சிறிதரன்: இரட்டை முகம்

-    கருணாகரன்

(1)

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் எப்போதும் தனி ஆவர்த்தனம் வாசிப்பவர் சிவஞானம் சிறிதரன். அவருடைய அரசியல்(?) அணுகுமுறையே வேறு. அது கூட்டமைப்பின் சாயல்,s.sritharan சம்பிரதாயங்கள், கட்டமைப்பு (கூட்டமைப்புக்குக் கட்டமைப்பு என ஒன்று இருக்கிறதா? என்று யாரும் கேட்கலாம்) போன்றவற்றுக்கு அப்பாலானது. ஏன், தமிழரசுக் கட்சிக்கும் அப்பாலானதே. தனக்கென்றொரு நிகழ்ச்சி நிரலைத் தனியாகவே வைத்துக் கொண்டு செயற்படுவது சிறிதரனின் வழமை.
 
கூட்டமைப்பின் தலைமைப்பீடம் அரசாங்கத்தோடு இணைந்தும் கலந்தும் பிணைந்தும் கூடிக் குலவுகிறது என்றால் சிறிதரன் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சிப்பார். அரசாங்கத்துக்குச் சவால் விடுவார். சம்மந்தனும் சுமந்திரனும் புலிகளை விமர்சித்தால், சிறிதரனோ புலிகளை ஆராதிப்பதாகக் காட்டிக் கொள்வார். போர்க்குற்ற விசாரணையிலிருந்தும் சர்வதேச நெருக்கடியிலிருந்தும் அரசாங்கத்தைக் கூட்டமைப்புக் காப்பாற்றுகிறது என்றால், சிறிதரனோ ஜெனிவாவில் போய் நின்று கொண்டு அரசாங்கத்தை உள்ளே தள்ள வேண்டும் என்பார். எதிலும் கூட்டமைப்பு மென்போக்கைக் கடைப்பிடிக்குமென்றால், சிறிதரன் வன்போக்கைப் பிரதிபலிப்பார்.
 
இதைப்பார்க்கும்போது “சிறிதரன் மிகத் துணிச்சலானவர், இனப்பற்றோடு செயற்படுகிறவர், அரசாங்கத்தை எதிர்ப்பவர், புலிகளைப் பின்பற்றுகின்றவர் என்று சிலருக்குத் தோன்றும். இப்படி ஒரு எண்ணத்தைச் சனங்களிடம் உருவாக்குவதே அவருடைய நோக்கமும் கூட. இதில் அவருக்குக் கணிசமான வெற்றியும் கிடைத்திருக்கிறது.
 
ஆனால், இதைச் சரியாகப் புரிந்து கொள்ளக்கூடியவர்கள் இதையிட்டுச் சிரிப்பார்கள். ஆத்திரப்படுவார்கள். உண்மையிலேயே சிறிதரனுடைய நிலைப்பாடு தீவிரத் தமிழ்த்தேசியமே என்றால், புலிகளின் வழிமுறையையே அவர் பின்பற்றுகிறார் என்றால் அவர் சேர்ந்திருக்க வேண்டிய இடம் கூட்டமைப்போ தமிழரசுக் கட்சியோ இல்லை. மட்டுமல்ல, சம்மந்தன், சுமந்திரன் போன்றோரைத் தலைமையாக ஏற்றுக் கொண்டிருக்கவும் முடியாது. கூட்டமைப்பின் நிபந்தனையற்ற அரசு சார்ப்புக்கும் அரசுடன் ஒத்தோடுவதற்கும் இடமளிக்க இயலாது. தமிழரசுக் கட்சியின் இழுபறிகளில் எல்லாம் ரப்பரைப்போல இழுபட்டுக் கொண்டிருக்க மாட்டார். இப்படிச் சொல் ஒன்றாகவும் நடைமுறை இன்னொன்றாகவும் இருக்கவே ஏலாது. புலிகள் அப்படி இருந்ததில்லை. இந்த நிலையில் நிச்சயமாக கூட்டமைப்போடு சிறிதரன் முரண்பட்டிருக்க வேண்டும். சுமந்திரனையும் சம்மந்தனையும் எதிர்த்து வெளிநடப்புச் செய்திருக்க வேண்டும். கண்டனங்களை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அல்லது தமிழரசுக் கட்சியிலிருந்தும் கூட்டமைப்பிலிருந்தும் முற்றாகவே விலகியிருக்க வேண்டும்.
 
பதிலாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அல்லது தமிழ் மக்கள் பேரவையிணைந்திருக்க வேண்டும். அல்லது முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் அணியோடிருந்திருக்க வேண்டும். ஆனால் அங்கேயெல்லாம் அவர் செல்லவில்லை. அப்படிச்  செல்லப்போவதுமில்லை. அதாவது கூட்டமைப்பsritharan-sampanthanை விட்டும் சம்மந்தன், சுமந்திரன் தலைமையை விட்டும் வெளியேறப்போவதில்லை.
 
