Theneehead-1

Vol: 14                                                                                                                                                09.01.2017

ரணில் விக்கிரமசிங்கவின் வியுகங்கள்

-           கருணாகரன்

  “மகிந்த ராஜபக்ஸவை எப்படியும் தூக்கில் நிறுத்தியே ஆகவேண்டும்“ என்று சொல்லிக்கொண்டிருந்த நண்பர் ஒருவரைச் சில மாதங்களுக்குப்பிறகு சந்தித்தேன். சற்றுச் சோர்ந்து போயிருந்தார்.ranil1

“நிலைமாறு கால கட்ட நீதியைப்பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன? என்று கேட்டார். நான் எதுவுமே பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். “நிலைமாறு காலக்கட்ட நீதி இலங்கையில் சாத்தியப்படும் என்று நினைக்கிறீங்களா? ஒரு போதும் அதற்கான வாய்ப்பே இல்லை. வென்றவர்கள் தோற்கடிக்கப்பட்டவர்களுக்கு வகுப்பெடுக்க முயற்சிக்கிறார்கள். தோற்கடிக்கப்பட்டவர்களின் கைகளைப் பற்றிக் கொள்ளவோ, இதயத்தைத் தொடவோ அவர்கள் விரும்பவில்லை. இப்படியிருக்கும்போது, இந்த மாதிரி விசயங்கள் எல்லாமே காலத்தைக் கடத்தி, எம்மை ஏமாற்றுகின்ற விசயங்களாகவே இருக்கும். இதை நாங்கள் நம்பவும் முடியாது. ஏற்றுக்கொள்ளவும் முடியாது. உலகமே தமிழர்களை ஏமாற்றுவதற்குப் பெரிய நாடகமாடுது” என்றார். அவருடைய கதைகளைக் கேட்கும்போது சிரிப்பு வந்தது. காட்டிக் கொள்ளாமல் அடக்கிக் கொண்டேன்.

“என்ன, அபிப்பிராயம் எதையும் சொல்லாமல் பேசாமலிருக்கிறீங்கள்? சரி, அதைத்தான் விடுவோம். இப்ப அரசியல் அமைப்புச் சாசனத்தைத்திருத்துவதாகச் சொல்லப்படுவதைப்பற்றி என்ன சொல்றீங்கள்? மக்களிடம் ஆலோசனைகள் பெறப்பட்டு, அந்த அடிப்படையில்தான் புதிய அரசியலமைப்பை வரைவதாக இருந்தால், அதை ஏன் மூடு மந்திரமாக வைத்திருக்க வேணும்? மக்கள் தெரிவித்த அபிப்பிராயத்தை மக்களுக்குச் சொல்வதற்கு ஏன் இத்தனை தயக்கங்கள்? இதைப் பார்த்தால், இதுவும் ஒரு ஏமாற்று நாடகம் போலத்தான்படுகிறது.  இப்படியே தமிழர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதுதான் கதையாக இருக்கப்போகிறதா?“ என்றார்.

குரலிலும் முகத்திலும் கோபமும் சலிப்பும் சற்று வெளிப்பட்டது. நான் அவரையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். அவருடைய கண்கள் கலங்கியிருப்பதாகத் தோன்றியது. ஆனால் அழவில்லை. கோபத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். எதற்காக இந்தக் கோபம்? யாரை அவர் கோவிக்கிறார்? அவருடைய அந்தக் கோபம் நியாயமானதா?

