Theneehead-1

   Vol:17                                                                                                                                09.07.2018

சொல்லத்தவறிய கதைகள்  - அங்கம் 19

"யூ.என்.பி. வந்தாலும் ஶ்ரீலங்கா வந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே!!!"

தொகுதி அடிப்படையிலான தேர்தலும் விகிதாசார தேர்தலும்

திசைமாறிய ஒரு  பறவையின் வாக்குமூலம்

                                     முருகபூபதி

எனக்கு  1965 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த பொதுத்தேர்தல் நீண்டகாலமாக  நினைவிலிருக்கிறது. எனக்கு அப்பொழுது 14 வயது! தொகுதிவாரியாக தேர்தல்கள் old radioநடந்த காலம். எங்கள் ஊரில் நடந்த பிரசாரக்கூட்டங்களை வேடிக்கை பார்க்கச்செல்வேன். அங்கு தமிழிலும் சிங்களத்திலும் பேசுவார்கள்.
மூவினத்தவரும் வாழ்ந்த பிரதேசமாகையால் இடத்துக்குத் தக்கவிதமாகவும் பேசுவார்கள்.

தமிழ்ப்பேசும் கத்தோலிக்கர்கள்தான் பெரும்பான்மையாக வாழ்ந்தார்கள். அதனால் அங்கு அடுத்தடுத்து அந்தச் சமூகத்தைச்சேர்ந்தவர்கள்தான் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்கள்.

கொழும்பு மத்தி மற்றும்  கொழும்பு  வடக்கிலிருந்து, வத்தளை, ஜா- எலை, நீர்கொழும்பு, வென்னப்புவ, சிலாபம், புத்தளம் முதலான கரையோரப் பிரதேசங்களின் தொகுதிகள் யாவும்  ஐக்கிய தேசியக்கட்சியின் கோட்டைகளாகவே விளங்கின.

கொழும்பிலிருந்து புறப்படும் அதன் கட்சித்தலைவர்கள் இந்தக் கரையோர தொகுதிகளில் எல்லாம் தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசிவிட்டு,  இடையில் நாத்தாண்டியா, குருநாகல் தொகுதிகளுக்கோ அல்லது மதவாச்சி, அநுராதபுரம் தொகுதிகளுக்கோ செல்வார்கள்.

தேர்தல் நடந்த அன்று , இரவிரவாக கண்விழித்து,  வானொலிப்பெட்டிக்கருகிலிருந்து நானும் அக்காவும், ஒரு கொப்பியில் தேர்தல் முடிவுகளை எழுதினோம். அப்பா, தபால் நிலையத்தில் வாங்கி வந்திருந்த அரசாங்க வர்த்தமானி புத்தகத்தில், பதிவுசெய்யப்பட்டிருந்த ஒவ்வொரு தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் - அவர்களின் கட்சிச் சின்னங்களின்  அருகில் தேர்தல் முடிவு வாக்கு எண்ணிக்கைகளை எழுதினார். முதல் முடிவு மிகிந்தலை தொகுதியிலிருந்து வந்தது. அப்பா அந்தப்பிரதேசங்களிலும் அவர் பணியாற்றிய கம்பனியின் விற்பனைப்பிரதிநிதியாக (Sales Representative ) இருந்தவர். அவர் இலங்கை எங்கும் சென்று வர்த்தகம் செய்தவர்.

முதலில் மெக்‌ஷா கம்பனியின் பிரதிநிதியாக பணியாற்றியவர். அவருக்கு எந்தெந்த தொகுதியில் யார் யார் வென்றார்கள், யார் யார் தோற்றார்கள் என்பது பற்றி அறிந்துவைக்கவேண்டிய தேவை அக்காலப்பகுதியில் இருந்தது.

அதனால் என்னையும் அக்காவையும் தேர்தல் முடிவுகள் பற்றி எழுதுவதற்கு துணைக்கு வைத்துக்கொண்டார்.அம்மா அடிக்கடி தேநீரும், கோப்பியும் சிற்றுண்டிகளும் தந்தார்கள். அவ்வப்போது மாறி மாறி கண்ணயர்ந்து வெளியே,  பட்டாஸ்  வெடிச்சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து கண்களை கசக்குவோம். வெடிச்சத்தம் கேட்டால் ஒரு தேர்தல் முடிவு வந்துவிட்டது என்பது அர்த்தம்.

வானொலியில் ஒவ்வொரு முடிவையும் அடுத்தடுத்து இரண்டு முறை ஒலிபரப்புவார்கள். குறிப்பிட்ட 1965 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஐக்கியதேசியக்கட்சியே அமோக வெற்றியீட்dudleyடியது. டட்லி சேனாநாயக்கா பிரதமரானார்.

