Theneehead-1

                            Vol:17                                                                                                  26.06.2018

 பட்டதாரிகள் -

அரசுக்கும் வெட்கமில்லை, பட்டதாரிகளுக்கும் வெட்கமில்லை

-          கருணாகரன்

வேலை கோரும் போராட்டங்களை பட்டதாரிகள் மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள். மறுபடியும் மாவட்டச் செயலகங்களைப் பட்டதாரிகள் முற்றுகையிடத் தொடங்கியுள்ளனர். gradute protest srilankaஇனி மாகாணசபை, முதலமைச்சர் அலுவலகம், ஆளுநர் மாளிகை, அரச தலைவர்களின் வருகையின் போதான முற்றுகை, போராட்டங்கள், மனுக்கையளிப்பு என்று நிகழ்ச்சிகள் தொடரும்.

பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இந்த நேர்முகத்தேர்வின் நடைமுறையில் பல “பொருந்தா விதி”முறைகள் உட்புகுத்தப்பட்டதாக பட்டதாரிகள் விசனம் கொண்டிருந்தனர். இதற்கான பின்னணி குறித்து அப்பொழுதே பட்டதாரிகளிடம் சந்தேகங்கள் ஏற்பட்டிருந்தது.

“பட்டதாரிகளில் ஒரு தொகுதியினருக்கு மட்டுமே வேலை வாய்ப்பை வழங்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்திருப்பதால்தான் இந்தப் பொருந்தா விதிகள். இதன்மூலம் ஏனையோருக்கு இன்னொரு தவணையில் “பார்த்துக் கொள்ளலாம்” என்பதே அரசின் எண்ணம். அதாவது ஏனையவர்களுக்கான நியமனத்தைப் பிறகு வழங்கலாம். அதற்கு இந்தப் “பொருந்தா விதி”யைப் பயன்படுத்தி இடைத்தாமதத்தை உண்டாக்கலாம் என்பது அரசின் தந்திரோபாயம். அதற்கான  ஏற்பாடாகவே இந்த இறுக்கமான விதிமுறைகள்” என பட்டதாரிகள் அனுமானித்தனர்.

இந்தப் “பொருந்தா விதி” என்பது இறுக்கமான நிபந்தனைகளை முன்னிறுத்தியது. பல்கலைக்கழகங்களில் துறைசார்ந்து பட்டத்தைப் பெற்றிருந்தால் மட்டும்போதாது, வேறு பல்தகைமைகளும் பன்முக ஆற்றல் வெளிப்பாடுகளும் திறன்விருத்தியும் நிரூபிக்கப்பட வேண்டும் என்பதே இந்த நிபந்தனை. ஒரு வகையில் இது நல்ல விசயமே. ஒவ்வொருவரும் பன்முக ஆற்றலுள்ளவர்களாக இருப்பது சமூகத்துக்கும் நாட்டுக்கும் நல்லதே. ஆனால், இதைத் திடீரென இறுக்கமான நிபந்தனையாக முன்வைத்தது தவறு. ஆனாலும் முடிந்தவரையில் ஒவ்வொரு விண்ணப்பதாரியும் தங்களின் தகமைகளை நிரூபித்தனர்.

இருந்தாலும் தற்போது வழங்கப்பட்டுள்ள நியமனங்களைப் பார்க்கும்போது  அவற்றிலும் போதாமைகளையே கண்டுள்ளது என்பது தெரிகிறது. எனவேதான் ஒரு குறிப்பிட்டளவானவர்களுக்கு மட்டும் நியமனம் வழங்கப்பட, ஏனையவர்கள் கைவிடப்பட்டுள்ளனர்.

இதுவரையும் நியமன விபரம் பற்றிய அரசின் அறிவிப்புகளுக்காக் காத்திருந்த பட்டதாரிகள் இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் போராட்டத்தில் குதித்துள்ளனர். தற்போது வெளியிடப்பட்டிருக்கும் “தெரிவானோர் பட்டியலு”க்கு முன்பு, கடந்த மாத முற்பகுதியில் அரசாங்கம் திடீரென ஒரு அறிவிப்பை விடுத்தது. “பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகளில் ஐயாயிரம் பேருக்கு மட்டுமே முதற்கட்டமாக நியமனங்களை வழங்க முடியும். ஏனையோருக்கு எதிர்வரும் செப்ரெம்பரில் பார்த்துக் கொள்ளலாம்” என்றார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

பிரதமரின் இந்த அறிவிப்புப் பட்டதாரிகளுக்கு ஏமாற்றத்தையgraduate protest npcும் எரிச்சலையும் உண்டாக்கியது. படித்துவிட்டு நான்கு ஐந்து ஆண்டுகளாகக் காத்திருப்போருக்கு மேலும் காலவரையற்ற நிலையில் காத்திருக்க வேண்டும் என்றால், கோபம் வராமல் கொண்டாட்ட மனநிலையா வரும்?

