Theneehead-1

Vol: 14                                                                                                                                                08.01.2017

  அக்கராயன்குளத்தில் நீர்ப்பாசத்திணைக்களப் பெருச்சாளிகள்

சிக்மலிங்கம் றெஜினோல்ட்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அக்கராயனில் விவசாயிகளுக்கும் நீர்ப்பாசனத் திணைக்akkarajan kulamகள அதிகாரிகளுக்குமிடையில் ஒரு பிரச்சினை தொடங்கியது. இன்னும் அது முடியவில்லை. தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் குளத்தின் புனரமைப்பு வேலைகள் பிழையாகவே நடக்கின்றன. இந்தப் பிழைகளுக்குக் காரணம் முறைகேடு. முறைகேட்டுக்காரணம், ஊழல். ஊழலுக்குக் காரணம், பண ஆசை. விளைவு குளக்காசு குளத்துக்குச் செலவழிக்கப்படாமல் யார் யாருடைய சட்டைப்பைகளுக்குள் போகிறது.

2014 இல் அக்கராயன் குளத்தின் வான்கட்டுப் பகுதி மழை வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டிருந்தது. வான் கட்டுச் சிதைந்தால் அதனுடைய தாக்கம் வயல்களிலேயே பாதிப்பை உண்டாக்கும். சொன்னமாதிரியே, வான் கட்டுக்குக் கீழே இருந்த வயல்களில் மணலும் கிரவலும் போய் நிரம்பியது. வயலில் மணலும் கிரவலும் நிரம்பினால் பயிர் வளர முடியுமா? விளைச்சல் கிடைக்குமா? எல்லாமே நாசமாகியது. வயல் பாதித்தால் விவசாயிகளின் வாழ்க்கையும் பாதிக்கும். அப்படித்தான் நடந்துமிருந்தது. விவசாயிகள் கொதித்தழுந்தார்கள். 

 வான் கட்டைப் புனரமைக்கும்போதே அது தவறான முறையில்தான் நடக்கிறது என்று ஏற்கனவே விவசாயிகள் எச்சரித்திருந்தார்கள். கட்டு அமைக்கப்படும் விதம் பிழை. நிலத்தடி மண்ணை எடுக்க வேண்டாம். இயல்பான நீர்ப்போக்கை மாற்ற வேண்டாம் என்றெல்லாம் வலியுறுத்தினார்கள். ஆனால், நீர்ப்பாசனத்திணைக்களத்தின் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களும் பொறியியலாளர்களும் இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளவில்லை. “காலிலே செருப்புப் போடாத, சாறம் கட்டியவர்களின் கதையை எல்லாம் நாங்கள் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா? என்று அவர்கள் எண்ணியிருக்கலாம்.

 இவ்வளவுக்கும் அக்கராயன் குளமும் வான்கட்டும் ஏற்கனவே கட்டப்பட்டு, ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாக ஒழுங்காக நீர்ப்பாசனம் செய்யப்பட்டு வந்தது. இருந்தாலும் இடையில் ஒரு தடவை குளம் திருத்தம் செய்யப்பட்டது. அப்போதெல்லாம் காரியங்கள் சரியாகத்தான் நடந்தன. ஒரு பிரச்சினையும் வரவில்லை. எந்தப் பெரிய வெள்ளத்துக்கும் தண்ணீர் நிரம்பிப் பாயும். ஒரு சேதமும் வராது. வெள்ளம் பெருக்கெடுக்கும்பொழுது மட்டும் பிரதான வீதிப் போக்குவரத்துத்தான் ஒரு பத்துப் பதினைந்து நாட்களுக்குத் தடைப்படுமே தவிர, வேறு சேதங்களோ அழிவுகளோ ஏற்படுவதில்லை. வீதியில் உள்ள பாலத்தைப் பெரிதாகப் போட்டிருந்தால் அந்தப் பிரச்சினையும் வந்திருக்காது.

 ஆனால், இந்தத் தடவை அப்படியல்ல. (இந்தத் தடவை என்றால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு). சாதாரண வெள்ளத்துக்கே – நாலு இஞ்சி அளவில் வெள்ளம் பாயத்தொடங்கவே - புத்தம் புதிய வான் தடுப்புப் படலம் உடைந்து விழுந்தது. ஏதோ மண்ணால் கட்டியதைப்போலப் பார்த்துக் கொண்டிருக்கவே ஒவ்வொரு கட்டாக விழுந்து கொண்டிருந்தன. அப்படியே நான்கு அலைத் தடுப்புகளும் விழுந்து சிதைந்து போச்சு. பொறியியலாளர்களின் திட்டத்தையும் மூளையையும் நினைத்து விவசாயிகள் சிரித்தார்கள்.

