வலுச்சக்தியாகிய இந்தியா மற்றும் மேற்குலக சக்திகளுடன் இணைந்து சிங்களவர்களுக்கும் இலங்கை அரசுக்கும் எதிராக செயற்படுகின்றனர் என சிங்கள மக்கள் எண்ணுகின்றனர். இது தமிழர்களைப் பகைநிலையில் பார்க்க அவர்களுக்கு ஏதுவாகிறது.

மறுபுறத்தில் தமிழ் - சிங்கள முரண்பாட்டின் இடைவெளியை சாதகமாகப் பயன்படுத்தி தமக்கான முதன்மை மையங்களை முஸ்லீம்கள் உருவாக்கிக்கொள்கின்றனர். இது எதிர்காலத்தில் அதிக வாய்ப்பை பெற்றவர்களாக முஸ்லீம்களை ஆக்கிவிடும் என சிங்கள ஆதிக்கச்சமூகம் அச்சமடைகின்றது. முஸ்லிம்களைக் குறித்து தமிழர்களிடத்திலும் சரியான உறுதிப்பாடுகள் இல்லை. ஒரு கலங்கலான நிலையே காணப்படுகிறது.

இத்தகைய பிரமைகளால் ஆன இலங்கைச் சமூகவெளி கொந்தளிக்கும் அரசியற்களமாக நீடிக்கிறது. இந்தக் கொந்தளிப்புக்கேற்ப திரைகளின் உருவாக்கமும் வண்ணந்தீட்டலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.  ஆகவே, இலங்கைச் சமூகங்கள் என்பது நிறந்தீட்டப்பட்ட திரைகளினால் ஆனதே. ஆனால், இவற்றின் பின்னாலுள்ள யதார்த்த வெளியும் உண்மை முகமும் வேறானவை. ரிஷான் ஷெரீப் இவற்றையே திரை விலக்கிக் காட்டமுனைகிறார். உண்மையில் அந்தந்தச் சமூகங்களின் நிலவரத்தை, அவற்றின் அகத்தை, அவற்றின் மனச் சாட்சியை ரிஷான் ஷெரீப் துல்லியமாக இனங்காண்கிறார். பிறகு அவற்றைப்  பொதுவெளிக்குக் கொண்டு வருகிறார். இந்தப் பொதுவெளி என்பது தமிழ், சிங்கள, முஸ்லிம் தரப்புகள் இணைந்த இலங்கைச் சமூகங்கள் என்ற பொதுவெளியாகிறது.

இடைவெளியினாலும் பிரமைகளாலும் உருவாக்கப்பட்ட திரைகளின் பின்னே இருக்கும் யதார்த்தமும் உண்மையும் எப்படி இருக்கின்றன என்பதைக் காட்டுவது ரிஷான் ஷெரீப்பின் முதற் கவனமாக உள்ளது என்று பார்த்தோம். இதற்காக அவர் சிங்களக் கவிதைகளை இங்கே எடுத்துள்ளார். இந்தச் சிங்களக் கவிதைகள் சிங்களச் சமூகத்தின் யதார்த்தத் தளத்தைப் பிரதிபலிப்பன. சிங்களச் சமூகத்தின் மனச்சாட்சியை அடிப்படையாகக் கொண்டன. சமூகப் பொறுப்புக் குறித்தன. அவர்களுடைய வாழ்க்கையைப் பேசுவன. எனவே இந்தக் கவிதைகளைத் தமிழ்மொழியில் அறிமுகப்படுத்துவதன் மூலமாகச் சிங்களச் சமூகத்தைப் பற்றிப் பிற சமூகத்தினராகிய தமிழ் மற்றும் முஸ்லிம்களிடத்தில் அறியப்பட்டிருக்கும் பொதுப் புரிதலின் மீது கேள்விகளை எழுப்புகிறார் ரிஷான் ஷெரிப். அல்லது மறுவிளக்கம் பெற வைக்கிறார். ஏற்கனவே ரிஷான் ஷெரிப், பஹீமா ஜெஹானுடன் இணைந்து மொழிபெயர்த்திருந்த, புகழ்பெற்ற சிங்களக் கவிஞரான மஞ்சுள வெடிவர்த்தனவின் கவிதைகள் ‘தலைப்பற்ற தாய்நிலம்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளன. அவை சிங்களச் சமூகத்தினுடைய மனச்சாட்சியின் குரலாக, கையாலாகாத மனிதரின் வேதனைகளாக, தமிழ்ச் சமூகத்தின் மீதான கரிசனையாக இந்த நூற்றாண்டில் பதிவாகியுள்ளன. அடக்குமுறை, அதிகார அரசியல் வெளியில் ஈரத்துடன் துடித்துக்கொண்டிருக்கும் சொற்களைக் கொண்ட மஞ்சுளவின் கவிதைகளை பஹீமாவுடன் இணைந்து ரிஷான் கொண்டு வந்தமை முக்கியமானதோர் நிகழ்ச்சியாகும். அதுவும் இந்தக் கொந்தளிப்பான காலத்தில்.