தேர்தலின் பின்னர், அமைக்கப்பட்ட ஆட்சியில் தந்தை செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக்கட்சியும், ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்க்காங்கிரஸ் கட்சியும் பங்காளிகளாக  இணைந்தன. அந்தக்கூட்டாட்சிக்கு " கூட்டரசாங்கம்" என்ற பெயர்தான் சூட்டப்பட்டது.    " நல்லாட்சி" என்ற பெயர் சூட்டப்படவில்லை. தற்காலத்தில் பேருக்கு எதிர்க்கட்சியாக இருந்துகொண்டுதான், சமகால " நல்லாட்சிக்கு (?)" மேற்சொன்ன கட்சிகளின்   அங்கத்தவர்கள் சிலர் ஆதரவு வழங்குகிறார்கள்.

1965 ஆம் ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது நான் படித்த பாடசாலையில் பயிற்சிச் சிங்களமும் ஒரு பாடமாக இருந்தமையால் அதனையும் படித்தேன். சிங்கள மொழியை வாசிக்கவும் எழுதவும் பேசவும் முடிந்தமையால், அக்காலப்பகுதியில் எங்கள் ஊரில்  நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் கட்சித்தலைவர்கள் பலர் சிங்களத்தில் பேசினாலும் எளிதாகப்புரிந்துகொள்ள முடிந்தது.

எங்கள் ஊரில் ஐக்கிய தேசியக்கட்சி (பச்சை நிறம்) ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ( நீல நிறம்) ஆகியன நடத்திய கூட்டங்களில் அவற்றின் தீவிர ஆதரவாளர்கள் பச்சை - நீலம் நிறங்களில் சேர்ட், சாரம், சேலை, தொப்பி அணிந்து மேடைகளுக்கு அருகில் நின்று  கோஷம் எழுப்புவார்கள். எனக்கும் அத்தகைய தொப்பிகள், சேர்ட்டுகள் அணிவதற்கு விருப்பம் இருந்தது. ஆனால், மாணவனாக இருந்தமையால் வீட்டில் விரும்பவில்லை. மாணவப்பருவம் வரையில்தான் அந்தக்கட்டுப்பாடு எனக்கு  வலியுறுத்தலாக இருந்தது.

ஐந்து ஆண்டுகாலத்தில் அதாவது 1970 இற்குப்பின்னர், எனக்கு இலங்கை அரசியல் பற்றி ஓரளவு விளக்கம் வந்து, செஞ்சட்டைக்காரர்களுடன் நெருக்கம் வந்துவிட்டது.1971  ஏப்ரில் மாதம் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி காலத்தில் அமுலுக்கு வந்த ஊரடங்கு உத்தரவினால் வீட்டிலிருந்தே இடதுசாரி நூல்களையும் படிக்கத்தொடங்கியிருந்தேன். எங்கள் ஊரில் கம்யூனிஸ்ட் கட்சித்தோழர்களுடன் பழகிய பின்னர், பச்சை - நீலக்கட்சிகள் முதலாளித்துவ கட்சிகள் எனவும்,  சிவப்புக் கட்சிகள் தொழிலாள விவசாய, பாட்டாளி மக்களின் கட்சிகள் எனவும்  பிரக்ஞை வந்தது.

எங்கள் ஊரின் எழுத்தாளர் நீர்கொழும்பூர் முத்துலிங்கம், பின்னாளில் பத்திரிகையாளராக மாறிய  செல்வரத்தினம் ( இவர் தினபதி - சிந்தாமணி பத்திரிகைகளிலும் பணியாற்றிdominikயவர்) மற்றும் தருமலிங்கம், சந்திரமோகன், ஆகியோர் இணைந்து வளர்மதி நூலகம் அமைத்து, மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா வரும் சமயங்களில் கடற்கரையில் காற்று வாங்கியவாறு இலக்கியச் சந்திப்பு நடத்துவோம்.

1972 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மல்லிகை நீர்கொழும்பு சிறப்பிதழும் வெளியிட்டோம். அதன் வெளியீட்டு அரங்கு சிறிய கூட்டமாக எங்கள் வீட்டில்தான் நடந்தது.  1972  ஜூலையில்  எனது முதலாவது சிறுகதை (கனவுகள் ஆயிரம்)  மல்லிகை இதழில் வந்தபின்னர், ஆசிரியர் டொமினிக்ஜீவா கொழும்பு வரும் சந்தர்ப்பங்களில் அவரைச்சந்திக்கச் செல்வேன்.

