Theneehead-1

   Vol:17                                                                                                                                12.07.2018

தவறான சூத்திரங்கள்

கருணாகரன்

கனடாவிலிருந்து நண்பர் ஒருவர் வன்னிக்கு வந்திருந்தார். விடுதலைtna cartoon2 இயக்கமொன்றில் செயற்பட்டவர். (பாருங்கள் இயக்கங்களைப் பற்றி எழுதும்போது “முன்னாள் இயக்கம்” என்று சொல்லுமளவுக்கு நமது அரசியல் வந்திருக்கிறது. இதைப்போலத்தான் போராளிகளைப் பற்றிச் சொல்லும்போதும் நம்மவர்கள் “முன்னாள் போராளிகள்” என்கிறார்கள். ஏறக்குறைய “காலாவதியாகிப்போனவை” என்ற அர்த்தத்தில். ஆனால், “முன்னாள் கட்சி”, “முன்னாள் அரசியல்வாதி” என்று யாரும் சொல்வதில்லை. இதிலிருந்தே இயக்கங்களைப்பற்றியும் போராளிகளைப் பற்றியும் தமிழ்ச்சமூகம் கொண்டிருக்கும் “எதிர்மறை” மனநிலை தெளிவாகிறது. இந்த மனநிலையைத் திட்டமிட்டு உருவாக்கியது தற்போதைய தமிழ் அரசியற் தரப்புகளும் தமிழ் ஊடகங்களுமே). வந்தவர், “வன்னியின் ஆழக்கிராமங்களைப் பார்க்க வேணும்“ என்றார். முன்பு வந்திருந்தபோது முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் உள்பட கிழக்கு வன்னியைப் பார்த்தவர், இந்தத் தடவை “வன்னியின் மேற்குப் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்குப் போகலாம்“ என்றார்.

அப்படியே கிளிநொச்சியிலிருந்து அக்கராயன் வழியாக வன்னேரிக்குளம், ஜெயபுரம், கிராஞ்சி, வலைப்பாடு, நாச்சிக்குடா, முழங்காவில், வெள்ளாங்குளம், துணுக்காய், மல்லாவி, பாண்டியன்குளம், மாந்தை, மடு வழியாகப் பயணித்தோம். நண்பருக்குப் பாதி வழியிலேயே இடுப்பு முறிந்து விட்டது. தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் மோட்டார் சைக்கிளில் இருக்க முடியாமல் அவதிப்பட்டார். அந்தளவுக்கு கிறவல் தெருக்கள் குன்றும் குழியும் புழுதியுமாகக் கெட்டிருந்தன. ஆனால், “இந்த வழிகளால்தானே தினமும் இங்குள்ள சனங்கள் போய் வருகிறார்கள். அதை நானும் அனுபவிக்க வேணும்” என்று சொல்லிக் கொண்டு நெளிந்தபடியே தொடர்ந்து பயணித்தார்.

இடங்களை வேடிக்கை பார்ப்பது நண்பரின் நோக்கமில்லை. நிலைமையைக் கண்டறிவதே அவருடைய இலக்கு. ஏதோ வந்த வேகத்தில் அல்லது சென்ற வேகத்தில் போகிற வழியில் எல்லாவற்றைப் பார்த்துச் செல்வதல்ல இந்தப் பயணம். அப்படியே அந்த மக்களோடும் அந்தப் பிரதேசங்களோடும் கலந்து நின்று எல்லாவற்றையும் அவதானிப்பது. இத்தனை காலப் போராட்டத்துக்குப் பிறகு மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? அவர்களுடைய வாழிடங்கள் (தமிழீழப் பிரதேசங்கள்) எப்படியிருக்கின்றன என்பதையெல்லாம் அறிவது. பயணிக்கும் இடங்களில் சந்திக்கும் மனிதர்களுடன் கதைத்து அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி, அவர்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகளைப் பற்றிக் கேட்டும் பார்த்தும் தெரிந்து கொள்வது. அப்படியே அவர்களுடைய அரசியல் விருப்பங்கள், நம்பிக்கைகள். எதிர்பார்ப்புகளையும் கேட்டறிவது.

ஏறக்குறைய இது ஒரு கள ஆய்வு. இந்தப் பயணத்தில் நான்கு நாட்கள் கழிந்தன. இந்த நான்கு நாட்களிலும் நண்பர் துக்கத்தின் பாரத்தைத் தாங்க முடியாமல் தவித்ததைக் கவனித்தேன். கூடவே பல சந்தர்ப்பங்களிலும் கோபம் கொந்தளிப்பதையும் கண்டேன். போரினால் அழிவடைந்த பிரதேசங்களையும் மக்களையும் மீள் நிலைப்படுத்துவதில் அரசாங்கத்தின் தவறுகள் தாராளமாக இருந்தன என்றால், அதே அளவுக்குப் பொறுப்பின்மையும் தவறுகளும் தமிழ் அரசியற் தரப்பிலும் இருந்ததைச் சனங்களின் வெளிப்பாடுகள் நிரூபித்தன. நண்பருக்கு என்ன செய்வது, என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நான் எதையும் பேச விரும்பவில்லை. அல்லது அதைத் தவிர்த்தேன்.