ஆனாலும் முதற்கட்டமாக யார் யாருக்கு எல்லாம் வேலை கிடைக்கும் என்ற விவரம் தெரியாததால் பட்டதாரிகள் எதுவும் செய்ய முடியாத குழப்பத்திற்குள்ளாகினர். அரசின் நோக்கமே இதுதான். எதிர்ப்பையோ போராட்டத்தையோ மேற்கொள்ள முடியாதவாறு பட்டதாரிகளிடத்திலே குழப்பங்களை ஏற்படுத்துவதேயாகும். ஆனாலும் இதை நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாதல்லவா!

இப்பொழுது பொறுமை கடந்த பட்டதாரிகள் மறுபடியும் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுப்பதைத் தவிர வேறு வழி தமக்கில்லை என்பதே பட்டதாரிகளின் நிலைப்பாடு.

குறைந்த பட்சம், தெரிவு செய்யப்பட்டவர்களைத் தவிர, ஏனையோருக்கு நம்பிக்கையான ஒரு உத்தரவாதத்தையாவது அரசாங்கம் தந்திருக்க வேண்டும் என்பது எஞ்சியோரின் கருத்து.

ஆனால், இதையிட்டு அரசாங்கம் இன்னும் வாய் திறக்கவில்லை. இனியும் அது வாய் திறக்கும் என்று சொல்வதற்கில்லை. இந்த நிலையில் “மாகாண, மத்திய அரசுகளுக்கு நெருக்கடியைக் கொடுப்பதை விட வேறு வழி எதுவும் தமக்கில்லை” என்கின்றனர் பட்டதாரிகள்.

பட்டம் பெற்று வெளியேறிய பிறகு, பெருந்திரளானோர் நான்கு ஐந்து ஆண்டுகளாக வேலைக்காகக் காத்திருக்க வேண்டியிருப்பது என்பது மிகப்பெரிய தவறும் குறைபாடுமாகும்.

உயர் கல்வி மூலம் அறிவைப் பெற்றுள்ள இளைய தலைமுறையின் உற்சாகமும் துடிப்பும் மிக்க காலத்தைப் பயனுடையதாக்கிக் கொள்வதே நாட்டின் வளர்ச்சிக்குச் சிறப்பானது. வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் எந்தச்ச சமூகமும் எந்த நாடும் இளையோரின் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவே விளையும். வினைத்திறன் மிக்க பருவத்தைப் பயன்படுத்தாமல் விடுவது நாட்டின் வளர்ச்சியைக் குறித்து சரியாகச் சிந்திக்க முடியாமையின் வெளிப்பாடு. இது நூறு வீதமும் ஆட்சிக் குறைபாடேயாகும்.

இதேவேளை “பட்டதாரிகள் அத்தனைபேருக்கும் ஆண்டு தோறும் அரசாங்கம் வேலை வாய்ப்பை வழங்க முடியாது. அது தவறு” என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். உலக வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களின் ஆலோசனையும் இதுவே.

“பட்டதாரிகளை அறிவாளிகளாக்கி விடுவதே அரசின் கடமை. அதை மக்களின் வரிப்பணத்தில் அரசாங்கம் செய்கிறது. அதற்குப் பிறகு அவர்கள் சுயமாக இயங்க வேண்டும். சுய தொழில், சுய ஆய்வு போன்றவற்றில் ஈடுபட வேணும். அதுவே அவர்கள் தாம் படித்த கல்விக்குரிய பெறுமதியை உணர்ந்து செய்யும் பணியாகும்” என்பது இன்னொரு சாராரின் அபிப்பிராயம்.

இது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியது.