இதிலிருந்தே தெரிகிறது இது ஒரு பச்சையான அரசியல் நாடகம் என. முன்னர் வடபுலத்தான் ஒரு தடவை எழுதியதைப்போல, அரசுடன் இணைந்து வேலை செய்வதற்கு ஒரு அணி. அரசை எதிர்ப்பதாகச் சனங்களுக்குக் காட்டிக் கொள்வதற்கு ஒரு அணி. இப்படி இரண்டு அணிகள், இரண்டு விதமாகச் செயற்படுகின்றன. இது கூட்டமைப்பின் தந்திரோபயங்களில் ஒன்று. அரசை எதிர்க்க வேண்டும் என்பவர்களுக்கு அப்படி ஒரு அணி. அரசை ஆதரித்து, அதனோடு நலன்களைப் பெற வேண்டும் என்பதற்கு ஒரு தரப்பு.
 
எனவே இது ஒரு “செற்றப் கேமே” தவிர வேறில்லை. இதில் சிறிதரன் ஹீரோவாகி விளையாட்டுக் காட்டுகிறார் அவ்வளவுதான். தான் ஒரு தமிழுணர்வாளன், போராட்டப்பற்றாளன், விடுதலை நேசன், அஞ்சா நெஞ்சன் என்ற மாதிரியெல்லாம் ஒரு பில்டப்.
 
ஆனால், ஒரு காலம் முதலமைச்சர் விக்கினேஸ்வரனைத் தன்னுடைய நிகழ்ச்சி நிரலுக்குப் பயன்படுத்தியவர் சிறிதரன். இதற்காக அவர் விக்கினேஸ்வரனின் கால்களைக் கெட்டியாகப் பிடித்திருந்ததுண்டு. சம்மந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோர் விக்கினேஸ்வரனுடன் கடுமையாகப் பிணக்கடைந்த சூழலிலும் விக்கினேஸ்வரனோடு நெருக்கமாக இருந்தார் சிறிதரன்.
 
 
இதைச் சரியாகச் சொன்னால், விக்கினேஸ்வரனோடு நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டார். இது ஏனென்றால், தமிழரசுக் கட்சி தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாகச் சொல்லாமல், எல்லாவற்றையும் மழுப்பலாகச் சொல்லி, கொழும்போடு நெருங்கிக் கொண்டிந்த சூழலில், மக்களிடம் தலையைக் காட்ட முடியாதிருந்த நிலையில் விக்கினேஸ்வரனே தமிழ்த்தேசிய அரசியலை மிடுக்கோடு வெளிப்படுத்தி வந்தார். அதுவும் உச்சநிலையில் இனரீதியான விவகாரங்களை விக்கினேஸ்வரன் முன்வைத்துக் கொண்டிருந்தார்.
 
இதனால் விக்கினேஸ்வரனுக்குச் சனங்களிடத்திலே செல்வாக்கு ஏறியிருந்தது. எனவே விக்கினேஸ்வரனைக் காட்சிப் பொருளாக்கி தன்னுடைய செல்வாக்கை உயர்த்த முற்பட்டார் சிறிதரன்.
 
ஆனால், இந்த விளையாட்டு நீடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் இதற்கு ஒரு எல்லைக்கோடு வந்தது. விக்கினேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சுமந்திரனின் பின்னாதரவோடு தமிழரசுக் கட்சியினர் கொண்டு வர முற்பட்ட வேளையில் சிறிதரன் திணறிப்போனார். இந்தக் கட்டத்தில் எந்தப் பக்கம் நிற்பது என்று தெரியாமல் தடுமாறினார்.  sritharan amd mavai
 
இந்தச் சந்தர்ப்பத்தில் அனந்தி, ஐங்கரநேசன் போன்றவர்கள் விக்கினேஸ்வரனின் பக்கம் வெளிப்படையாகவே சாய்ந்தனர். வேறு சிலர் சுமந்திரனின் பக்கம் (தமிழரசுக் கட்சியின் பக்கம்) சரிந்தனர்.  இந்த நிலையில் ஏதாவது ஒரு பக்கத்துக்கு போயே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் சிறிதரனுக்கும் வந்தது. இருந்த போதும் இதற்குள்ளும் ஒரு சுழிப்புச் சுழிப்பதற்காக “விக்கினேஸ்வரன் கொஞ்சம் நிதானமாக நடந்திருக்க வேண்டும்” என்று சுமந்திரனிற்கு ஏற்றமாதிரி இனிப்பாகச் சொன்னார் சிறிதரன். 
 
ஆனால், இப்படிச் சொன்ன கையோடு விக்கினேஸ்வரனிடமும் சென்றார். இதற்கொரு காரணத்தையும் சொன்னார், சமரச முயற்சியில் ஈடுபடப்போகிறேன் என. 
 
