காலி முகத்திடலில் இன்று முன்னெடுக்கப்பட்ட 'ஒக்டோபர் 24' போராட்டம்..!  காவற்துறையினரால் கலைப்பு

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கான அடிப்படை வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க கோரி கொழும்பு வாழ் மலையக இளைஞர் , யுவதிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காவற்துறையினரால் கலைக்கப்பட்டுள்ளது.

இதன் போது காவற்துறையினர் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டு போராட்டக்காரர்களை கலைத்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த போராட்டம் காலை 10 மணிமுதல் 12 மணி வரையில் காலி முகத்திடலில் கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

12 மணியுடன் இந்த போராட்டம் நிறைவுபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தபோதும், முன்னறிவிப்புகள் இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் ஜனாதிபதி செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.

இதன்போது, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னதாக வீதித் தடைகளை ஏற்படுத்திய காவல்துறையினர், போராட்டக்காரர்களை அந்த இடத்திலேயே தடுத்து நிறுத்தினர்.

எவ்வாறாயினும் , குறித்த இடத்திலே தமது போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவ்விடத்திற்கு வந்து தமது கோரிக்கைக்கு தீர்வினை பெற்றுத்தராவிட்டால் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், உடனே இவ்விடத்தை விட்டு கலைந்து செல்லாவிட்டால் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்படும் என காவற்துறையினர் போராட்டக்காரர்களை எச்சரித்திருந்த நிலையில் , இந்த நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
 

Theneehead-1

   Vol:17                                                                                                                               25.10.2018