Theneehead-1

                            Vol:17                                                                                                  22.06.2018

  தமிழரசுக் கட்சிக்கு வந்த சோதனை -

தடுமாறும் பங்காளிகளும் தீர்மானம் எடுக்க வேண்டிய மக்களும்

-    கருணாகரன்

தேர்தல் ஆணைக்குழு மாகாணசபைத் தேர்தலுக்கான ஆயத்தங்களைச் செய்கிறதோ இல்லையோ “இலங்கைத் தமிழரசுக் கட்சி” தேர்தலுக்குத் தயாராகி விட்டது.tna-220618

இதற்கான பூர்வாங்க வேலைகளில் அது மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

உறுப்பினர்களை மீளாய்வு செய்வது, கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் ஏற்பட்ட  சரிவுக்கான காரணங்களைக் கண்டறிவது, புதிய ஆதரவாளர்களைச் சேர்த்துக் கொள்வது, வடக்கிலும் கிழக்கிலும் முதலமைச்சர் வேட்பாளர்களாக யாரை நிறுத்தலாம் என்று நாடி பிடித்துப் பார்ப்பது, தேர்தலுக்கான வேலைகளைச் செய்யும் வலுவுள்ள இளைஞர் அணியைக் கட்டுவது என்று அடுத்த தேர்தலுக்கு ஏற்றவாறு கட்சியின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பெரும்பாலும் வெளிக்கள வேலைகளில் ஈடுபடாத சம்மந்தன், கட்சிப் பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணத்துக்குத் திட்டமிட்டுள்ளார். இதற்கான முதற்கட்டப் பயணமாக முல்லைத்தீவுக்குச் சென்று திரும்பியிருக்கிறார்.

இனி அடுத்த மாவட்டங்களுக்கும் அவர் செல்லக் கூடும். அவரோடு கட்சியின் மூத்த உறுப்பினர்களும் பிரபலங்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் என்ற வரிசைகளைச் சேர்ந்தவர்களும் இணைந்து இந்தப் பணிகளை முன்னெடுப்பர் என்று கூறப்படுகிறது.

இதில் கட்சி மேற்கொள்ள வேண்டிய வேலைகளைப் பற்றி ஆராயும் நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. கட்சியை விமர்சனபூர்வமாக முன்னிறுத்திப் பகுப்பாய்வு செய்யும் கரிசனையும் குறைவாகவே உள்ளது. கட்சிக்குள் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் எண்ணங்களையும் காணவில்லை.

தனது அரசியல் நடவடிக்கைகள், தான் மேற்கொண்ட – மேற்கொள்கின்ற தீர்மானங்கள், கட்சியின் சமூகப் பணிகள், கட்சி உறுப்பினர்களின் பொறுப்புணர்வு, அவர்கள் பொது வெளியில் – தேர்தல் அரங்கு தொடக்கம் சபைகள் வரையிலான இடங்களில் – வெளிப்படுத்தும் பொது நாகரீகம், ஏனைய தரப்புகளோடு கொள்ள வேண்டிய தொடர்பாடலும் உறவும் போன்ற விடயங்களைப் பற்றிச் சிந்திப்பதாக இருந்தால் கட்சியின் இந்த மீளமைப்பு நடவடிக்கைகள் பெறுமதியானவையாக இருக்கும்.

ஆனால், இவற்றைப் பற்றிச் சிந்திப்பதற்கான அடிப்படைகள் எதுவும் இந்தப் புனரமைப்பில் உணரப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

பதிலாக கட்சிக்குத் தலையிடியைக் கொடுப்போர், கட்சியில் இருந்து கொண்டே ஊசலாடிக் கொண்டிருப்போர், கட்சி மீதான விமர்சனங்களை முன்வைப்போர் போன்றவர்கள் எல்லாம் களையெடுக்கப்படக் கூடிய அபாய நிலையே காணப்படுகிறது. .

இதைப்பற்றி தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரிடம் கேட்டேன்.  அவர் பின்வருமாறு பதிலளித்தார்.

“தமிழரசுக் கட்சி இன்று வெவ்வேறு சக்திகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை, சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, முதலமைச்சர் விக்கினேஸ்வரன், தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு (தமிழர் விடுதலைக் கூட்டணி – ஈ.பி.ஆர்.எல்.எவ்) ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (பிள்ளையான் தரப்பு) கருணா அணி போன்றவை நேரடி நெருக்கடிச் சக்திகளாக உள்ளன.sam-suesh

“இதை விட கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற புளொட், ரெலோ போன்றனவும் தமிழரசுக் கட்சிக்கான நெருக்கடிகளை மறைமுகமாக ஏற்படுத்துகின்றன. இதை விட அரசாங்கமும் தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்துவதற்கே முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

“2015 வரை தமிழசுக் கட்சிக்குள் இருந்த ஒற்றுமை இன்றில்லை. கட்சியின் ஒருமைப்பாடு இப்பொழுது சிதைந்துள்ளது. முக்கியமாக சுமந்திரன், மாவை போன்றோர் ஒரு அணியாகவும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், ஐங்கரநேசன், அனந்தி போன்றவர்கள் இன்னொரு அணியாகவும் உள்ளனர். கிழக்கிலும் அப்படித்தான்.

