Theneehead-1

   Vol:17                                                                                                                               25.09.2018

வாழ்வை எழுதுதல் - அங்கம் 04

வரலாற்றில் பதிவாகும் காலிமுகத்தைச் சுற்றி முட்கம்பிவேலி அமைத்த கதை!
1953  ஹர்த்தாலும் சமகாலத்து ஆர்ப்பாட்டங்களும்

                                                                                       முருகபூபதி

(1)

ஆர்ப்பாட்டங்கள் மனிதவாழ்வுடன் ஒன்றித்திருப்பது. தங்கள் கோரிக்கையை முன்வைத்து குழந்தைகளும் அடம்பிடித்து - அழுது காரியம் சாதிக்கும். ஒரே குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் தத்தம் தேவைக்காக அழுது ஆர்ப்பாட்டம் செய்யும்போது யாருக்கு முன்னுரிமை கொடுப்பது என்பதில் பெற்றவர்கள் திணறிப்போகும் காட்சிகளையும் அன்றாடம் காணமுடியும்.

குழந்தைகளிடத்தில் பாரபட்சம் காண்பித்தால் அவர்களின் ஆர்ப்பாட்டங்களும் புதிய புதிய வடிவங்களை எடுத்துவிடும். அரசியலும் அப்படித்தான். சிங்கள மக்கள் பெரும்பான்மையாக  கலந்துகொண்ட ஒரு பொதுநிகழ்வில் இலங்கை இனப்பிரச்சினையின் மூலவேர் குறித்து,  சிங்கள மொழியிலேயே உரையாற்றிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் உத்தியோகபூர்வ பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரனும் தேசிய இன நெருக்கடிக்கு ஒரே குடும்பத்தில் பிறந்த குழந்தைகளின் மீதான பாரபட்சத்தையே உதாரணமாக காண்பித்திருந்தார்.

கடந்த செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி இலங்கைத் தலைநகரsep 55த்தை முற்றுகையிடும் ஆர்ப்பாட்ட போராட்டத்தை முன்னெடுத்திருந்த பொது எதிரணிக்கு இன்றைய மைத்திரி - ரணில்  கூட்டு நல்லாட்சி(?) யை இல்லாமல் செய்துவிடவேண்டும் என்பதுதான் பிரதான நோக்கமாக இருந்தது. இந்த நல்லாட்சிக்கூட்டணியின்  சூத்திரதாரியான சந்திரிக்கா குமாரணதுங்க பதவியிலிருந்த காலத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.  அவருடைய தாயார் ஶ்ரீமா பிரதமர் பதவியிலிருந்தபோதும்  தந்தையார் பண்டாரநாயக்கா பிரதமராக இருந்தபோதும் ஆர்ப்பாட்டங்களும் குறைவின்றி நடந்துள்ளன.

பண்டாரநாயக்காவின் காலத்திலேயே தமிழரசுக்கட்சியினரின் சிங்கள ஶ்ரீ எழுத்துக்களுக்கு தார்பூசி அழிக்கும் போராட்டமும் காலிமுகத்தில் நாடாளுமன்றத்திற்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டமும்  நடந்த காலத்தில் எனக்கு ஏழுவயது. அதனை நேரில் பார்க்காது விட்டாலும் அந்தப்போராட்டங்கள் - ஆர்ப்பாட்டங்கள் பற்றிய செய்திகளையும் அவற்றின்  பின்னணி வரலாறுகளையும் படித்து தெரிந்துகொண்டிருக்கின்றேன்.

1953 இல் பெரிய ஹர்த்தால் நடந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட காலத்தில் எனக்கு இரண்டுவயது. அந்தச்செய்திகளையும் பின்னாளில்தான் படித்து தெரிந்துகொண்டேன். 1947 இல் பொதுவேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடந்தபோது நான் இந்த உலகில் பிறந்திருக்கவில்லை. அந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்தான்  கந்தசாமி என்ற தமிழ் அரசாங்க ஊழியர் என்ற தகவலையும் படித்துத்தான் தெரிந்துகொண்டேன்.

1966 இல் டட்லி - செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து தலைநகரில் அன்றைய எதிரணியினர் நடத்திய  ஆர்ப்பாட்டத்தில் ஒரு பெளத்த பிக்கு சுட்டுக்கொல்லப்பட்டார். 1953 1953 hartalஹர்த்தால்,  இலங்கையின் மூவின மக்களும் அரசியல், இன, மத வேறுபாடுகளின்றி விலைவாசி உயர்வைக்கண்டித்து பேரெழுச்சியாக ஒன்றிணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் என்று வரலாற்று ஏடுகள் பதிவுசெய்துள்ளன.

