மைத்திரி - மஹிந்த அரசாங்கத்தை யாராலும் கவிழ்க்க முடியாது - வாசுதேவ

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகக் கொண்ட இந்த புதிய அரசாங்கமேvasudeva தொடரும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - மஹிந்தராஜபக்ஷ இணைந்து அமைத்துள்ள அரசாங்கத்தை யாராலும் கவிழ்க்க முடியாது. ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மையை நிரூபிப்பது அநாவசியமானது  என தேசிய நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சில் இன்று வியாழக்கிழமை  கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,அரசாங்கம் தொடர்பான எந்தவொரு தீர்மானத்தை எந்தவொரு கட்சியும் எடுக்க முடியாது. காரணம் பாராளுமன்றம் அரசியலமைப்பிற்கு இணங்கவும், அரசாங்கம் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு இணங்கவுமே செயற்படும். 14 ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்ற அமர்வுக்கான ஒழுங்கு பத்திரம் தயாரிக்கப்படும். அதன்படியே அன்றைய அமர்வுகள் இடம்பெறும். இதனை சபாநாயகர் தீர்மானிப்பார் என்றார்.

பாராளுமன்றத்தின் அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் சபாநாயகர் கருஜெயசூரிய பாராளுமன்றத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தமைக்கு வாசுதேவ நாணயக்கார கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் அமெரிக்க பிரிட்டன் தூதுவர்கள் உட்பட வெளிநாட்டு தூதுவர்களை சபாநாயகர் பாராளுமன்றத்தில் சந்தித்தமை குறித்து தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் பிரிட்டனும் தங்களது தேர்தல் மற்றும் உள்விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகள் குறித்து குற்றம்சாட்டிவந்துள்ளன  என தெரிவித்துள்ள வாசுதேவ நாணயக்கார அவ்வாறன சூழ்நிலையில் எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்க பிரிட்டிஸ் தூதுவர்கள் தலையிடுவதை நீங்கள் எப்படி சகித்துக்கொள்கின்றீர்கள் என்பது புரியவில்லை என  வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

2015 இல்  அப்போதைய அரசாங்கத்தினை வீழ்த்துவதில்  மேற்குலகம்  பங்களிப்பு வழங்கியது வெளிப்படையான விடயம் எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Theneehead-1

   Vol:17                                                                                                                               09.11.2018