Theneehead-1

   Vol:17                                                                                                                                08.07.2018

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்.... (05)

"மட்டக்களப்புத்தமிழகம்"தந்த பண்டிதர் வி.சீ. கந்தையா

                                                    முருகபூபதி

ஒவ்வொரு ஊருக்கும் வீதிக்கும் காரணப்பெயர் இருக்கின்றது. இலங்கையில் கிழக்குமாகாணத்தில் மீன்பாடும் தேன்னாடு என வர்ணிக்கப்படும் மட்டக்களப்புக்கும் இனpadumeenிமையான தேனுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"மட்டு" என்ற சொல்லுக்கு " தேன்" என்றும் அர்த்தம் இருக்கிறதாம்! மட்டக்களப்பை தழுவிச்செல்லும் இந்து சமுத்திரத்தாயிடத்தில் தாழமுக்கம் அடிக்கடி  தோன்றி, பேரலைகள் எழுச்சிபெறுவதுண்டு. சமுத்திரத்தாயின் நிலமட்டத்தில் அதிர்வுகள் வரும்போது, அங்கிருந்து சீறிப்பாயும்  கடல் நீர் கரைக்கு வெளியே சமதரைகளை வந்தடைந்து தங்கிவிடுகிறது. அவ்வாறு தோன்றும்  நீர்நிலைகள், களப்புகளாகிவிடுகின்றன. இந்த நீர்மட்டம் வங்கக்கடலின் நீர்மட்டத்திற்கு சமமாகவே இருப்பதனால், "மட்டம் களப்பு " என காரணப்பெயராகி, காலப்போக்கில் மட்டக்களப்பு என மருவிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சிங்கள மக்கள்  " மடக்களப்புவ" என அழைக்கின்றனர். "மட " என்றால் சதுப்பு என அர்த்தப்படுகிறது. இந்தப்பிரதேசம் நீர் வளம் நில வளம் நிரம்பிய விவசாய பூமி.   அதனால்  இந்த சதுப்பு நிலப்பிரதேசத்திற்கு அவர்கள் வைத்தபெயர்  " மடக்களப்புவ".

ஆங்கிலேயர் எமது தேசத்தை ஆக்கிரமித்தவேளையில் பொன்விளையும் பூமியாகத்திகழ்ந்த மட்டக்களப்பு தானியக்களஞ்சியமாகவும் விளங்கியிருக்கிறது. அதனால் BATTICALOA என பெயர் சூட்டினர் எனவும் சொல்லப்படுகிறது.

வங்காளக் கடலோரத்தில்  வெருகல், கதிரைவெளி, வாழைச்சேனை, கல்குடா, சித்தாண்டி, வந்தாறுமூலை, ஏறாவூர், சத்துருக்கொண்டான், தாண்டவன் வெளி, மட்டக்களப்பு, கல்லடி உப்போடை, காத்தான்குடி, மண்முனை, செட்டி பாளையம், களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு, குறுமண்வெளி, மகிழுர், கல்லாறு, பாண்டிருப்பு, கல்முனை,  காரைதீவு, சம்மாந்துறை, மல்வத்தை, செங்கற்பட்டி, அக்கரைப்பற்று, கோளாவில், தம்பிலுவில், திருக்கோயில், கோமாரி, பொத்துவில், பாணம, சன்னாசி மலை, உகந்தமலை, குமுணை, என தமிழ்ப்பேசும் மக்களின் ஊர்களை நாம் தரிசிக்கலாம்.

மட்டக்களப்பின் வரைபடத்தின் பிரகாரம், வங்காளக்கடலின் கரையைக்கடந்து பிரதேசத்திற்குள் பிரவேசித்தால் மேலும் பல தமிழ்க்கிராமங்கள் வருகின்றன. புளியந்தீவு, ஆரைப்பற்றை, பழுகாமம், போரதீவு, மண்டூர், நீலாவணை, சொறிக்கல்முனை, வீரமுனை.

இங்கு குறிப்பிடப்படும் ஊர்களிலிருந்தெல்லாம் பல தமிழ் அறிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், சமயப்பெரியார்கள், கவிஞர்கள் தோன்றியிருக்கிறார்கள்.
அவர்களில் சிலர், தாங்கள் பிறந்த ஊருக்கும் பெருமைதேடித்தரும் வகையில் ஊரின்பெயரையும் இணைத்து  கலை,இலக்கிய உலகில் தமது இருப்பை தக்கவைத்திருக்கிறார்கள்.