ஹர்த்தால் என்ற பெயரும் இலங்கைக்கு இந்தியா குஜராத்திலிருந்து இறக்குமதியான சொல்தான்! பின்னாளில் தெற்காசிய நாடுகளில் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்புகள் நடக்கும்போது பயன்படுத்தப்பட்ட சொற்பிரயோகம். முதல் முதலில் இந்திய சுதந்திரப்போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய இச்சொல்லைத்தான் இலங்கையில் 1953 இல் பயன்படுத்தியிருக்கின்றனர்.

முதல் பிரதமர் டீ. எஸ். சேனாநாயக்கா 1952  மார்ச்சில் காலிமுகத்தில் குதிரைச்சவாரியின்போது தவறிவிழுந்து மறைந்ததும், அந்த ஆண்டே ஏப்ரில் மாதம் நடந்த இடைக்கால தேர்தலில் 52 ஆசனங்களுடன் மீண்டும் பதவிக்கு வந்த ஐக்கியதேசியக்கட்சியின் தலைவர் டட்லி சேனாநாயக்கா பிரதமரானார். அக்காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட பங்கீட்டு அரிசிக்கான மானியத்தை இரத்துச்செய்து,  அதன் விலையை 25 சதத்திலிருந்து 70 சதத்திற்கு உயர்த்தினார்.

அதனை எதிர்த்து  இடதுசாரிகள் மக்களை திரட்டிக்கொண்டு நடத்திய மாபெரும் போராட்டம்தான் அந்த ஹர்த்தால். அன்றைய அரசு கலங்கியது. டட்லி துறைமுகத்தில் தரித்துநின்ற ஒரு கப்பலில்  அமைச்சரவைக்கூட்டத்தை நடத்த நேர்ந்தது. மக்களின் போராட்டத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் அன்றைய டட்லி அரசு கவிழ்ந்தது.

 ஆனால், அந்த ஆர்ப்பாட்டத்தை  எங்கள் இன்றைய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னோடித்தலைவர்கள் (தமிழரசு - தமிழ்க்காங்கிரஸ்) அரிசி ஹர்த்தால் என்றுதான்  வர்ணித்தார்களாம்! அவ்வாறு அரசையே கலைக்கும் வல்லமை மக்களுக்கு ஒருகாலத்தில் இருந்திருப்பதை வரலாற்று ஏடுகள் பதிவுசெய்துள்ளன. அதன்பின்னர் இலங்கைத்தலைநகரில் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் நடந்தும் அரசுகளை அந்தப்போராட்டங்களால் எதுவும் செய்யமுடியவில்லை.

எனக்கு 23 வயது நடக்கும் காலத்தில் 1974 இல் ஒரு ஆர்ப்பாட்டத்தை தலைநகரத்தில் நேருக்கு நேர் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. காலிமுகத்தை நோக்கிவரவிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்கும் பணியில் அன்றைய ஶ்ரீமாவோ - என். எம். பெரேரா - பீட்டர் கெனமன் கூட்டாட்சி என்னைப்போன்றவர்களையும் பயன்படுத்தியதை விதியின் கோலம் என்றுதான் நினைத்துப்பார்க்கின்றேன்.

கடந்த செப்டெம்பர் 5 ஆம் திகதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் பொது எதிரணி முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தையும் அன்று 1974 இல் ஜே.ஆர் - பிரேமதாச அன்றைய அரசுகsep5்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும்  சீர்தூக்கிப்பார்க்கும் போது,  1953 இல் நடந்த ஒன்றிணைந்த மக்கள் சக்தியின்  ஆர்ப்பாட்டத்தின் அருகில்கூட  பின்னாளில் நடந்திருக்கும் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் நெருங்க முடியாது.

1953 இற்குப்பின்னர் அரசியல் கட்சிகளின் தேவைகளின் நிமித்தம் நடைபெற்ற அனைத்து ஆர்ப்பாட்டங்களும் மக்களின் நலன் சார்ந்திருக்கவில்லை. பதவியை ஆக்கிரமிப்பதற்காகவே மக்களை தூண்டிவிட்டனர். மக்களிடம் ஏற்படும் மனமாற்றங்களினால் தேர்தல்கள் மூலம் தெரிவாகும் ஆட்சிகளும் காலத்துக்காலம் எதிரணிகளின் ஆர்ப்பாட்டங்களை சந்திப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. "இந்த நல்லாட்சி (!?) அரசை வீட்டுக்கு அனுப்புவோம் " என்று தலைநகரத்தை பொது எதிரணி மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்து இரண்டு வாரங்களுக்கிடையில்தான் எரிபொருள் விலை ஏறியிருக்கிறது. அரிசி, பாண் உட்பட அத்தியாவசிய உணவுப்பொருட்களின்  விலை உயர்ந்திருக்கிறது. பொது எதிரணியின் ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்த வேளையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரும் நடந்திருக்கிறது. ஆளும் ஐக்கிய தேசியக்கட்சியின் அரசியல் - மத்திய குழுக்கூட்டம் அதன் தலைமையகம் ஶ்ரீகோத்தாவில் நடந்திருக்கிறது.