அரசின் உரித்தாளராகக் கருதப்படும் சிங்களச் சமூகத்தினரிடையேயும் ஏராளம் பிரச்சினைகளும் தேவைகளும் குறைகளும் அபிலாஷைகளும் உண்டு. அவர்கள் பொருளாதாரப் பிரச்சினைகளாலும் இன முரண்பாடுகளாலும் அதிகாரத்தினாலும் பலியிடப்படுகிறார்கள். அவர்களுடைய உளக்குமுறல் கொந்தளிக்கும் எரிமலையையும் விட வெம்மையுடையது. இதை இந்தத் தொகுதியில் உள்ள கவிதைகளின் மூலமாக அவற்றைச் சாட்சியமாக்குகிறார் ரிஷான். இதற்குச் சாட்சியமாக உள்ள அத்தனையும் சிங்களக் கவிதைகள். இவை சிங்களவர்களால் மட்டும் எழுதப்பட்ட கவிதைகள். இதில் மஹிந்த ப்ரஸாத் மஸ் இம்புல, இஸ_ரு சாமர சோமவீர, சஜீவனி கஸ்தூரி ஆரச்சி ஆகியோரின் கவிதைகள் முக்கியமானவை.

இன்றைய யதார்த்த வாழ்க்கையில் பெற்றோரைக் கைவிடுதல் ஒரு வழமையாகியுள்ளது. ஆனால், அது கொடுமையானது. ஏற்றுக்கொள்ள முடியாதது. எத்தகைய நியாயங்களும் இதற்கு பதில் தர இயலாது. கைவிப்படும் தாயின் அல்லது தந்தையின் துயரம் மிக வலியது. இந்தத் துயரத்துக்கும் இந்த நிலைக்கும் இன, மத, பிரதேச வேறுபாடுகள் எதுவும் கிடையாது. இங்கே வளர்த்து ஆளாக்கிய மகன் தன்னைக் கைவிடுவதைப்பற்றி ஒரு தாயின் வருத்தம் - கவிதை - பதியப்படுகிறது. ‘மரத்தின் கீழ் கைவிடப்பட்ட அம்மாவிடமிருந்து’ என. இந்தத் துயரத்தை மஹிந்த ப்ரஸாத் மஸ் இம்புல மிக அருமையாக, சில வரிகளில் மட்டும் அழுத்தமாகவும் ஆழமாகவும் சொல்லி விடுகிறார்.

‘....... நன்றாக நினைவுள்ளது இதே மரம்தான் மகனே

உன்னைத் தூக்கிக் கொண்டு பிரயாணக்களைப்பைப் போக்கவென

நின்றேனிங்கு முன்பொரு இரவில் - அதிசயம்தான்

மீண்டும் அந்த இடத்துக்கே என்னை அழைத்து வந்திருப்பது

 

உன்னைப் பெற்றெடுத்த நாள் முதலாய்

இணையற்ற அன்பைப் பொழிந்தவளிடம்

போய்வருகிறேன் என்றேனும் பகராமல் நீ செல்கையில்

உள்ளம் பொங்கி வழிகிறது விழிகளினூடாக

 

......................

உள்ளத்தின் உறுதியைக் கண்களில் திரட்டுகிறேன்

பதற்றமேதுமின்றி வாகனத்தை ஓட்டிக்கொண்டு

பத்திரமாக வீடுபோய்ச் சேர்ந்திடுவாய் என் மகனே!’

 

மஹிந்த ப்ரஸாத் மஸ் இம்புலவின் உணர்வை அப்படியே தந்து வெற்றியடைகிறார் ரிஷான். வாழ்க்கையின் எதிர்கொள்ளல்களை தரிசனமாக்கும் படைப்பாளிகளாகின்றனர் மஹிந்த ப்ரஸாத் மஸ் இம்புலவும் ரிஷான் ஷெரிப்பும். மூலமும் மொழிபெயர்ப்பும் இணைவதில் இது ஒரு முக்கியமான நிலை. இப்படி பல இடங்களில் வெற்றிகரமாக ஒருங்கிணையும் மையங்கள் இந்தக் கவிதைத் தொகுதியில் உண்டு.