நண்பரின் இன்றைய கோபம் இன்னும் சில வாரங்களில் அல்லது அடுத்த ஓரிண்டு மாதங்களில் வேறொரு திசையில் நகர்ந்து இன்னொரு பிரச்சினையில் மையங்கொள்ளும். இவ்வாறே பெரும்பாலான தமிழர்கள் இருக்கிறார்கள். சிங்கள ஆட்சியாளர்கள் அவ்வப்போது உண்டாக்கும் புதிய விவகாரங்களைச் சுற்றித் தங்களுடைய முழுக்கவனத்தையும் குவிப்பதாக. இப்படி முழுக்கவனமும் குவிந்து, குறிப்பிட்ட பிரச்சினை தீவிரமான நிலையில் சூடாகும்போது, ஆட்சியாளர் புதியதொரு பிரச்சினையைத் தமிழர்களுடைய காலடியில் அல்லது தலையின்மேலே உருவாக்குவார்கள். பின்னர் அந்தப் பிரச்சினையோடு கிடந்து தமிழ்ச்சமூகம் மல்லாடும்.

இதுவே கொழும்பின் உபாயம். இந்த உபாயத்தின் அடிப்படையில் இலங்கையின் எழுபது ஆண்டுகால ஒடுக்குமுறை அரசியல் ஏராளம் எதிர்மையப்புள்ளிகளைக் கொழும்பு உருவாக்கியிருக்கிறது. எல்லாமே திசைதிருப்பு மையங்கள். திசைதிருப்புப் புள்ளிகள். இதைப் புரிந்தோ புரியாமலோ தமிழர்கள் அந்த மையப்புள்ளிகளின் பின்னாலே எழுபது ஆண்டுகளாக நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலைகிறார்கள். சிங்கள அதிகாரத்தரப்பு தமிழ்த்தரப்புக்கு எதிராக உருவாக்கிய எந்த மையப்புள்ளியையும் தமிழர்கள் இதுவரையில் சிதறடிக்கவேயில்லை. இப்படித்தானுள்ளது தமிழர்களுடைய எழுபது ஆண்டுகாலத்தின் போராட்டம்.

இப்போது நான் நண்பரிடம் கேட்டேன். “மகிந்த ராஜபக்ஸ தூக்கிடப்பட்டு விட்டாரா?” என. நண்பருடைய முகம் இறுகிக் கறுத்தது. கண்கள் சிவந்தன. அவரை நான் ஏளனம் செய்வதாக எண்ணியிருக்கக்கூடும். ஆனால், நிச்சயமாக அப்படிச் செய்யவில்லை. அவருக்கு யதார்த்தத்தை விளக்கவே அந்தக் கேள்வியைக் கேட்டேன். நண்பர் எதுவும் பேசவில்லை. என்னைக் கூர்ந்து பார்த்தார்.

நான் சொன்னேன் “மகிந்த ராஜபக்ஸவின் கழுத்தில் மாட்டப்பட்டிருந்த கயிறு இப்பொழுது கழற்றப்பட்டுள்ளது. இந்தக் கயிற்றைக் கழற்றுவதில் பெரும் பங்களிப்பைச் செய்தவர்கள் தமிழர்கள். யாருடைய கழுத்தில் கயிற்றை மாட்டி, கழுத்தை இறுக்க வேண்டும் என்று தமிழர்கள் விரும்பினார்களோ, அவர்களே, அவருடைய கழுத்திலிருந்த கயிற்றை அகற்றியிருக்கின்றனர். இதைச் சாத்தியப்படுத்தியது ரணில் விக்கிரமசிங்க. அவருக்குத் துணையாக நின்றது மேற்குலகம்.