அவருடன் பொரளை கொட்டா வீதியில் ( இதனை தற்போது கலாநிதி என். எம். பெரேரா வீதி என அழைக்கிறார்கள்) அமைந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கும், கொழும்பு - 7 இல் சேர் ஏர்ணஸ் டி சில்வா மாவத்தையில் ( இதனை அக்காலத்தில் ஃபிளவர் ரோட் எனவும் அழைத்தனர்) அமைந்த சோவியத் தூதரகத்தின் தகவல் பிரிவுக்கும் செல்வேன். கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகைகள், தேசாபிமானி, புதுயுகம் ஆகியனவற்றிலும் கதை, கட்டுரை எழுதியிருக்கிறேன்.

சோவியத் தகவல் பிரிவிலிருந்து சோவியத் நாடு, சோஷலிஸம் - தத்துவமும் நடைமுறையும் முதலான இதழ்கள் வெளியாகின. அங்கும் கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள்தான் பணியாற்றினார்கள்.அவர்களுடனும் நெருக்கம் அதிகரித்தமையால், படிப்படிv.ponnampalamயாக நானும் அந்தக்கட்சியின் ஆதரவாளரானேன்.  எனக்கு   வி. பொன்னம்பலம், சி. குமாரசாமி, பி. குமாரசாமி, அ. வயித்திலிங்கம், சிவா சுப்பிரமணியம், பரராஜசிங்கம், சிங்கநாயகம், பிரேம்ஜி ஞானசுந்தரன், பி. இராமநாதன், ராஜ ஶ்ரீகாந்தன், மு. கனகராசன், லத்தீஃப், ராஜகுலேந்திரன், ஆசிரியர்கள் மாணிக்கவாசகர், சிவராசா ,  எஸ்.பி. நடராஜா, மகேசன், "புத்தகக்கடை"  பூபாலசிங்கம் , விஜயானந்தன், நவரத்தினம் ஆகியோர்  தோழர்களானார்கள்.

இவர்களில் சிலர் அங்கம் வகித்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய சபை உறுப்பினராகவும் இணைந்தேன். வேலை தேடும் படலத்திற்கு மத்தியில் இவர்கள் சம்பந்தப்பட்ட இயக்க, மற்றும் எழுத்துலக பணிகளிலும் ஈடுபட்டிருந்தேன்.தோழர் மாணிக்கவாசகர், தோழர் சி. குமாரசாமியின் தம்பியாவார். குமாரசாமி கட்சியின்  அரசியல் குழுவிலும் மத்திய குழுவிலும் அங்கம் வகித்திருந்ததுடன், தோழர்கள் எஸ்.ஏ. விக்கிரமசிங்கா, பீட்டர் கெனமன், சரத் முத்தெட்டுவேகம, எம்.ஜி. மெண்டிஸ், பி.வை. துடாவை முதலான நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் நெருக்கமாக இருந்தவர். இவர்களையெல்லாம் பொரளை கட்சி காரியாலயத்தில் அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்புகள் வந்திருக்கின்றன.

ஒருசமயம் தோழர் எஸ்.ஏ. விக்கிரமசிங்காவுக்கு 75 வயது பிறந்த தினக்கொண்டாட்டம் வந்தது. அதன் விழா கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் நடந்தது. அந்தக்காலப்பகுதியில் வெளியான மsarath1ல்லிகை, விக்கிரமசிங்கா சிறப்பிதழாக வெளியானது.அதில் அவரை நேரில் சந்தித்து எடுத்த நேர்காணலையும் எழுதியிருக்கின்றேன். இது இவ்விதமிருக்க,  கொழும்பில் வேலை தேடி அலைந்துகொண்டிருந்த அக்காலப்பகுதியில்,  இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் என்ற அமைப்பையும் உருவாக்கியிருந்தது. அதற்கு ஒரு முழுநேர ஊழியர் தேவைப்பட்டார்.சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரனும், நிதிச்செயலாளர் சோமகாந்தனும்  என்னைத் தெரிவுசெய்து,  மாதம் 150 ரூபா அலவன்ஸ் தந்தனர்.

எனினும் அவர்களாலும் என்னை பராமரிக்க முடியாத சூழ்நிலை தோன்றியபோதுதான் சி. குமாரசாமியின் தம்பியும் ஆசிரியருமான  சி. மாணிக்கவாசகர்,  தான்   அங்கம் வகித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வெளியீடுகளில் ஒன்றான ஆசிரியர் குரல் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் என்னை இணைத்துவிட்டார்.  அங்கு அதே 150 ரூபா அலவன்ஸ் மாதாந்த வேதனமாக கிடைக்க வழிசமைத்தார்.மகன் கொழும்புக்கு வேலைக்குப்போகிறான் என்ற மகிழ்ச்சியில் எனது அம்மா தினமும் எனக்கு சோற்றுப்பார்சல் தந்து வழியனுப்பிக்கொண்டிருந்தார். எனது வாழ்க்கை இடதுசாரிகளினால் திசை மாறிக்கொண்டிருப்பதை அவர் அறியவில்லை!