ஏற்கனவே அரச உத்தியோகத்தர் தொகை கூடி விட்டது. அலுவலகங்களில் இடப்பிரச்சினை பெரிய பிரச்சினையாக வளர்ந்துள்ளது. உற்பத்திக்கான செலவை விட ஊgraduate protest3ழியர்களுக்கான சம்பளத்துக்கே அதிக நிதியைச் செலவழித்துக் கொண்டிருக்கிறது நாடு. மட்டுமல்ல, பல்துறைகளில் செயற்பட வேண்டிய பட்டதாரிகள் அவற்றை எல்லாம் விட்டு விட்டு “ஏதோ ஒரு உத்தியோகம் கிடைத்தால் போதும். வருமானத்துக்கான தொழிலாக அதைப் பார்த்துக் கொள்வோம், பயன்படுத்திக் கொள்வோம்” என்ற மன நிலைக்குள்ளாகியுள்ளனர். இதைவிட மாற்று ஏற்பாடுகள் இங்கே இல்லை. அதை ஏற்படுத்தும் சிந்தனையும் அரசிடம் கிடையாது. அரசாங்கத்தைக் குறை சொல்லிக் கொண்டிருக்கும் மாகாணசபையிடமும் புதிய திட்டங்களும் புதிய சிந்தனைகளும் இல்லை.

இதனால் பல இடங்களிலும் “பொருந்தா வேலை”களில் வலுக்கட்டாயமாகப்  பொருத்தப்படுகின்றனர் பல பட்டதாரிகள். நுண்கலைத்துறையில் பட்டம் பெற்றவர்கள் கணக்காய்வுப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கலைத்துறையில் மொழி, மற்றும் மதக் கல்வி பயின்றவர்கள் திட்டமிடற்பிரிவு, விவசாயத்துறை போன்றவற்றுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். விலங்கியல் படித்தவர்கள் காணிப் பிரிவுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்படி தகுதியற்ற – பொருத்தமற்ற - விதத்தில் நியமிப்புகள் நடந்துள்ளன. இது எவ்வளவு தவறானது? இது கோமாளித்தனமன்றி வேறென்ன? சுத்த மூடத்தனம் அல்லவா.

இவ்வாறு “பொருந்தா வேலை”களைப் பெற்றவர்கள் அதைச் செய்ய முடியாமல் தடுமாறுகின்றனர். சிலர் தமக்கு வழங்கப்பட்ட வேலையைச் செய்ய முடியாமலிருக்கு எனக் கண்ணீர் விட்டு அழுவதைப் பார்த்திருக்கிறேன்.

பட்டதாரிகளின் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக ஏதோ ஒரு வேலையைக் கொடுத்தால் போதும் என அரசாங்கமும் எப்படியாவது, ஏதாவதொரு வேலை கிடைத்தால் காணும் எனப் பட்டதாரிகளும் எண்ணுவதால் வந்த வினையே இவையெல்லாம்.

ஆகவே நிர்வாகத்துறையில் மட்டும் படித்தவர்கள், உயர்கல்வி வாய்ப்பைப் பெற்றவர்கள் ஈடுபடுவது நாட்டின் பல்துறை வளர்ச்சிக்கு பாதகமாகவே அமையும். இது அந்நிய மேலாதிக்கம் உருவாக்கிய மனப்பான்மையின் தொடர்ச்சியாகும்.

அரச உத்தியோகம் என்பது சமூக மேலாண்மையுடன் தொழில் உத்தரவாதம், வருவாய் உத்தரவாதம் போன்றவற்றை வழங்குகிறது. அத்துடன் ஓய்வூதியம், விடுமுறை எனப் பல சலுகைகளையும் கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அதுவொரு அந்தஸ்தின் அடையாளமாகவும் கொள்ளப்படுகிறது.

இதனால்தான் பலரும் அரச உத்தியோகத்தைக் குறி வைக்கிறார்கள். “கோழி மேய்த்தாலும் கௌவண்மென்ரில் மேய்க்க வேணும்” என்ற ஊர்மொழி உரைப்பது இதையே.

