Theneehead-1

   Vol:17                                                                                                                                09.08.2018

நுண் நிதியக் கடன்கள் காரணமான தற்கொலைகள்

                                           கலாநிதி. அமீர் அலி

உலக சுகாதார நிறுவனத்தின் (டபிள்யு.எச்.ஓ) 2014ம் ஆண்டின் அறிக்கை ஒன்று வெளிப்படுத்துவது, மொத்தம் 172 நாடுகளில் நடைபெறும் தற்கொலை விகிதங்களின் மmicrocreditத்தியில் ஸ்ரீலங்கா நாலாவது உயர்ந்த இடத்தை பிடித்துள்ளது என்று. ஒக்ரோபர் 2017ல், தமிழ் கார்டியன் பத்திரிகையில் வெளிவந்த செய்தியின்படி, வடக்கில் மூன்று குழந்தைகள் உள்ள ஒரு இளம் தாய் அதிகளவு கடன் சுமைகளைச் சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் இதே காரணத்துக்காக அவரது கணவரும் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். 16 மே, 2018ல் இதே பத்திரிகைத் தரப்பினர் கிழக்கு மாகாணத்தில் நுண்கடன் நிதி நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக பதினேழு தற்கொலைகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றிருந்தாலும் கூட, இந்த நுண் நிதியத்தின் கடனுதவியால் இயக்கப்படும் தற்கொலைகள் என்பது நாட்டின் பல பகுதிகளிலும் தோன்றியுள்ள ஒரு தொற்றுநோய் ஆகவுள்ளது ஆனால் அதிகரித்துவரும் பொருளாதார நிதி திரட்டலின் காரணமாக இது எல்லா இடத்திலும் பரவக்கூடிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

 இந்த நுண் நிதி நிறுவனங்களின் பேராசைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏற்கனவே ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தப்படுவதையும் நாம் காண்கிறோம். ஒருவேளை இந்த துயரமான வளர்ச்சியை உணர்ந்துதானோ என்னவோ இந்த வருடம் ஜனவரி மாதத்தில் மத்திய வங்கியின் ஆளுனர் நாடுதழுவிய வீட்டுடமைகளின் கடன் தொடர்பான ஒரு ஆய்வினை மேற்கொள்ளும் தனது திட்டத்தினை அறிவித்துள்ளார். இந்த ஆய்வு முடிவடைந்து அதற்கான தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இடையில் இன்னும் எத்தனை உயிர்கள் இந்த தற்கொலை மூலமாக இழக்கப்படப் போகிறது என்பதை யாரால் ஊகிக்க முடியும். நாடு தேசிய கடன் நெருக்கடியில் மூழ்கியுள்ள அதேவேளை தனிநபர்கள் தற்கொலை செய்கிறார்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்கள், ஊழல் அரசியல்வாதிகளால் வரையப்படும் குறுகிய பார்வையுடைய பொருளாதாரக் கொள்கைகளினால் ஏற்படும் சேவைக் கடன்களுக்காக அடகு வைக்கப்படுகிறது.

தற்கொலை என்பது புதிதான ஒன்றல்ல மற்றும் தற்கொலைக்கான காரணங்கள் சிக்கலானவை. எனினும் பரவலான கடன்கள் தற்கொலையைத் தூண்டுவது ஒப்பீட்டளவில் புதியதாகவும் மற்றும் நிதிமயமான பொருளாதாரத்தின் தயாரிப்பாகவும் உள்ளது. உலகமயமாக்கல் மற்றும் சுதந்திர பொருளாதார சந்தை என்பவனவற்றை ஊக்குவிப்பவர்கள் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லாத ஒரு கசப்பான உண்மை இது. இருப்பினும் நலன்களை வழங்குவதாகத் தந்திரமாகப் பேசி வசீகரிக்கும் சுதந்திர சந்தையின் போட்டியின் தோல்வி காரணமாக உருவான ஒரு அசிங்கமான உண்மை இது,

