Theneehead-1

                            Vol:17                                                                                                  25.06.2018

நள்ளிரவில் சுதந்திரம்! சவூதியில் முடிவுக்கு வந்தது பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை

சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு நீண்டகாலம் நடைமுறையில் இருந்த தடை, சனிக்கிழமை நள்ளிரவுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது.  அதையடுத்து, தலைநகர் ரியாwomendriveத் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் முதல் முறையாக கார்களை உற்சாகத்துடன் ஓட்டிச் சென்றனர். முஸ்லிம் நாடான சவூதி அரேபியாவில், பெண்கள் கார் ஓட்டுவதற்கு நேரடியாக தடை விதிக்கப்படாவிட்டாலும், அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் மறுக்கப்பட்டு வந்தது.இதன் மூலம், அவர்கள் சட்டப்பூர்வமாக கார்களை இயக்குவது மறைமுகமாக தடை செய்யப்பட்டு வந்தது. உலகின் வேறெங்கிலும் இல்லாமல், சவூதி அரேபியாவில் மட்டும் விதிக்கப்பட்டிருந்த இந்தத் தடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.

பெண்கள் கார் ஓட்டினால் அவர்கள் முகத் திரையை நீக்க வேண்டியிருக்கும்; அவர்கள் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே செல்வார்கள்; விபத்து போன்ற தருணங்களால் வெளி ஆண்களுடன் அடிக்கடி பேச வேண்டியிருக்கும்; ஆண்-பெண் நெருக்கம் ஏற்பட்டு சவூதி பண்பாட்டுக்கு களங்கம் ஏற்படும் என பல்வேறு காரணங்களைக் காட்டி, சவூதியில் பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கான உரிமை மறுக்கப்பட்டு வந்தது.எனினும், இந்தத் தடைக்கு எதிராக பெண் உரிமைகள் அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்து வந்தனர்.

ஒரு சில மதவாதிகள் கூட இந்தத் தடைக்கு எதிரான கருத்தை தெரிவித்து வந்தனர். பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதை குரான் தடை செய்யவில்லை எனவும், கார் ஓட்ட முடியாததால் அந்நிய ஆண் ஓட்டுநர்களுடன் பெண்கள் அடிக்கடி காரில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுவதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டி வந்தனர். தடையை மீறி அவ்வப்போது கார் ஓட்டி வந்த பெண்களுக்கும், தடைக்கு எதிரான பிரசாரம் செய்த ஆர்வலர்களுக்கு எதிராக சவூதி அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.

இந்தச் சூழலில், சவூதி பட்டத்து இளவரசராக முடி சூட்டிய முகமது பின் சல்மான் நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அதன் ஒரு பகுதியாக, பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை நீக்கப்படும் என்று மன்னர் சல்மான் கடந்த ஆண்டு அறிவித்தார். அதையடுத்து, பெண்களுக்கு கார் ஓட்டும் பயிற்சியும், ஓட்டுநர் உரிமங்களும் அளிக்கப்பட்டு வந்தன.இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி பெண்கள் காரோட்டுவதற்கான தடை சனிக்கிழமை நள்ளிரவுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தடை நீங்கிய சில நிமிடங்களிலேயே பல பெண்கள் கார்களின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து, முதல் முறையாக சாலைகளில் சட்டப்பூர்வமாக வலம் வரத் தொடங்கினர்.சாலை நெடுகிலும் நின்றிருந்த பெண் உரிமை ஆர்வலர்கள், அந்தக் கார்களை நிறுத்தி பெண் ஓட்டுநர்களுக்கு உற்சாகத்துடன் வாழ்த்து கூறினரசவூதி அரேபியாவில் பெரும்பாலான பெண்களுக்கு கார் ஓட்டும் பயிற்சியும், ஓட்டுநர் உரிமமும் இல்லாததால், இந்தத் தடை நீக்கம் காரணமாக அந்த நாட்டில் உடனடியாக மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடப் போவதில்லை எனவும், அரசு அனுமதித்தாலும் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அவர்கள் வீட்டு ஆண்கள் அனுமதிப்பது கடினம் என்றும் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், பெண்கள் கார் ஓட்டுவதற்கு சட்டப்பூர்வ தடை விதித்திருந்த உலகின் ஒரே நாடான சவூதி அரேபியா, அந்தத் தடையை நீக்கியிருப்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திருப்பம் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

30 ஆண்டு கால யுத்தம்

சவூதி பெண்கள் கார் ஓட்டும் உரிமையை வலியுறுத்தி, சுமார் 30 ஆண்டுகளாகவே பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வந்தனர்.

இஸ்லாம் மதத்தை தீவிரமாகக் கடைப்பிடிக்கும் அண்டை நாடுகளில் கூட பெண்கள் சுதந்திரமாக கார் ஓட்டும்போது, சவூதியில் மட்டும் அதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது பலரையும் கொந்தளிக்கச் செய்தது.

இந்தச் சூழலில், கடந்த 1990-ஆம் ஆண்டுதான் அரசின் தடைக்கு எதிரான வெளிப்படையான போராட்டம் தொடங்கியது. அந்தப் போராட்டத்தின்போது, பிற நாடுகளில் வாங்கிய ஓட்டுநர் உரிமங்களுடன் 47 சவூதி பெண்கள் கார்களில் ஊர்வலமாகச் சென்றனர். எனினும், அவர்களை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

பிறகு, "இனி எங்கள் வீட்டுப் பெண்கள் கார் ஓட்ட மாட்டார்கள்' என்று அந்தப் பெண்கள் வீட்டைச் சேர்ந்த ஆண்களிடம் எழுதி கையெழுத்து வாங்கிய பிறகே அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். இருந்தாலும், அவர்களை "வேசிகள்' என விமர்சித்து மதவாதிகள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். மேலும், அந்தப் பெண்கள் பணியாற்றிய நிறுவனங்கள் அவர்களை பணி நீக்கம் செய்தன. அதற்குப் பிறகும், அந்தப் பெண்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

2008-ஆம் ஆண்டில், பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடையை நீக்கக் கோரி 1,000 பேர் கையெழுத்திட்ட மனு அப்போதைய மன்னர் அப்துல்லாவிடம் அளிக்கப்பட்டது.
எனினும், "பெண்கள் கார் ஓட்டுவதை ஏற்க சவூதி மக்கள் எப்போது தயாராகிறார்களோ, அப்போதுதான் அந்தத் தடை நீக்கப்படும்' என மன்னர் கைவிரித்துவிட்டார்.
அதற்குப் பிறகும், அந்தத் தடைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தனர்.