Theneehead-1

   Vol:17                                                                                                                               18.10.2018

அரசியல் கைதிகளின் விடுதலை: செய்திருக்க வேண்டியது

    கருணாகரன்

சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டிய அவசியம், சிலதரப்புகளைப்பற்றி மறுபடி மறுபடி எழுத வேண்டிய நிலை எல்லாம் பெருங்கொடுமையானது. ஆனால்tpp என்ன செய்வது? தமிழ்ச்சமூகத்தின் விதி அப்படித்தானே உள்ளது.

எவ்வளவுதான் சொன்னாலும் அதையெல்லாம் காதிலே போட்டுக்கொள்ளாமல், திரும்பத்திரும்பத் தவறுகளைச் செய்கிறவர்களாகத்  தமிழ்ப்பெருங்குடி மக்களும் அவர்களுடைய ‘மேய்ப்பர்’களும் உள்ளனர்.

இதனால் திரும்பத்திரும்பச் சிலவற்றைச் சொல்லியே ஆக வேண்டியுள்ளது. ஆகவே, நம்முடைய விதியும் இப்படித்தான், ஏற்கனவே சொன்னவற்றையே சலிக்கச் சலிக்க மறுபடி மறுபடி பேச வேண்டியதாக உள்ளது.

ஒரு சிறிய உதாரணத்தைப் பாருங்கள், கடந்த இரண்டு வாரங்களாக பலருடைய கவனத்தையும் ஈர்த்திருந்த “அரசியல் கைதிகள்” என்று சொல்லப்படும் சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களுக்கான ஆதரவுப் போராட்டங்களின் முடிவு கேள்விக்கிடமாகி விட்டது என்பதை.

இறுதியில் இந்தப் போராட்டமானது, வரவு செலவுத்திட்டத்தின்போது கூட்டமைப்பு என்ன செய்யப்போகிறது, எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பிற்குள்ளே சுருங்கி விட்டது. கூட்டமைப்போ ஒழுங்கான பதிலைச் சொல்லாமல் இழுத்தடித்து நழுவப்பார்க்கிறது.

அநுராதபுரத்தில் சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களைச் சந்தித்த சேனாதிராஜா சொன்னார், “வரவு செலவுத்திட்டத்தின்போது நாம் இந்த விவகாரத்தைக் குறித்துத் தீர்க்கமான முடிவை எடுப்போம். வரவு செலவுத்திட்டத்தில் எதிர்த்து வாக்களிப்போம்” என. ஆனால், இதற்கு முன்பு இந்தப் போராட்டத்தைப்பற்றிய கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த சித்தார்த்தன் சொன்னார், இதைப்பற்றி தன்னால் எதுவும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. கட்சியே (கூட்டமைப்பின் கூட்டத்திலேயே இதற்கான முடிவை எடுக்கலாம் என. இப்பொழுது சுமந்திரன் சொல்கிறார், இதைபற்றி எதிர்வரும் 17 ஆம் திகதிதான் கூடிப் பேசவுள்ளோம் என.

இதிலே பேசுவதற்கு என்ன இருக்கிறது? இந்த விடயத்தை வேறு என்ன வழிமுறைகளால் கையாளலாம். இந்த விடுதலையாளர்களை வேறு எந்த வழிமுறையில் விடுவிக்க முடியும்? அப்படியென்றால், அதை இதுவரையிலும் செய்யாதிருப்பது ஏன்?
tpp1
இது ஒரு புறமிருக்க, இந்தப் போராட்டத்தை எப்படி அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது என முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் புத்திஜீவிகள், மதகுருக்கள், அரசியல் கட்சிகள் எனப்பலரும் கூடி ஆராய்ந்திருந்தனர் அல்லவா, அதன்படியே அநுராதபுரம் வரையிலான பல்கலைக்கழக மாணவர்களின் நடைப்பயணமும் சிறைச்சாலையில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் விடுதலையாளர்களுடனான சந்திப்பும் நடந்தது. இதெல்லாம் வரவேற்கத்தக்கவையே.

ஆனால், இந்த விடயத்தைக் கொஞ்சம் புத்திபூர்வமாகத் திட்டமிட்டிருந்தால், நடைப்பயணத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வழிநெடுக விழிப்புணர்வுப் பணிகளை எழுச்சியுடன் செய்திருக்க முடியும்.