இலக்கியப் படைப்புகளின் மொழிபெயர்ப்புச் சவால்கள் மிகக் கடினமானவை. அவற்றை வெற்றிகொள்வதென்பது வாசகரிடம் மைய உணர்வைப் பகிர்வதில் அடையும் வெற்றியிலேயே தங்கியுள்ளது. ரிஷானின் மொழிபெயர்ப்பில் உள்ள இந்தக் கவிதைகளில் அந்த வெற்றியடைந்த தன்மைகள் நிறையவுள்ளன. சிங்களக் கவிதைகளின் இன்றைய தன்மையையும் போக்கினையும் அவற்றின் மையப் பிரச்சினைகளையும் உணர்தளத்தினையும் ரிஷான் நமக்குக் கவனப்படுத்துகிறார். இதன்மூலமாகப் பல திரைகள் விலகுகின்றன. ஒன்று, கவிதையின் தன்மைகளும் போக்குகளும். இரண்டாவது, சிங்கள சமூகத்தின் வாழ்க்கையும் நிலைப்பாடுகளும் மனதும். மூன்றாவது, அங்குள்ள பிரச்சினைகள். நான்காவது, அரசுக்கெதிரான அவர்களுடைய உணர்வலைகள். ஐந்தாவது, அரசிடமிருந்து தூர விலகியிருக்கும் சிங்கள மக்கள். இப்படிப் பல.


‘............விழாக்களும் இப்பொழுது அதிகமென்பதால்

காட்சிகள் தொடர்ந்தபடி உள்ளன

உறக்கமே இல்லாமல் இரவு முழுவதும் ஆடுகிறேன்

காலையில் ஒத்திகைக்கு ஓடுகிறேன்

 

உடலழகு தொலைந்து விடுமென்று

இரவுணவையும் தருகிறார்களில்லை

இளம்பெண்கள் பத்துப்பேர் நாம்

அவர்களறியாமல் தேநீர் தயாரித்துக் கொள்கிறோம்.

 

.....................

ஒன்பது நாட்களுக்குக் காட்சிகள் தொடர்ந்திருக்க

நேற்றென்னை அந்த வருத்தம் பீடித்தது

ஆனாலும் அதனைக் கவனத்திற்கொள்ளாமல்

வீட்டைப் பற்றி எண்ணி எண்ணியே ஆடினேன்

 

அம்மாவின் மருந்துகளையும்

அப்பாவின் திதிக்கான பொருட்களையும்

வாங்கத்தேவையான பணத்தை இதோ அம்மா

இந்தக் கடிதத்துடனேயே அனுப்பியிருக்கிறேன்......’

 (ஓர் மடல் - மஹிந்த ப்ரஸாத் மஸ் இம்புல)

 பொதுப்புரிதலில் அல்லது தமிழ் மொழியைப் பேசும் சமூகங்களின் மனதில் இலங்கை என்பது சிங்களவருக்கே முழு உரித்துக்குரியதாக உள்ளதாக நம்பப்படுகிறது. ஆளும் அரசு தொடக்கம், ஆட்சியிலிருக்கும் ஆட்கள் வரை அனைத்துமே சிங்கள மயம். ஜனாதிபதி ஒரு சிங்களவர். பிரதமர் ஒரு சிங்களர். முப்படைகளின் தளபதிகள் சிங்களவர். படைகள் சிங்கள மயப்பட்டன. அமைச்சரவை சிங்களப் பெரும்பான்மையையே அடிப்படையாகக் கொண்டது. அரசின் அத்தனை வளையங்களும் சிங்கள மயப்பட்டன. அப்படியெனில் எவ்வாறு இத்தகைய அவலம் சிங்கள மக்களிடத்திலே காணப்படுகிறது? மஹிந்த ப்ரஸாத் மஸ் இம்புலவின் கவிதைகள் மட்டுமல்ல. பெரும்பாலான சிங்களக் கவிதைகளும் கதைகளும் சினிமாவும் நாடகங்களும் வறிய சிங்கள மக்களின் துயரங்களையும் உணர்வுகளையும் அவர்களுடைய பிரச்சினைகளையுமே பேசுகின்றன. அல்லது பேச முற்படுகின்றன. சிங்களச் சமூகத்திலும் ஏராளம் ஏழைகள் ஒரு நாள் வாழ்க்கைக்காகவே பெரும் போராட்டங்களை நடத்துகின்றனர். தமிழ்ப் பிரதேசங்களான வடக்குக் கிழக்குப் பகுதிகள்வரையில் அவர்கள் தலைச்சுமையாக பொருட்களைச் சுமந்து கொண்டு, தெருத்தெருவாக விற்பனைக்காக அலைகின்றனர். கூலி வேலை செய்கிறார்கள். அவர்களுடையதாக நம்பப்படும்  அரசு அவர்களைச் சரியாகப் பராமரிக்கவில்லை. முறையாகப் போஷிக்கவில்லை. அவர்களை அது உறிஞ்சுகிறது. அவர்களுக்கு அது துரோகமிழைக்கிறது. ரிஷான் விலக்குகின்ற திரையில் சிங்களவரல்லாத பிற மொழிச் சமூகத்தினராகிய எமக்கு சிங்களச் சமூகத்தைப் பற்றிய புதிய படிமங்கள் கிடைக்கின்றன. திரைவிலகும்போது இந்த மெய்ப்படிமங்களை நாம் உணர்கிறோம்.