 இந்தத் தடுப்புப் படலங்களை அண்மையில்தான் புதிதாகக் கட்டினார்கள். வன்னியிலுள்ள குளங்களைப் புனரமைப்புச் செய்யும் பெரும் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குள வேலைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று அக்கராயன் குளம். அந்த வேலைகள் கட்டம் கட்டமாக, பகுதி பகுதியாக நடந்து கொண்டிருக்கு. அதில் ஒன்றே இந்த வான்கட்டுத்திருத்தம்.

 விவசாயிகளின் அனுபவத்தைப் பொருட்படுத்தாமல் நீர்ப்பாசனத்தி திணைக்களத்தினரின் அறிவுக்கு ஏற்றமாதிரிக் கட்டிய வான் கட்டு விழுந்ததையடுத்து ஏற்பட்ட அழிவுகள், சேதங்களால் கொதித்தெழுந்த விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்துக்கு அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மு. சந்திரகுமாரும் வந்திருந்தார். குளக்கட்டில் கூட்டம் தொடங்கியது. அரசாங்க அதிபர், நீர்ப்பாசனத்திணைக்களத்தின் வடமாகாணப் பணிப்பாளர், நீர்ப்பாசனத்திணைக்களத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், விவசாயத்திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலர், வீதி அபிவிருத்தித்திணைக்களத்தின் பொறியியலாளர், கமநல சேவைகள் நிலைய உதவிப்பணிப்பாளர், பொதுமக்கள், விவசாயிகள், ஊடகவியலாளர்கள் என ஒரு பெருங்கூட்டம் அங்கே திரண்டிருந்தது.

 “வான் கட்டுக்கு என்ன நடந்தது? குளத்தின் வான் கட்டுக் கீழே உள்ள பகுதிகள் ஏன் இப்படிச் சிதைந்தன?“ என்று கேட்டார் சந்திரகுமார். கேள்விக்கான பதிலைச் சொல்ல வேண்டிய பொறுப்பு நீர்ப்பாசனத்திணைக்களத்தின் பணிப்பாளர் சிவபாதத்துக்குரியது. அவர் ஏற்கனவே கால்களை ஆட்டிக் கொண்டும் கண்களை மூடிக் கொண்டும் சித்தன் போக்கில் இருந்தார். இந்தக் கேள்வி சிவபாதத்தைத்  தூக்கிப் போட்டது. திடுதிப்பென முழித்துக் கொண்டு எழுந்து நிமிர்ந்திருந்து கொண்டு, சுற்றுமுற்றும் பார்த்தார். எல்லோருடைய கண்களும் அவரையே குறிபார்த்தன. இந்த நிலையில் தான் வாய் திறந்தால் சிக்குவது நிச்சயம் என்று புரிந்து கொண்டார். எனவே, எப்போதும் மேலதிகாரிகள் செய்வதைப்போல தனக்குக் கீழே பொறுப்பிலிருந்த பொறியியலாளரைப் பார்த்தார். பலிக்காடாவைத் தேடுவது அதிகாரகுணத்தின் இயல்புதானே. இப்போது அந்தப் பொறியியலாளர் சிக்கி விட்டார். வேறு வழியில்லை. தனக்கு மேலுள்ள அதிகாரியைப் பிணையெடுப்பதற்காகத் தன்னைப் பலியாக்கி, அந்தப் பெரும்பொறுப்பை அந்தப் பொறியியலாளர் தன்னுடைய தலையில் தூக்கினார். அதன்படி அவர் எதையோ சொல்ல முற்பட்டார். அதாவது, “நடந்தது ஒரு சிறிய பிரச்சினைதான். அதைச் சரிப்படுத்தி விடலாம். இதையிட்டு ஒன்றும் கவலைப்படத் தேவையில்லை. தண்ணீர் வடிய விட்டு எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தித் தருவோம். யுத்த காலத்தில எந்த வசதியுமில்லாமல் இரவு பகலாக வேலை செய்து உங்களுக்குத் தண்ணீர் தந்திருக்கிறம். அந்தக் காலத்தில வந்த எந்த ஆபத்தையும் சமாளிச்சிருக்கிறம். அதை விட இப்ப என்ன பெரிசா நடந்திருக்கு? நீங்கள் யாரும் பயப்பிடுகிற மாதிரி எதுவும் பாரதூரமாக நடக்கவில்லை. குளத்துக்கு ஒரு பிரச்சினையுமில்லைத்தானே“ என்றார் அவர்.

