Theneehead-1

   Vol:17                                                                                                                               13.09.2018

 அ, ஆ, இ

- கருணாகரன்

பள்ளியில் படிக்கும் காலத்தில், இளமைப்பருவத்தில், இலக்கிய வாசிப்பிலும் எழுத்திலும் ஈடுவது இன்றைய நிலையில் ஆச்சரியம். அந்தளவுக்கு வாழ்க்கைமுறை மாறியுள்ளது. noolதகவல் தொழில்நுட்பத்தைச் சரியாகக் கையாளும் பயிற்சியும் தெளிவும் இல்லாத சூழல் இளையோரை திசைக் குழப்பங்களுக்குள்ளாக்கியிருக்கிறது. இதற்குள்ளும் ஆச்சரியமாகவும் நம்பிக்கையளிக்கும் விதமாகவும் எழுத்து, இலக்கிய நாட்டம், பிற கலைத்துறைகளில் ஈடுபாடு, சமூகக் கரிசனையுள்ள செயல்கள் என்று இயங்கும் புதிய தலைமுறையினர் உண்டு. இவர்களில் ஒருவராக மாதவி உமாசுதசர்மா உள்ளார். மாதவிக்கு இலக்கியத்தில், கவிதையில் ஆர்வம். மாதவி ஆர்வத்தோடு எழுதிய கவிதைகள் இங்கே தொகுப்பாகின்றன. இவை அவருடைய வளரிளம் பருவத்தின் முதற்கவிதைகள்.

வளரிளம்பருவத்தில் எழுதப்படும் கவிதைகளோ கதைகளோ தொகுப்பாக்கம் பெறுவது அநேகருக்குச் சாத்தியமில்லை. எப்படியோ மாதவிக்கு அந்தச் சாத்தியம் வாய்த்துள்ளது. வளரிளம்பருவத்து எழுத்துகள் பின்னுருவாகும் இன்னொரு வளர்ச்சி நிலையில் பயில்கவிதைகளாகவும் புதிய கவிதைகளுக்கான படிக்கற்களாகவுமே இருப்பதுண்டு. மாதவிக்கும் அப்படியே அமையும் என்பது நம்பிக்கை. இதற்கு எளிய உதாரணம், இன்று பெரிய அளவில் கவனத்தைப் பெற்றுள்ள மனுஷ்ய புத்திரன் எழுதிய ஆரம்பகாலத்துக் கவிதைகள். அவை மணிமேகலை பிரசுரமாக “மனுஷ்யபுத்திரன் கவிதைகள்” என்ற பெயரில் தொகுப்பாக வெளியாகியிருந்தன. அந்தக் கவிதைகளுக்கும் பின்னாளில் மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதைகளுக்கும் இடையில் குணாம்ச ரீதியாகவும் வடிவ ரீதியாகவும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த ஆரம்பகாலத்துக் கவிதைகளைப் படிக்கும் ஒருவர் இன்றைய மனுஷ்ய புத்திரனின் கவிதைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒரு கவியாளரின் வளர்ச்சி நிலைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை உணர்ந்து கொள்ள முடியும்.

இவ்வாறே ஒவ்வொரு எழுத்தாளரும் கவிஞரும் தங்கள் தொடக்க நிலை எழுத்துகளிலிருந்து வளர்ச்சியடைகிறார்கள். பலரிடம் தொடக்கநிலை அல்லது ஆரம்பகால எழுத்துகளின் வெளிப்பாட்டு ஆவணப்படுத்தல்கள் இருப்பதில்லை. இதனால் அவர்களுடைய வளர்ச்சி நிலையை அறிய முடியாதிருக்கிறது. மாதவியின் இந்தப் பிரதியைப் படிக்கும்போது என்னுடைய தொடக்க நிலைக் கவிதைகள் அப்படியே நினைவுக்கு வருகின்றன. யுத்தம் அழிக்காது விட்டால் அவற்றை இந்தப் பிரதியோடு ஒப்பிட்டிக்க முடியும். அந்தக் கவிதைகளிலிருந்து எவ்வளவோ தூரம் நான் விலகி வந்திருக்கிறேன். ஏன் பின்னாளில் எழுதிய கவிதைகளிலிருந்து இன்றும் இன்று எழுதும் கவிதைகளிலிருந்து நாளையும் நாம் விலகிப் பயணிக்கவே செய்கிறோம். அதுவே இலக்கியத்தின் விதி.

மாதவியின் தொடக்க நிலைக் கவிதைகள் இங்கே தொகுப்பாக்கம் பெறுவதனால் பின்னாளில் அவர் எழுதப்போகும் கவிதைகள் அல்லது பிற துறை எழுத்தாக்கங்களில் அவருடைய வளர்ச்சி நிலையையும் மாற்றங்களையும் நாம் அறிவதற்கான ஏது நிலைகள் இருக்கும். இது தனியே மாதவியை மட்டுமல்ல அவரிடத்தில் ஏற்படும் மாற்றங்களையும் அதற்கான சமூகத்தின் அக – புற நிலைகளையும் அறிவதற்கான சாத்தியங்களையும் தரும். அந்த வகையில் இந்தத் தொடக்க நிலைக் கவிதைகளின் தொகுப்பாக்கத்துக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதனிலும் கூடியதாக நாம் உணரக்கூடியதாக இருப்பது, இந்தத் தொகுப்பாக்கம் தற்போது மாதவிக்கு ஊக்கமாக அமையும். பின்னாளில் அவர் இதை ஒரு விசைத்தளமாகப் பயன்படுத்தி மேலெழுவதற்கான ஊக்கியாக இருக்கும் என்பது. ஆகவே இந்தத் தொகுப்பாக்கத்தின் மூலம் மாதவிக்கு ஊக்கத்தை அளிக்கும் அனைவருக்கும் பாராட்டுகள்.

மாதவி தன் வயதை மீறிய விரிபார்வையைக் கொண்டிருக்கிறார். அம்மாவில் தொடங்கி புரட்சியின் நாயகனாகக் கருதப்படும் சே குவேரா வரையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையைப் பற்றிய மதிப்பீடுகளையும் சமூகப்பெறுமானங்களையும் கவிதையாக்க முற்பட்டிருக்கிறார். கவிதையில் இந்த மாதிரி கதைகூறுதல்களுக்கும் விபரிப்புகளுக்கும் இடமிருக்குமா என்று யாரும் கேட்கலாம். கட்டற்றது கவிதை. முறையும் வரையறைகளுமற்றது இலக்கியம். சுதந்திரத்தின் இன்னொரு வடிவமே அது என்பதே பதிலாகும். இன்று கவிதை வெளிப்பாட்டில், மொழியில், கவிதை வடிவத்தில் அவருடைய எல்லைகள் வேறாக இருக்கலாம். நாளை இன்னொன்றைத் தருவார் என்பது நம்பிக்கை.

மாதவி எல்லாவற்றையும் பரீட்சித்துப் பார்க்க விரும்பும் குழந்தைத் துடிப்போடு வெளியிறங்கியிருக்கிறார். அவருடைய வெளியில் அவர் எல்லாவற்றையும் நிகழ்த்தி மேலழட்டும். அதை நாம் ஆதரிப்போம். ஊக்கவிசையூட்டுவோம். எங்கள் நிழலை விலக்கி தானே கண்டடையும் ஒளியோடு வளர வாழ்த்துவோம்.


(மாதவி உமாசுதாசர்மா என்ற பள்ளி மாணவியின் கவிதை நூலுக்கு எழுதிய அணிந்துரை)