 ஆனால், இலங்கையின் ஆட்சியில் இத்தகைய நிலை ஒன்றும் புதிதில்லை. அது தமிழர், சிங்களர், முஸ்லிம்கள் என்ற வேறுபாடுகளில்லாமல் எல்லோரையும் உறிஞ்சுகிறது. எல்லாத்தரப்பினரையும் ஒடுக்குகிறது. இந்த நிலைமையை ஆதாரமாகக் கொண்டே அரசாங்கத்துக்கெதிரான புரட்சிகளை இரண்டு தடவை உக்கிரமாக ஜே.வி.பி முன்னெடுத்தது. இந்தப் புரட்சியின் அடித்தளத்தில் மேற்படி நிலைமைகளின் உணர்வும் அதனோடிணைந்த மக்களும் குறிப்பாக இளைய தலைமுறையினரும் இருந்துள்ளதை அவதானிக்க முடியும். ஜே.வி.பி அதனுடைய வழிமுறைகளில் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம். அல்லது பின்வாங்கியிருக்கலாம். ஆனால், அந்த மக்களின் வாழ்நிலைமைகளில் குறிப்பிடத்தக்க பெரிய முன்னேற்றங்களேதும் நடந்து விடவில்லை. அரசு அதைச் செய்யவில்லை. இதனை இங்குள்ள கவிதைகள் மேலும் தெளிவுறுத்துகின்றன.

 
‘...........காப்பதற்கென்றால் இன்னுமிங்கு

பயிர் நிலமொன்றேது

வந்திருக்கிறதொரு கடிதம் வங்கியிலிருந்து

ஏலத்தில் விற்கப் போகிறார்களாம்

அடகு வைத்த பத்திரங்கள் நான்கையும்

 

அதற்கு முன் விசாரிக்கவென

அவர்களனுப்பிய கடிதத்திற்கும்

அப்பா பதிலனுப்பவில்லையாம்

அது கடைசி அறிவித்தலாம்....’

 

(சின்னத்தம்பி – டி. திலக பியதாஸ)

 

‘முடிவேயற்று மிகவும் நீண்ட

அந்தப் பேருந்துப் பயணத்தில் வாந்தியெடுத்த

காய்ச்சலுக்குத் தெருவோரக் கடையொன்றில்

தேயிலைச் சாயம் குடித்த

அப்பாவைத் தேடி அம்மாவுடன்

பூஸாவுக்குச் சென்ற...’

 (சிறுவன் - இஸ_ரு சாமர சோமவீர)


இதற்கு இன்னொரு சாட்சியம் –

‘...........

வீடொன்றைக் கட்டவென

ஏழெட்டு இடங்களில் வாங்கிய கடன்களை

சாகும்வரை அடைக்க வேண்டியிருப்பினும்

பெரிதாக இல்லாவிடினும்

இருக்கிறது எனக்கே எனக்கென

அசிங்கமற்ற சிறு வீடொன்று

தன்பாட்டில் விழுந்து கிடக்க....

 

வலிக்காமல்

ஊசி முனைகள் மீது

நடந்து செல்லும் விதத்தை இப்போது

நன்கறிவேன் நான்’

 

(நீ சந்தோசமாக இருக்கிறாயா? - இஸ_ரு சாமர சோமவீர)

 இதெல்லாம் தமிழ்ச் சமூகத்தின் நிலைக்கு ஒப்பானதே. ஆகவே இலங்கையின் வெகுசன வாழ்நிலை என்பது ஏறக்குறைய ஒத்த தன்மைகளைக் கொண்டமைந்ததே. இந்த ஒத்த தன்மைகளில் காணப்படும் இணைப்புகளை அதிகாரத்தரப்புகள் விரும்புவதில்லை. அவை அவற்றைத் திசை திருப்ப முயற்சிக்கின்றன. பிரிப்புகளை உருவாக்குகின்றன. அல்லது இருக்கும் இடைவெளிகளைத் தொடர்ந்தும் பேண முற்படுகின்றன. அதற்காக அவை வண்ணந்தீட்டப்பட்ட திரைகளைத் தொங்க விடுகின்றன, ஒவ்வொரு சமூகத்தின் முன்னும் ஒவ்வொரு மனங்களிலும்.

 இங்கேதான் நாம் ஏராளம் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இலங்கையின் இன்றைய தலைப்பிரச்சினை இதுதான். இலங்கைச் சமூகங்களின் வாழ்நிலைப் பிரச்சினை மட்டுமல்ல, அவற்றின் தேவைகள் மட்டுமல்ல, அவற்றின் போராட்டங்களும் ஒரே விதமாகவே ஒடுக்கப்படுகின்றன. அவற்றின் எதிர்ப்புணர்வுகள் ஒரே விதமாகவே நசுக்கப்படுகின்றன.