 இதைக்கேட்ட விவசாயிகளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. “ என்னய்யா சொல்றீங்கள்? யுத்தகாலத்தில நடந்தது வேற. இப்ப நடக்கிறது வேற. அப்ப நீங்களும் ஒண்டும் செய்யேலாது. நாங்களும் ஒண்டும் செய்யேலாது. அதை விடுங்கோ. இப்ப நடந்ததெல்லாம் உங்களுக்குச் சின்னப் பிரச்சினையாக இருக்கலாம். ஆனால், எங்களுக்கு அப்பிடியில்லை. இந்தக் குளம்தான் எங்களுக்கு உயிர். இதை நம்பித்தான் நாங்கள் இருக்கிறம். இது இல்லையெண்டால் எங்களுக்கு வாழ்க்கையில்லை. இந்தக்குளத்தை ஆதாரமாக வைச்சுத்தான் அக்கராயன், கோணாவில், ஸ்கந்தபுரம் எல்லாம் உருவாக்கப்பட்டது. மூவாயிரத்துச் சொச்சம் விவசாயிகள் இந்தக் குளத்துத் தண்ணியைத்தான் நம்பியிருக்கிறார்கள். இப்ப வானுக்குள்ள இருந்த மண்ணெல்லாம் வயலுக்க ஏறியிருக்கு? இதுக்கு ஆர் பொறுப்பேற்கிறது? வான்கட்டு வேலையெல்லாம் பிழையெண்டு சொல்லச் சொல்லக் கேட்டீங்களா? கொன்றாக்ற்காரனுக்கு லாபம் வேணுமெண்டதுக்காக நாங்கள் பழியா? என்று பொரிந்து தள்ளினார்கள்.

 சிவபாதத்தின் நெற்றியிலிருந்து வேர்த்து ஒழுகியது. ஆடிய கால்கள் எப்போதோ நின்று இப்போது மெல்லியதாக நடுங்கிக் கொண்டிருந்தன.

 போதாக்குறைக்கு ஒரு விவசாயி கொஞ்சம் முன்னே வந்து கைகளைக் கட்டிக் கொண்டு நின்றபடி சொன்னார், “ஐயா, நீர்ப்பாசனத்துறையில இலங்கைக்கு ரண்டாயிரம் வருச அனுபவமும் அறிவும் இருக்கு. பெரிய பெரிய குளங்களையும் அணைகளையும் கட்டிய நீர்ப்பாசனம் செய்த நாடு இது. அந்தளவுக்கு எங்கட முன்னோர்கள் எல்லாம் தண்ணியைப்பற்றிப் படிச்சிருக்கிறாங்கள். பராக்கிரமபாகு சமுத்திரத்தைப் பாருங்கோ. கந்தளாய்குளத்தைப் பாருங்கோ. இப்படி ஆயிரமாயிரம் குளங்கள் இந்த நாடு முழுவதிலும் இருக்கு. அந்தக் காலத்தில இப்ப உள்ளதைப்போல பெரிய பட்டப்படிப்பெல்லாம் இருக்கேல்ல. உங்களைப் போல படிச்ச ஆட்களும் இருந்திருக்காயினம். ஆனால், அவை கட்டிய அத்தனை குளங்களும் அந்த மாதிரித்தான் இருக்கு. ஒரு பழுதில்ல. அணைக்கட்டுகளில ஒரு சொடடுப்பிரச்சினை இல்லை. அதையெல்லாம் கட்டின ஆட்கள் வெளிநாடுகளுக்கெல்லாம் ஸ்கொலசிப்பில போய் படிச்சிட்ட வரேல்ல. அதென்ன, உலகம் முழுவதும் சுற்றித்திரிஞ்சு படிச்ச நீங்கள் கட்டிற கட்டுகளிலதான் பிரச்சினையாக் கிடக்கு?