கொழும்பு மலே வீதியில் முன்னைய கல்வி அமைச்சிற்கும் பரீட்சைத்திணைக்களத்திற்கும் சமீபமாக அந்தத் தொழிற்சங்கம் இருந்தது. அதன் அப்போதைய தலைவர் எச்.என். பெர்னாண்டோ. செயலாளர் சித்ரால் பெரேரா.Premgi

அங்கு வந்து இணைந்துகொண்ட லீனஸ் என்பவர் நவசமசமாஜக்கட்சியிலிருந்தார். அவர் சிறையிலிருந்த  1971 ஏப்ரில் கிளர்ச்சி கைதிகளான மக்கள் விடுதலை முன்னணி தோழர்களை விடுவிக்கும் நோக்கத்துடன், "அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்"  என்ற இயக்கத்தை   தொடங்கினார். மலேவீதி இலங்கை ஆசிரியர் சங்கமே அந்த இயக்கத்தின் பணிமனையாகியது.அந்தப் பணிமனைக்கு அருகில்தான் தோழர் சண்முகதாசனின்  கட்சிக் காரியாலயமும் தொழிற்சங்கமும் இயங்கியது.அதற்கும் அருகிலிருந்த ஒரு  கட்டிடத்தில் அரசியல் கைதிகளை விடுக்கவேண்டும் என்ற இயக்கத்தின் அங்குரார்ப்பணக்கூட்டம் நடந்தது.

அதற்கு ஹபராதுவ நாடாளுமன்ற உறுப்பினர்   பிரிண்ஸ் குணசேகரா, குமாரி ஜயவர்தனா, சண்முகதாசன், வாசுதேவ நாணயக்கார உட்பட பலர் வந்தனர். அன்று வெளியிடப்பட்ட பிரசுரத்தில் அவர்களுடைய கையொப்பங்களுடன் எனது ஒப்பமும் இடப்பட்டது.அதனை பின்னர் தோழர் லீனஸ்  மும்மொழிகளிலும் அச்சிட்டு விநியோகித்தார்.

நாடெங்கும் அரசியல் கைதிகளை விடுவிக்கும் இயக்கத்தின் சார்பில் பொதுமக்களின் கையொப்பங்கள் சேகரிக்கும் பணிகளும் பிரசாரக்கூட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.இக்காலப்பகுதியில் நாடாளுமன்றத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடதுசாரிகளுக்கும் இடையில் பனிப்போர் மூண்டது.நிதியமைச்சர் என். எம். பெரேரா, ஶ்ரீமாவின் உறவினர் ஃ பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவை "சாத்தான்" என்று வர்ணித்தார்.

அக்காலப்பகுதியில் நடந்த சில இடைத்தேர்தல்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தோல்விகளை சந்தித்தது.சமசமாஜக்கட்சியின் ஆதரவு அதற்கு குறைந்துகொண்டுவந்தது. இடையில் வாசுதேவாவும் விக்கிரமபாகுவும் சமசமாஜக்கட்சியிலிருந்து பிரிந்து நவசமசமாஜக்கட்சியை தொடக்கியிருந்தனர்.

இறுதியில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் அரசிலிருந்து வெளியேறியது. அதனையடுத்து இடது சாரி ஐக்கிய முன்னணி என்ற அமைப்பில் சமமாஜிகளும் கம்யூனிஸ்ட்டுகளும் இணைந்து 1977 இல் நடந்த பொதுத்தேர்தலை சந்தித்தனர்.இந்தப்பிளவு ஐக்கியதேசியக்கட்சிக்கே சாதகமாக முடிந்தது. இந்நிலையில், இடது சாரி ஐக்கிய முன்னணியை ஆதரிப்பதா?  - இல்லையா? என்ற தீர்மானம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மாநாட்டில் விவாதத்திற்கு வந்தது.

