Theneehead-1

   Vol:17                                                                                                                               18.10.2018

புதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...?


அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ்  கடந்தவாரம் சீனாவுக்கு எதிராக புதியதொரு பனிப்போரைப்  ( Cold War)பிரகடனம் செய்தார். ஏற்கெனவே நிலைபெற்றுவிட்ட new coldwarவல்லரசொன்றுக்கும் வளர்ந்துவருகின்ற வல்லரசொன்றுக்கும் இடையிலான மோதல் பெரும்பாலும் எப்போதும் தவிர்க்கமுடியாதது என்ற சான்று ஆதாரங்களுடனான கருதுகோளை பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர் துசிடைட்ஸ் முன்வைத்த காரணத்தால் வளர்ந்துவரும் வல்லரசிடமிருந்து போட்டியை எதிர்நோக்குகின்ற பழைய வல்லரசு ' துசிடைட்ஸ் பொறியில்'  ( Thucidides Trap )காலடி வைக்கிறது என்று வர்ணிப்பது வழக்கில் இருந்துவருகிறது. அமெரிக்கா இப்போது  அத்தகைய பொறியில் கால்வைத்துவிட்டது என்பது தெளிவானது.

சீனா பெருவாரியான தவறுகளைச் செய்வதாக பென்ஸ் குற்றஞ்சாட்டியிருக்கிறார் ; நேர்மையற்ற வாணிபம், தொழில்நுட்பத் திருட்டு, இலக்குவைத்து வரிவிதித்தல், அமெரிக்க தேர்தல் செயன்முறைகளில் தலையீடு செய்தல், இராணுவக் குவிப்பு, தென்சீனக்கடல் தீவுகளில் இராணுவமயமாக்கம், கடனுதவி இராஜதந்திரம், அமெரிக்காவுக்கு எதிரான பிரசாரம் மற்றும் இணைய ஒடுக்குமுறை என்று சீனாவின் அந்த தவறுகளை அவர் அடுக்கியிருக்கிறார்.

சீனா மீதான இந்த சீற்றம் 2016 ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவுடன் சேர்ந்து டொனால்ட் ட்ரம்ப் சூழ்ச்சித்தனமாகச் செயற்பட்டிருக்கக்கூடிய சாத்தியப்பாடு குறித்து தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற விசாரணைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் நோக்குடனானது அல்லது அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க காங்கிரஸின் இடைக்காலத் தேர்தலில் குடியரசு கட்சிக்கு வாக்குகளை திரட்டுவதை நோக்கமாகக் கொண்டது என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால், ஆழமாக ஆராய்ந்துபார்த்தால் சீனாவுக்கு எதிரான பென்ஸின் குற்றச்சாட்டுகள் அமெரிக்க ஆட்சி நிறுவனக்கட்டமைப்பின் தீர்க்கமான கொள்கையைப் பிரதிபலிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். அமெரிக்க துணை ஜனாதிபதியின் இந்த உரைக்கு முன்னதாக சீனாவும் ரஷ்யாவும் அமெரிக்காவின் பகையாளிகள் என்று வர்ணிக்கும் தேசிய கேந்திரமுக்கியத்துவ விவகார ஆய்வு ஆவணங்கள் வெளியிடப்பட்டிருந்தன. அத்துடன் சீன இராணுவ நிறுவனங்களுக்கு எதிராக தடைகள் விதிக்கப்பட்டன. தாய்வானுக்கு ஆயுத விற்பனையை அமெரிக்கா மீளத்தொடங்கியது. தென்சீனக் கடலில் அமெரிக்க கடற்படை ரோந்து நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டன.