‘...........நேற்றிரவு கொண்டு வரப்பட்ட யுவதியின்

குரல் படிப்படியாகத் தேய்ந்தழிகிறது

 

சேவல் கூவமுன்பு

மூன்றாவது முறையாகவும்

எவரையும் தெரியாதெனச் சொன்ன சகோதரி

காட்டிக் கொடுப்பதற்குப் பதிலாக

அச்சந்தரும் மரணத்தையும்

கெஞ்சுதலுக்குப் பதிலாக

சாபமிடுவதையும் தேர்ந்தெடுத்த சகோதரி

எனதிரு கண்களையும் கட்டியிருக்கும் துணித்துண்டு ஈர்த்தெடுத்த

இறுதிக் கண்ணீர்த்துளிகளைச்

சமர்ப்பித்தது உன்னிடமே

..........................’

 

(சித்திரவதைக் கூடத்திலிருந்து – அஜித் சி. ஹேரத்)

 

`......பாழ்பட்டுச் சிதைந்து வெறுமையான

இவ்விசித்திர நகரில்

எஞ்சியுள்ள எல்லோருமே விதவைகள்

 

எமக்கெனவிருந்த கணவரைத் தந்தையரை

சகோதர்களைப் புத்திரர்களை

சீருடை அணிவித்து

வீரப் பெயர்கள் சூட்டி

மரியாதை வேட்டுகளின் மத்தியில் புதைத் திட்டோம்

செத்துப் போனவர்களாக`

 

( ட்ரோஜனின் உரையாடலொன்று - சஜீவனி கஸ்தூரி ஆரச்சி)

 இதுபோலப் பல கவிதைகளை இந்தத் தொகுதியில் காண முடிகிறது. இங்கே சேர்க்கப்பட்டிருப்பவை வகை மாதிரிக்கான சில கவிதைகள் மட்டுமே. இவற்றைப் போல ஆயிரக்கணக்கான கவிதைகள் சிங்களப் பரப்பிலுண்டு. இதில் தமிழ்ச் சமூகத்தின் உணர்வுகளை நேரடியாகவே பிரதிபலிக்கும் நேயக்கவிதைகள் பலவும் அடக்கம். சிவரமணிக்கு, விளக்கு, ரேவதி, பேரரசன் பார்த்திருக்கிறான், ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும் போன்றவை. ஆகவே யுத்தம், பேரழிவுகள், இழப்பு, துயரம், வறுமை, ஜனநாயக மறுப்பு, அதிகாரச் சுமை போன்ற எல்லாமும் பிற சமூகங்களிடத்திலும் வீட்டுக்கு வீடு வாசற்படி போலவே உண்டு. ஆனால், இதையெல்லாம் மறைத்துத் தொங்கும் திரைகளின் பின்னே ஒவ்வொருவரும் இழுபடுகிறார்கள். இதுவே துயரம். வேடிக்கை. அவலம். இதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வை இந்தக் கவிதைகள் ஏற்படுத்துகின்றன. மட்டுமல்ல, இந்தத் தொகுதியிலுள்ள எட்டுக் கவிஞர்களில் அநேக கவிஞர்கள், தமிழ்ப் படைப்பாளிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை எதிர்கொள்வோராகவே உள்ளனர். சிலர் நாட்டை விட்டே பெயர்ந்துள்ளனர். ரிஷான் ஷெரிப்பும் பஹீமாவும் இணைந்து மொழிபெயர்த்த மஞ்சுள வெடிவர்த்தனவும் இங்கிருக்க முடியாதென்ற நிலையில் நாட்டை விட்டு வெளியேறிய கவிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷான் ஷெரிப் உண்மையில் கொடுப்பினைகள் பலவற்றைப் பெற்ற  ஒருவர். ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைத் தெரிந்து வைத்திருப்போர் கொடுப்பினைகள் பலவற்றைப் பெற்றவர்களே. மேலும் மொழிகளைத் தெரியத் தெரிய பார்வைகளின் பரப்பும் பெறுவனவற்றின் தொகையும் கூடும். ரிஷான் சிங்கள மொழியின் வழியாக சிங்களச் சமூகத்தின் ஆழ்மனங்களைத் தேடிச் செல்கிறார். யதார்த்த வெளியில் பயணிக்கிறார். அவருக்கு இது வாய்த்துள்ளது. இங்கே இந்த இடத்தில் நாம் இன்னொரு முக்கியமான நிகழ்ச்சி நடந்திருப்பதையும் நோக்க வேண்டும். இந்த நூலிலுள்ளவை சிங்களக் கவிஞர்கள் சிங்கள மொழியில் எழுதிய கவிதைகள். (சிங்களக் கவிஞர்களால் ஆங்கிலத்தில் எழுதப்படும் கவிதைகளும் உண்டு) இந்தக் கவிதைளை மொழிபெயர்த்திருப்பவர் ஒரு முஸ்லிம். இவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது தமிழில். ஆகவே தமிழ், சிங்கள, முஸ்லிம் தொடர்பாடல் இந்தக் கவிதைகளில் நிரம்பியுள்ளன. இதுவும்  கவனத்திற்குரிய ஒன்று.