நாணயப்பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது. போக்குவரத்து கட்டணம் உயர்கிறது. வாழ்க்கைச்செலவீனம் ஏழை மக்களை பெரிதும் பாதிக்கிறது. வறட்சி மக்களை வாட்டுகிறது. இந்தப்பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணி உட்பட பொது எதிரணியினர்,  தினமும் " மக்கள் வீதிக்கு வந்து போராடப்போகிறார்கள்" என்று அறிக்கை மேல் அறிக்கை விடுக்கின்றனர்.

ஆனால், அவர்களால் 1953 இல் நடந்தது  போன்றதொரு மாபெரும் ஹர்த்தாலை  நடத்த முடியவில்லை. தலைநகரத்தில் முன்னைய நாடாளுமன்றத்திற்கு முன்பாக  இந்து சமுத்திரத்தாயை தழுவிக்கொண்டிருக்கும் காலிமுகத்திடலுக்குள் ஏராளமான கதைகள் இருக்கின்றன. பல சிங்கள - தமிழ்த்திரைப்படங்களுக்கான படப்பிடிப்புகளும் இங்கு நடந்திருக்கின்றன.

கொழும்பு புதுச்செட்டித்தெருவில் பட்டக்கண்ணு ஆச்சாரி ( நகGalle-Face01ைக்கடை செல்வந்தர்) அவர்களின் இல்லத்தில் தங்கியிருக்கவேண்டிய எம்.ஜீ.ஆர். - சரோஜா தேவி,  ரசிகர்களின் நெருக்கடியிலிருந்து தப்பித்துவந்து  தங்கியது காலிமுகத்தில் அமைந்த Gall face  Hotel  இல்தான். வருடாந்தம் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி சுதந்திரதினக்கொண்டாட்டம் நடப்பதும் இராணுவ அணிவகுப்பு இடம்பெறுவதும் இங்குதான். ஶ்ரீமாவின் கூட்டரசாங்க காலத்தில் 1972 இல் இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசானதும், அந்தத்  தினமும் வருடாந்தம் அனுட்டிக்கப்பட்டதும் இங்குதான். பதவியிலிருக்கும் ஆட்சியாளர்களின் கட்சியின் மேதின ஊர்வலம் நிறைவடைந்து மேதினக்கூட்டம் நடப்பதும் இந்த காலிமுகத்திடலில்தான். இஸ்லாமியரின் நோன்புத் திருநாள் பெரும் தொகையானவர்களுடன் தொழுகையுடன் நிறைவுபெறுவதும் இங்குதான்.

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தால் அது உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் என்று கணிப்பவர்கள்தான் அரசியல்வாதிகள். அதனால்தான் அன்று தமிழரசுக்கட்சி (சத்தியாக்கிரகம் )  முதல் பின்னாளில் பல அரசியல் கட்சிகளும் தங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு அந்தத் திடலை நாடினார்கள். பழைய நாடாளுமன்றத்திற்கு அருகில் ஓடும் பேறை ஆறு கடலில் சங்கமிப்பதும் இங்குதான். தமிழரசுக்கட்சியினர் சத்தியாக்கிரகம் செய்தபோது பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த வன்முறைக்கும்பல் சில தமிழரசுக்கட்சித் தொண்டர்களை தாக்கி இந்த பேறை ஆற்றில் தூக்கிவீசினார்கள். அச்சம்பவத்தில் கை முறிந்து காயப்பட்டவர்தான் புதுமை லோலன் என்ற யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த எழுத்தாளர். இவர் செங்கை ஆழியானின் மூத்த சகோதரனாவார்.

காலிமுகத்தில் குறிப்பிட்ட பேறை ஆற்றின் கரையில்தான் 1921 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்திற்கான  வரைபடம் தயாராகி,  ஒன்பது ஆண்டு காலத்தில்  அக்கட்டிடம் பூர்த்தியாகி 1930 இல் அன்றைய கவர்னர் சேர். ஹேர்ட் ஸ்டான்லி என்பவரால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.  இந்த பிரம்மாண்டமான கட்டிடத்துக்குள்தான் முதலில் சட்ட சபையும் பின்னர் நாடாளுமன்றமும் தேசிய அரசுப்பேரவையும் 1982 வரையில் இயங்கியது.  பல பிரதமர்களையும் பல எதிர்க்கட்சித்தலைவர்களையும் பல அரசாங்கங்களையும் கண்ட  இந்தக் கட்டிடம் 1982 இன் பின்னர் ஜனாதிபதி செயலகமாகிவிட்டது.

(தொடரும்)