இந்த சுதந்திர சந்தைகளை பொருளாதார பகுத்தறிவுவாதம் என்கிற பெயரில் எந்தவித தார்மீக மற்றும் ஒழுக்க நெறிமுறைக் கட்டுப்பாடுகள் இன்றி இயங்க அனுமதித்ததின் விளைவுதான் இது. பல தசாப்தங்களாக ஸ்ரீலங்கா ஆக்க நல அரசுக்கொள்கை மற்றும் சந்தை ஒழுங்குமுறை என்பனவற்றால் வழிநடத்தப்பட்டதின் பின்னர் அதற்கு பழிவாங்கும் முகமாக 1977ல் சுதந்திர சந்தை சுழற்சியை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டது மற்றும் அடிக்கடி ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் விலைமதிப்பான உள்நாட்டு யுத்தம் என்பனவற்றின் காரணமாக இப்போது சுதந்திர சந்தை முதலாளித்துவத்தின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. சந்தையினால் உந்தப்படும் பொரளாதார வளர்ச்சிக்கு இந்த தற்கொலை விகித அதிகரிப்பு ஒரு எதிர்மறையான விளைவு. கட்டுப்படுத்தப்படாத சந்தைகள்  பரவலான சமத்துவமின்மையை பெருக்குகின்றன, இந்த சமத்துவமின்மை வறுமையைப் பெருக்குகிறது மற்றும் இந்த வறுமையின் காரணமாக தற்கொலைகள் நிகழ்கின்றன. இவை அனைத்துமே ஒழுங்குமுறையானவை.

1980இலிருந்து  பொருளாதார நிதிமயமாதல் அதிகரித்ததினால் உலகளாவிய ரீதியில் மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்று ஏற்பட்டது. போக்குவரத்து மற்றும் தொடர்பால் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட புரட்சிகர மாற்றங்களின் உதவியினால், பூகோள எல்லைகள் உடைந்தன மற்றும் பூமி ஒரு உலகளாவிய கிராமமாகச் சுருங்கியது, அதுவரை உண்மையான பொருளாதாரத்துக்கு துணைபுரியும் துணைப்பாத்திரத்தை வகித்துவந்த நிதித்துறை தனது கட்டுமான வரிசையை தலைகீழாக மாற்றி முன்னணி துறையின் பங்கினைக் கைப்பற்றியது. செல்வந்தர்கள் மற்றும் அவர்களது நிறுவன நிதிக் காப்பாளர்கள் இந்த புதிய உலகில் உண்மையான பொருளாதாரத்தை விட நிதி உற்பத்திகளில் முதலீடு செய்வதின்மூலம் உயர்விகித வருமானத்தைச் சம்பாதிப்பதற்கு கவர்ச்சிகரமானதும் புதமையானதுமான வாய்ப்புகள் உள்ளதைக் கண்டார்கள். இந்த மாற்றம் பற்றிய எந்தவித விரிவான விளக்கத்தையும் பெறாமல் அதன் ஒரு விளைவு ஸ்ரீலங்காவுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும், உதாரணம் நிதி உற்பத்திகளைக் கையாளும் நிதி நிறுவனங்களின் வளர்ச்சி. ஒரு ஆய்வின்படி தெரியவந்துள்ளது, நாட்டில் 14,000 வரையான நிதி நிறுவனங்கள் நுண் கடன்களை வழங்கி வருகின்றன என்று.

உலகளாவிய ரீதியில் நுண் நிதியம் ஒரு வளரும் தொழில், அவை மரபுரீதியான வங்கிகளுடன் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு வழிகளோ அல்லது படிப்பறிவோ இல்லாத உலக சனத்தொகையில் கிட்டத்தட்ட 2.5 பில்லியன் அளவிலானவர்களுக்கு சிறிய அளவிலான கடன்களை வழங்குகின்றன. நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் யூனுஸ் அவர்களால் பங்களாதேஷில் நிறுவப்பட்ட கிராமின் வங்கி ஒரு நுண்நிதி மற்றும் சமூக அபிவிருத்தி நிறுவனம் ஆகும், அது அந்த நாட்டில் வறுமையில் உழலும் பெண்களை அதிலிருந்து கரையேறுவதற்கு ஒரு வாய்ப்பை வழங்குவதற்கு பெரிதும் உதவி செய்துள்ளது. நுண் நிதியம் பற்றிய யோசனை ஒரு பாராட்டவேண்டிய கண்டுபிடிப்பு என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் பல இடங்களில் அது செயற்படும் வழிமுறை முற்றிலும் துயரம் தருவதாக உள்ளது.

