Theneehead-1

Vol: 14                                                                                                                                                23.12.2016

"புதிய அரசியல் யாப்பு விடயத்தில் அரசியல் தலைமைகளின் அசமந்தம் அபாயகரமானது"

NFGG தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்.

(NFGG  ஊடகப் பிரிவு)

"அரசியல் யாப்புருவாக்க விடயத்தில் சிவில் சமூகம் காட்டிய அக்கறையினையும், பொறுப்புணர்வினையும் கூட முஸ்லிம் அரசியல் கட்சிகளும், பிரதிநிதிகளும் வெளிப்படுத்துவதாக இல்லை. இந்த அசமந்NFGG-Press-Meet-05.08.2015-3தப் போக்கு முஸ்லிம் சமூகத்திற்கு அபாயகரமானது" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி - NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான் தனதறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:"நமது நாட்டின் எதிர் காலத்தையும், சிறுபான்மை மக்களின் ஒட்டு மொத்த நலன்களையும் நேரடியாக தீர்மானிக்கப் போகின்ற ஒன்றாக புதிய அரசியல் யாப்பு அமையப் போகின்றது.  கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம்  மக்கள் வழங்கிய ஆணையானது வெறுமனே ஆட்சி மாற்றம் ஒன்றிற்காக வழங்கிய  ஆணை கிடையாது. அது இந்நாட்டின் ஆட்சி முறையில் மாற்றம் ஒன்றினை எற்படுத்துவதற்காக வழங்கப்பட்ட ஆணையாகும். அந்த மாற்றத்திற்காக சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும் பங்களிப்புச் செய்திருந்தனர்.

ஆட்சி மாற்றம் ஒன்று நடைபெறாவிட்டால் எதிர் காலம் படுமோசமாக அமைந்து விடும் என்ற அபாயத்தைத் தெரிந்து கொண்டேதான் , பெரும் அபாயங்களுக்கு மத்தியில் சமூக உணர்வுடனும் நாட்டுப் பற்றுடனும் ஆட்சி முறை மாற்றத்திற்கான அந்தப் பங்களிப்பினை நமது மக்களும் வழங்கினார்கள்.


 அனைத்து சமூகங்களினதும் மத கலாசார தனித்துவங்கள், உரிமைகள் என்பன உத்தரவாதப்படுத்தப்படுவதோடு ,  நாட்டின் ஆட்சிமுறைக் கட்டமைப்புக்களில் அனைத்து மக்களும் பங்கேற்றக்கூடிய , ஊழல் மோசடிகள் அற்ற, தேசிய நல்லிணக்கம் கொண்ட ஒரு புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே அனைவரினதும் கனவாக இருந்தது. அதனைச் செய்வோம் என்ற வாக்குறுதியினை தற்போதைய அரசாங்கமும் வழங்கியிருந்தது. அதற்கேற்ற வகையில் இலங்கைக்கான புதிய யாப்பு உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியும் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைவாகவே தற்போது யாப்புருவாக்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இது தற்போது இறுதிக்கட்டத்தினை நெருங்கியிருக்கிறது.

யாப்புருவாக்க நடவடிக்கையின் முதற்கட்டமாக பொது மக்களின் அபிப்பிராயங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் நாடுபூராகவும்  மேற் கொள்ளப்பட்டன. இரண்டாம் கட்டமாக, கடந்த ஜனவரி மாதம் பாராளுமன்றம் யாப்பு நிர்ணய சபையாக பாராளுமன்றம் மாற்றப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக, புதிய யாப்பில் உள்வாங்க வேண்டிய விடயங்களை தனித்தனியாக கையாள்வதற்கான ஆறு பாராளுமன்ற உப குழுக்கள் அமைக்கப்பட்டன.  அந்த உப குழுக்கள் தமது கலந்தாலோசனைகளை நிறைவு செய்து தத்தமது அறிக்கைகளையும் தற்போது வெளியிட்டிருக்கின்றன.  அடுத்தகட்டமாக இந்த அறிக்கைகளில் சொல்லப்பட்டுள்ள முன்மொழிவுகள் அனைத்தும் பாராளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவிள்ளது.

ஆரம்பத்தில் பொதுமக்களின் அபிப்பிராயங்கள் உள்வாங்கப்பட்ட சந்தர்ப்பத்தில்,  முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகளும், அமைப்புக்களும் மிகுந்த ஆர்வத்தோடும் அக்கறையோடும் தமது அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர். அத்தோடு, சாத்தியமான எல்லா வழிகளிலும் புதிய யாப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்ற கருத்துக்களையும் பொது தளங்களிலும் ஊடகங்களிலும் வெளிப்படுத்தியிருந்தனர். அந்த வகையில் யாப்புருவாக்க நடவடிக்கைகள் தொடர்பில் முஸ்லிம் சிவில் சமூகம் தனது கடமையினை பொறுப்புடன் செய்திருக்கின்றது.

இவ்விடயத்தில்,  பாராளுமன்ற பிரதிநிதிகளிடமிருந்தும் அவர்கள் சார்ந்த கட்சிகளிடமிருந்தும் நிறையவே எதிர்பார்க்கப்பட்டன.  யாப்புருவாக்க விடயத்தில் தமது சமூகம் தொடர்பாகவும் தமது நாடு தொடர்பாகவும் அவர்களின் கடமைகள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால், சிவில் சமூகம் காட்டிய அக்கறையின் அளவுக்குக் கூட இவர்கள் அக்கறை காட்டியிருக்கின்றார்களா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.

