Theneehead-1

Vol: 14                                                                                                                                                09.01.2017

கிளிநொச்சி கல்வி பண்பாட்டு அபிவிருத்தி  மன்றம் விளக்கம்

கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச கணிணி, ஆங்கிலம், கணித,விஞ்ஞான, கலை, தையல்  வகுப்புக்களை நடத்தி வரும் கல்வி பண்பாட்டு அபிவிருத்தி  மன்றத்தை வடக்கு மாகாண  சபையிடம் ஒப்படைக்குமாறு மாகாண சபை உறுப்பினர் அ.பசுபதிபிள்ளை எழுதிய கடிதம் ஊடகங்களில் வெளிவந்திருந்தது. இது தொடர்பில் கிளிநொச்சி கல்வி அபிவிருத்த மன்றத்தினர் மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளைக்கு  உண்மையை விளக்கி எழுதிய பதில் கடித்தினை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு

'கிளிநொச்சி கல்வி பண்பாட்டு மன்றத்தை வடக்கு மாகாணசபையிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று தங்களால் கிளிநொச்சி மாவட்டச் செயலர், கரைச்சிப் பிரதேச செயலர் ஆகியோருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஊடகங்களில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அந்தச் செய்தியின் பிரகாரம், தங்கள் கடிதத்தில் குறிப்பிடப்படும் விடயங்கள் மிகத் தவறானவை என்பதுடன் உண்மைக்கு மாறானவையுமாகும். 'கிளிநொச்சி மாவட்ட கல்வி, பண்பாட்டு அபிவிருத்தி மன்றம்' கல்வி மற்றும் பண்பாட்டுத்துறைகளில் மேற்கொண்டு வரும் அவசியமான செயற்பாடுகளைத் திட்டமிட்ட முறையில் கீழிறக்கம் செய்து, மக்களிடம் தவறான பிம்பத்தை உருவாக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியாகவும் தங்களுடைய கடிதத் தகவல் அமைந்துள்ளது. உண்மைக்கு மாறாகத் தவறான செய்திகளைப் பரப்பி, மன்றத்தின் வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை முடக்குவதன் மூலமாக, கிளிநொச்சி மாவட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சியும் மாவட்டத்தின் பண்பாட்டு வளர்ச்சியுமே பாதிக்கப்படும். இத்தகைய பாதகமான நிலைமையை உருவாக்க முனையும் தங்களுடைய செயற்பாடு உள்நோக்கமுடையதா என ஐயமுற்று வருத்தமடைகிறோம். இந்த மன்றத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளில் ஜனநாயக முறைப்படி தெரிவான கல்விப் புலத்தினர், வர்த்தகர்கள், கூட்டுறவுத்துறையினர், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் அர்ப்பணிப்போடு தங்கள் பணிகளை முன்னெடுத்துவருகிறார்கள். இந்த நிலையில் தங்களுடைய மேற்குறித்த செய்தியானது, மன்ற உறுப்பினர்களுடைய மனதை நோகடித்துள்ளது என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.


யுத்தத்திற்குப் பிறகு, கிளிநொச்சி மாவட்டத்தில் கல்வி மற்றும் கலை, இலக்கிய, சமூகச் செயற்;பாடுகளை விருத்தியாக்கவும் இந்தத் துறையில் தங்கள் பணிகளை முன்னெடுப்போருக்குக் களமாகச் செயற்படுவதற்கும் ஒரு மன்றம் தேவை எனப் பலதரப்பினராலும் உணரப்பட்டது. இந்தச் சூழ்நிலையிலேயே  'கிளிநொச்சி கல்வி, பண்பாட்டு அபிவிருத்தி மன்றம்' என்ற இந்த அமைப்பு உதயமானது. இந்த அமைப்பு தன்னுடைய செயற்பாடுகளை விரிவாக்கம் செய்வதற்கு ஒரு பொருத்தமான இடத்தை வழங்கி, அங்கே ஒரு கட்டிடத்தொகுதியையும் நிர்மாணித்துத் தருமாறு அப்போது பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் இருந்த திரு. மு. சந்திரகுமார் அவர்களிடம் கோரிக்;கை விடுத்திருந்தது.

இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளினால் நிர்மாணிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த கட்டிடத்தொகுதியானது யுத்தத்தின் பின்னர் படையினருடைய கட்டுப்பாட்டில் இருந்தது. இந்தக் கட்டிடத்தொகுதியைப் படையினரிடமிருந்து மீட்டு எமக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். தொடர்ந்து இவற்றைப் புனரமைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தார். அதற்கமைய கூரைகளற்ற நிலையில் மீட்கப்பட்ட இந்தக் கட்டிடத்தொகுதியைப் புனரமைப்புக்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் கட்டட திருத்த வேலைக்கென நுNசுநுP ஊடாக ரூபாய் ஐந்து மில்லியன் (5இ000இ000.00) நிதியும் ஒதுக்கப்பட்டுப் புனரமைக்கப்பட்டது. அடுத்த 4.7 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் மீதிக் கட்டிடத்தொகுதிப் புனரமைப்பும் உபகரணக் கொள்வனவும் மேற்கொள்ளப்பட்டது. ஆகவே இவ்வளவு நிதி மட்டுமே அரச நிதியாகப் பெறப்பட்டது. ஆனால், தாங்கள் பெருமளவு நிதி இந்த மன்றத்துக்குப் பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

இதனையடுத்து, இந்த மன்றம் 2012 இல் இந்தக் கட்டிடத்தொகுதியில் கீழ்வரும் வகையில் தன்னுடைய பணிகளை மூன்று பிரிவுகளாக முன்னெடுத்து வருகிறது.

  • கணித விஞ்ஞான வள நிலையம்
  • கல்வி அபிவிருத்திக் குழு
  • கவின்கலைச் சோலை

கல்வி அபிவிருத்திக்குழச் செயற்பாடுகள்

2012 - தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் அனைத்து கிளிநொச்சி வலய மாணவர்களுக்கும் 12 மாதிரி பரீட்சைகளை நடாத்தியமை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் (152) கூட்டுறவு மண்டபத்தில் கௌரவிப்பு நடாத்தியமை (ஒவ்வொரு மாணவருக்கும் தலா 2000ரூபா வைப்பிலிட்டு சேமிப்புப் புத்தகத்தை வழங்கியமை)

2013 கிளி வலயக்கல்விப் பணிமனையுடன் இணைந்து ஆசிரியர்களை கௌரவிக்கும் பொருட்டு சிறப்பான முறையில் ஆசிரியர் தினத்தை நடத்தியமை.

 2013 தரம் 05ற்கான புலமைப்பரிசில் மாதிரிப் பரீட்சைகள் 8, செயலமர்வு 8

2014 தரம் 05ற்கான புலமைப்பரிசில் மாதிரிப் பரீட்சைகள் 8, செயலமர்வு 8

 2015 தரம் 05ற்கான புலமைப்பரிசில் மாதிரிப் பரீட்சைகள் 8, செயலமர்வு 8

2016 தரம் 05ற்கான புலமைப்பரிசில் மாதிரிப் பரீட்சைகள் 4, செயலமர்வு 5

குறித்த புலமைப்பரிசில் பரீட்சையில் முன்னணி ஆசிரியரின் வினாத்தாள் பெறப்பட்டு பரீட்சை நடத்தப்படுவதுடன், அவரோடிணைந்த வளவாளர்களின் மூலமாக செயலமர்வுகள் நடத்தப்படுகின்றன.

கணித விஞ்ஞான வள நிலைய செயற்பாடுகள்

செய்முறையுடன் கூடியதாக கணித, விஞ்ஞான பாடங்களில்  இடர்ப்படும் மாணவர்களுக்கான செயன்முறை ரீதியான கருத்தமர்வுகள் நடாத்தப்படுகின்றது.

ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கான கணித பாடம் சார் உபகரணங்கள் தயாரிப்பதும், செயலமர்வும் நடாத்தியமை

வலய ரீதியாக தரம் 05 மாதிரிப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டினை செய்வதற்கு வலயக்கல்விப் பணிமனையுடன் இணைந்து சிற்றுண்டி உணவு ஏனைய ஏற்பாடுகள் என்பவை 2015, 2016 காலங்களில் வழங்கப்பட்டமை

கவின்கலைச் சோலையின் செயற்பாடுகள்

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வளவாளர்களாகக் கொண்டு க.பொ.த சாதாரண செய்முறைப்பரீட்சைக்கு தோற்றும் (நடனம்) மாணவர்களுக்குச் செய்முறைப்பயிற்சியும், தயார்ப்படுத்தும் செயலமர்வும் நடாத்தப்பட்டமை.

அழகியல்சார் இசைக்கருவிகளை மாணவர்கள் பார்வையிடவும், பயன்படுத்தித் திறனை பெற்றுக்கொள்ளவும் வசதிப்படுத்தியமை.

இசை நடன மேலைத்தேய கீழைத்தேய வாத்தியக்கருவிகளின் பயிற்சி வகுப்புக்கள் நடைபெறுகின்றமை. அதனுடன் இணைந்த வகையில் வடஇலங்கை சங்கீத சபையின் பரீட்சைகளுக்குத் தோற்றும்  மாணவர்களைத் தயார்ப்படுத்துகின்றமை.

தமிழ்ப்பாரம்பரிய முறையிலான வரவேற்பு அணியினை (தமிழ் இன்னியம்) மாவட்டத்தில் அறிமுகப்படுத்தி, தேவைப்படும் பாடசாலைகளுக்குப் பயிற்சி வழங்கப்படுகின்றமை. (மாவட்டத்;தில் நான்கு அணிகள் இதன்படி பயிற்றுவிக்கப்பட்டுள்ளன)

 மாணவர்களது கலைத்திறன் வெளிப்பாட்டு விழாக்களை வருடாந்தம் நடாத்துதல்.

கல்வி, பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தில் டுவைவடந யுனை நிறுவனத்தின் செயற்பாடுகள்

இலவச கணனி வகுப்புக்கள், ஆங்கில மொழிப்பயிற்சி, தையல் வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றமை.

இதுவரை ஆறு அணிகளுக்கு மேல் 600 க்கு மேற்பட்ட மாணவர்கள் பயிற்சியை நிறைவுசெய்து வெளியேறியுள்ளனர்.

புதிய அணிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடப்பு ஆண்டிலும் ஆரம்பமாவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவை தவிர, ஏனையவை -

 கிளிநொச்சி மாவட்ட இசை வாய்ப்பாட்டுக் கலைஞர்களை கௌரவித்தமை

பிரதேச செயலகத்துடன் இணைந்து ஊடகக்கற்கை நெறிகள், குறுந்திரைப்பட தயாரிப்புக்கள் போன்றவற்றுக்கான பயிற்சி வகுப்புக்கள் நடாத்துகின்றமை.

 குறும்படம் மற்றும் ஆவணப்படக் காட்சிகள் வெளியிடுதல் மற்றும் அது பற்றிய உரையாடல்கள்

 புலம்பெயர் கலைஞர்கள், இலக்கியவாதிகளின் சந்திப்புகள்.

புத்தக வெளியீடுகள்

 இந்தியக்கலைஞர்களின் சந்திப்பு

 கலை இலக்கிய ஒன்று கூடல்கள்.

என இவை அனைத்தும் பொது அறிவிப்பின்படி, திறந்த நிiலையிலேயே நடைபெறுகின்றன. இந்த நிகழ்வுகளில் சகல தரப்பினரும் கலந்து கொண்டும் பங்கேற்றும் வருகின்றனர். இவற்றையெல்லாம் இந்த மன்றத்திலிருந்து 150 மீற்றர் தொலைவில் இருக்கும் தாங்கள் அறியாதிருப்பது எமக்கு ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது.  எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
 

dantv