ஒரு கணம் உங்களுடைய கண்களை மூடி, எல்லாவற்றையும் மீள நினைத்துப் பாருங்கள். கடந்த ஆறு ஆண்டுகளாக போர்க்குற்றம், சர்வதேச விசாரணை, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம் என்றெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருந்த குரல்களை இப்போது காணவில்லை. இந்தக் குரல்களை எழுப்பிய,  பாதிக்கப்பட்ட சமானிய மக்கள் மட்டும் இன்னும் தங்கள் பிரச்சினைகள் தீரவில்லை என்று கண்ணீர் விட்டபடி இருக்கிறார்களே தவிர, இவற்றை முன்னிறுத்திப் போராட முன்வந்த தரப்பினர் இவற்றையெல்லாம் மெல்லக் கை விட்டு விட்டனர். அல்லது மறந்து போயினர். அவர்களுடைய மையம் மாறி விட்டது - மாற்றப்பட்டு விட்டது. இந்த விவகாரங்களைப் பற்றி நாளும் பொழுதும் பேசிய ஆய்வாளர்களும் விமர்சகர்களும் கூட புதிதாக உருவாகியிருக்கும் நிலைமாறு கால கட்ட நீதியைப்பற்றியும் அரசியல் சாசனத்திருத்தத்தைப்பற்றியுமே பேசத் தொடங்கி விட்டனர். அப்படியான ஒரு நிலையை ரணில் விக்கிரமசிங்க உருவாக்கி விட்டார். இது அரசியல். இதில் யாரும் ரணிலைக் கோபித்துக்கொள்ள முடியாது. அவர் அப்படித்தான் செய்வார். அவர் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர். அதில் பயணிப்பவர். ஆகவே அவர் அதையே செய்து கொண்டிருப்பார். தனக்கு எதிர்த்தரப்பிலுள்ளோரை அவர் தோற்கடித்துக் கொண்டேயிருப்பார். அல்லது அதற்காக முயற்சித்துக் கொண்டேயிருப்பார்.
அரசியல் என்பது அதிகாரத்துக்கான போட்டி. அதில் ஆடப்படுவது சதுரங்கம். அங்கே காய்கள் நகர்த்தப்படும். அந்தச் சதுரங்கப்போட்டியில் ஒவ்வொரு தரப்பும் தத்தமது காய்களைச் சாதுரியமாக ஆடி வெற்றியடைய வேணும். அதுவே அந்தத் தரப்பை ஆதரிப்போரின் வெற்றியாகும். தமிழர்களும் இந்தச் சதுரங்கப் போட்டியில் பங்கேற்கிறார்கள். ஆனால் தொடர்ந்து தோற்றுக் கொண்டேயிருக்கிறார்கள்.

இப்போது தமிழர்கள் எங்கே வந்து நிற்கிறார்கள்? நிலைமாறு காலகட்ட நீதியைப்பற்றிப் பேசிக் கொண்டு. புதிய அரசியல் சாசனத்தில் என்னவெல்லாம் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்ற ஆருடங்களைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டு.