வர்த்தக சலுகைகளை வழங்குவதன் மூலமாகவும் கொரிய மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் ஒத்துழைப்பதன் மூலமாகவும் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் பயனுறுதியுடையதாக அமையக்கூடியதான உறவுமுறையைக் கட்டியெழுப்புவதற்கு பெய்ஜிங் மேற்கொண்ட முயற்சிகள் வெட்டவெளிச்சமாக தோல்வி கண்டன.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார மோதல் உலகப் பொருளாதாரத்துக்கு பரந்தளவிலான பாதிப்புகளைக் கொண்டுவரும்.அமெரிக்காவும் சீனாவும் முறையே ஒரு சதவீத, இரண்டு சதவீத வளர்ச்சியை இழக்கக்கூடும் என்றும் அதேவேளை  உலக பொருளாதார வளர்ச்சி சுமார் அரை சதவீதத்தினால் சுருங்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டிருக்கிறது. சீன -- அமெரிக்க வர்த்தகப் போரின் விளைவாக ஏனைய நாடுகளின் பொருளாதாரங்கள் பாதிக்கப்படுவதால் இன்னொரு உலக பொருளாதார மந்தநிலை தோன்றும் என்று அஞ்சப்படுகிறது. இந்தோ- பசுபிக்கில் சீனாவை அமெரிக்கா ' கட்டுப்படுத்துவதற்கான' வாய்ய்புகளும் மிகக் குறைவே. அமெரிக்காவின் ஆட்சேபங்கள் மற்றும் மேற்குலகின் பிரசாரங்கள் இருந்தாலும் சீனாவின் ' ஒரு மண்டலம், ஒரு பாதை' என்று அழைக்கப்படுகின்ற புதிய பட்டுப்பாதை திட்டம் தடம்புரள்வது சாத்தியமில்லை.
coldwar
புதிய பனிப்போர் உலகளாவிய ஊடாட்டங்கள் மற்றும் ஆட்சிமுறை கட்டமைப்புக்களை மாற்றியமைக்கும். உலகப்  பிரச்சினைகள்( அணுவாயுத பரவல் தடுப்பு, காலநிலை மாற்றம் , பயங்கரவாதம் போன்றவை) மற்றும் பதற்றநிலைக்குள்ளாகியிருக்கும் பிராந்தியங்கள் ( வடகொரியா, ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு ) தொடர்பில் பெரிய வல்லரசு நாடுகள் மத்தியிலான ஒத்துழைப்பு ஒரு உறைநிலைக்குச் செல்லக்கூடிய ஆபத்து வரும். சீனா , ரஷ்யா மற்றும் யூரேசியாவின் மத்திய பிராந்தியத்தைச் சேர்ந்த நாடுகள் மத்தியில் நெருக்கமான உறவுகள் வளரும்.அமெரிக்க மேலாதிக்கத்தை இல்லாமல் செய்வதற்கான நோக்கத்துடன் மாற்று வர்த்தக , நிதித்துறை மற்றும் அபிவிருத்தி அமைப்புகள் தோன்றும்.

தெற்காசியாவின் கேந்திர விசையாற்றலும் மாற்றியமைக்கப்படக்கூடும். சீனாவுக்கு எதிரான கூட்டணியொன்றுக்காக அமெரிக்கா வகுக்கின்ற வியூகங்களினால் இந்தியா கவரப்பட்டாலும் கூட  பூட்டான் எல்லையில் டொக்லாம் பகுதியில்  ஏற்பட்டதைப் போன்ற முரண்நிலைகளைத் தவிர்க்கவும் சீனாவுடனான வர்த்தக மற்றும் முதலீட்டு பயன்களைப் பெற்றுக்கொள்ளவும் புதுடில்லி விரும்புகிறது.அத்துடன் இந்திய ஆயுத விநியோக தொர்புகளை ரஷ்யாவுடன் பேணுவதிலும் அக்கறை காட்டுகிறது.சீனாவுக்கம் அமெரிக்காவுக்கும் இடையே விரிவடையக்கூடிய முரண்நிலை இந்தியாவுக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுக்கும் என்பதுடன் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கிடையே கேந்திரமுக்கியத்துவ தெரிவொன்றைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தை புதுடில்லிக்குக் கொடுக்கும்.