 எங்களுக்கு எல்லாம் தெரியும். இந்தக் குளத்தின்ரை வேலைகள் 1927 இல் தொடங்கப்பட்டு 1949 இல் கட்டி முடிக்கப்பட்டது. தொடக்கத்தில 1951 ஆயிரம் ஏக்கர்தான் விதைப்பு.அது அக்கராயன் பக்கம். பிறகு 1963 இல் குளம் மேலும் பெருப்பிக்கப்படுது. அதோட ஸ்கந்தபுரம் ஸ்கீம் ஆரம்பம். மழை கூடினால் தண்ணி வரத்து எப்பிடியெண்டும் தண்ணி கூடினா அது எப்பிடி வெளியேறும் எண்டும் எங்களுக்குத் தெரியும். “ Spill Way பிழைச்சுத்தான் வான் தண்ணீர் ஆற்றுப்படுக்கையின் ஊடாக வந்து வயலுக்குள்ள வந்து பயிர்களை அழிச்சு, நிலத்தையும் பாழாக்கி வருது. spill way யில இருக்கும் மழைநீர் தடுப்பு அணை நீர்த்தடுப்பு அணைகள் சீராக அமைக்கப்படேல்லை. இந்தத் தடுப்பணைகள் மூன்றரை அடிக்கு மேல ஆழமாக்கப்பட்டிருக்க வேணும். மண் தன்மையைப்பொறுத்து இந்த ஆழம் கூடும்  குறையும். சில இடங்களில் கம்பி போடப்பட்டிருந்தாலும் அது உரிய முறையில் செய்யப்படவில்லை. டவல்ஸ் (Dovals) கொங்கிறீற்றில் செய்ய வேணும். வான்பாயும் நீரைச் சரியாக மதிப்பிடத்தவறியதன் விளைவே இதில கூடின பிரச்சினையைக் கொண்டு வருது. முந்தி அமைக்கப்பட்டிருந்த பழைய கொங்கிறீற்றுடன் புதிய கொங்கிறீற்றை இணைக்கும்போது 16 MM கம்பியைப்  பயன்படுத்தியே டவல்ஸ் அடித்திருக்க வேணும். கிடுகு வேய்வதற்கு வரிச்சுக் கட்டுவதைப்பொல ஒன்றரை அடிக்கு ஒரு கம்பி போடவேணும். இதைவிட, மழை நீர் மண் அணைக்கட்டு Raining bund குளம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரையில பராமரிக்கப்படேல்லை. அதேவேளை இந்தப் பகுதிக்குள் அத்துமீறிய குடியேற்றமும் சில பகுதிகளில் வயல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதை நீர்ப்பாசனத்திணைக்களம் தடுத்திருக்க வேணும்.

 அதோட ஸ்கந்தபுரம் – கோணாவில் இணைப்பு வீதியும் ஒரு பெரிய பிரச்சினை. பாலம் சீரில்லை. 600 அடி அகலத்தில பெருகி வரும் நீர் பாலத்தடியில் 100க்கும் குறைவாகவே சுருங்குது. இப்பிடிச் சுருங்கும்போது வாற தண்ணீரின் அளவுக்குப் போற தண்ணீர் இருக்காது. இதனால் இந்தப் பகுதியில இருக்கிற வயல்கள் எல்லாம் வெள்ளத்தில மூழ்குகின்றன. வெள்ளத்தடுப்பு வால் கட்டுகளும் அரிக்கப்படுகின்றன.

 உண்மையில இந்த வான்பாய் பரப்பு Spill Way ல் கண்டபடி உடைந்த சீமெந்துத் தூண்கள் அகற்றப்பட்டு அவற்றை ஒழுங்காக வேற இடத்தில போடப்பட்டிருக்க வேணும். ஆனால் அப்படிச் செய்யப்படேல்லை. இப்படி நடுவில போடப்பட்டிருக்கிறதால, இந்த கட்டுகளில மோதுகிற நீர் கற்களின் கீழே மண்ணரிப்பை ஏற்படுத்துது. இது நாட்செல்ல இந்த இடங்களில் பெரிய குழிகளையெல்லாம் உண்டாக்குது. பிறகு இந்தக்குழிகள் நாளடைவில ஏனைய கட்டமைப்பையும் வான் பாய் பரப்பையும் பாழாக்குகின்றன. நாங்கள் இந்தக் குளத்தோடதான் கிடந்து வாழுறம். நாங்கள் சாகிறதும் இந்தக் குளத்தோடதான். ஐயா, இந்தக் குளம் எங்கட. இது எங்களுக்காகத்தான் கட்டப்பட்டுது. இதில நீங்கள் வேலை செய்யிறியள். அவ்வளவுதான். எங்களுக்காக எங்கட குளத்தில் வேலை செய்யிறியள். எங்களுக்குக் குளம் இல்லை எண்டால் உங்களுக்கு வேலையும் இல்லை. அதால குளத்தோட பகிடி சேட்டை விடாமல் ஒழுங்காக உரிய வேலையை இனியாவது பாருங்கோ“ என்று.