அதற்கு நானும் சென்றிருந்தேன். அந்தத்தீர்மானம் எனக்கு மிகுந்த தர்மசங்கடத்தை தோற்றுவித்திருந்தது. இடது சாரித்தலைவர்கள் குறித்து வெறுப்பும் தோன்றியது. அனைவரும் இவ்வாறு பிளவுபட்டு பொதுஎதிரியை தலைதூக்க வைத்துவிடுவார்களே...?!  என்ற  கோபம்தான் வந்தது.vaithilingam

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கும் ஆசிரியர் குரல் பத்திரிகையில்  செய்திகளை எழுதும் -  செம்மைப்படுத்தும் வேலைக்கும் மாத்திரமே ஆசிரியர் மாணிக்கவாசகர் என்னை அங்கு இணைத்திருந்தார். நான் அச்சங்கத்தின் உறுப்பினன் இல்லை. ஆனால்,  எனது வாழ்வு படிப்படியாக  திசைதிரும்பிக்கொண்டிருந்தது.

என்னை  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பணிமனையில் இணைத்துவிட்ட  மாணிக்கவாசகரிடம் ஒருநாள்,  “சீவியத்துக்கு  தொழில்தேடி  வந்த  எனது  வாழ்வை அரசியல் பக்கம் இழுத்துவிட்டீர்களேஸ” என்று சொன்னேன்.“எல்லாம் அனுபவம்தான்.” என்று மாத்திரம் அவர் பதில் சொன்னார்.

இடதுசாரி ஐக்கிய முன்னணியின் தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் பேசினேன். சுவரொட்டிகள் எழுதி தோழர்களுடன் இரவிரவாக ஒட்டித்திரிந்தேன்.

" யூ.ன். பி வந்தாலும் ஶ்ரீலங்கா வந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே... இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே..." என்று மேடைகளில் இராகத்தோடு பாடினேன்.

1969 ஆண்டில் வெளியான துலாபாரம் திரைப்படத்தில்  ஒலித்த
"பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே - இந்த
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே"
என்ற பாடலின் இரண்டு வரிகளை  எடுத்து, அவ்வாறு மாற்றிப்பாடினேன். சிங்கள இடதுசாரித்தோழர்கள் அதன் அர்த்தம் கேட்டுத்தெரிந்துகொண்டனர். எங்கள் ஊரில் தமிழ்ப்பேசும் கத்தோலிக்கர் செறிந்து வாழும் பிரதேசங்களுக்கெல்லாம் அழைத்துச்சென்றனர்.thulaparam

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளையெல்லாம் பேசுபொருளாக்கி பிரசாரம் செய்யநேர்ந்தது. எனினும் அந்தத் தேர்தலில் மக்கள் எம்மை ஆதரிக்கவில்லை.இடதுசாரிகள் எந்தவொரு  தொகுதியிலும் வெற்றிபெறாமல் படுதோல்வி கண்டனர். இடதுசாரிகள் சரிந்துவிட்டனர் என்று  எங்கள் ஊரில் என்னைக்காணும்  பச்சை - நீலம் கட்சி ஆதரவாளர்கள் சொன்னார்கள்.

பீட்டர் கெனமன், எஸ். ஏ. விக்கிரமசிங்கா, என். எம். பெரேரா, கொல்வின் ஆர். டி. சில்வா, சரத்முத்தெட்டுவேகம, எம். ஜி. மெண்டிஸ், வாசுதேவ நாணயக்கார, அத்தாவுட செனவிரத்ன, பேர்ணாட் சொய்சா, லெஸ்லி குணவர்தனா, விவியன் குணவர்தனா, சம்ளி குணவர்தனா, ஏலியன் நாணயக்கார,  வடக்கில் அ.வயித்திலிங்கம் , ஆர். ஆர். தர்மரத்தினம், விஸ்வநாதன்.....இவ்வாறு அனைவரும் தோற்றுப்போயினர்.

ஐக்கிய தேசியக்கட்சி அமோகவெற்றியீட்டியது. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எதிர்க்கட்சியாக வரக்கூடிய சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை. தமிழர் விடுதலைக்கூட்டணி எதிர்க்கட்சியானது. அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவரானார்.

சரித்திரம் மாறியது. ஜே.ஆர், ஜெயவர்தனா, நீதியரசர் அலஸ் தலைமையில் இயங்கிய குற்றவியல் ஆணைக்குழுவை  (Criminal Justice Commision - C.J.C ) இரத்துச்செய்தார். அதனால் மக்கள் விடுதலை முன்னணி தோழர்கள் அனைவரும் விடுதலையானார்கள்.

ஶ்ரீமாவின் கூட்டரசாங்கத்தின் காலத்தில் 1974 இல்  தொடங்கப்பட்ட "அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும்" என்ற கோரிக்கையை செவிமடுக்காமலேயே அன்றைய ஜே.ஆர். அரசு தன்னிச்சையாக அனைவரையும் விடுதலை செய்தது.peter keneman

ஃபீனிக்ஸ் பறவையைப்போன்று எழுந்தது மக்கள் விடுதலை முன்னணி. தெருவெங்கும் வண்ண சுவரொட்டிகளுடன் மக்களிடம் மீண்டும் வந்தது. ஆயுதங்களை கைவிட்டு ஜனநாயகப்பாதைக்கு வந்திருப்பதாக ஊரெங்கும் சென்று கூட்டங்கள் நடத்திச்சொன்னது.