பயண வழியில் தற்போதைய அரசியல் சூழலைப்பற்றிக் கவலையோடும் கோபத்தோடும் பேசிக்கொண்டிருந்தார். அப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு கட்டத்தில் கேட்டார், “தமிழ் மக்களுடைய அரசியல் ஏன் தேங்கிப்போயிருக்கு? அதை முன்கொண்டு செல்வதற்கான வாய்ப்புகளில்லையா? மாற்று அரசியல், புதிய அரசியல் போன்றவற்றுக்கு இந்த மண்ணில் இடமேயில்லையா? அல்லது அதை மக்கள் விரும்பவில்லையா? மாற்று அரசியலைச் செய்ய வேணும் எண்டு விரும்புகிறவர்கள் ஏன் அதைச் செய்வதற்குப் பின்னிற்கிறார்கள்? அல்லது முடியாமலிருக்கிறார்கள்? அவர்களுக்கிடையிலே ஏன் ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்க முடியாமலிருக்கு? இந்தச் சனங்களின் அழிவிதியை எப்படி மாற்றுவது...”

இதற்கும் நான் பதிலேதும் சொல்லவில்லை. புன்னகைத்தேன்.

ஆனால், இதற்குரிய பதிலை அவரும் அறிவார். நானும் அறிவேன். பெரும்பாலும் நீங்களும் அறிவீர்கள். ஆனாலும் நமக்கொரு பதில் வேண்டியிருக்கிறது. அந்தப் பதில் வேறொருவரிடமிருந்து வரவேணும் என்று எதிர்பார்க்கிறோம். அதாவது மற்றவர்கள் இதைப்பற்றி என்ன எண்ணுகிறார்கள் என்று அறிவதற்கு.

இதுதான் தமிழர்களுடைய அரசியல், பண்பாடு, வாழ்க்கை எல்லாமும். தாமாக (சுயமாக) எதையும் தீர்மானிப்பதில்லை. மற்றவர்கள் என்ன எண்ணுகிறார்கள்? அவர்கள் எதைத் தெரிவு செய்கிறார்கள்? அல்லது அவர்களுடைய தெரிவு எப்படியிருக்கிறது – எதுவாக இருக்கிறது? என்றே பார்க்கிறார்கள். அரசியலில் எந்தக் கட்சியை ஆதரிப்பது? எவருக்கு வாக்களிப்பது என்பது மட்டுமல்ல. எப்படி வீட்டைக் கட்டுவது? சோதிடர் என்ன சொல்கிறார். மேசனின் அபிப்பிராயம் என்ன? தச்சு வேலை செய்கிறவரின் ஆலோசனை என்ன? என்பதற்கேற்பவே பெரும்பாலானவர்களின் வீடுகள் கட்டப்படுகின்றன. இதைப்போலவே எவ்வாறு திருமண நிகழ்வை நடத்துவது? எப்படி உடைகளை அணிவது? என்பது வரையில் சுயதேர்வுக்கும் சுய புத்திக்கும் இடமளிக்காமல் மற்றவர்கள் எப்படியோ அப்படியே நாமும் என்ற கணக்கில்தான் எல்லாமே நடக்கின்றன.

இதனால் எதைப்பற்றிய விசாரணைகளும் நடப்பதில்லை. அப்படி விசாரணை செய்யக் கூடிய – ஆராயக் கூடிய மனநிலையும் (மனத்தைரியம்) இல்லாமற் போய்விடுகிறது. இதனால் எதைப்பற்றிய தீர்மானத்தை எடுப்பதற்கும் ஒவ்வொருவருக்கும் மற்றவர்களின் பதிலே  தேவைப்படுகிறது.

நண்பர் கேட்ட கேள்விகளை நீங்களும் உங்களுக்குள்ளே கேட்டுப்பாருங்கள்.  நிச்சயமாக உங்களுக்குப் பதில் தெரியும். அல்லது அந்தப் பதிலை நீங்கள் கண்டடையலாம். 

1.தமிழ் மக்களுடைய அரசியல் ஏன் தேங்கிப்போயிருக்கு?

அதைச் சரியான முறையில் முன்னெடுக்காதபடியால்.

2.அதை முன்கொண்டு செல்வதற்கான வாய்ப்புகளில்லையா?

நிச்சயமாக உண்டு.

3.மாற்று அரசியல், புதிய அரசியல் போன்றவற்றுக்கு இந்த மண்ணில் இடமேயில்லையா? அல்லது அதை மக்கள் விரும்பவில்லையா?

