Theneehead-1

Vol: 14                                                                                                                                                23.12.2016

2016: பொய்த்துப்போன நம்பிக்கைகள்

கருணாகரன்

கடந்த ஏழு ஆண்டுகளுக்குள் யாருமே நம்ப முடியாத இரண்டு ஆச்சரியங்கள் 2016இலங்கையில் நடந்தன. ஒன்று சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2014 டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி மாற்றத்துக்கான ஒப்பிரேஷன். (ஜனாதிபதித்தேர்தல் ஜனவரியிலே நடந்தது) மற்றது அதற்கு முன்பு 2009 இல் புலிகளை முற்றாக அழித்தது.

இரண்டின்போதும் பொதுப்பிம்பம் ஒன்று உருவாக்கப்பட்டது. இனிமேல் இலங்கைத்தீவு சொர்க்கத்தீவாக மாறி விடும் என்ற விதமாக. புலிகளில்லாத இலங்கை என்பது இரத்தவாடை நீங்கி அமைதியும் மகிழ்ச்சியும் நிரம்பிய இலங்கை எனவும் இனி நாடு ஒரு குடையின் கீழே அற்புதமாக மலரும் வாசனையுள்ள தாமரையாகவோ வேறு ஏதோ ஒரு மலராகவோ இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால், அப்படியான அதிசயங்கள் எதுவுமே நடக்கவில்லை. வெடிச்சத்தங்களும் குண்டுப்புரளிகளும் பாதுகாப்பு நெருக்கடிகளும் உயிரிழப்பும் இல்லாமற்போனதே தவிர, இடவெளிகளும் முரண்களும் இணக்கமின்மைகளும் போர் உருவாகியதற்கான அடிப்படைக்காரணங்களும் அப்படியேதான் உள்ளன. சுருக்கமாகச் சொன்னால் யுத்தம் முடிந்து விட்டதாக பெரும்பாலான மக்கள் இன்னும் உணரவில்லை. குறிப்பாகச் சிறுபான்மைச் சமூகத்தினர். அதிலும் தமிழர்கள்.

இதைப்போலவே, 2014 டிசம்பரில் ஒரு அதிரடிப் புரட்சியைப்போன்ற நடவடிக்கைகள் இலங்கையில் நடந்தன. ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்சவை அல்லது ராஜபக்ச குடும்பத்தின் செல்வாக்கை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வந்த ரகசிய நடவடிக்கைகள், அடுத்த கட்டத்தில் புரட்சிரமான நடவடிக்கைகள் போன்ற தோற்றமாக உருவாக்கப்பட்டது. ராஜபக்ச அணியை ஆட்சியிலிருந்து நீக்கி விட்டால், நாட்டிலே ஜனநாயமும் சமூக இணக்கப்பாடுகளும் பகை மறப்பும் நல்லாட்சியும் பொருளாதார வளர்ச்சியும் ஊழலின்மையும் கருத்துச் சுதந்திரமும் சிவில் வெளியும் படைவிலக்கமும் சுமுக நிலையும் அரசியற் தீர்வும் வந்து விடும் எனச் சொல்லப்பட்டது. அப்படி நம்ப வைக்கப்பட்டது.

இதற்காக ஊடகங்களும் எதிரும் புதிருமாக இருந்த நாட்டின் பெரும்பாலான அரசியற் கட்சிகளும் பொது அமைப்புகளும் முன்னின்று தீவிரமாக உழைத்தன. ஒரு குடும்பத்திடம் குவிந்திருந்த நாட்டின் அதிகாரத்தையும் வளங்களையும் மீட்பதற்கான போராட்டமென்றும் அந்தப் போராட்டத்தில் உயிரைத் துச்சமென மதித்தே இந்தப் போர்க்களமாடுவதாகவும் சித்திரிக்கப்பட்டது.

ராஜபக்ச குடும்பத்தினரைத் தோற்கடித்தபோது “ஆஹா வென்றது பார் யுகப்புரட்சியொன்று“ என்று பாடவும் பட்டது. ஐ.தே.கவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தமது வரலாற்றுப் பகையை மறந்து ஒரு கோப்பையில் உண்டு களித்தன. எப்போதுமே எதிர்ப்பாட்டுப் பாடும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும் கூட்டு விருந்தாளிகளாகிப் பக்கப்பாட்டைப் பாடத்தொடங்கினார்கள். நாடு முழுவதிலும் புதிய நம்பிக்கை மரங்கள் திடீரெனத் துளிர்த்தன. இனியென்ன வசந்தகாலக் குயில்களின் பாட்டுத்தான் தினமும் என்று எதிர்பார்த்தனர் மக்கள்.