சிங்களக் கவிஞர்களின் சில கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் ஏற்கனவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக்கப்பட்டுள்ளன. பெரிய அளவில் இல்லையென்றாலும் அவ்வப்போது இந்த முயற்சிகள் நடந்துள்ளன. 2003 காலப்பகுதில் நிலவிய சமாதானச் சூழலையொட்டி கவிஞர் சோ.பத்மநாதனின் மொழிபெயர்ப்பில் ‘தென்னிலங்கைக் கவிதைகள்’ என்ற நூலொன்று வெளியானது. `தூண்டி` இதனை வெளியிட்டிருந்தது.

சோ.ப மொழிபெயர்த்த கவிதைகள் சிங்களக் கவிஞர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவையும் சிங்களத்தில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டவையுமாகும். ஆகவே அவர் ஆங்கிலத்தின் வழியாக சிங்களக் கவிஞர்களின் கவிதைகளைத் தமிழில் கொண்டு வந்தார்.

இந்தத் தொகுதிக்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி எழுதியிருந்த அணிந்துரையில் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். 1. சோ.ப வின் தமிழ்வழி மூலம் தெரியவரும் சிங்கள மொழி நிலை உணர்வுகள் என்ன? 2. அவை நமது சமூகங்களின் துடிப்பு நிலைகளோடு ஒப்பிடும்போது எப்படியிருக்கின்றன? 3. அதற்கும் மேலாக நாம் எங்கே நிற்கிறோம்?


இந்தக் கேள்விகளுக்கான பதில்களை சோ.ப மொழிபெயர்த்திருந்த தென்னிலங்கைக் கவிதைகளிலேயே சிவத்தம்பி கண்டடைகிறார். ‘சோ.ப வின் இந்தத் தொகுப்பு அரசியலின் புகைச் சூழல் பாதிக்காத சிங்கள நெஞ்சங்களின் இயல்பான உணர்வுத் தேடல்களை நம் கண்முன்னே நிறுத்துகின்றது. உண்மையில் பல பாடல்களில் (கவிதைகளில்) இனக்குழுமப்போர் பற்றிய நேரடியான குறிப்பு எதுவுமில்லை.

  தமிழர் இருப்புக்கெதிராக கிளப்பப்படும் மதயுத்தக் கோஷமொன்றின் வழியாக சமகால ஈழத்துத் தமிழ் வாசகர் பெற்றுக்கொள்ளும் புத்தர் பற்றிய படிமம் ஓர் இயல்பான சிங்கள பௌத்த நிலையில் எவ்வாறு தொழிற்படுகிறது என்பதைப் பார்த்தல் வேண்டும். பௌத்த சிங்களப் பண்பாட்டினுள் வேர்விட்டு நின்று அதன் சாதக ஆக்கபூர்வ உணர்வுகளோடு, பின்னிப் பிணைந்து நிற்கின்ற ஒரு கவிஞன் நவீன காலத்து வாழ்க்கையின் சோகங்களை சித்தார்த்தரது வரலாற்றின் திருப்புமுனைக் கட்டத்தை முன்னிறுத்தி எழுதியுள்ளவை அந்தப் பண்பாட்டினுள் அடிநிலை மனிதர்களின் வாழ்வியல் வேதனைகளைப் பிட்டு வைக்கின்றது’.

 
சோ.ப மொழிபெயர்த்த தென்னிலங்கைக் கவிதைகளைக் குறித்து கா. சிவத்தம்பி குறிப்பிடும் அம்சங்கள் ரிஷான் ஷெரிப்பின் இந்தக் கவிதைகளுக்கும் பொருந்துகின்றன. ஆனால், இதில் இனப்போரின் பாதிப்புகள் அல்லது பிரதிபலிப்புகள் ஒரு மெல்லிய கோடாகத் துலங்குகின்றன. மாண்டவருக்காக விளக்கேற்றுதல், யுத்தக் குற்றங்களைக் குறித்து, குண்டுவெடிப்பில் சிதறிய சனங்களைப் பற்றியது, இராணுவச் சிப்பாயின் இக்கட்டான தெரிவு எது? என்பது என.