நீலாவணன், மருதூர்க்கொத்தன், மருதூர்கனி, மருதூர் வாணன், கல்முனை பூபால், பாலமுனை ஃபாரூக், வாகரை வாணன், கல்லோடைக்கரன், 'பாடும் மீன்' ஶ்ரீகந்தராசா, மண்டூர் அசோக்கா, அக்கரையூர் ஆதாம், ஓட்டமாவடி அறபாத், ஒலுவில் அமுதன், களுவாஞ்சிக்குடி யோகன், ஆரையூர் அருள் , ஆரையூர் அமரன் , மருதூர் பாரி  , தாழையூர் செல்வநாயகம், கிண்ணையடி எஸ்.பாண்டியன், வெல்லவூர்க்கோபால், மண்டூர் தேசிகன் , பாண்டியூரான்,  அமிர்தகழியான் , திமிலைத்துமிலன், திமிலை மகாலிங்கம், திமிலைக் கண்ணன், கோவிலூர் செல்வராஜன், அக்கரைப்பாக்கியன்,  அக்கரைச் சக்தி தம்பிலுவில் யோகா, கோவிலூர் செல்வராசன் , பாண்டியூரான், தேனூரான், கல்லாறு சதீஸ் , ஆரையூர் இளவல்,  துறையூர் செல்லத்துரை  இவ்வாறு பலர்.

இவர்களின் எழுத்துப்பணிகள் தொடங்குவதற்கு முன்பே, மண்டூரில் 1920 ஆம் ஆண்டில் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. அது பின்னர்  தமிழ் அறிஞராக வளர்ந்திருக்கிறது. சுவாமி விபுலாநந்தரிடமும் புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளையிடமும் கற்றிருக்கிறது.அவர்தான் பண்டிதர் வி. சீ. கந்தையா.  இவரது தந்தையார் புலவர் வினாசித்தம்பி. தாயார் சின்னாத்தை அம்மையார்.
 batti.tamizhakam
கந்தையா அவர்கள், யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச்சங்கம், மதுரைத் தமிழ்ச்சங்கம், ஆகியனவற்றில் படித்து பண்டிதர் பட்டம் பெற்றவர். இலங்கைப்பல்கலைக்கழகத்திலும் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திலும் கற்றவர்.

சுவாமி விபுலாநந்தர் தொடக்கிய சிவானந்தாவில் ஆசிரியராக பணியாற்றியவர். மட்டக்களப்பு தமிழ்க்கலை மன்றத்தின் செயலாளராக இவர் பணியாற்றிய காலத்தில் 1952 இல் தமிழ் பெருவிழா நடத்தி, அதனை ஒரு மைல்கல்லாக பதியவைத்தவர். மட்டக்களப்பின் புகழ்பூத்த நாட்டுப்பாடல்கள், கூத்துகள் தொடர்பாகவும் ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும் பண்டிதர் வி. சீ. கந்தையா தனது கடும் உழைப்பினால் எழுதி வெளியிட்ட நூல்தான் மட்டக்களப்பு தமிழகம்.

இதன்முதல் பதிப்பு வடபுலத்தின் குரும்பசிட்டி பெரியார் ஈழகேசரி பொன்னையா அவர்களின் நினைவு வெளியீடாக 1964 ஆம் ஆண்டில் வெளியானது.பின்னிணைப்பு குறிப்புகள் மற்றும் ஆவணமாகத்திகழும் படங்களும் கொண்டிருக்கும் மட்டக்களப்பு தமிழகம் 500 பக்கங்களுக்கும் மேற்பட்டது.