ஆனால், அடுத்து வந்த இரண்டு ஆண்டுகளில் எல்லாம் ஒரு நாடகமே எனச் சாயம் வெளுக்கத் தொடங்கியது. மெல்ல மெல்ல எல்லா நம்பிக்கை மரங்களும் வாடத்தொடங்கின. நடந்ததெல்லாம் யுகப்புரட்சியெல்ல. அதெல்லாம் வெறும் நாடகமே. சீனச்சாய்வும் தேசிய நோக்கமுடைய கடும்போக்காளர்களான ராஜபக்ச அணியை விரட்டுவதற்கான ஒரு ஏற்பாடு மட்டுமே. மலர்ந்தது வாசனை மலர்களுமல்ல. அவை செயற்கையாக உருவாக்கப்பட்ட காகிதப்புக்களே. துளிர்த்தவையெல்லாம் வேரோடி விருட்சமாக வளரும் நம்பிக்கை மரங்களல்ல. அவை, சாடிச் செடிகளே என்றுணரும் விதமாக நிகழ்ச்சிகள் நடக்க ஆரம்பித்தன. தாங்கள் ஏமாற்றப்பட்டதாக சனங்கள் புரிந்து கொள்ளத்தொடங்கினார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதைப்போன்ற டிசம்பரிலே செய்யப்பட்ட சத்தியத்தின் கதியை சனங்கள் கண்டு கொண்டிருக்கிறார்கள். கட்சிகளுக்கிடையில் அதிகாரத்தைப் பகிர்வதற்காகவும் ஆட்சியைத் தக்கவைப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட ஐக்கியத்துக்கு அப்பால், சமூகங்களுக்கிடையில் ஐக்கியம் உருவாகியதாக உணர முடியவில்லை. அப்படியான அதிசயங்கள் நடந்து விடவும் இல்லை. பொருளாதார ரீதியிலும் தேசிய உற்பத்தித்திறன் விருத்தி மற்றும் வளர்ச்சிகள் ஏற்படும் அடையாளங்கள் தென்படவில்லை. சொந்த இடங்களுக்கு – தங்கள் சொந்தக் கிராமங்களுக்குச் சென்று குடியிருக்க முடியாத அளவில்தான் ஜனநாயக மேம்பாடு நடந்திருக்கிறது. பலவந்தமாகப் பௌத்த விகாரைகளை அமைப்பதையும் சிவில் வெளிகளிலே படைமுகாம்களைப் பலப்படுத்தி, நிரந்தரமுகாம்களாக அவற்றை மாற்றியமைப்பதையும் யாரும் கண்டு கொள்ளாதிருக்க வேணும் என்றே அரசாங்கம் விரும்புகிறது. நாட்டில் நிலவும் நல்லாட்சிக்காக இதற்கு மக்கள் ஆதரவு வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என்று அது கேட்கிறது. பொருளாதார வளர்ச்சி வேண்டுமானால், நாட்டைத் திறந்து பிறருக்கு மடியைக் கொடுக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இவற்றைப்பற்றிப் பேசுவதற்கும் கேள்வி கேட்பதற்கும் 2014 இல் அரங்காடிய எவரையும் காணவில்லை. பொற்தாமரைகள் மலரும் அமைதித்தடாகமாக இலங்கையை மாற்றியமைக்கப்போகிறோம் என்று சொன்ன அமெரிக்கப்பிரதானிகளும் அவர்களோடிணைந்து நின்று கொடியசைத்த இந்திய முகங்களும் மேற்கின் வெள்ளைத்தோல் வீரர்களும் எங்கோ போய்ச்சேர்ந்தனர் என்று தேடிக்கொண்டிருக்கிறோம். இல்லையென்றால், மாதத்துக்கு மாதம், வாரத்துக்கு வாரம் இலங்கைக்கு வந்து, கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் ஏன் கிளிநொச்சியில் கூட சிங்கள தமிழ், , முஸ்லிம் தலைவர்களையும் பொது அமைப்புகளையும் ஊடகங்களையும் சந்தித்து வந்த இந்தப் பிரதானிகள் இப்போது வராமலிருப்பதற்கான காரணம் என்ன? அவர்களுடைய காரியம் நிறைவேறியதும் எல்லோரையும் கை விட்டு விட்டனர்.

