Theneehead-1

                            Vol:17                                                                                                  21.06.2018

கிழக்கிலங்கை   எழுத்தூழியக்காரர்கள்: (02)

அயர்ச்சியின்றி இயங்கும் இலக்கியப் பேராசிரியர் செல்லையா யோகராசா

கல்வியும் இலக்கியமும் அவரது கண்கள்

                                                                 முருகபூபதி

வாகனவிபத்தொன்றில் அவரது அன்புத்துணைவியும் அருமைக்குழந்தையும் காயமடைகின்றனர். துணைவி கொழும்பு பெரியாஸ்பத்திரியிலும் குழந்தை மட்டக்களப்பு ஆஸ்பத்திரியிலkarunaiyogamும் அனுமதிக்கப்படுகின்றனர்.  இருவரும் தெய்வாதீனமாக உயிர்தப்புகின்றனர். எனினும் மேலதிக சிகிச்சைகளுக்காக மேற்கிலும் கிழக்கிலும் அனுமதிக்கப்படுகின்றனர்.

குடும்பத்தலைவனோ, ஊண் உறக்கமின்றி பஸ்ஸிலும் ரயிலிலும் பயணித்து இருவரையும் பராமரிக்கிறார். தனது பல்கலைக்கழக விரிவுரைப்பணிகளையும் கவனிக்கிறார். எழுதுகிறார். வாசிக்கிறார். விரிவுரைக்குத்தேவையான குறிப்புகளை பதிவுசெய்கிறார்.

அவருக்கு அவரது குடும்பம் மாத்திரமல்ல, அவரது மாணவர்களும் முக்கியமானவர்கள். இத்தகைய நெருக்கடிக்கு மத்தியில் நிதானமாகப்பேசுகிறார். பதட்டமின்றி இயங்குகிறார். அந்த நிதானம் இயல்பிலேயே அவருக்குரிய குணாம்சம்! அதிர்ந்து பேசத்தெரியாத பண்புகளே அவரது பலம். எளிமையாக பழகும் நெகிழ்ச்சியே அவரது வலிமை! அவர்தான் பேராசிரியர் செ. யோகராசா.

ஈழத்து இலக்கிய உலகில் மட்டுமன்றி புகலிட இலக்கிய உலகிலும் மிகுந்த கவனிப்புக்குள்ளான திறனாய்வாளர். அவரால் எழுதாமலும் வாசிக்காமலும் இருக்கவே முடியாது. அவருக்காக அல்ல, மற்றவர்களுக்காக எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டுமிருப்பவர். மாணவர்களுக்காகவும் இலக்கிய உலகிற்காகவும் தன்னை அவ்விதம் வடிவமைத்துக்கொண்டவர்.

கருணை யோகன் என்ற பெயரிலேயே அவர் எனக்கு 1972 ஆம் ஆண்டளவில் அறிமுகமானார். அக்காலப்பகுதியில் நானும் இலக்கியப்பிரவேசம் செய்திருந்தமையால், அவரது எழுத்துக்களை மல்லிகையில் படித்துவிட்டு கொழும்பு சென்று அறிமுகமாகி நண்பனானேன்.

அக்காலப்பகுதியில் அவர் கொழும்பு -07 இல் நகரமண்டபத்திற்கு அருகிலிருந்த தபால் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அன்றுமுதல் எனது நெஞ்சத்துக்கு நெருக்கமான இலக்கிய நண்பராக விளங்குகிறார். இலங்கையில் வடமராட்சி பிரதேசம் பல இலக்கிய ஆளுமைகளையும் கல்விமான்களையும் பெற்றெடுத்த மண். 1949 ஆம் ஆண்டு, கரணவாய் கிராமத்தில் செல்லையா - இலட்சுமி தம்பதியரின் செல்வப்புதல்வனாக பிறந்திருக்கும் அவர், தனது ஆரம்பக்கல்வியை கரணவாய் வித்தியாலயத்திலும் உயர்தரக்கல்வியை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் தொடர்ந்தவர்.