துன்பப்படும் குடும்பங்கள் வசீகரமான சலுகைகள் மற்றும் இனிமையான வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு கடன் பொறிக்குள் விழுகின்றன அது அவர்களது வறுமையைச் சீர்படுத்துவதற்கு மாறாக மேலும் மோசமாக்குவதுடன் மரணத்துக்கும் வழிகாட்டுகிறது. கடன்சுமை எவ்வளவு மோசமானது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு ஒருவர் நிறுவனத்துக்கு திருப்பிச் செலுத்தவேண்டிய ஒரு தவணைக்கட்டணத்தை செலுத்த தவறினாலே போதுமானது. தற்கொலைச் சம்பவங்கள் இந்த நயவஞ்சக நிதிப் பொறிமுறையின் ஒரு திறந்த வெளிப்பாடாகும். இந்தப் பிரச்சினைக்கான தீர்வு, நிதிசார் பொருளாதார முறையின் உற்பத்திகளான கடன் வழங்கும் நிறுவனங்களை நிருவகிக்கும் விதி முறைகளை சரிப்படுத்துவதில் மட்டும் தங்கியிருக்கவில்லை, ஆனால் ஒருபுறம் வறுமையை உருவாக்கிவிட்டு அதேவேளை மறுபுறத்தில் அதற்கான பரிகாரமாக நிதி வழங்கி ஆளையே கொல்லும் அமைப்பு  முறையையே அது தாக்குகிறது. கட்டுரையின் நோக்கம் ஸ்ரீலங்கா சந்தை முறையை கைவிட்டு திரும்பவும் அரச கட்டுப்பாட்டு முறைக்குச் செல்லவேண்டும் என்று வாதிடுவது அல்ல. சந்தை முறை சிறந்த முறையில் செயற்படக்கூடிய பொருளாதார பகுதிகள் உள்ளன அதேபோல அரசாங்கமும் வழங்கக்கூடிய சிறந்த மற்றும் மலிவான உற்பத்திகள் அல்லது சேவைகள் உள்ள பகுதிகளும் உள்ளன. எனினும் இறுதியாகக் கூறவேண்டியது, சந்தை  மனிதநேயத்துடன் செயல்படும் விதத்தில் அதை வடிவமைக்க வேண்டும். ஸ்ரீலங்காவின் சூழலில் அதை நாங்கள் பௌத்த கருணையுள்ள மனித நேயம் என அழைக்கலாம்.

தற்போது, யகபாலன ஆட்சி மற்றும் அதன் கூட்டு எதிர்க்கட்சி என்பன தங்களை முற்றிலும் சந்தை அடிப்படைவாதம் மற்றும் நிதி முதலாளித்துவம் என்பனற்றுடன் பிணைத்துக் கொண்டுள்ளன. அவர்கள் சர்வதேச நாணய நிதியம் - உலக வங்கி - வோல் ஸ்ரீட் வளாகம் என்பனவற்றின் கைதிகளாக உள்ளார்கள். காலப்போக்கில் இந்த சிறிய தீவின் பொருளாதாரத்துக்கு இது ஒரு நிலையான சூழ்நிலை அல்ல. நாடும் அதன் பொருளாதாரமும்  உலகளாவிய நிதி ஏற்ற இறக்கம் மற்றும் சர்வதேசச் சந்தையின் மாறூடுகள் எனும் உலகளாவிய வெப்ப அலைகளில் இருந்து கவசம் இட்டு தப்பிக்க முடியாது. சிங்கப்பூர் பொருளாதார மாதிரியில் கூட சந்தையின் நடத்தை மற்றும் மக்களின் பாதுகாப்பு வலையமைப்பு என்பனவற்றில் நுட்பமான கட்டுப்பாடுகள் உள்ளன. பொருளாதாரத்தை நிர்வகிப்பது மற்றும் மக்களை பாதுகாப்பது என்பனவற்றில் அரசாங்கத்துக்கு பாரிய பங்களிப்பு உள்ள ஒரு மூன்றாவது வழி அல்லது கலவையான மாதிரியை தேசம் தேடுவதற்கு ஏற்ற நேரம் இதுதான். அரசியல்வாதிகள் தூக்கத்திலிருந்து விழித்தெழுவார்களா?

(கலாநிதி.அமீர் அலி, வணிக மற்றும் ஆளுகை பாடசாலை, மர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா)

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்