“இந்த இரண்டு அணிகளுக்கும் பின்னணியில் பலர் நிற்கிறார்கள். இதற்கெல்லாம் தூண்டுதலாக இருப்பது தென்னிலங்கை அரசியற் சக்திகள்.

“இந்த நிலையில் இப்பொழுது கட்சியை விமர்சித்துக் கொண்டிருக்க முடியாது. அதற்கான காலம் இதுவல்ல. கட்சியின் சரி பிழைகளைப் பற்றி விவாதிக்கப்போய், கட்சியை நாமாகவே உடைத்து விடுவதாக அமைந்து விடக் கூடிய சூழல்தான் உருவாகும். அது கட்சியை இன்றைய நிலையில் பலவீனப்படுத்தும்.

“ஆகவே, இப்போதுள்ள பிரச்சினை எல்லாம் கட்சியைப் பாதுகாப்பது மட்டுமே.

“கட்சிக்குத் தலையிடியைக் கொடுப்பவர்களையும் வெளிப்படையாகவே கட்சியைப் பலவீனப்படுத்துவோரையும் எதிர்த்தரப்புகளோடு இரகசியக் கூட்டு  வைத்திருப்போரையும் கவனிப்பதே முதல் நோக்கமாக உள்ளது. அத்துடன், புதிய உறுப்பினர்களைக் கட்சியில் சேர்க்க வேண்டியுள்ளது. “அதைப்போல இளைஞர் அணி ஒன்றை வலுவாகக் கட்டமைக்க வேண்டும்.... இப்படியான முக்கியான வேலைகளை மையப்படுத்தியே கட்சிப் புனரமைப்பு வேலைகள் நடக்கின்றன” என்றார் அவர்.

“நீங்கள் இப்படிச் சொன்னாலும் உண்மையில் தமிழரசுக் கட்சி இவ்வாறு அவசரமாக ஒரு புனரமைப்பு நடவடிக்கையில் இறங்கியிருப்பதற்கு நேரடிக் காரணம், தமிழ் மக்கள் பேரவை, முதலமைச்சர் விக்கினேஸ்வரன் போன்றோரின் சவால்கள்தானே. குறிப்பாக தமிழ் மக்கள் பேரவை இளைஞர் அணி ஒன்றைக் கட்டமைக்கும் நடவடிக்கையில் இறங்கப்போவதாக அண்மையில் அறிவித்திருந்தது. இளைஞர் மாநாடு ஒன்றை நடத்தப்போவதாக.

“இதெல்லாம் தமிழரசுக் கட்சிக்கான நெருக்கடிகள் என்ற வகையில் தமிழரசுக் கட்சி இதற்கு முந்திக் கொள்கிறது. இதுதானே உண்மை?” என்று மேற்படி சிரேஷ்ட உறுப்பினரிடம் கேட்டேன்.

“அப்படிச் சொல்ல முடியாது. ஏற்கனவே பல தடவை கட்சி இப்படிக் கூடிப் பல விடயங்களைப் பற்றி ஆராய்ந்திருக்கிறது. இப்பொழுது முழு அளவில் தன்னை மீளமைப்புச் செய்வதைப்பற்றிச் சிந்திக்கிறது. தமிழ் மக்கள் பேரவையோ முதல்வர் விக்கினேஸ்வரனோ தமிழரசுக் கட்சிக்கு ஒரு போதும் நெருக்கடியை ஏற்படுத்த முடியாது. தமிழரசுக் கட்சி பலமாகவே உள்ளது. அதை மேலும் பலப்படுத்த வேண்டும் என்பது கட்சியில் உள்ளோருடைய கருத்தாகும். அந்த அடிப்படையிலேயே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார் அவர்.

அவர் இவ்வாறு குறிப்பிட்டாலும் யதார்த்த நிலை, உண்மை நிலவரம் என்ன என்று பிடிவாதமாகக் கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டிருப்போரைத் தவிர, ஏனையோருக்குத் தெளிவாகத் தெரியும்.