ஆனால், அப்பொழுது இந்தச் சமரச முயற்சிகளில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர்  ஈடுபட்டிருந்தனர். தன்னிடம் நெருங்கிய சிறிதரனை கணக்கில் எடுக்காமல் வெட்டி விட்டார் விக்கினேஸ்வரன். ஏனெனில் பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டியும் ஆட்டிவிடும் சிறிதரனின் இரட்டை முகத்தை விக்கினேஸ்வரன் அப்பொழுது புரிந்து கொண்டார். 
 
இதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் நேரடியாகவே விக்கினேஸ்வரனை எதிர்க்கத் தொடங்கினார் சிறிதரன். விக்கினேஸ்வரனை எதிர்ப்பதே தன்னுடைய அரசியலுக்குப் பாதுகாப்பானது, ஆதாயம் தரக்கூடியது என எண்ணினார்.
 
தமிழரசுக் கட்சியில் சுமந்திரனே  தீர்மானமெடுக்கும் சக்தி என்பதால் சுமந்தினை மீறி எதையும் செய்ய முடியாதல்லவா. ஆகவே சுமந்திரனை எதிர்க்காமல், அவருக்கு இனிப்பாக நடக்கிறார். சுமந்திரனுக்கு இனிக்க வேண்டுமென்றால் விக்கினேஸ்வரனை மூர்க்கமாக எதிர்க்க வேண்டும் அல்லவா. அதைச் செய்து கொண்டிருக்கிறார் சிறிதரன். கடந்த ஒரு ஆண்டுகாலமாக விக்கினேஸ்வரனைக் கடுமையாக சிறிதரன் விமர்சித்து வரும் பின்னணி இதுவே.
 
பாராளுமன்றத் தேர்தல் தொடக்கம் பல சந்தர்ப்பங்களிலும் விக்கினேஸ்வரனை முன்னிறுத்தி, அவருடைய நிழலில் தன்னை நிலைப்படுத்தி வந்தவர், இன்று விக்கினேஸ்வரனை எதிர்க்கிறார் என்பதைப் புரிந்து கொள்வதற்கு இதற்கு மேல் விளக்கங்கள் தேவையில்லை.
 
இப்பொழுது விக்கினேஸ்வரன் எடுக்கின்ற தீர்மானங்களையும் மாகாணசபை சார்பில் அவர் எடுக்கின்ற நடவடிக்கைகளையும் எழுதுகின்ற கடிதங்களையும் மீறுகிறார் சிறிதரன். அக்கராயன் கரும்புத்தோட்டக் காணி விவகாரம், கிளிநொச்சி நகரில் மாகாணக் காணி அலுவலகத்துக்கான காணி உள்ளிட்ட பல விடயங்களில் சிறிதரன் விக்கினேஸ்வரனை – மாகாணசபையை – எதிர்த்தே செயற்படுகிறார். சிறிதரனின் இந்தத் தனிப்பட்ட அரசியல் குரோதம் மாகாணசபை என்ற அதிகார மையத்தைப் பலவீனப்படுத்தி மத்திய அரசுக்குச் சார்பை - வலுவை அளிக்கிறது என்று பலரும் சுட்டிக்காட்டியபோதும் அவர் தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை.
 
 
ஆகவே மக்களை விட, மாகாணசபைக்கான அதிகாரத்தை விட தன்னுடைய தனிப்பட்ட அரசியல் நலன்களே முக்கியமாகி விட்டன சிறிதரனுக்கு. சுமந்திரனுக்கு இனிப்பாக நடந்து கொள்வதன் மூலம் தன்னுடைய ஸ்தானத்தைப் பலப்படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் முற்றிலும் தவறான வழியில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார் சிறிதரன். 
 
தமிழரசுக் கட்சியின் பிடியைச் சுமந்திரனே வைத்திருப்பதால், தமிழரசுக் கட்சியில் நிலைகொள்ள வேண்டுமென்றால், தவிர்க்க முடியாமல் அதற்குத் தக்கமாதிரித் தாளம் போட வேண்டும் என்பதால் வந்த வினை இது.
 
ஆனால், சுமந்திரனின் அரசியல் நிலைப்பாடு வெளிப்படையாகவே கொழும்பையும் அரசாங்கத்தையும் மையப்படுத்தி, அதைச் சார்ந்திருக்கிறது. போர்க்குற்ற விசாரணை, அரசியல் தீர்வு, அரசியல் சாசன உருவாக்கம், கொழும்பு மைய அரசியலுடனான உறவு, காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், நிலமீட்பு,  உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் சுமந்திரனின் நிலைப்பாடும் அணுகுமுறையும் வேறு. சரியோ தவறோ அதை அவர் நேர்மையாக – வெளிப்படையாகச் சொல்கிறார். ஆனால், சிறிதரன் சனங்களுக்குச் சொல்லி வரும் நியாயங்களும் காரணங்களும் வேறு. வேறு என்றால் இதற்கு  நேரெதிரானது.
 