 இலங்கையின் ஆட்சிமுறையானது, சமூக ஒருங்கிணைவுக்கு எப்போதும் சவாலாகவே இருந்துள்ளது. அரசைக் குறித்து, ஒவ்வொரு சமூகங்களைக் குறித்து என அச்சமூட்டும் நினைவுகளையே ஒவ்வொரு சமூகமும் தம் இதயத்தில் தேக்கி வைத்திருக்கின்றன. இதில் 1980 களிலிருந்து ஏற்பட்ட தீவிர நெருக்கடி என்பது, சமூக ஊடாட்டங்களை முழுமையாகவே அறுத்தன. அறுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பரப்பென்பது மறு சமூகத்துக்கு மூடுண்ட ஒன்றாகவே இருந்தது. மூடுண்ட பரப்பில் என்ன நடக்கிறது என்று அறிவதற்கான வாய்ப்புகள் அறவே அற்றுப்போயின. மிக அருந்தலாக நடக்கின்ற தொடர்புறு நிலைகளும் திரைகளால் மறைக்கப்பட்டன. அல்லது அச்சுறுத்தலுக்குள்ளாகின. தமிழ் - சிங்கள உறவு நிலையைக் குறித்துச் சிந்தித்தோர் தமிழ்த்தரப்பினாலும் அந்நியமாகக் கருதப்பட்டனர். சிங்களத்தரப்பினாலும் அந்நியமாக நோக்கப்பட்டனர். இதனால், மொழி வழியான, வாழ்நிலை வழியான அறிதலும் உணர்தலும் ஒடுங்கியது.  இந்தத் துரதிருஷ்ட நிலையில் ஒருவரை ஒருவர் அறியவும் உணரவும் முடியாத நிலை ஏற்பட்டது. இதைப் பேணவே திரைகளைப் பேணுவோர் விரும்பினர், இன்னும் விரும்புகின்றனர்.

 
இந்த நிலையில் ரிஷான் ஷெரிப் இப்பொழுது இலக்கியத்தின் திறவு கோல்கொண்டு பலவற்றைத் திறக்க முற்படுகிறார். அவர் காண்பிக்கும் உலகத்தில் பல தரிசனங்கள் நமக்குக் கிடைக்கின்றன. ‘அறுபதாம் தோட்டத்து மரண ஊர்வலம் ( - சஜீவனி கஸ்தூரி ஆரச்சி) அம்மாவின் நடிகைத் தோழி, என்தாய் ( - இஸ_ரு சாமர சோமவீர) எனப்பல. ஆனால், இன ஒடுக்குமுறையைக் குறித்து மஞ்சள வெடிவர்த்தன போன்ற கவிஞர்களின் உணர்வுகளை ஒத்த பிற வெளிப்பாடுகள் எந்த அளவில் உள்ளன? என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. இலக்கியப் படைப்பெதற்கும் வரையறைகளை வகுத்துக் கேள்வி எழுப்ப முடியாதென்ற போதிலும் இந்தக் கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்தத் தொகுதியிலுள்ள கவிதைகளை வாசிக்கும்போது  நமது பெரும்பாலான தமிழ்க்கவிதைகள் கொண்டிருக்கும் மொழிசார்ந்த வெளிப்பாட்டு நெருக்கடிக்கும் சிங்களக்கவிதைகள் கொண்டுள்ள மொழிசார்ந்த வெளிப்பாட்டு இலகுத்தன்மைக்கும் இடையிலான வேறுபாடுகளைக் காண முடிகிறது. இந்தக் கவிதைகள் மிக இலகுவாகத் தம்மை வெளிப்படுத்துகின்றன. அதனால் இவை இலகுவில் நெருக்கங்கொள்கின்றன. இது ரிஷான் ஷெரிப்பினுடைய மொழிபெயர்ப்பின் திறனோ அல்லது சிங்களக் கவிதைகளின் இயல்போ என அறிவதற்குரிய சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஆனால், ரிஷானின் பிற மொழிபெயர்ப்புகளிலும் இந்தத் தன்மை கூடியிருந்ததை நாம் உணரலாம்.

சிங்களக் கவிதைகள் தனியே ஒரு மையத்தில் மட்டும் குவியாமல் பல நிலைப்பட்டுள்ளன. யுத்தம், ஏழ்மை, காதல், பிரிவு, ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வு, நட்பு, இயற்கை மீதான லயிப்பு, மனித உறவுகள் எனப் பலவற்றைப் பற்றியும். ஆனால், ஈழத்தமிழ்க் கவிதையும் ஈழத்தமிழ் இலக்கியமும் கடந்த ஐம்பது ஆண்டுகாலத்தில் ஒடுங்கி ஒற்றைப்படைத் தன்மையாக மாறிவந்துள்ளன. சில விலக்குகள் உண்டெனினும் கூடுதலாக அரசியல் நெருக்கடிகளைப் சுற்றியே அதன் மையம் உள்ளது. இதற்கு தமிழ் பேசும் சமூகங்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளின் அழுத்தம் ஒரு காரணமாக இருந்தாலும் அதைக் கடந்து இயங்குவதற்கான பொதுவெளி சுருங்கி விட்டது என்பதே உண்மை. அரசியலைப் பேசாத கவிதையை, கதையை ஏற்பதற்கு தமிழ் மனங்களிலும் ஊடகங்களிலும் இடமில்லை என்ற நிலை ஏற்பட்டதே இதற்குக் காரணம். இந்த இடத்தில் நாம் சிங்களக் கவிதைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முன்னேற்றங்களைக் குறித்துக் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.