தமிழரசுக் கட்சி உள்ளுக்குள்ளும் வெளியிலும் பல வகையான நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. கட்சியின் மூத்த உறுப்பினர்கள் உரிய மதிப்பளிக்கப்படாமல், காரணங்களின்றி ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்கள். கட்சிக்குள் அண்மைக்காலத்தில் புகுந்திருக்கும் சுமந்திரன், சிறிதரன், சரவணபவன் போன்றவர்கள் தீர்மானிக்கும் சக்திகளாக மாறியுள்ளனர். இவர்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பை நோக்கியும் கட்சியின் உயர் பீடத்தைக் கைப்பற்றும் நோக்கிலும் செயற்பட்டு வருகிறார்கள். இதற்கேற்ற மாதிரி தமக்கிசைவான அணிகளை கட்சிக்குள் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நெடுங்கால உறுப்பினர்களின் ஆலோசனைகளும் அபிப்பிராயங்களும் பொருட்படுத்தப்படுவதில்லை. இது ஏராளம் உள் வெடிப்புகளைக் கட்சிக்குள் ஏற்படுத்தியிருக்கிறது.sam.tna

மறுவளத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளைப் பலவீனப்படுத்தி வந்த தமிழரசுக் கட்சியை இப்பொழுது அந்தக் கட்சிகள் பலவீனப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றன. இதுவும் தமிழரசுக் கட்சிக்குச் சவாலாகவே உள்ளது. 

இதேவேளை “தமிழரசுக் கட்சி நீண்டகாலமாகவே கட்சியின் மாநாட்டை நடத்தவில்லை. கட்சிக்குள் நீடித்துக் கொண்டிருக்கும் அக முரண்பாடுகளைப் பேசித் தீர்க்கவில்லை. கட்சியின் மத்தியகுழு, பொதுக்குழு போன்றவற்றில் கலந்தாலோசித்து தீர்மானங்கள் எடுக்கப்படும் வழக்கம் மாற்றப்பட்டுள்ளது. அல்லது கைவிடப்பட்டிருக்கிறது. இப்பொழுது தனிநபர் தீர்மானங்களின் வழியே தேர்தல் போட்டியாளர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். தனிநபர் செல்லவாக்கின் அடிப்படையிலேயே கட்சி வழிநடத்தப்படுகிறது. முடிவுகள் எடுக்கப்படுகின்றன” என பல பத்திரிகைகள் தொடர்ச்சியாக எழுதி வருகின்றன.

அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் “காலைக்கதிர்” பத்திரிகையும் இதைக் குறித்துக் கடுமையாக எழுதியிருந்தது.

மறுவளத்தில் அண்மைக்காலத்தில் தமிழரசுக் கட்சிக்கு துடிப்பையும் கவர்ச்சியையும் வழங்கியிருந்த இளைஞர் அணித் தலைவரான சிவகரன், கட்சியின் தீர்மானங்கள், நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்து வெளியேறியிருந்தார். அதுவும் கட்சிக்குப் பெரும் பின்னடைவையே கொடுத்துள்ளது.

இதைத்தவிர, தமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் அணி உருவாக்கமும் அதன் எதிர்கால மாநாடும் நிச்சயமாக தமிழரசுக் கட்சிக்கும் கூட்டமைப்புக்கும் நேரடியான நெருக்கடியைக் கொடுக்கும் நிலை உண்டு. 

எனவேதான் கைமுந்திக் காரியம் பார்க்க முற்படுகிறது தமிழரசுக் கட்சி. கூடவே தன்னைப் பலப்படுத்திக் கொள்வதன் மூலமாக கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான ரெலோவையும் புளொட்டையும் தனக்குக் கீழேயே தொடர்ந்தும் வைத்திருக்க முடியும் எனவும் சிந்திக்கிறது.

ஏற்கனவே நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது ரெலோவும் புளொட்டும் தமது அதிருப்திகளையும் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தியபோதும் தமிழரசுக் கட்சியே மேலாதிக்கம் செலுத்தியது. இறுதியில் வேறு வழியில்லாமல் தமிழரசுக் கட்சிக்கு வாய் பொத்தி, புலன்களை அடக்கிக் கட்டுப்பட வேண்டியதாகி விட்டது ரெலோவுக்கும் புளொட்டுக்கும்.

அடுத்த கட்டமாக ரெலோவையும் புளொட்டையும் தமிழரசுக் கட்சிக்குள் கரைத்து விடுவதே அதனுடைய நோக்கமாகும். அந்த நோக்கிலேயே அது செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த நோக்கின் அடிப்படையில் ஈ.பி.ஆர்.எல.எவ் அறிமுகப்படுத்திய உறுப்பினர்களை இழுத்துத் தன்வசப்படுத்தியிருக்கிறது தமிழரசுக் கட்சி. தொடர்ந்து ரெலோ, புளொட்டின் ஆட்களுக்கும் அந்த வலை விரிக்கப்பட்டிருக்கிறது.