நிச்சயமாக இடமிருக்கு. மக்களும் அதை விரும்புகிறார்கள்.

4.மாற்று அரசியலைச் செய்ய வேணும் எண்டு விரும்புகிறவர்கள் ஏன் அதைச் செய்வதற்குப் பின்னிற்கிறார்கள்? அல்லது முடியாமலிருக்கிறார்கள்?

அவர்கள் மந்திரத்தால் மாங்காய் விழுத்துவதற்கு விரும்புகிறார்கள். கற்பனையில் குதிரைச் சவாரி செய்கிறார்கள். இல்லையென்றால், மாற்று அரசியலைச் செய்ய வேண்டியவர்கள். மக்களின் துயரைப் போக்கவேண்டியவர்கள் தாமே என்று தெரிந்து கொண்டும் தமக்கிடையில் பேசி ஒருங்கிணையத் தயங்குவதும் புதிய அரசியலை முன்னெடுக்க முடியாமலிருப்பதும் மாபெரும் தவறல்லவா. குற்றமல்லவா!

5.அவர்களுக்கிடையிலே ஏன் ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்க முடியாமலிருக்கு?

அவர்கள் மாற்று அரசியலை விரும்பினாலும் மாற்று அரசியலைப் பற்றிப் பேசினாலும் அடிப்படையில் சாதியவாதிகளைப்போல, மதவாதிகளைப்போல, பிரதேசவாதிகளைப்போல தமது கட்சி, தமது குழு, தமது அணி என்ற அளவில்தான் சிந்திக்கிறார்கள். தாங்கள் மட்டும் சரியானவர்கள், மேலானவர்கள், புனிதர்கள் என்று நம்புவதால் மற்றவர்களுடன், மற்றத்தரப்புகளுடன் இணையமுடியாமலிருக்கிறார்கள். இதனால் பொது அணி ஒன்றை  உருவாக்குவதற்கோ பொதுவேலைத்திட்டமொன்றை வரைவதற்கோ பொதுவேலையில் இணைவதற்கோ இவர்களால் முடியாதிருக்கிறது.
 

ஒரு முன்னோடிப் போராளித் தலைவர் சொல்வதைப்போல “பெட்டிக்கடை” மனோபாவத்தோடுதான் ஒவ்வொருவரும் உள்ளனர். (பெட்டிக்கடைத் தொழிலை இந்தப் பத்தியாளர் எந்த நிலையிலும் குறைத்து மதிப்பிடவில்லை).

6.அப்படியானால் இந்தச் சனங்களின் “அழிவிதி”யை எப்படி மாற்றுவது?

சனங்களாகவே கண்டறிந்து மாற்றினால்தான் உண்டு. இல்லையென்றால் தவிர்க்கவே முடியாது, “அழிவிதி”தான். ஏனெனில் இன்று தமிழ்ச்சமூகத்துக்கும் தமிழ்மொழியைப் பேசும் சமூகங்களுக்குரியவாறும் செயற்படுவதற்கான சரியான தலைவர்கள் யாருமே இல்லை. சரியான தரப்புகளும் கட்சிகளும் அருகி விட்டன.

அப்படியான தலைவர்களும் கட்சிகளும் உருவாகுவதற்கான அக – புறச் சூழலை தமிழ்ச்சமூகம் மறுதலித்தும் இழந்தும் வருகிறது. எந்தச் சமூகத்திலும் இத்தகைய நெருக்கடிகள் – எதிர்மறை அம்சங்கள் இருப்பதுண்டு. ஆனால், தமிழ்ச்சமூகத்தில் இது மிகக் கூடுதலாக – பலமாக உள்ளது.

இதனால் “மாற்றுகள்” அல்லது “புதிதுகள்” உருவாகுவதற்கான ஏதுநிலைகள் குறைவாகவே தெரிகின்றன. இதனால்தான் தமிழ் அரசியல் தேங்கிப்போய் – தோல்வியின் அடிவாரத்தில் “அழிவிதி”யாக உள்ளது.

இதை மாற்றுகிறோம் என்ற பேரில் ஆளை மாற்றுவதற்கும் அணியை மாற்றுவதற்குமாக ஒவ்வொருவரும் முயற்சிக்கிறார்களே தவிர, அடிப்படைப் பிரச்சினையை உணர்ந்து செயற்படுவதற்கு யாரும் தயாரில்லை. உதாரணம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குப் பதிலாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி அல்லது தமிழ் மக்கள் பேரவை அல்லது தமிழ்த்தேசியப் பேரவை இல்லையென்றால் தமிழ்த்தேசிய விடுதலைக்கூட்டமைப்பு என்றே சிந்திக்கப்படுகிறது.