மகிந்த ராஜபக்ச அதிகாரத்திலிருந்தபோது அமெரிக்கப்பிரதானிகள் கொழும்பிலே உறங்காது வேலை செய்தனர். இப்போதும் அவர்கள் ஓய்ந்திருக்காமல் வேலை செய்கிறார்கள்தான். தமக்குச் சார்பாக அமைக்கப்பட்டிருக்கும் அரசாங்கத்தைக் கவிழாமல் பாதுகாக்க வேணுமல்லவா! ஆனால், இந்த முயற்சிகள் முன்னரைப்போலத் தீவிரமானதல்ல. அப்பொழுது இலங்கையில் அதிகரித்துக் கொண்டிருக்கும் சீன நிழலைக் கட்டுப்படுத்த வேணும் என்பதற்காக ஓய்வின்றி, உறக்கமின்றி வேலை செய்து கொண்டனர். இதற்காக அவர்கள் இலங்கையின் ஊடகங்களைத் தம் பக்கமாகச் சாய்வு கொள்ளச் செய்தனர். ஊடகவியலாளருக்கான பயிற்சிப்பட்டறைகளையும் சந்திப்புகளையும் நடத்தினர். நட்புப் பேணல்களை மேற்கொண்டனர்.  ஊடக நிறுவனங்களுக்கான விஜயங்கள் வேறாக நடந்தது. ஜனநாயகத்தைப் பற்றிப் பேசவேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாக நாட்டின் பெரும்பாலான ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தங்களின் ஈர்ப்பு விசைக்குள் கொண்டு வந்தனர். இதைப்போன்றே சிவில் சமூகப்பிரதிநிதிகளையும் தேவையான புத்திஜீவிகளையும் தொண்டு நிறுவனங்களையும் அரசியற் பிரமுகர்களையும் கையாண்டனர்.

ஆகவே தமக்கிசைவான ஆட்சிப் புலமொன்று இலங்கையில் அமைந்த பிறகு, அதைப்பாதுகாப்பதற்கான முயற்சிகளை மட்டும் மேற்கொள்கின்றனர். அதற்கேற்ப அவர்களுடைய நிகழ்ச்சி நிரல்களும் மாறி விட்டன. இதில் பாதிக்கப்பட்டதும் ஏமாற்றப்பட்டதும் இலங்கையின் சாமானிய மக்களே. அரசியல் தலைவர்கள் தரகர்களாகித் தமக்குரிய பங்குகளைப் பெற்றுக் கொண்டு, தொடர்ந்து சேவகம் செய்து கொண்டிருக்கிறார்கள். சமஸ் கூறுவதைப்போல, மக்கள் நலன் மாகாண  நலன்களை விடுத்து, ஒரு சீட்டு நிறுவனம்போல அவரவர் நலன், பாதுகாப்பு சார்ந்து காய் நகர்த்தும் போக்குக்குத் தலைப்பட்டு விட்டனர் அரசியற் தலைவர்கள். தங்களுடைய சேவகத்தை நியாயப்படுத்துவதற்காக அவர்கள் ஏதாவது நியாயப்படுத்தல்களையும் சாட்டுப்போக்குகளையும் சொல்லிக் கொள்கிறார்கள். சனங்கள் இதையும் நம்பத்தான் வேணும் என்று விதிக்கப்பட்டால், அதுதான் நாட்டின் விதி. இல்லையென்றால் நாட்டின் வரலாறு வேறு விதமாக எழுதப்படும்.