தமிழரசுக் கட்சியின் இந்த மேலாதிக்க நிலையின் வெளிப்பாட்டை அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தெரிவின்போதும் நாம் அவதானிக்க முடியும்.

நிச்சயமாக தமிழரசுக்கட்சியைச் சேர்ந்தவர்களே வடக்குக் கிழக்கு  முதலமைச்சர் வேட்பாளர்களாக நிறுத்தப்படவுள்ளனர். விக்கினேஸ்வரன் குறித்த சர்ச்சையும் இதனால்தான் எழுகிறது. தான் எந்தக் கட்சியின் உறுப்பினரும் கிடையாது என்று விக்கினேஸ்வரன் சொல்லியிருப்பதால் தமிழரசுக் கட்சியினால் உடனடியாக எதனையும் செய்ய முடியாதிருக்கிறதே தவிர, நிச்சயமாக பொறுத்த சந்தர்ப்பத்தில் அது விக்கினேஸ்வரனின் கழுத்தில் கயிற்றைப் போட்டே தீரும்.

அதற்குரிய சாமர்த்தியம் தமிழரசுக் கட்சிக்குண்டு. அதாவது தேர்தல் காலத்தையும் தேர்தல் களத்தையும் மிகக் கெட்டித்தனமாக கையாளும் திறனைப் பெற்றது. அதனுடைய திறனே தேர்தல் வெற்றியைக் குறி வைத்து, அதற்கேற்றவாறு இயங்குவது. இப்பொழுது கட்சிப் புனரமைப்பு என்ற பேரில் களமிறங்கியிருப்பதும் தேர்தல் வெற்றிக்காகவே. 

அதனால்தான் அது எப்போதும் தேர்தல்களில் வெற்றியீட்டுகிறது. அரசியல் வெற்றி, தான் சார்ந்த தமிழ் மக்களின் முன்னேற்றம், தமிழ் மொழியைப் பேசும் சமூகங்களின் அரசியல் ஈடேற்றம் என்பதை விட கட்சியின் வெற்றியில்தான் அதனுடைய குறி எப்போதும் உண்டு.

இந்தக் கட்சிப் புனரமைப்புக்காக முதிய வயதிலும் மாவட்டsamtna220618ங்கள் தோறும் பயணங்களைச் செய்ய முன்வந்திருக்கும் மூத்த தலைவர் சம்மந்தன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கான பயணத்தைச் செய்வதற்கு முயற்சித்ததில்லை. படையினரை விலக்கும் போராட்டங்களை முன்னெடுப்பதற்காக முயன்றதில்லை. அரசியல் கைதிகளின் விடயத்தில் எதையும் செய்ய விரும்பியதில்லை. காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களோடு சேர்ந்து போராடி முன்வந்ததில்லை. அவரைத்தான் விடுவோம், அடுத்த மட்டத்தில் உள்ளவர்கள் கூட இதையெல்லாம்  செய்யவில்லை.

இந்தப் பத்தியைப் படித்த பிறகு அவர்கள் சம்பிரதாயமாக மக்களிடம் பயணிக்கும் ஒரு நடவடிக்கையைப் பற்றி யோசிக்கலாம். ஆனால், அது ஆன்மாவிலிருந்து உருவாகிய உணர்வாகவோ சிந்தனையாகவோ அமையாமல் அதுவும் தேர்தலுக்கான முயற்சியாகவே அமையும்.

ஆகவே தேர்தலைக் குறி வைத்து கட்சியை வடிவமைக்கும் பணியில்  தமிழரசுக் கட்சி ஈடுபடுகிறது. சரியாகச் சொன்னால், மாகாணசபைத் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே அது தேர்தலுக்கான பணிகளை ஆரம்பித்திருக்கிறது.

கட்சிப் புனரமைப்பு என்பதெல்லாம் இதற்கான ஒரு பொய் முலாமே.


இந்த நிலையில் தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியோடு ரெலோவும் புளொட்டும் கூட்டு வைத்திருக்கப்போகின்றனவா? முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இனியும் இங்காலும் இல்லாமல் அங்காலும் இல்லாமல் தடுமாறிக் கொண்டேயிருக்கப்போகிறாரா? தமிழரசுக் கட்சிகயை இத்தகைய குறைபாடுகளுடன் மக்கள் தொடர்ந்தும் ஆதரிக்கத்தான் போகிறார்களா?