அமெரிக்கத் தேர்தல்: டிரம்ப்புக்கு பின்னடைவு - மக்களவையில் எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை ; மேலவையைத் தக்கவைத்துக் கொண்டது ஆளும் கட்சி

அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில், அதிபர் டிரம்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சியான ஜனநாயகtrumph1க் கட்சி மக்களவையில் (மக்கள் பிரதிநிதிகள் சபை) பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது.

 எனினும், மேலவையான செனட் சபையை ஆளும் குடியரசுக் கட்சி தக்கவைத்துக்கொண்டது.  அமெரிக்க நாடாளுமன்ற மக்களவையான பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், 100 இடங்களைக் கொண்ட செனட் சபையின் 35 இடங்களுக்கும் செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெற்றது.  நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, அதிபருடைய பதவிக் காலத்தின் மத்தியில் வருவதால் "இடைக் காலத் தேர்தல்' என்றழைக்கப்படும் இந்தத் தேர்தலில், ஆளும் குடியரசுக் கட்சியும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் கடுமையாக மோதின. இதுவரை இல்லாத வகையில், தேர்தலின் கடைசி வாரங்களில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகத் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார்.

 தனது இரண்டு ஆண்டுகால ஆட்சி குறித்த பொதுவாக்கெடுப்பாக இந்தத் தேர்தலைக் கருதுவதாக தேர்தல் பிரசாரத்தின்போது அவர் குறிப்பிட்டார். இந்தச் சூழலில், நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் புதன்கிழமை வெளியாகத் தொடங்கின. அதில், நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் 220 இடங்களைக் கைப்பற்றி, பெரும்பான்மை பலம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவையில் அவர்களுக்கு ஏற்கெனவே இருந்ததை விட கூடுதலாக 24 இடங்களைப் பெற்று இந்தப் பெரும்பான்மையை அவர்கள் பெற்றுள்ளனர்.

 ஆளும் குடியரசுக் கட்சியினருக்கு 196 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதன் மூலம், மக்களவையில் ஜனநாயகக் கட்சியின் பலம் 50.6 சதவீதமாகவும், குடியரசுக் கட்சியின் பலம் 45.1 சதவீதமாகவும் ஆகியுள்ளது.

 மேலவை தக்கவைப்பு: இதற்கிடையே, 100 இடங்களைக் கொண்ட மேலவையில் 51 சதவீத இடங்களுடன் பெரும்பான்மை வகித்து வந்த ஆளும் குடியரசுக் கட்சி, இந்தத் தேர்தலுக்குப் பிறகும் அந்தப் பெரும்பான்மையைத் தக்கவைத்துள்ளது. மேலவையின் 35 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்போது ஆளும் கட்சிக்கு இன்னும் கூடுதல் இடங்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மக்களவையைப் பொருத்தவரை தற்போது ஜனநாயகக் கட்சி பெற்றுள்ள இடங்களைவிட இன்னும் கூடுதலான இடங்களை அந்தக் கட்சி கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன.

 எனினும், அந்த எண்ணிக்கையைவிட குறைவான இடங்களில் அந்தக் கட்சி வெற்றி பெற்றுள்ளது, தங்களது கட்சியினுடைய தீவிர பிரசாரத்தின் பலன் என்று குடியரசுக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

 நாடாளுமன்ற மக்களவையை ஜனநாயகக் கட்சியினர் கைப்பற்றியிருந்தாலும், தேர்தலில் தங்களது கட்சி மிகச் சிறந்த வெற்றி பெற்றுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள சுருக்கமான பதிவில், "எங்களுக்கு அபாரமான வெற்றி கிடைத்துள்ளது. அனைவருக்கும் நன்றி!' என்று குறிப்பிட்டுள்ளார்.

 பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளதன் மூலம், ஜனநாயகக் கட்சி மீண்டும் எழுச்சி பெற்றுள்ளதாக மக்களவை தலைவர் நான்சி பெலோஸி (78) தெரிவித்துள்ளார். அவரே மீண்டும் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 பெண்கள் அபாரம்: இந்தத் தேர்தலில் முதல்முறையாக 90 பெண்கள் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரஷிதா லாயிப், இல்ஹான் உமர் ஆகிய இரு பெண்களும், அந்த அவையின் உறுப்பினர்களாகியுள்ள முதல் முஸ்லிம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள்

 இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் 12 இடங்களில் இந்திய - அமெரிக்கர்கள் போட்டியிட்டனர்.
 எனினும், ஏற்கெனவே எம்.பி.க்களாக இருந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமீளா ஜெயபால், ரோஹித் கன்னா, அமி பேரா ஆகிய நால்வர் மட்டுமே இந்தத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

Theneehead-1

   Vol:17                                                                                                                               08.11.2018