இது வெளிவந்த காலத்தில், வழக்கமாகவே எழுத்திலும் பேச்சிலும் அங்கதமாகவும் கேலியாகவும் பேசும் ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் மட்டக்களப்பில் ஆசிரியராக பணியாற்றியவரும், இந்தப்பிரதேசத்திலேயே பெண் எடுத்தவருமான  "எஸ்.பொ." என அழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரை, இந்த நூலின் உள்ளடக்கத்தை மதிப்பீடு செய்யாமல் அதன் பருமனை மாத்திரம் கவனத்தில் கொண்டு,           "மட்டக்களப்பிலிருந்து இரவு புறப்படும் தபால் ரயிலில் பயணிக்கும்போது தலைக்கு வைத்துக்கொண்டு உறங்கலாம்." என்று சொல்லியிருக்கிறார்.  பொறுப்புணர்ச்சியுடன் பேசவேண்டிய அவர் பல ஆண்டுகள் கடந்து அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்து, தமிழகத்திற்கும் சிட்னிக்கும் இடையில் பயணித்துக்கொண்டிருந்தபோது தனது வாழ்க்கை சுயசரிதையை "வரலாற்றில் வாழ்தல்" என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக இரண்டாயிரம் பக்கங்களில் எழுதி வெளியிட்டார்.

அவரை நான் எப்பொழுதும் " மாஸ்டர்" என்றுதான்  அழைப்பது வழக்கம்.
ஒரு தடவை அவர் நான் வசிக்கும் அவுஸ்திரேலியாவில் மெல்பன் நகரத்திற்கு வந்திருந்த சமயத்தில், " என்ன மாஸ்டர் ஒரு காலத்தில் பண்டிதர் வி. சீ. கந்தையா எழுதிய 500 பக்க மட்டக்களப்பு தமிழகம் நூலை தலையணையாக ஏளனப்படுத்தினீர்களே..? தற்பொழுது நீங்கள் உங்கள் சுயசரிதையை 2000 பக்கங்களில் வெளியிட்டுள்ளீர்களே..?" எனக்கேட்டேன்.
தன்னைத்தானே கிண்டல் செய்துகொள்ளும் இயல்பிலும் திளைத்திருக்கும்  எஸ்.பொ., " பண்டிதர் கந்தையா, தலைக்கு வைத்து உறங்குவதற்குத்தான் எழுதினார். நான், தலைக்கும் காலுக்கும் வைத்து உறங்குவதற்கும் ஏற்றவாறு பருமனான புத்தகம் தந்திருக்கின்றேன்"  என்றார்.

இவ்வாறெல்லாம் எமது ஈழத்து இலக்கிய உலகில் நடந்திருக்கும் சுவாரஸ்யங்களுக்கு இன்றும்தான் குறைவில்லை.

குறிப்பிட்ட மட்டக்களப்பு தமிழகம் நூலின் தேவையை கருதி அதனை அழகாக மீள்பதிப்புசெய்திருக்கிறார்கள், பிரான்ஸில் இயங்கும் எக்ஸில் என்னும் இலக்கிய அமைப்பினர். எக்ஸில் எனும் பெயரில் கலை, இலக்கிய அரசியல் விமர்சன இதழும் வெளியிட்டுவந்துள்ள இந்த அமைப்பின் சார்பில் எம். ஆர். ஸ்ராலின், ஏன் இந்த இரண்டாம் பதிப்பின் தேவை வந்திருக்கிறது என்பதையும் விரிவாகச்சொல்லியிருக்கிறார்.

" வரலாறுகள் திட்டமிட்டு உருவாக்கப்படுவதும் அதிகாரத்தின் எல்லைக்குள் ஒத்தோடக்கூடிய வரலாறுகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, மற்றயவை புறந்தள்ளப்படுவதும் மனித சமூகங்களின் வாழ்வியலை துரத்திக்கொண்ருக்கிறது.

ஆதிக்கத்தின் நலங்களுடன் முரண்படாத அல்லது நலன்களுக்கு வசதியான மேட்டுக்குடிகளின் கலையிலக்கிய வடிவங்கள், மொழியியல் பண்பாட்டு அம்சங்கள் முன்னிறுத்தப்படுவது மட்டுமின்றி அவை எல்லோருக்குமானதாக திணிக்கப்படுகின்றது. இதனோடு ஒத்தோட மறுக்கின்ற அடித்தள மக்களின் வாழ்வியல் சார்ந்த அனைத்து விழுமியங்களும் வரலாற்றில் இருந்து ஓரநிலைக்குத்தள்ளப்படுகின்றன. "