பாடசாலைப்பருவத்திலேயே கவிதைகள் எழுதத்தொடங்கியிருக்கும் கருணையோகன், தமிழில் கலைமாணி பட்டத்தினையும் அதனையடுத்து இளந்தத்துவமாணி பட்டத்தினையும் பெற்றுக்கொண்டு தபால் நிலையத்தில் தனது தொழில் வாழ்வைத்தொடங்கினார்.

அவரைப்போன்று எனக்குத்தெரிந்த சில இலக்கியவாதிகள்  அக்காலப்பகுதியில் தபால் நிலையங்களில் பணியாற்றிவந்தனர். (அமரர்) நாகேசு தருமலிங்கம், அ.யேசுராசா, ரத்னசபாபதி அய்யர் முதலானோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். அவர்கள் இறுதிவரையில் தபால் நிலையங்களில்தான் பணியாற்றிவந்தனர்.ஆனால், கருணை யோகன் மாத்திரம் தனது திசையை மாற்றிக்கொண்டார். கொழும்பிலும் அதன்பின்னர் மாஹோவிலும் தபால் நிலையங்களில் பணியாற்றிவிட்டு, பட்டதாரி ஆசிரியராக மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் புதிய பணியேற்றார். எந்தத்தொழிலில் இருந்தாலும் தேடலுக்கும் ஆய்வுக்கும்  என்றே காலத்தை தீவிர இலக்கியம் நோக்கித்திருப்பியிருந்ததுடன், கல்வி தொடர்பாகவும் மேலதிக தகைமைகளை வளர்த்துக்கொள்வதில் பேரார்வம் காண்பித்தார். மலையகத்திலேயே இவருக்கு வாழ்க்கைத்துணை கிடைத்தது.

தலவாக்கலையைச்சேர்ந்த விஜயதிலகிக்கும் இவருக்கும் ஏகபுதல்வி சுவs.yogarasa1ஸ்திகா. தாயும் மகளும் ஒரு கோரவிபத்தில் சிக்குண்ட காலப்பகுதியில் நான் இலங்கையில் இருக்கவில்லை. அங்கிருக்கும் காலப்பகுதியில் எங்காவது ஒரு இலக்கியக்கூட்டத்தில் அவரைப்பார்ப்பேன். அவுஸ்திரேலியாவுக்கு 1987 இல் நான் வந்துவிட்ட பின்னரும், அவருடன் கடிதத்தொடர்புகளை பேணி வந்திருக்கின்றேன். கருணை யோகன் எனக்கு எழுதிய கடிதம் ஒன்று எனது கடிதங்கள் நூலிலும்  இடம்பெற்றுள்ளது.

26-12-1994 ஆம் திகதி அவர் எனக்கு எழுதிய கடிதம் இன்றும் எனதுவசம் பத்திரமாக இருக்கிறது. " வேலைப்பளு, இலக்கியப்பளு, குடும்பப்பளு என இங்கு எமக்கே நேரமில்லாதபோது ' புலம்பெயர்ந்து' வாழ்வோருக்கு அந்த கம்பியூட்டர் உலக வாழ்வில் எங்கே நேரம்வரும்..? என்ற கேள்வியுடன் இலங்கை இலக்கியப்புதினங்களையும் எழுதியிருந்தார். முக்கியமாக மட்டக்களப்பின் மூத்த எழுத்தாளர் பித்தன் கே. ஷா அவர்களின் மரணச்செய்தியையும், அவரது நூலொன்றை இரண்டு தமிழ்ப்பேசும் அரசியல்வாதிகள் ( அமைச்சர்களாகவும் இருந்தவர்கள்) வெளியிட்டுத்தருவதாக பொய்வாக்குறுதி வழங்கி ஏமாற்றிய தகவலையும், இறுதியில், மல்லிகைப் பந்தல் வெளியீடாகவே அந்தநூல் வெளியான செய்தியையும், அதனைக்கூடப்பார்க்காமல் அந்த எழுத்தாளர் மறைந்துவிட்ட  துயரத்தையும் பகிர்ந்திருந்தார்.