த்தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை பாதிக்கக்கூடிய விடயமான தேர்தல் திருத்த விடயத்தில் மாத்திரம் ஓரளவு அக்கறை காட்டுகின்ற இவர்கள் சமூகத்தினதும் நாட்டினதும் ஏராளமான நலன்களைப் பாதிக்கின்ற ஏனைய விடயங்களில் அக்கறையின்றி மௌனம் காப்பதாகவே தெரிகிறது.

யாப்புருவாக்க ஆலோசனைகளுக்கென நிர்ணயிக்கப்பட்ட பாராளுமன்ற உபகுழுக்கள் அனைத்திலும் முஸ்லிம் பிரதிநிதிகள் அங்கத்துவம் பெற்றிருக்கின்றார்கள். அந்த ஒவ்வொரு குழுக்களும் தத்தமது விடயத் தலைப்புக்களில் ஏராளமான அமர்வுகளை நடாத்தியிருக்கின்றன. ஏராளமான விடயங்கள் பேசப்பட்டும் கலந்தாலோசிக்கப்பட்டும் உள்ளன. ஆனால் இந்தக் குழுக்களில் என்னவென்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது பற்றி இக்குழுக்களின் அறிக்கை கடந்த நவம்பர் 19ம் திகதி வெளியாகும் வரை நமது சமூகம் அறிந்திருக்கவில்லை. ஒவ்வொரு குழுக்களிலும் பேசப்படும் விடயங்களை சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளோடும் புத்திஜீவிகளோடும் இந்தக் குழுக்களில் அங்கத்துவம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெளிவு படுத்தி ஆலாசித்திருக்க வேண்டும். அவ்வாறு எதுவும் நடை பெறவில்லை. அது நடந்திருந்தால் சகலரது ஆலோசனைகளையும் பெற்று சமூகத்தின் தீர்மானங்களை அந்தந்தக் குழுக்களின் முன் மொழிவு அறிக்கைகளில் இணைத்துக் கொண்டிருக்க முடியும். அந்த அருமையான சந்தர்ப்பமும் தவறவிடப்பட்டுள்ளது என்பது பெரும் துரதிஸ்டமாகும்.

மேலும், அதிகாரப் பரவலாக்கல் விடயம் தொடர்பாகவும் சில முக்கிய அரசியல் பிரமுகர்கள் காட்டி வரும் மௌனம் ஆச்சர்யம் தருகிறது. சில முஸ்லிம் கட்சிகள் வட கிழக்கு இணைப்பு போன்ற பாரதூரமான விடயங்களில் மறைமுகமான ஒப்புதல்களை வழங்கி விட்டதோ என்கின்ற அச்சமும் இப்போது சமூகத்தில் எழத் தொடங்கியிருக்கிறது.

யாப்புருவாக்கம் என்பதனை ஒரு கட்சியினுடைய நலன்களுடன் அல்லது ஒரு சில அரசியல் வாதிகளின் விருப்பு வெறுப்புகளுடன் மட்டுப்படுத்துவதானது பெரும் ஆபத்தாகும். மாறாக மக்களுடைய நலன்களையும் நாட்டினுடைய நலன்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு  இவ்விடயம் அணுகப்பட வேண்டும். இதற்கு வெளிப்படையான, பொறுப்புக் கூறத்தக்க, கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கூட்டு அணுகு முறை அவசியமாகும்.

எனவேதான், முஸ்லிம் அரசியல் வாதிகள் அனைவரையும் ஒன்றிணைத்த ஒரு கூட்டமைப்பினை உருவாக்குவதும் அக்கூட்டமைப்பானது சிவில் சமூக கட்டமைப்புகளுடன் கூட்டிணைந்து இயங்குவதும் அவசியம் என்பது மிக ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

அந்த சிறந்த ஆலோசனை கூட ஒரு முஸ்லிம் கட்சியின் அலட்சியமான போக்கின் காரணமாக இல்லாமல் செய்யப்பட்டது. அவ்வாறான ஒரு கூட்டமைப்ப உருவாக்கப்பட்டிருக்குமேயானால் பாராளுமன்றத் தெரிவுக்குழு அனைத்து அறிக்கைகளிலும் நமது சமூகத்தின் ஆலோசனைகளையம் அபிப்பிராயங்களையும் உள்வாங்கியிருக்க முடியும்.

எனவே, எமது மக்களினதும் நாட்டினதும் தலையெழுத்தினை அடுத்த பல தசாப்தங்களுக்கு தீர்மானிக்கப் போகின்ற புதிய யாப்பு விடயத்தில் இந்தக் கட்டத்தில் இருந்தாவது ஒரு சமூகம் சார்ந்த கூட்டிணைந்த அணுகுமுறையினை நாம் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.

ஒரு சில அரசியல் கட்சிகளும் ஒரு சில அரசியல் வாதிகளும் தத்தமது தேவைகளின் அடிப்படையில் புதிய யாப்பு விடயத்தில் நடந்து கொள்வதனை அனுமதிக்க முடியாது. இது தொடர்பில் முஸ்லிம் சமூகம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

dantv