போர்க்குற்றத்தைப் பற்றியும் சர்வதேச விசாரணைப் பொறிமுறையைப்பற்றியும் நாம் முன்னர் ஒரு போது பேசினோமா? அப்படி ஒரு விசயம் நம் வாழ்க்கையில் இருந்தா? என்று கேட்கும் நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ரணில். இது அவருடைய சாணக்கியம். அவருடைய வெற்றி. இந்த இடத்தில் ரணில் மிகக் கடினமான ஒரு பிரச்சினையை மிக நுட்பமாகக் கையாண்டு வெற்றியடைந்திருக்கிறார். தன்னுடைய முதன்மை எதிராளரான மகிந்த ராஜபக்ஸவை அவர் போர்க்குற்றங்களில் இருந்து காப்பாற்றியிருக்கிறார். ஆனால், அதிகாரத்திலிருந்து தோற்கடித்திருக்கிறார். இதற்காக அவர் பயன்படுத்தியது மகிந்தவின் சகாக்களான மைத்திரிபால சிறிசேனவையும் சந்திரிகா குமாரதுங்கவையும். கூடவே மகிந்தவைப் போர்க்குற்றங்களில் இருந்து மெல்ல விடுவித்ததன் மூலம் அல்லது அந்தப் பிரச்சினையைத் தள்ளி வைத்திருப்பதன் மூலம் சிங்களச் சமூகத்தின் அதிருப்தியின் எல்லைகளையும் தள்ளி விட்டிருக்கிறார். இல்லையெனில் போர்க்குற்றங்களோடு சம்மந்தப்பட்டதாகக் கருதப்படும் படைத்தரப்பின் கழுத்துகளும் சிக்கும் நிலை உண்டாகி, அதனால் சிங்களச் சமூகத்தின் நெருக்கடியை அவர் சந்திக்க வேண்டியிருந்திருக்கும். இதேவேளை, தமிழ்த்தரப்பை தோற்கடித்திருக்கிறார். அவர்கள் கோரிய போர்க்குற்ற விசாரணையைப் புறந்தள்ளி, போர்க்குற்றம் சாட்டப்பட்ட மகிந்தவையும் காப்பாற்றியுள்ளார். மட்டுமல்ல, தமிழ்த்தரப்பை அவர்களுடைய அரசியல் எதிர்பார்ப்புகளில் இருந்தும் தோற்கடித்திருக்கிறார். சமநேரத்தில் அதைத் தன்னுடைய அதிகாரத்துக்கும் ஆட்சிக்கும் ஆதரவளிக்கும் நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார். மறுவளமாக அரசியல் சாசனத்தை உருவாக்கும் முயற்சியில், அவர் சிங்களச் சமூகத்துக்குத் திருப்தியான பதிலைச் சொல்லி விட்டார். ஒற்றையாட்சியின் அடிப்படையில்தான் அரசியல் சாசனம் திருத்தப்படும். சமஸ்டியைப்பற்றிய பேச்சில்லை. வடக்குக் கிழக்கு இணைப்பில்லை. பௌத்தத்துக்கு முன்னுரிமை தொடர்ந்துமிருக்கும் என. ஆனால், இந்தளவுக்குத் தெளிவான பதிலைத் தமிழ் தரப்பான தமிழ்த்தேசியக் கூட்டமைப்போ, முஸ்லிம் தரப்போ தங்கள் மக்களுக்குச் சொல்லக்கூடியதாக இல்லை. இருந்தாலும் எல்லோரும் ரணிலை விட்டு நீங்க முடியாதவாறு அவர் இன்று மிகச் சக்திவாய்ந்த காந்தக் கட்டியாகியுள்ளார். இதைப்பற்றி என்ன சொல்கிறீங்கள்?” என்று கேட்டேன் நண்பரிடம். அவருடைய வாய் உலர்ந்து போயிருந்தது. அவர் எதையும் பேசவில்லை. கண்களிலிருந்து கண்ணீர் சிந்தியது. அவருடைய தலையை நிமிர்த்தினேன்.

“இதெல்லாம் அழுவதற்கான விசயங்களல்ல. அழுவதால் இது தீர்ந்து விடும் என்றுமில்லை. பதிலாகச் சிந்திக்க வேண்டிய விசயங்களாகும். புதிய முறையில் சிந்திக்க வேண்டிய விசயங்கள். தமிழர்கள் வேறுபட்ட சிந்தனை முறையில் சிந்திப்பதற்குத் தயாராக வேண்டும். புதிய சிந்தனை முறையை உருவாக்க வேணும். அப்படிச் செய்யும்போதே தமிழர்களுக்கும் அரசியல் வெற்றிகள் கிட்டும். இல்லையென்றால், இப்படியே காலத்துக்குக் காலம் கொழும்பு உருவாக்கும் திசைமாற்றப் புள்ளிகளின் பின்னால் இழுபட்டுக்கொண்டிருக்க வேண்டியதுதான். அரசியல் வரலாற்றில் தோல்விகளையும் பின்னடைவுகளையும் வெற்றிக்கான படிப்பினையாகக் கொண்டதைப் படித்தாலே மாற்றங்கள் தானாக நிகழும். அதைச் செய்ய முயற்சியுங்கள்“ என்றேன்.

அப்படியென்றால், “மகிந்த ராஜபக்ஸவின் கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டப்படவே மாட்டாதா?” என்று ஒரு குழந்தையைப்போலக் கேட்டார் நண்பர்.

இதைக் கேட்டபோது உண்டான சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை. “ரணில் விக்கிரமசிங்க தமிழரல்லவே“ என்றேன். நண்பருக்குப் புரிந்த மாதிரித் தெரியவில்லை. அவருடைய கண்கள் கேள்வி எழுப்புவதை உணர்ந்தேன்.