மட்டுமல்ல, அரச உத்தியோகத்துடன் “சைற் பிஸினஸ்” என இன்னொரு சுயதொழிலையும் செய்து கொள்ள முடியும். அந்தச் சுயதொழிலுக்கு இந்த அரச உத்தியோகம் வழியை, வாய்ப்பை, சலுகைகளை, வெட்டி ஓடக்கூடிய சந்தர்ப்பங்களை, செல்வாக்கை எல்லாம் வழங்கும் என்பது இன்னொரு காரணம். கூடவே அரச உத்தியோகம் என்பது முன்னரைப் போலல்லாமல், கட்டாயமாகச் சேவை செய்தே தீர வேணும் என்ற நிலையைக் கொண்டதாக இப்போதில்லை. அல்லது அர்ப்பணிப்போடு மக்களுக்குப் பணி செய்ய வேணும் என்ற அடிப்படை உணர்விலும் இன்றில்லை.

சேவையாளர்கள், சேவை மனப்பாங்கு என்பது மிகக் குறைந்து விட்டது. பொறுப்பின்மையும் அதிகாரத்துவமும் உயர்ந்துள்ளது. ஆகவே மிகச் சிலர் மட்டும் தங்கள் பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து பணியாற்றுகிறார்கள். ஏனையவர்கள் ஏதோ ஒரு வருவாய்க்கான தொழில் என்ற அளவில்தான் உத்தியோகம் பார்க்கிறார்கள். அதிலும் வெளிக்கள உத்தியோகத்தர்களின் பொறுப்பைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு. ஆனால் பொது நிலையில் படு வீழ்ச்சியே. செய்தாலும் சரி, விட்டாலும் சரி என்ற கணக்கில்தான் நடந்து கொள்கிறார்கள்.

எனவேதான் இந்த வாய்ப்புகளை - சுமையற்ற வேலையை - அனுபவிப்பதற்காக பட்டதாரிகள் முண்டியடிக்கிறார்கள். இதனால்தான் அரசாங்கத்தின் தொண்டையை இறுக்குகிறார்கள். மறுவளமாக ஒவ்வொரு இடங்களிலும் உத்தியோகத்தர்களின் தொகை பெருகிக் கிடக்கிறது.

இந்த நிலையிலேயே “ஊழியர்களின் தொகை கூடும்போது உருப்படியான வேலைகள் எதுவும் நடக்காது. வம்பளப்பும் பொறுப்பின்மையுமே அதிகரிக்கும்...” என்றொரு வாதம் சிலரால் முன்வைக்கப்படுகிறது.

இதை எளிதில் மறுத்து விட முடியாது.

“ஆகவே, பட்டதாரிகள் அரசாங்கத்தின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்காமல் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். தமது ஆற்றலை அதற்குரிய வகையில் வளர்த்துக் கொள்வது அவசியம். தன்னம்பிக்கையே இதற்குத் தேவை. அரசாங்கத்திடம் தஞ்சமடைவது என்பது படித்த படிப்புக்கே பயனற்றது” என்பது இன்னொரு சாராருடைய கருத்து.

பட்டதாரிகள் பல்துறை ஆற்றலுடன் பன்முகம் கொண்ட வினைத்திறனாளர்களாக இயங்க வேண்டும் என்பதில் மாறுபட்ட அபிப்பிராயங்கள் கிடையாது. ஆனால், அவர்கள் என்ன வகையான சுயதொழிலில் ஈடுபடுவது? அதற்கான நிதி மூலாதாரம், அரச அங்கீகாரம், அரசாங்கத்தின் ஒத்துழைப்பு போன்றனவெல்லாம் கிடைக்குமா? அவ்வாறு சுயதொழிலில் ஈடுபடும்போது அதை மேம்படுத்துவதற்கான தேசியக் கொள்கை, பொருளாதாரத் திட்டங்கள், அரச ஒத்துழைப்பு, ஆதரவு போன்றன வழங்கப்படுமா? இதை எல்லாம் உத்தரவாதப்படுத்துவது யார்? இது எப்போது நடக்கும்? இதுவரை பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கு அரசாங்கம் உருவாக்கிய வேலைத்திட்டம் என்ன? அரசாங்கத்துக்கு வெளியே உள்ள அரசியற் கட்சிகள், சமூகச் செயற்பாட்டியக்கங்கள், ஊடகங்கள் போன்றன இதைக் குறித்து, இந்தப் பிரச்சினையைப் பற்றி எத்தகைய எண்ணம் கொண்டிருக்கின்றன?

நாட்டின் மிகச் சிறந்த மனித வளம், மானுட ஆற்றல் வீணே செலவாகுதைப்பற்றி யாருக்குமே கவலைகள் இல்லையா?