 
இன்றைய இலங்கைச் சூழலில் ரிஷான் ஷெரிப்பின் இத்தகைய பணி என்பது அரசியலாளரின் பணியை விட, சமூகச்செயற்பாட்டியக்கங்களின் பணியை விடப் பெரியது. அந்தத் தரப்புகள் பெருமளவு நிதியையும் வளங்களையும் தின்று கொழுக்கும் அளவுக்கு உரிய செயல்களைச் செய்வதில்லை. ஆனால், தனி விருப்பின் அல்லது தனி ஈடுபாட்டின் காரணமாக ரிஷான் போன்றவர்கள் இந்தப் பணிகளை கடின உழைப்பின் மூலமாகச் செய்கிறார்கள். இவ்வாறு தமிழிலிருந்து சிங்களத்துக்கும் சிலர் மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்;. இவர்கள் அனைவருமே இதில் லாபநோக்கற்றுச் செயற்படுகிறார்கள். இது முக்கிய கவனத்திற்குரியது ஒன்று.


வாசிப்பில் ஓரளவு ஆர்வமுள்ள இளைஞர்கள் சிலரிடம் இந்தக் கவிதைகளைக் காண்பித்தேன். அவர்களுக்கு நிறைய ஆச்சரியம். சிங்களத் தரப்பில் இப்படியெல்லாம் இருக்கிறதா? இப்படி எழுதும் கவிஞர்களை இப்போதே அறிகிறோம். ஏன் இதைப்பற்றி, இவ்வாறானவர்களைப் பற்றி, இவ்வாறான விசயங்களைப் பற்றி பொதுவாக அறியமுடியாமலிருக்கிறது என்று அவர்கள் கேட்கின்றனர். தமிழ் ஊடகவெளியும் ஒரு திரைதான் என்று அவர்களுக்குச் சொன்னேன். இதைத் தவிர வேறெதைச் சொல்ல முடியும்? வேறெப்படிச் சொல்ல முடியும்?


அயல்மொழி இலக்கியங்களை அறிந்திருப்பது ஒரு முக்கிய செயல்பாடு. அதனுடாகப் பிற சமூங்களின் வாழ்க்கையையும் அவர்களுடைய சவால்களையும் அவர்களுடைய உளநிலையையும் அறந்து கொள்ள முடியும். இந்தியாவில் இத்தகைய முயற்சிகள் கூடுதலாக இன்று நடக்கின்றன. தமிழிலிருந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற அயல்மொழிகளுக்கும் அந்த மொழிகளிலிருந்து தமிழுக்கும் என ஒரு பரஸ்பரப் பரவலாக்கம் நடைபெற்று வருகிறது. இந்த அளவுக்கு இலங்கையில் தமிழிலிருந்து சிங்களத்திற்கும் சிங்களத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்புச் செய்யப்படும் படைப்புகள் குறைவு.

 
நல்லிணக்கம் பற்றியும் தேசிய ஒருமைப்பாடு பற்றியும் அரசியல் ரீதியாகச் சிந்திக்கும் தரப்புகள் கூட இத்தகைய சமூக ஊடாட்டத்தின் ஆதாரப் பணியைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அப்படியான சிந்தனைகள் ஏற்பட்டிருந்தால் இலங்கைத் தீவின் வரலாறும் சனங்களின் நிலையும் ஒளிமிக்கதாக அமைந்திருக்கும். ஆனால், ரிஷான் ஷெரிப் பாறைபோன்ற ஒரு பரப்பினுள் தன்னுடைய நம்பிக்கையின் உறுதிப்பாட்டுடன் ஒருவழியை, ஒளிமிகுந்த வாசலைத் திறக்க முயற்சிக்கிறார். அதன்மூலம் இடைவெளிகள் எல்லாவற்றுக்கும் ஒரு பாலமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். சமூக நிலைப்பட்ட பரஸ்பரப் புரிதலுக்கும் வாழ்க்கை நோக்குகளை அகலிப்பதற்கும் பிற அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் தன்னைப் பாலமாக்கி, ஒளியுட்டும் ரிஷான் ஷெரிப்புக்கு வாழ்த்துகளும் அன்பும் நன்றியும்.

Theneehead-1

Vol: 14                                                                                                                                                08.01.2017

dantv