பிரான்சில் புலம்பெயர் தமிழர்களைச் சந்தித்த வடக்கு மாகாண ஆளுநர்.

ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடாத்திவரும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே கடந்த இரண்டு நாட்களாக பிரான்ஸ் நாட்டregi-franceில் வாழும் புலம்பெயர் தமிழர்களைச் சந்தித்து வருகிறார்.

நேற்று முன்தினம் பிரான்ஸின் புறநகர் பகுதியான மொன்ரினி நகரில் தமிழ் வர்த்தகப்பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் சிலரைச் சந்தித்த ஆளுனர், வடக்கின் தற்போதைய நிலைமை, தேவைகள் குறித்து விளக்கமளித்தார்.

யுத்தம் முடிவடைந்த பின்னரான காலத்தில் வடக்கு கிழக்கில் பாரிய அளவில் உட்கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மக்களின் அன்றாட வாழ்வை வளப்படுத்துவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படவில்லை. மக்களுக்கு வருமானத்தை பெற்றுத்தரக்கூடிய வகையில் தொழிற்சாலைகளோ அல்லது தொழில் வழங்கும் வர்த்தக நடவடிக்கைகளோ ஆரம்பிக்கப்படவில்லை. இவையே இன்றைய அவசிய தேவை என்பதை ஆளுனர் விளக்கினார்.

கல்வியாளர்கள், புத்திஜீவிகள், வசதிபடைத்தவர்கள் எல்லோரும் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து இங்கு வாழுகின்றபோது, அங்கே மிக வறிய மக்களே எஞ்சியிருக்கின்றனர், அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றவேண்டிய பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழ்களுக்கும் உண்டு என்பதை ஆளுநர் வலியுறுத்திய அதேவேளை, சிறிய சிறிய வர்த்தக முயற்சிகளை மேற்கொள்ளவதன் மூலம் அங்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்கலாம் என்றும் தெரிவித்தார்.

ஆளுநரின் சந்திப்பில், இரண்டாவது சந்திப்பு நேற்று பாரிஸ் புறநகர் பகுதியான லாகோர்னோவ் நகரில் நடைபெற்றது. பிரான்ஸ் நாட்டில் வாழும் பல்வேறு அமைப்புக்களை சேர்ந்தவர்கள், வர்த்தகர்கள் என பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், முதலில் ஆளுநருடன் விஜயம்செய்யும் அவரது செயலாளரும் இலங்கையின் மூத்த சிவில்சேவை அதிகாரிகளில் ஒருவருமான லட்சுமணன் இளங்கோவன் உரையாற்றினார்.

ஆளுநரின் இந்த விஜயத்தின் நோக்கம் குறித்து விளக்கமளித்த இளஙகோவன், அண்மையில் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான விசேட செயலணி பற்றியும் அதன் தலைவராக இருந்து வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்கள் செயற்படவிருப்பது பற்றியும் தெரிவித்தார்.

எதிர்வரும் 24ம் திகதியுடன் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தற்போதைய வடக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் நிறைவடைய இருக்கின்றது. அடுத்த மாகாணசபைத் தேர்தல் வரை ஆளுனரின் நிர்வாகத்திலேயே வடக்கு மாகாணசபை இயங்கவிருக்கின்றது. இந்தக் காலப்பகுதியில் தன்னால் முடிந்த அபிவிருத்தி திட்டங்களை மக்களுக்கு பயனுள்ள வகையில் மேற்கொள்ள ஆளுநர் விருப்பம் கொண்டிருப்பது குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் றெஜினோல்ட் கூரே, தான் கல்வி கற்ற காலத்தில் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் கல்வியில் மிக உயர்ந்த நிலையில் இருந்தது. தெற்கில் எந்த அலுவலகத்திற்கு சென்றாலும் அங்குள்ள உயர் அதிகாரிகள் தமிழர்களாகவே இருந்தார்கள். ஆனால் இன்று வடக்கின் கல்வி நிலைமை மிக மோசமாக இருக்கின்றது. வடக்கின் கல்வியை மீண்டும் கட்டி எழுப்பக்கூடிய உதவியை வழங்கக்கூடிய வசதி பலம்பெயர் தமிழ்களிடம் இருக்கின்றது. இங்குள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, வடக்கில் கல்வி நிலையங்களை அமைக்க புலம்பெயர் தமிழர்கள் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.reg-france-2

சுற்றிவர கடலால் சூழப்பட்ட இலங்கை, உப்பை கூட இறக்குமதி செய்கின்ற அவலம் அங்கு இருக்கின்றது. நவீன தொழில்நுட்ப வசதிகளை நமது நாட்டுக்கு அறிமுகம்செய்து, அங்குள்ள பாவப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்புகட்களை உருவாக்க்ககூடிய வசதி, புலம்பெயர் தமிழர்களிடம் உண்டு. அதனைச் செய்ய நீங்கள் முன்வரவேண்டும் என்று ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

பின்னர் இங்கு வருகைதந்திருந்த பலரும் புலம்பெயர் தமிழர்கள் தாயகத்திற்கு வருகைதரும்போது எதிர்நோக்கும் பிரச்னைகள், புலம்பெயர் தமிழர்களுக்கு சொந்தமான காணிகளின் தற்போதைய நிலைமைகள் பேன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும் தத்தமது சந்தேகங்களை கேட்டனர். அவற்றை செவிமடுத்த ஆளுநர், அவைகுறித்து கவனம்செலுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

அக்கூட்டத்தை அவதானிப்பதற்காக பிரான்ஸ் நாட்டுக்கான துர்துவர் திரு. பி.கே. அதாவுட, அங்கு திடீர் விஜயம்ஒன்றை மேற்கொண்டதுடன், தூதரகத்தின் செய்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். தூதரகம் இங்குள்ள இலங்கையார்களுக்கானது என்று கூறிய தூதுவர், மக்கள் எந்த நேரத்திலும் தமது தேவைகளுக்காக தூதரகத்துடன் தொடர்புகொள்ளலாம் என்றும் அதற்காக 24 மணிநேரமும் மக்கள் தொடர்புகொள்ளக்கூடிய வகையில் அதிகாரிகள் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

 

Theneehead-1

   Vol:17                                                                                                                               11.10.2018