                     இதனைக்கண்டு பொறுக்கமுடியாத ஶ்ரீமா அம்மையார், அவர்களை " தாப்ப விப்லவகாரயோ! " என்று ஏளனம் செய்தார். அதன் தமிழ் அர்த்தம்" மதில் புரட்சியாளர்கள்"

தோழர்கள் ரோகண விஜேவீரா, லயனல் போப்பகே, உபதிஸ்ஸ கமநாயக்க, வாஸ் திலகரத்தின, சாந்த பண்டார, களு ஆராய்ச்சி, சேமாவன்ஸ அமரசிங்க  உட்பட அனைவரும் பஸ்களில் பயணம் செய்தே பிரசாரக்கூட்டங்களை நடத்தினர். செங்கொடிகளை ஏந்தியதுடன், உறங்கும் வேளையில் அவற்றை தரையில் விரித்து அதிலே படுத்தனர். எளிமையாக அரசியல் வாழ்வை  மீண்டும் தொடங்கினர். சாப்பாட்டுக் கடைகளிலும் தோழர்களின் வீடுகளிலுமிருந்தும் உணவுப்பொதி வரவழைத்து பங்கிட்டு உண்டனர். உண்டியல் குலுக்கி நிதி சேகரித்தனர்.

கொழும்பில்  ஆமர் வீதியும்  புளுமெண்டால் வீதியும் சந்திக்கும் முச்சந்தியில் ஒரு மரஆலைக்கட்டிடத்தின் மேல் மாடியில் ஒரு அறையை எடுத்து அங்கு கட்சியின்  பணிமனையை  தொடக்கினர்.மலே வீதியில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பணிமனைக்கு ஒருநாள் வந்திருந்த ரோகண விஜேவீராவுடன் எனக்குத் தோழமை வந்தது. சங்கத்தின் தலைவர் எச். என். பெர்ணான்டோவின் தங்கை  சித்ராங்கனி யைத்தான் அவர் திருமணம் செய்தார்.  அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் லயனல் போப்பகே  அவர்களும் எனது தோழரானார். ஒருநாள் மதியம் அவர் என்னைத்தேடி வீரகேசரி அலுவலகத்திற்கே வந்துவிட்டார். ( நான் அங்கு 1977 இல் ஒப்புநோக்காளராக வேலைக்கு  இணைந்திருந்தேன்)

தாங்கள் தொடங்கவிருக்கும் செஞ்சக்தி பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இணைத்துக்கொண்டு,   அவர்களின் கட்சியில் எனக்கு ஒரு பெயரும் சூட்டினார்.    (அந்தப்பெயரில்தான் இன்றும் அவர் என்னை அழைத்துவருகிறார். அவரும் நானும் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றோம். இன்று நாம் இருவரும் அந்த இயக்கத்தில் இல்லை. ஏன் இல்லை...? என்பதற்கும் ஒரு "சொல்லத்தவறிய கதை" இருக்கிறது. அதுபற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுவேன்.) செஞ்சக்தியில் நண்பர் புதுவை ரத்தினதுரையின் கவிதைகளையும் வெளியிட்டேன்.

 தோழர் லயனல் போப்பகேயின்   விடுதலைக்கீதம்    பாடல்களில் சிலவற்றை    தமிழில்      மொழிபெயர்த்திருந்தேன்.   அந்தப்பாடல்கள்   யாழ்ப்பாணம்,  கிளிநொச்சி, வவுனியா, மன்னார்  மற்றும்  மலையகத்திலும்  மக்கள்  விடுதலை முன்னணியின்  மேடைகளில்  பாடப்பட்டன.  பின்னர்  கஸட்டிலும்  பதிவாகி   வெளியானது.

"வேலுப்பிள்ளை அண்ணா." - "மனம்பேரி  தோழியே"  முதலான  பMr-Mrs-Lionel-Bopageாடல்கள் அக்காலப்பகுதியில் பிரபலமடைந்தன. இந்த வேடிக்கைகளை   அவதானித்துக்கொண்டிருந்த  மாணிக்கவாசகருக்கு, நான் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து படிப்படியாக விலகி,  மக்கள் விடுதலை முன்னணியில் இணைவதை ஏற்கவும் சகிக்கவும் முடியவில்லை.