இப்பொழுது 2016 நிறைவடைந்து புதிய ஆண்டு 2017 பிறக்கப்போகிறது. புலிகளும் இல்லாத, எதிர்க்கட்சியின் எதிர்ப்பும் இல்லாத சூழலில் மாற்று அரசியலின் விளைவுகளாக என்ன நடந்திருக்கின்றன? புதிய வெளிப்பாடுகளாக என்ன நிகழ்ந்துள்ளன? என்று பார்க்க வேண்டியுள்ளது. குறிப்பிட்டுச் சொல்லத்தக்க மாதிரி ஏதாவது தெரிகிறதா? ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் சில நாட்கள் விசாரணைகளுக்காக ராஜபக்சக்கள் சிறை வைக்கப்பட்டனர். அதற்கப்பால் அந்த ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படைகள் என்ன என்று சொல்லப்படவில்லை. அவற்றின் அளவு, அவை நிகழ்த்தப்பட்ட விதம், அதற்கான பொறுப்பாளிகள், அவை நிகழ்த்தப்பட்ட காலம் என எதைப்பற்றியும் நாட்டு மக்களுக்குத் தெரியாது. மட்டுமல்ல, அந்தக் குற்றச்சாட்டுகளும் ராஜபக்சக்களின் சிறையிருப்புகளும் கூட இப்போது மங்கத்தொடங்கி விட்டன. இரகசியப் பேரம்பேசல்கள் வேறு நடந்திருப்பதாக கதைகள் உலாவுகின்றன.

இதைப்போன்றே இனப்பிரச்சினைக்கான தீர்வும் புதிய அரசியலமைப்பு விவகாரமும் மங்கலாகவே உள்ளன. முரண்பாடுகளை எப்படிக் கையாளலாம் என்பதை கட்சிகளைக் கையாள்வதைப்பற்றித்தான் தலைவர்கள் சிந்திக்கிறார்களே தவிர, நாட்டின் பிரச்சினைகளிலுள்ள முரண்பாடுகளுக்கு எப்படித்தீர்வுகளைக் காணலாம் என்று சிந்திக்கவில்லை. நாட்டில் அரிசி விலை உயர்ந்ததைத் தவிர வேறு எதுவும் உருப்படியாக நடந்ததில்லை என்று சாதாரணமாகக் கடைத்தெருவில் சனங்கள் சொல்லிக்கொள்வதே அரசாங்கத்தின் சாதனைகளாக உள்ளன. குறிப்பாக 2016 ஆம் ஆண்டின் சாதனைகளில் உச்சம் இது.

இந்த நிலையில்தான் 2017 இல் என்ன நடக்கப்போகிறது? என்று சிந்திக்க வேண்டும். 2016 அரசியல் தீர்வு எட்டப்படும் என்ற சம்மந்தனின் நம்பிக்கை பொய்த்துப்போனதைப்போல, சனங்களின் எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துப்போனது. அடுத்த ஆண்டில் அரசியலமைப்புப் பேரவையின் சாதனைகளும் அதற்கான சர்வஜன வாக்கெடுப்பும் எப்படி இருக்கப்போகிறது என்று யாருக்கும் உறுதியில்லை. அப்படியான ஒரு நிலையில்தான் புதிய ஆண்டு பிறக்கப்போகிறது. புதிய ஆண்டின் வாழ்த்துச் செய்திகளில் வழமையைப்போல தேய்ந்து போன நம்பிக்கைச் சொற்களைத் தலைவர்கள் சொல்லாதிருந்தாலே ஆறுதலாக இருக்கும். தேவன் பிறப்பு என்பது ஒளியை இந்தப் புமியில் உண்டாக்கும் ஒரு செயல் என்ற நம்பிக்கை பொதுவாகக் கிறிஸ்தவ மக்களிடம் உண்டு. தேவன் வருகிறார் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இலங்கையில் ஒளியும் தீர்வும் வருவதும் எப்படி? எப்போது? எங்கிருந்து? என்பது இன்னும் தீராத புதிரே.

ஆமாம், ஏராளமான கேள்விகள், நம்பிக்கையீனங்களின் மத்தியில்தான் புதிய ஆண்டும் பிறக்கப்போகிறது. அந்தப் புதிய ஆண்டை மாற்றுச் செயற்பாட்டாளர்களும் புதிய அணியினரும் தங்களுக்கானதாக மாற்றுவதைப்பற்றிச் சிந்திப்பார்களா? ஏனென்றால், காலம் அவர்களுக்காகவே தன்னைத் திறக்கத் தயாராக இருக்கிறது. அவர்கள் பிறரைக் குறைகூறிக் கொண்டிருக்காமல், தம்மைத் தயார்ப்படுத்தவேணும். அதுவே 2017 இல் மாற்று அணி, மாற்றுச் சிந்தனையாளர்களுக்கான வாய்ப்பாக அமையும்.
 

dantv