“மகிந்த ராஜபக்ஸவின் கழுத்தில் கயறு இறுகும் என்றால் அது நல்லாட்சியின் – இந்த ஆட்சியின்  முடிவாகும். தன்னுடைய எதிராளரான மகிந்தவின் கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் சுருக்குக் கயிற்றைக் கழற்றுகிறார் ரணில். அவர் விரும்பினால் அந்தக் கயிற்றை அப்படியே விட்டு விடலாம். மகிந்தவை நிரந்தரமாகவே தோற்கடித்து விடலாம். ஆனால், அது தன்னுடைய தோல்வியாகவும் அமைந்து விடும் என்று ரணிலுக்குத் தெரியும்.


தமிழர்களின் சிந்தனை முறைமை என்றால் மகிந்தவின் கழுத்தில் கயிற்றை இறுக்குவதைப்பற்றியே சிந்தித்திருக்கும். ஆனால், ரணில் அப்படிச் செய்யவில்லை. இதுதான் சிங்கள இராசதந்திரமும் ரணிலின் புத்திசாதுரியமுமாகும். அதாவது எதிரியை அழிப்பது அல்லது அப்புறப்படுத்துவது. எதிர்த்தரப்பைக் கையாள்வது என்ற ஒன்று அரசியலில் உள்ளது. அதுவே அரசியலின் முதுகெலும்பாகும் என்று சிந்திப்பதில்லை. நன்றாகக் கூர்ந்து பாருங்கள்,  மகிந்த ராஜபக்ஸவின் கழுத்துக் கயிற்றை அப்புறப்படுத்தி  வைத்துக்கொண்டே, அவரைத் தோற்கடித்திருக்கிறார் ரணில். இதற்காக மகிந்த ராஜபக்ஸவின் எதிர்தரப்புகளைத் தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார். உங்களையும் கூடத்தான் அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்“ என்று நான் சொன்னதும் நண்பர் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றார்.

இப்போது சொல்லுங்கள், உண்மையில் யாருடைய கழுத்தில் சுருக்குக் கயிறு விழுந்திருக்கிறது? அந்தக் கயிற்றை யார் மாட்டியிருக்கிறார்கள் என்று. (தமிழர்கள் தங்களுடைய கழுத்தில் தாங்களே சுருக்குக் கயிற்றை மாட்டியிருக்கிறார்கள்).

இந்த நண்பரை ஒத்ததாகவே பெரும்பாலான தமிழர்கள் இருக்கிறார்கள். அவ்வப்போது முன்னெழுகின்ற அல்லது முன்னெழுப்பப்படுகின்ற உருக்களுக்குத் தங்களுடைய முழுப் பலத்தையும் பிரயோகித்து எதிர்வினையாற்ற வேணும் என்று எண்ணுகின்றவர்கள். இதற்காக தங்களுடைய உடல், ஆவி, பொருள், இடம், காலம் அனைத்தையும் செலவழிக்கத்தயாராக இருப்பதாகவும் தங்களுக்குள் எண்ணிக் கொள்கிறார்கள். இது ஒரு பாரம்பரியமாக, தலைமுறை தலைமுறையாகத் தமிழ்ச்சமூகத்திடம்  வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாராம்பரியக் குணத்தின் வெளிப்பாடே இந்த நண்பரும்.

என்னதான் படிப்பினைகள் கிடைத்தாலும் அதை ஏற்றுக்கொள்வதற்கு அவர்களுடைய உளநிலையில் இடமில்லை. அது தாழ்வுச் சிக்கல், உயர்வுச் சிக்கல் என்ற உளச் சிக்கல்களுக்குள் சிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிக்கல்களில் இருந்து விடுபடும்வரை எதிராளிகளின் கொடிகள் பறந்து கொண்டேயிருக்கும்.

dantv