இந்த நூலை மறுபதிப்புச்செய்வதற்கு அனுமதியளித்திருக்கும்  அமரர் பண்டிதர் வி. சீ. கந்தையா அவர்களின் புதல்வர் இளங்கோவன் அவர்கள், " ஏராளமான தமிழ் அன்பர்களது எதிர்பார்ப்பினை நிறைவுசெய்யும் வகையில் இப்பழம்பெரும் நூலினை இரண்டாம் பதிப்பு செய்ய முன்வந்து, பலவிதமான சிரமங்களுக்கு மத்தியில் இத்தூய தமிழ்ப்பணியை முன்னெடுத்துச் செல்லும் எக்ஸில் நிறுவனத்தாருக்கு தமிழ் நெஞ்சங்களது பாராட்டுதல்களும் நன்றிகளும் என்றென்றும் நிலைத்திருக்கும்." என்று பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

குன்றக்குடி அடிகளார், தனிநாயகம் அடிகளார், பேராசிரியர் வி. செல்வநாயகம், முன்னாள் அமைச்சர் சு. நடேசபிள்ளை, மட்டக்களப்பு இராமகிருஷ்ண ஆசிரிமத்தின் சுவாமி நடராஜாநந்தா, ஆகியோர் மட்டக்களப்பு தமிழகத்தின் முதல் பதிப்பிற்கு வழங்கிய வாழ்த்துரைகளும் இந்த இரண்டாம் பதிப்பில் தவறவிடப்படாமல் மீண்டும் பதிவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகுந்தது.

பண்டிதர் கந்தையா அவர்கள் இந்த நூலின் முன்னுரையில், 'கல்கி' கிருஷ்vcணமூர்த்தி, ஈழகேசரி ஆசிரியர் இராஜ அரியரத்தினம், முதலைக்குடா தமிழறிஞர் சிவசம்பு, காரைதீவு அன்பர்கள் தம்பிராசா, கயிலாய பிள்ளை கப்புகனார், அ.ஸ. அப்துஸ் ஸமது, அகமது லெவ்வை, பல்கலைக்கழக  விரிவுரையாளர் ப. சந்திரசேகரம், சிவானந்தாவில் பணியாற்றிய தியாகராஜா ( இவர் அங்கு அதிபராகவும் மட்டக்களப்பு மேயராகவும் இயங்கியவர்) பேராசிரியர் வித்தியானந்தன், எஃப். எக்ஸ். சி. நடராசா உட்பட பல பெரியோர்களையும் அவர்கள் இந்த அரிய நூல் வெளிவருவதற்கு என்னென் வழிவகையில் உதவினார்கள், ஆலோசனைகளை வழங்கினார்கள் என்பதையும் விரிவாக பதிவுசெய்துள்ளார்.

மட்டக்களப்பு பிரதேசத்தின் ஆத்மாவையே இந்த நூலில் ஆவணப்படுத்தியிருக்கும் பண்டிதர் கந்தையா, மாணவர்களுக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்களுக்கும் உதவும் வகையில் உசாத்துணையாகவே வழங்கியிருக்கிறார்

   இந்த நூலில் பண்டிதர் அவர்கள் குறிப்பிட்டுள்ளவர்களில் பலர் அவரைப்போன்று இன்றில்லை. அந்த முன்னோர்கள் குறைந்த வளங்களுடன் தேடல் உணர்வுடன் தமிழினத்திற்காக மேற்கொண்ட அளப்பரிய சேவைகளின் பதச்சோறாகவே "மட்டக்களப்பு தமிழகம்" நூல் விளங்குகிறது.

பண்டிதர் வி. சீ. கந்தையா அவர்கள் என்றென்றும் கொண்டாப்படவேண்டியவர்.  முதல் பதிப்பினை 1964 இல் வெளியிட்ட குரும்பசிட்டி, ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றமும், இரண்டாம் பதிப்பினை எந்த சேதமும் இன்றி அழகாக வடிவமைத்து 2002 இல் வெளியிட்ட பிரான்ஸ் எக்ஸில் இலக்கிய  அமைப்பினரும் தமிழ்கூறும் நல்லுலகினால் என்றும் பாராட்டப்படவேண்டியவர்கள்.

(தொடரும்)