 
அதாவது, தமிழீழத்துக்கு நிகரான தீர்வைத்தவிர வேறு தீர்வுக்குத் தமிழரசுக்கட்சி (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் உடன்படாது என்கிறமாதிரி சிறிதரன் பேசி வருகிறார். இதைப்போலவே படையினரைப் பற்றிப் பேசுவது, அரசாங்கத்தை விமர்சிப்பது, போர்க்குற்றம் பற்றிப் பேசுவது என எல்லாவற்றிலும் மிகத்தீவிரமான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் காண்பிக்கிறார்.
 
அப்படிக் காண்பிப்பது மெய் என்றால், இதைக்குறித்து அவர் தமிழரசுக் கட்சியின் மையக்கூட்டங்களிலும் தலைமையிடத்திலும் விவாதிக்க வேண்டுமே. அதைப்போல தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மெய்யான நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்ப வேண்டுமே.
 
அப்படியெல்லாம் சிறிதரன் செய்யவேயில்லை. அதை அவர் செய்யப்போவதுமில்லை. இதையிட்டு சுமந்திரனோ சம்மந்தனோ ஏன், மைத்திரி, ரணில் போன்றவர்களோ கூட எதையும் சிறிதரனிடம் கேட்கப் போவதுமில்லை. அவர்களுக்குத் தெரியும். இந்தக் கதைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை என.
 
 
அவர்களைப் பொறுத்தவரையில் சுமந்திரன், சம்மந்தன் ஆகியோரின் தீர்மானங்களே முக்கியமானவை. அதைப்போல யார் என்ன சொன்னாலும் தாமே எதைப்பற்றியும் தீர்மானிப்பவர்கள், தம்மை மீறி எவரும் எதையும் செய்ய முடியாது என்று சம்மந்தனுக்கும் தெரியும். சுமந்திரனுக்கும் தெரியும்.
 
ஆகவே இதையிட்டுச் சிறிதரனுக்கு இங்கும் உள்ளுர ஒரு தடுமாற்றமுண்டு.  சுமந்திரனை எதிர்த்தால் கட்சியிலிருந்தே சிறிதரனைக் கழற்றி விடுவார். அதேவேளை பகிரங்கமாகச் சுமந்திரனை ஆதரிக்கவும் முடியாது. அப்படி ஆதரித்தால், அது சிறிதரன் பேசிவரும் “புலிப்பாவனை அரசியலுக்கு” தோதாக இருக்காது.
 
 
இந்த இரண்டக நிலையில் அவர் ஒரு தந்திரோபாயத்தைக் கடைப்பிடிக்கிறார். முடிந்தவரையில் சம்மந்தனையும் சுமந்திரனையும் சிறிதரனின் ஊடாட்டப் பிரதேசத்தில் சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்கிறார். குறிப்பாக கிளிநொச்சியில் எந்த நிகழ்வுகளுக்கும் சுமந்திரன் அழைக்கப்படுவதோ முன்னிறுத்தப்படுவதோ கிடையாது. அப்படிச் சுமந்திரனை கிளிநொச்சிக்குக் கூப்பிட்டால் சனங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் போய்விடும் என்று அஞ்சுகிறார்.
 
 
சுமந்திரனையும் விட மனோ கணேசனையும் இராதாகிருஸ்ணனையும் ஏன் சுவாமிநாதனையும் அழைப்பது பரவாயில்லை என்று அவர்களை அழைத்துக் கொண்டாடுகிறார்.
 
முன்பு மாவையை அடிக்கடி பொது நிகழ்வுகளுக்கு அழைத்தவர் அதையும் குறைக்கத் தொடங்கியுள்ளார். இதைப்பற்றி ஆதரவாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சிறிதரன் சொன்ன பதில் “அரசியலை முதலில் படியுங்கள். பிறகு என்னிடம் கேள்வி கேளுங்கள்” என்று. இதோடு எல்லோரும் வாயைப் பொத்தி விட்டனர்.
 
 
சம்மந்தன் கூடத் தேர்தல் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டும் வந்து சம்பிரதாயமாக ஒரு குறிப்பிட்டளவு நேரம் கலந்து கொள்வதோடு சரி. மற்றும்படி, அவருடைய பிரசன்னத்தைக் குறைத்துக் கொண்டார். இதன்மூலம் சமூகக் கொந்தளிப்பையும் முகச்சுழிப்பையும் தவிர்க்க முனைந்திருக்கிறார்.
 
(தொடரும்)

Theneehead-1

   Vol:17                                                                                                                               21.10.2018