மட்டக்களப்பு வாசகர்வட்டம்,  அன்னாருக்காக நினைவஞ்சலிக்கூட்டம் நடத்திய செய்தியும் அந்தக்கடிதத்தில் இடம்பெற்றிருந்தது. எனக்கு அவர் எழுதும்  கடிதங்களில் மட்டக்களப்பு புதினங்கள் இருக்கும்.

வடமராட்சியில் பிறந்து வளர்ந்து, கிழக்கிலங்கையில் காலூன்றியிருக்கும் இந்த இனிய இலக்கிய நண்பர்,  ஈழத்தின் அனைத்துப்பிரதேச தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களிடம் மட்டுமன்றி சிங்கள எழுத்தாளர்களிடமும் நன்மதிப்பு பெற்றவர். ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்தபின்னர் தோன்றிய புலம்பெயர் இலக்கியம் - புகலிட இலக்கியம் தொடர்பாகவும் திறனாய்வு செய்திருப்பவர்.

நான் இலங்கையிலில்லாத காலப்பகுதியில் எங்கள் நீர்கொழும்பூரில் நடந்த இலக்கியக்கருத்தரங்கில் தனது உரையின் தொடக்கத்தில் என்னை நினைவுபடுத்தியே பேசியிருக்கிறார். இவ்வாறு என்னுடன் அந்நியோன்னியமாக உறவாடியிருக்கும் அவருடைய குடும்பத்தில் 2005 ஆம் ஆண்டு நிகழ்ந்த அந்த கோரமான விபத்துச் சம்பவம் பற்றி அறிந்ததும் ஆறுதல் தெரிவித்து கடிதங்கள் எழுதியிருக்கின்றேன்.

இலங்கை சென்றவேளையில் கொழும்பு மருத்துவமனையில் அவரது அன்புத்துணைவியாரையும் பார்த்தேன். மினுவாங்கொடைக்கு அருகாமையில் உடுகம்பொலை கிராமத்தில் கொரஸ என்னும் இடத்தில் ஶ்ரீசுதர்மானந்த விஹாரையின் பிரதம குரு தமிழ் அபிமானி வண. பண்டிதர் ரத்னவன்ஸ தேரோ அவர்கள் நோயுற்றிருப்பதாக அறிந்து அவரையும் பார்க்கச்சென்றபோது யோகராசாவும் உடன்வந்தார்.

மட்டக்களப்பிலிருந்து தன்னைப்பார்க்க ஒரு  விரிவுரையாளர் வந்திருப்பதை அறிந்து அந்த பௌத்த துறவி நெகிழ்ந்துவிட்டார். அவரால் யோகராசாவையோ என்னையோ பார்க்கமுடியவில்லை. அவரது கண்பார்வை முற்றாக செயல் இழந்திருந்தது.

அந்த நிலையிலும் அந்தத்துறவி எம்மை கிராமவாசிகள் மூலம் உபசரித்தார். இவ்வாறு எனது பயணங்களிலும் இணைந்திருந்தவர்தான் நண்பர் யோகராசா.நாம் அவுஸ்திரேலியாவில் 1988 இல் ஆரம்பித்து இன்றுவரையில் தொடர்ந்து இயங்கவைத்துக்கொண்டிருக்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற தொண்டு நிறுவனத்தின் மட்டக்களப்பு பிராந்திய மாணவர் கண்காணிப்பாளராகவும் யோகராசா சமூகத்தொண்டுணர்வோடு இணைந்திருந்தார்.s.yogarasa

கிழக்கிலங்கையை 2004  இறுதியில் சுநாமி கடற்கோள் அநர்த்தம் கோரமாக பாதித்திருந்த வேளையில் மட்டக்களப்பு, செங்கலடி, கல்முனை, பெரிய நீலாவணை, பாண்டிருப்பு முதலான பிரதேசங்களுக்கெல்லாம் சென்றிருந்தேன். கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ரவீந்திரநாத் துணைவேந்தராக அச்சமயம் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

அவர் முன்னிலையில் சுநாமியால் பாதிக்கப்பட்ட சுமார் 25 மாணவ மாணவியரை எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் பொறுப்பேற்று  தொடர்ச்சியாக நிதியுதவி வழங்கியது. இச்சந்தர்ப்பங்களிலும் நண்பர் யோகராசா எமக்கு தக்க ஆலோசனைகளை வழங்கினார்.