முக்கியமாக வவுனியா தெற்கிலிருந்து அநுராதபுரம் வரையில் சிங்களத்திலான எளிய பிரசுரங்களை விநியோகித்திருக்கலாம். இந்தப் பிரசுரங்களில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் விடுதலையாளர்களின் நிலையைப்பற்றியும் அவர்களுடைய குடும்பங்களின் நிலவரத்தைப் பற்றியும் வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

குடும்பத்தினரின் படங்கள், உருக்கமான கதைகள், வேண்டுகோள்கள் எனப் பலவகையில் இதைச் செய்திருக்கலாம். அத்துடன், சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்கள் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் அரசியல் தீர்மானங்களின் மூலம் விடுவிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கலாம். ஜேவிபி உறுப்பினர்களும் அதில் அடங்கியிருந்தனர் என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம். இவை சிங்கள மக்கள் மத்தியில் புதிய புரிதலுக்கான வாய்ப்புகளை அளித்திருக்கும்.

கூடவே சக்திவேல் அடிகள் போன்றோரின் மூலமாக அநுராதபுரம் மற்றும் தென்பகுதியில் உள்ள பௌத்த, கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் மதத்தலைவர்களை ஒருங்கிணைத்து இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாகத்திரட்டியிருக்கலாம். அதோடு, சிங்களப் புத்திஜீவிகள், சமாதான விரும்பிகள், கலைஞர்களையும் அங்கே திரட்டியிருக்க வேண்டும். இன்னொரு வழியில் அநுராதபுரத்திலுள்ள பொது அமைப்புகளுடன் பேசி அவர்களையும் இங்கே வரவழைத்திருக்கலாம்.

இவற்றோடு சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களின் பெற்றோர், துணைவியர், பிள்ளைகளை அங்கே அழைத்துச் சென்று அவர்களைச்  சிங்களச் சமூகத்தினரோடும் ஊடகவியலாளர்களோடும் உரையாடவும் – கதைகளைச் சொல்லவும் விட்டிருக்கலாம். அதற்குரிய மாதிரி அவர்களைத் தயார்ப்படுத்தி ஒழுங்கு செய்திருக்க வேண்டும்.

இந்த நாட்டில் நடந்த அனர்த்தங்கள் போல இனியும் துயர் நிலை வேண்டாம். அழிவுகளும் அவலங்களும் போதும். துயரங்களுக்கு முடிவு கட்டுவோம். பாதிக்கப்பட்டவர்களாகத் தொடர்ந்தும் வாழ முடியாது. இனியொரு புதிய நிலையில் எல்லோரும் வாழ முற்படுவோம். அதற்காக நாம் புரிந்துணர்வோடு கைகோர்ப்போம்... என்றவாறு.

இதையெல்லாம் சிங்களச் சமூகத்துக்கு அவர்களின் முற்றத்திலே, முகத்துக்கு முன்னே உருக்கமான முறையில் சொல்லும்போது அதனால் உண்டாகும் உணர்நிலையானது அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கியிருக்கும்.
tpp3
அது இந்தப் போராட்டத்தை, இந்த விவகாரத்தை பன்முகமுடையதாக்கியிருக்கும். மட்டுமல்ல, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு அழைப்பை விடுத்திருக்கலாம். அவர்கள் அதை ஏற்றுக் கலந்து கொண்டிருப்பர்களோ இல்லையோ, அவர்களுக்கு அது ஒரு நெருக்கடியை – அதைப்பற்றிச் சிந்திக்க வேண்டிய நிலையை நிச்சயமாக உண்டாக்கியிருக்கும்.

இப்படி பல தளங்களிலும் இந்தப் போராட்டத்தை விரிவாக்கியிருந்தால்  இந்தப் போராட்டத்தில் மாவை சேனாதிராஜா போன்றவர்கள் இடையில் புகுந்து அரசியல் செய்ததைத் தடுத்திருக்க முடியும். மட்டுமல்ல, ஒரு சிறிய அணிச்சிங்கள இளைஞர்கள் வந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்திருக்கவும் முடியாது.

ஒரு போராட்டத்தின் முதற்கட்ட வெற்றி என்பது அதில் பல தரப்பினரும் பங்கேற்பதிலும் அதைப் பல்வேறு தரப்பினரும் அங்கீகரிப்பதிலுமே உள்ளது. அடுத்தது  அதற்கு எதிரான தரப்பு எதிர்பார்க்காத வகையில் போராட்டத்தை – போராட்ட வடிவத்தையும் அதனோடிணைந்த அணிகளையும் இணைத்து – முன்னெடுப்பதில் தங்கியுள்ளது.