        ஒருநாள் என்னைச்சந்தித்து , “ உம்மை   ஆசிரியர்   சங்கத்திற்கு   அறிமுகப்படுத்தியது  நான்   செய்த மாபெரும் தவறு”  என்றார்.

அதற்கு  நான், “என்றும்  இடதுசாரிகளுடன்தான்  நிற்பேன். இடதுசாரிகள்  அனைவரையும் ஒன்றாக இணைக்க முயற்சிப்போம்.” என்றேன்.

“அது  உம்மாலோ,  என்னாலோ  வேறு   எவராலுமோ முடியாத காரியம். அதனைவிட்டு விட்டு,  இலக்கியத்தில் கவனம் செலுத்தும். உமக்கு  இலக்கிய அடையாளம்தான்   எஞ்சும்,  மிஞ்சும்”  என்று  சொன்னார். அன்று  அவரது புத்திமதியை நான் கேட்டிருக்கவேண்டும்! ஆனால்,  இளம்கன்று பயம் அறியாது  என்பதுபோல்   இளமைத்துடிப்பில் அரசியல் பக்கம்   திசை திரும்பி,  பல இடர்ப்பாடுகளை   சந்தித்து,  முடியாத  கட்டத்தில் அவுஸ்திரேலியாவுக்கு  புலம்பெயர்ந்தேன்.

கங்காரு  நாட்டுக்குள்   வந்தபின்னரும்   மாணிக்கவாசகருடன் கடிதத்தொடர்பில் இருந்தேன்.

எனது  புலப்பெயர்வு  காலம்  அறிந்து  எடுக்கப்பட்ட  சரியான  முடிவு  என்றும் இலங்கையிலிருந்திருந்தால்,  எனது எதிர்காலம் வீதியோரத்தில்  ரயர்களுடன்   எரிந்து சாம்பராகியிருக்கும்   என்று   ஒரு   தந்தையின்   பரிவோடு  எழுதினார்.

ஒரு  வாசகராக   அவர்  விரும்பிப்படித்த,  வீரகேசரியில் வெளியான  எனது சோவியத் பயண இலக்கியத்தொடர்    சமதர்மப்பூங்காவில்  நண்பர்  ராஜஸ்ரீகாந்தனின்    முயற்சியினால்   1990  ஜனவரியில்   நூலாக  வெளியானது.   அதன்  வெளியீட்டு  நிகழ்வு   எனது  சமுகம்  இன்றியே  பம்பலப்பிட்டி  சரஸ்வதி   மண்டபத்தில்,  முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்தினதும்    தமிழ்த்தூது  தனிநாயகம்  பண்பாட்டு  நிறுவனத்தினதும்   அனுசரணையுடனும்  நடந்தபோது    சோவியத் கவிஞர்கள்   அனதோலி   பர்பராவும்,   குப்ரியானோவும்  கலந்துகொண்டனர். இந்த  நிகழ்வில்   கலந்துகொண்ட  எனது  அம்மாவும்    குடும்பத்தினரும்  உட்பட  சோவியத் கவிஞர்கள்   மற்றும்   எழுத்தாளர்   இளங்கீரனுடன்  மாணிக்கவாசகரும் இணைந்து எடுத்துக்கொண்ட  ஒளிப்படத்தை ராஜஸ்ரீகாந்தன் எனக்கு  அனுப்பிவைத்தார்.


“பூபதியின்   நூல்   வெளியீட்டில்   பூபதி   இல்லை.   ஆனால்  நாமெல்லோரும்  இருக்கிறோம்  என்பதை அத்தாட்சிப்படுத்துவதற்காக  அந்தப்படத்தை  பூபதிக்கு  அனுப்பிவைக்குமாறு    கேட்டுக்கொண்டாராம்  மாணிக்ஸ்”  என்ற   தகவலை  ராஜஸ்ரீகாந்தன்   தொலைபேசியில்  சொன்னார்.

பதினோரு  ஆண்டுகளின் பின்னர் 1997 இல்   நான் இலங்கை சென்றபோது அவர் ஒரு சர்வதேச பாடசாலையில்  பணியிலிருந்தார்.  அவர் அப்பொழுதும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்செயற்பாடுகளில்  பிரேம்ஜிக்கும்  சோமகாந்தனுக்கும்  ராஜஸ்ரீகாந்தனுக்கும் பக்கத்துணையாக  வாழ்ந்தார்.

இலங்கையின்  வரலாறு  வேறு ஒரு திசையில் சென்றுகொண்டிருந்தபோது  ஒரு தசாப்த காலத்தின்  பின்னர் 1997 இல் மாணிக்ஸை சந்திக்கின்றேன்.