இன்னொரு வகையில் சொன்னால், சம்மந்தனுக்குப் பதிலாக விக்கினேஸ்வரன். அல்லது மாவை அல்லது கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.... இப்படியொரு சூத்திரமே தொடர்ந்தும் முன்மொழியப்படுகிறது.

இது முற்றிலும் தவறான சூத்திரமாகும். அடிப்படைப் பண்பில் மாற்றம் நிகழாமல் மேலோட்டமாக ஆளை மாற்றிவிடுவது. இதனால்தான் தமிழ்ச்சமூகத்திற்குத் தொடர் தோல்வி ஏற்படுகிறது. அல்லது தொடர் தோல்வியில் தமிழ்ச்சமூகம் சிக்கிக் கிடக்கிறது.

இந்தத் தொடர்தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து மெய்யாகவே புதிய – மாற்று அரசியல் ஒன்றை பண்பு ரீதியாக முன்னெடுப்பதற்கும் வளர்த்தெடுப்பதற்கும் தமிழ் மனநிலையில் தெம்பில்லை.

இது ஒரு சமூகத்தின் ஆற்றலை, அதன் சிந்தனை வளத்தை மறுதலிக்கும் ஒரு வகையான அதிகாரச் செயலாகும். பிற தெரிவுகளுக்கு இடமளிக்க மறுக்கும் சிந்தனைக் குறுக்கம் அடிப்படையில் மனித மேம்பாட்டின் விதிக்கும் சமூக வாழ்வுக்கும் எதிரானது.

ஆனால், இதையே தமிழ் ஊடகங்கள் தொடர்ந்தும் செய்கின்றன. இதையே தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதையே தமிழ் அரசியல் முன்னெடுப்பாளர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் (அல்லக்கைகளும்) செய்து கொண்டிருக்கின்றனர்.

இது  முற்றிலும் தவறு. பெருங்குற்றத்திற்குரியது. தமிழ்த்தேசியவாத அரசியற் சொல்லாடலில் சொல்வதானால் பச்சைத் துரோகமானது.

ஒவ்வொரு தனிமனிதரும் ஒட்டு மொத்தத் தமிழ்ச்சமூகமும் உண்மையில் மாற்று அரசியல் ஒன்றுக்காக – புதிய அரசியற் பண்பாட்டுக்கான தேவையோடிருக்கும்போது, அதை மறுதலிக்கும் சிந்தனையைப் பராமரிப்பது வரலாற்றிற்கு மாறானதல்லவா. வரலாற்றுக்கு மாறானவை தவறாகும். குற்றமாகும் அல்லவா!

அப்படியானால் இதை உடைக்க வேண்டும்.

ஆனால், இந்தப் பலமான பின்னோக்கிய சிந்தனையை உடைப்பது எளிதானதல்ல. சமூகத்தின் அத்தனை தளங்களிலும் தன்னை வலுவாக்கி வைத்திருக்கும் இந்தச் சிந்தனைப்போக்கினை உடைப்பது சாதாரணமானதல்ல. அப்படியானால் அதற்கான சிந்தனைத்திறனும் கடுமையான உழைப்பும் தேவை. நல்ல – திறன்மிக்க தலைமைத்துவம் வேணும். தனியொருவரின் எதிர்ப்போ,  ஒரு சிறிய குழுவின் மறுதலிப்புகள் – எதிர் நடவடிக்கைகளோ போதுமானதல்ல.   

ஓஹோ... அப்படியானால் தமிழரின் அரசியல் தேங்கிப்போய், வீழ்ந்தேயிருக்கப்போகிறதா? என்ற கேள்வி  மீண்டும் உங்களுக்கு எழலாம்.

எந்தச் சமூகத்திலும் வீழ்ச்சியும் எழுச்சியும் நிகழ்வதுண்டு. உலக வரலாறே இதை நிரூபிக்கும். ஆனால், தமிழ்ச் சூழலில் அதற்கான நிகழ்தகவு ரொம்பக் குறைவாகவே உள்ளது. ஏனென்றால், தமிழ்ச்சமூகத்தை ஆட்சி செய்வது மனிதர்களோ தலைவர்களோ மேன்மையானவர்களோ அல்ல. (?)

நாங்கள் நான்காவது நாள் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியபோது சிறிய நகரொன்றில் தேநீர் குடிப்பதற்காக வண்டியை நிறுத்தினோம். “இந்தப் பேய்களை விரட்ட வேணும். இதுகளை வைத்துக் கொண்டு ஒரு மண்ணும் செய்யேலாது” என்றார் அங்கே வந்த ஒருவர்.

நான் நண்பரின் முகத்தைப் பார்த்தேன். நண்பர் வெளியே எங்கேயோ பார்ப்பதைப்போலப் பாவனை காட்டினார். பிறகு அவர் வானத்தைப் பார்த்தார்.

தேவன் வருவாரா?