Theneehead-1

                            Vol:17                                                                                                  23.06.2018

போரால் பிரிந்த குடும்பங்கள் சந்திக்க ஏற்பாடு: வட - தென் கொரியா ஒப்புதல்


கொரியப் போரினால் பிரிந்து போன குடும்ப உறுப்பினர்களை சந்திக்கச் செய்யும் நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்க வட கொரியாவும், தென் கொரியாவும் ஒப்புக் கொண்டnord southன.இதையடுத்து, கடந்த 2015-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட அந்த மனித நேய நிகழ்ச்சிகள், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 1950 முதல் 1953-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற கொரியப் போரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே பிரிக்கப்பட்டனர்.எல்லையின் இருபுறங்களிலும் உள்ள உறவினர்களிடையே தொடர்புகள் முழுமையாக தடுக்கப்பட்டதால் தங்களது குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க முடியாமல் அவர்கள் தவித்து வந்தனர்.

அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் அன்புக்குரியவர்களை கடைசி வரை சந்திக்க முடியாமலே மறைந்தனர். எனினும், அவ்வப்போது இரு கொரிய நாடுகளும் நடத்திய சந்திப்பு நிகழ்ச்சிகளின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலர் மட்டும் தங்களது குடும்பத்தினரை சந்தித்து வந்தனர்.

வட கொரியா மேற்கொண்டு வந்த ஆயுத சோதனைகளும், அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா மேற்கொண்டு வந்த போர் ஒத்திகையும் இரு நாடுகளுக்கிடையிலான பதற்றத்தை அதிகரித்து வந்தது.இதையடுத்து, போரால் பிரிந்த குடும்பத்தினர் சந்திக்கும் நிகழ்ச்சிகள் கடந்த 2015-ஆம் ஆண்டோடு நிறுத்தப்பட்டன.

இந்த சூழலில், தென் கொரியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் துவக்க விழாவுக்கு தனது சகோதரி கிம் யோ-ஜோங்கை வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அனுப்பி வைத்தார்.அதனைத் தொடர்ந்து இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்ட நிலையில், கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சந்திப்பு கடந்த ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவது, பிரிந்த குடும்பத்தினரை சந்திக்கச் செய்யும் நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்குவது போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க இரு தலைவர்களுக்கும் ஒப்புக் கொண்டனர்.

அதன்படி, இதுகுறித்து வட மற்றும் தென் கொரிய அதிகாரிகளிடையே வட கொரியாவிலுள்ள கும்காங் மலை வாசஸ்தலத்தில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.அப்போது, பிரிந்த குடும்பத்தினர்கள் சந்திக்கும் நிகழ்ச்சிகளுக்கு வரும் ஆகஸ்ட் 20 மற்றும் 26-ஆம் தேதிகளில் ஏற்பாடு செய்ய இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இரு நாடுகளும் தலா 100 பேரை சந்திக்கச் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.இந்த ஒப்பந்தம், இரு கொரிய நாடுகளிடையிலான நல்லுறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் குறிப்பதாக பார்வையாளர்கள்தெரிவித்தனர்.