ஆகவே, அரசாங்கம் எதிர்பாராத கோணங்களில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும். இப்படி புதிய கோணத்தில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தால் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக மாற்றியமைத்திருக்க முடியும்.

இதையெல்லாம் அரச புலனாய்வுப் பிரிவு மணந்து பிடித்திருக்கும். அது முடிந்தவரையில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சித்திருக்கும் என்பதையும் இந்தப் பத்தி கவனத்திற் கொள்கிறது.

ஆனாலும் அதனால் இதை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கவோ சிதைத்திருக்கவோ முடியாது. அப்படித்தான் அது முயன்றிருந்தாலும் அது அரசுக்கு எதிரான விதத்திலேயே போய் முடிந்திருக்கும். ஆகவே எந்தப் பக்கத்திலும் அரசுக்கு நெருக்கடி ஏற்படும் நிலையிலேயே இந்த விசயம் இருந்தது. இன்னும்கூட அப்படித்தான்  இருக்கிறது. இதைக் கவனத்திற் கொள்ளத்தவறியது பெரிய இழப்பே.

இதற்குக் காரணம், எப்போதும் தமிழ் மனதிலும் தமிழ் மூளையிலும் படிந்து போயிருக்கிற ஒற்றைப் படையான சிந்தனை முறையே. இதைக் கடந்து புதியதாகச் சிந்திப்பதற்கான அறிவும் மனமும் தமிழர்களிடத்திற் குறைவு. அப்படிச் சிந்திப்போர் விளிம்புக்குத் தள்ளப்படுகிறார்கள். ஓரங்கட்டப்படுகின்றனர். எள்ளி நகைக்கப்படுகின்றனர்.

மையத்தில் இருப்போர் எப்போதும் தமக்குள் தாமே எனக் குறுகியே சிந்தித்துப் பழகி விட்டனர். இதனால்தான் தமிழர்களுடைய போராட்டமும் அரசியல் நடவடிக்கைகளும் முன்னோக்கி நகர முடியாமல், சுற்றிச் சுற்றிச் சுப்பரின்  கொல்லைக்குள்ளேயே தேங்கிக் கிடக்கிறது.

இஇந்தப் போராட்டத்துக்கு எச்சரிக்கை விடுப்பதைப்போல சில சிங்கள இளைஞர்கள் அநுராதபுரத்தில் நடந்து கொண்டதும் சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களின் உணவு மறுப்புப் போராட்டத்தை யார் முடித்து வைத்தது என்ற போட்டிகளும் ஏற்படக் காரணமானதும் கூட இந்த மாதிரியான குறுகிய சிந்தனையினால்தான்.

இதையொட்டிய முகநூல் விவாதங்களைப் படிக்கும்போது வெட்கமாகவே உள்ளது. அவற்றில் அரசியல் நிதானமோ, அறிவோ கிடையாது. சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களை யார் விடுவிப்பது, எப்படி விடுவிப்பது என்று சொல்வதற்குப் பதிலாக, யார் கொடுத்த தண்ணீரைக் குடித்துப் போராட்டம் நிறுத்தப்பட்டது என்றே எழுதுகிறார்கள்.
 

அந்தளவுக்குக் கட்சி அரசியலுக்கான பிரச்சாரத்துக்கு இந்த விசயத்தைப் பயன்படுத்துகிறது. இது விடுதலைக்குப் பதிலாக சிறைப்படுத்தலுக்கே உதவும். tpp5

உண்மையில் இந்தப் போராட்டங்களின் தொடக்கம் சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களினாலே ஆரம்பிக்கப்பட்டது. அவர்களே வேறு வழியின்றித் தங்களுடைய விடுலைதலைக்கான கதவைத் திறக்க முயன்றனர். இதனால்தான் அதற்கான போராட்டங்களை ஆரம்பித்தார்கள்.

ஆனால், அதை அவர்களால்  தொடர்ந்து முன்னெடுக்க முடியாத களச் சூழல் நிலவியபோது, அதைக் கவனத்திற் கொண்டே, வெளிச் சக்திகள் சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களுக்கு ஆதரவுப் போராட்டங்களை நடத்துவதற்கு முன்வந்தனர்.

இருந்தும் இதை இந்தச் சக்திகள் கையாண்ட – முன்னெடுத்த விதம்தான் படு பாழானது. இதிலிருந்தாவது தமிழ்ச்சமூகம் பாடங்களைப் படித்துக்கொள்ளாதா? தன்னுடைய சீழிலிருந்தும் கேவலங்களிலிருந்தும் மீண்டெழாதா?