இந்தியாவைப் போலன்றி பாகிஸ்தானின் தெரிவு தெளிவானது.சீனாவுடனான கேந்திரத்தோழமை பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக்கும் சமூக பொருளாதார அபிவிருத்திக்கும் மிக அவசியமானது. இந்தத் தெரிவு இயல்பாகவே அமெரிக்காவுடனான கேந்திரஉறவுமுறையில் ஒரு விலகலைச் செய்யவேண்டிய நிலைக்கு பாகிஸ்தானைத் தள்ளும்.இத்தகைய ஒரு விலகல் ஏறபடும்பட்டசத்திலும் கூட அமெரிக்காவுடன் ஒரு குறைந்த பட்ச ஒத்துழைப்பை பாகிஸ்தானால் பேணக்கூடியதாக இருக்குமா என்பதே கேள்வி. ஆப்பானிஸ்தான் நெருக்கடிக்கு அரசியல் இணக்கத்தீர்வொன்று காணப்பட்டாலென்ன காணப்படாவிட்டாலென்ன அந்த நாட்டில் அமெரிக்கப்படைகள் நிலைகொண்டிருக்கும்வரை பாகிஸ்தான் சிலவயைான தந்திரோபாய வியூகங்களைச் செய்வதற்கு இடமிருக்கும் எனபதில் சந்தேகமில்லை.

அமெரிக்காவுடனான கூட்டணியிலிருந்து சற்று விலகியிருப்பதற்கு இந்தியா தீர்மானிக்குமேயானால் அது  எமது பிராந்தியம் முழுவதினதும் அரசியல் மற்றும் பொருளாதார உறவுமுறைகளின் நுண்கணிதத்தை பெருமளவுக்கு மாற்றியமைத்துவிடக்கூடும்.சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சுமுகமான உறவுகள் வளருமேயானால் அது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் சமுகமடையக்கூடிய வாய்ப்புக்களை அதிகரிக்கும் என்பதுடன் காஷ்மீர் நெருக்கடிக்கும் விட்டுக்கொடுப்பின் அடிப்படையிலான ' தீர்வு' ஒன்றைக் காண்பதற்கான வாய்ப்புகளும் தோன்றக்கூடும்.பிராந்திய நாடுகளிடையே நெருக்கமான தொடர்புகள் ஏற்படுத்தப்படவேண்டும் என்ற நோக்குகளும் யதார்த்தமாகும்.ஆனால், 2019 இந்திய பொதுத்தேர்தல் வரை அத்தகைய சூழ்நிலைகள் உருவாவது பெருமளவுக்கு சாத்தியமில்லை.

புதிய பனிப்போர் பழைய பனிப்போரையும் விட பரந்ததாகவும் கூடுதலான அளவுக்கு  சிக்கல்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என்றபோதிலும், மிக நீண்டகாலத்துக்கு தொடராமல் போகக்கூடும்.சீனாவுடனும் ரஷ்யாவுடனுமான மோதல் அல்லது முரண்நிலை மிகவும் செலவுபிடிக்கிற ஒன்று என்றும் பயனற்றது என்றும் அமெரிக்க மக்கள் மத்தியில் அபிப்பிராயம் ஏற்படுவதையும் விரைவில் காணக்கூடியதாக இருக்கும்.ட்ரம்பின் பதவிக்காலத்தின் முடிவுக்குப் பிறகு அமெரிக்காவில் பதவிக்கு வரக்கூடிய ஒரு  ஜனநாயக கட்சி நிருவாகம் சீன ஜனாதிபதியினால் பிரேரிக்கப்பட்டவாறான இரு தரப்புக்குமே பாதிப்பு இல்லாமல் பயன்தரக்கூடிய உறவுமுறையொன்றைக் கடைப்பிடிப்பதற்கு தீர்மானிக்கக்கூடும்.

( இக்கட்டுரை ஐக்கிய நாடுகளுக்கான முன்னாள் பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி முனிர் அக்ரம் எழுதியது)

தமிழில்: வீரகேசரி