   நீண்ட  இடைவெளிக்குப்பின்னர்  என்னைப்பார்த்ததும்,   தான்  Poopalasingamபடித்த  எனது குறிப்பிட்டசில  சிறுகதைகள்   பற்றிய  தனது  வாசிப்பு  அனுபவத்தைச் சொன்னார். அத்துடன்  நில்லாமல் “ ஐஸேஸ பார்த்தீரா  நான்  அன்று சொன்னதுதான்   உமது வாழ்வில்  பலித்திருக்கிறது.  நான்  உமக்கு  எது  மிஞ்சும்?  எது எஞ்சும்?  என்று சொன்னேனோ  அதுதான்  நடந்திருக்கிறது.   நீர்  எழுதுவதற்கு  இன்னும்  நிறைய  இருக்கிறது. சமதர்மப்பூங்காவில் தொடரில் பதிவுசெய்த  வியட்நாம்  கொலைக்களம்   மட்டுமல்ல,   இன்னும்  எத்தனையோ களங்கள் எதிர்காலத்தில்  வரலாம். அதற்கான  முன்னுரைகள் இந்த  நாட்டில்  மட்டுமல்ல  பலநாடுகளில் பதிவாகத் தொடங்கிவிட்டன.   பலரை   நாம்   இழந்துவிட்டோம்.  இன்னும்  எத்தனைபேரை  இழக்கப்போகின்றோமோ  தெரியாது. உமது அனுபவங்களை இலக்கியப்பதிவுகளாக எழுதும் " என்றார்.

சிலமாதங்களில் அவரும் மறைந்துவிட்டார். 1987 இல் நான் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து 31 வருடங்களாகிவிட்டன. இக்காலப்பகுதியில் எனது இடதுசாரித் தோழர்கள், இலக்கிய நண்பர்கள் பலரும் மறைந்துவிட்டனர். காணாமல் போய்விட்டனர்.

அவர்களின் நினைவுகள் மாத்திரமே என்னிடம் எஞ்சியிருக்கின்றன.


திரும்பிப்பார்க்கின்றேன்....! இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலோ, இலங்கை ஆசிரியர் சங்கத்திலோ, மக்கள் விடுதலை முன்னணியிலோ நான் அடிப்படை உறுப்பினராகவும் இருக்கவில்லை என்பதும், ஆதரவாளனாக மாத்திரமே  இருந்திருக்கின்றேன் என்பதும்  நினைவுக்கு வருகிறது. எனது எழுத்தும் பேச்சும் தீவிர செயற்பாடுகளும் மாத்திரமே அவற்றுக்கு  நான் வழங்கிய உழைப்பாகத்தெரிகிறது!

ஜெயகாந்தன் சொல்லியிருப்பதுபோன்று, நானும் எந்தக்கட்சிக்கும் தாலி கட்டிக்கொள்ளாமல் வாழ்ந்திருக்கின்றேன்.


தொகுதி வாரியான தேர்தல்கள் மறைந்து,  விகிதாசார தேர்தல் முறை எங்கள் தேசத்தில் நடைமுறைக்கு வந்தமையால், இன்று பலருடன்  பல கட்சிகளும்  நாடாளுமன்றில் இருக்கின்றன.


விகிதாசார தேர்தல் முறை  இல்லையென்றால்,  இன்றும் அங்கே யூ. என்.பி.யும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும்தான் மாறி மாறி பெரும்பான்மை கட்சிகளாக அமர்ந்திருக்கும்.


"யூ. என்.பி. வந்தாலும் ஶ்ரீலங்கா வந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே... என்று மட்டுமல்ல, எவர் வந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலேதான்" என்று தற்போது  பாடத்தோன்றுகிறது.


அரைநூற்றாண்டுக்கு முன்னர் இலங்கை வானொலியில் (1965 இல்) தேர்தல் முடிவுகளை கேட்டு அரசியல் படிக்கத்தொடங்கி,  இன்று அரசியலும் கலந்த இலக்கியம் எழுதவேண்டிய விதிக்கு ஆளாகியிருக்கின்றேன்.
எனது முதல் சிறுகதை " கனவுகள் ஆயிரம்" போன்று மேலும் பல கனவுகள் இன்றும் தொடருகின்றன.
வாழ்வில் எஞ்சியதும் மிஞ்சியதும் என்ன....!? அன்று எனது தோழராகவும் விளங்கிய, அமரத்துவம் எய்திவிட்ட  ஆசிரியர்  மாணிக்கவாசகர் சொன்னதுபோன்று அனுபவம் மாத்திரம்தானா....?
(தொடரும்)
letchumananm@gmail.com