இறுதியாக 2017 ஆம் ஆண்டும் கிழக்கிலங்கை பயணித்தவேளையிலும் யோகராசா எம்முடன் மட்டக்களப்பு, கன்னன் குடா,  கல்முனை, பெரியநீலாவணை முதலான பிரதேசங்களுக்கும் வந்தார். எம்மை தனது காரில் இங்கெல்லாம் அழைத்துச்சென்றவர்தான் எனது இலக்கிய நண்பர் செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன்.2005 - 2009 காலப்பகுதியில் எமது கல்வி நிதியத்தின் உதவிபெற்ற கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் பேராசிரியர் யோகராசாவை பெரிதும் மதித்துப்போற்றியதையும் அவதானித்திருக்கின்றேன்.நாம் 2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொழும்பில் நான்கு நாட்கள் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிலும் கலந்துகொண்டு கருத்தரங்கில் கட்டுரை சமர்ப்பித்திருக்கும் பேராசிரியர் யோகராசா, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலரையும் தன்னுடன் அழைத்துவந்திருந்தார்.

மாணவர்களும் இலக்கியத்தின் பால் திரும்பவேண்டும் என்பதிலும் அக்கறைகொண்டிருப்பவர். இலக்கியமும் கல்வியும்தான் இவரது கண்கள். அதனால் இலக்கியவாதிகளும் மாணவரும் பெற்ற நன்மைகள் ஏராளம். உடுப்பிட்டி கல்வி வலயத்தின் சிறந்த ஆசிரியருக்கான விருது, கலாநிதி பட்ட ஆய்விற்காக பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஞாபகார்த்த விருது, இலங்கை இலக்கியப்பேரவையின் விருது, தேசிய சாகித்திய விருது, வடமாகாண சபை விருது, கலை வாருதி விருது உட்பட பல விருதுகளையும் பெற்றிருக்கும் எமது இனிய நண்பர் யோகராசா,  தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, இலண்டன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் முதலான நாடுகளிலும் பல இலக்கியக்கருத்தரங்குகளில் பங்குபற்றியிருப்பவர்.

எழுத்துலகில் தொடக்கத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் படைத்திருக்கும் அவர், பின்னர் விமர்சகராகவும் திறனாய்வாளராகவுமே பரவலாக அறியப்பட்டவர். அவரது அகதிகள் என்னும் சிறுகதை சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் அவருடைய வாழ்வையும் பணிகளையும் பாராட்டி மட்டக்களப்பில் பெருவிழா எடுத்தனர். அத்தருணம் வெளியிடப்பட்ட, கருணையோகம் சிறப்புமலரில் பல இலக்கிய ஆளுமைகளும் பேராசிரியர்களும் அவரது சிறப்பியல்புகளையும், இலக்கிய மற்றும் கல்விக்கான பங்களிப்புகள் குறித்தும் விரிவாக பதிவுசெய்துள்ளனர்.

அந்த மலர் ஆவணமாகவே திகழுகின்றது. பேராசிரியர் யோகராசா இன்றும் ஆசிரிய கலாசாலைகளில் விரிவுரையாற்றிக்கொண்டும் இலக்கியத்திறனாய்வுசெய்துகொண்டுமிருக்கிறார்.அவருடை நீண்ட பயணத்தில் நானும் ஒரு பார்வையாளனாக இணைந்திருப்பதில் மன நிறைவடைகின்றேன்.

( தொடரும்)