 கூட்டம் ஆழ்ந்து அமைதியாகியது. ஒரு சத்தமில்லை. தண்ணீர்ச் சத்தம் மட்டும் மெல்லியதாகச் சலசலத்துக் கேட்டது.

“நடந்தது தவறுதான். ஒத்துக் கொள்கிறம். அதுக்காக மன்னிப்புக் கேட்கிறம். ஆனால், இதுக்கு உடனடியாக மாற்று வழி காணுறம்” என்று தலையைத் தாழ்த்தி. மறு பேச்சில்லாமல் சொன்னார் பொறியியலாளர். அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் விழுந்து குளத்து மேட்டை ஈரமாக்கியது. அங்கே நின்ற எல்லோருக்கும் அது ஒரு சங்கடமான நிலைமை. பிறகு நிலைமையை சுமுகமாக்கி, ஒரு குறிப்பிட்ட காலத்தில் எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவதாகச் சொல்லிக் கூட்டம் முடிந்தது.

ஆனால், அந்த வான்கட்டுக் கீழ்ப்பகுதி இன்னும் சீராகவில்லை. ஒவ்வொரு ஆண்டும் கட்டுகிறார்கள். உடைகிறது. பிறகு வேறு விதமாக மாற்றிக் கட்டுகிறார்கள். உடைகிறது. இப்படிக் கட்டக் கட்ட உடையும் வேலைகளை ஏன்தான் செய்கிறார்களோ தெரியவில்லை.

 விவசாயிகளும் திரும்பத்திரும்ப எவ்வளவோ சொல்லிப்பார்த்து விட்டார்கள். நீங்கள் என்னதான் சொன்னாலும் நாங்கள் செய்யிறதைச் செய்தேதான் தீருவோம் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர் நீர்ப்பாசனத்திணைக்கள அதிகாரிகள். இல்லையென்றால், நான்காவது ஆண்டிலும் வான் பக்கம் சிதைபடலம் இருக்குமா? வான் மட்டுமல்ல, புதிதாகப் போடப்படும் வாய்க்கால் ஓரத்து வீதிகளையும் செம்மை செய்யப்பட்ட வாய்க்காலையுமல்லவா அள்ளிக் கொண்டு போகிறது வெள்ளம். போக்கத்துப் போன வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது ஒரு கலை. அதுக்கே பொறியியல் படிப்பு. ஆனால், கிளிநொச்சியில் இதெல்லாம் வேறு.

 நான்காவது ஆண்டிலும் உடைத்து உடைத்துக் கட்டப்படும் வான் பக்கத்தைப் பார்க்கப்போகிறீர்களா? வாருங்கள் அக்கராயன் குளத்துக்கு. அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பாருங்கள்.

 பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த குளம் அக்கராயன் குளம். ஆனால் அது தூர்ந்து போயிருந்தது. காடு அதை மூடியிருந்தது. பல நூறு ஆண்களின் பின்பு, கடந்த நூற்றாண்டில் மீண்டும் அந்தக் குளத்தை மீளுருவாக்கம் செய்தது அரசாங்கம். இன்னும் குளங்களும் அணைகளும் தேவை என்று நம்பி, அரசாங்கம் இதுக்கெல்லாம் நிதியை ஒதுக்கிக் கொண்டிருக்கு. ஏனென்றால், இலங்கை நீர்ப்பாசனப் பாரம்பரியத்தை உடைய நாடல்லவா. விவசாயிகளின் உயிர் நாடியைப் பராமரிக்க வேண்டியது இந்த நாட்டின் கடமையல்லவா!

 இருந்தாலும் பெருச்சாளிகளின் தொல்லைத்தான் பெரிசு. அவை குளத்தை ஓட்டை போடவே முயற்சிக்கின்றன.

 இந்தப் பெருச்சாளிகளை அழிக்காமல் உய்வில்லை.

 
விவசாயிகளுக்கு எப்போதும் பெருச்சாளிகள் எதிராகவே இருக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தினால்தான் விவசாயமும் உய்யும். விவசாயிகளின் வாழ்க்கையும் சிறக்கும்.

dantv