40 ஆவது ஆண்டு நிறைவு நாடகவிழா 2018

-லண்டனில் முதல் தமிழ் நாடகப் பள்ளி 15ஆவது ஆண்டில்..

மகாலிங்கம் கௌரீஸ்வரன்

Rehearsal 24th september

நாளை சனிக்கிழமை செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி, லண்டன் வாடேரஸ்மீட் WATERSMEET THEATRE   அரங்கில் க பாலேந்திரா தலைமையில் இயங்கும் தமிழ்   அவைக்காற்று கலைக் கழகத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவு விழா நடைபெறுகிறது.கடந்த 15வருடங்களாக லண்டனில் முதலாவது தமிழ் நாடகப் பள்ளியை நிறுவி வாராந்தம் நாடக வகுப்புகளை நடத்துகிறார்கள். .பயிற்சியாளர்களாக பாலேந்திராவும் ஆனந்தராணியும் செயல்படுகின்றனர்.இந்த நாடகப் பள்ளியின் 15ஆவது ஆண்டு நிறைவும் அதே தினம்  கொண்டாடப் படுகிறது

நடைபெறவிருக்கும் 40 வது ஆண்டு நிறைவு விழாவில் இவர்களது லண்டன் நாடகப் பள்ளி  சிறுவர்களை( 6- 14 வயது ) வைத்து யோ.  ஜோண்சன் ராஜ்குமார் எழுதிய "அமைதி பூங்கா "நாடகம் முதல் முறையாக மேடையேறுகிறது., லண்டன் இளையோர் தாமாகவே தமிழில் எழுதி நடிக்கும்  " அது" என்ற நாடகம் முதல் முறையாக மேடையேறுகிறது. லண்டனில் பிறந்து வளரும் இளையவர்கள்,சநதோஷ , சிந்து, மானசி ஆகியோர் எழுதிய இந்த நாடகத்தை மானசி பாலேந்திரா நெறிப்படுத்துகிறார். இவர்கள் லண்டனில் 6 வயதில் இருந்து கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பாலேந்திராவின் நாடகங்களில் நடித்து பயிற்றப் படடவர்கள். , லண்டன் இளையோரை இணைத்து "கண்ணாடி வார்ப்புக்கள்" நாடகம் புதிய தயாரிப்பாக இந்த விழாவில் மேடையேறுகிறது . காத்திரமான புகழ்பெற்ற நாடகத்தை தமிழ் இரண்டாம் மொழி கூட அல்லாத இளையவர்கள் நடிப்பது ஒரு பெரிய சவால்.   இந்த  நாடகங்களுடன், பாலேந்திரா நெறிப்படுத்திய முக்கியமான  17 நாடகங்களை    இணைத்து - பங்கு பற்றியநடிகர்கள்  அனைவரும் மேடையில் தோன்றி " நீண்டஒரு பயணத்தில் " என்ற .நாடக நிகழ்வினை வழங்க இருக்கிறார்கள்.

இலங்கையிலே நாற்பது வருடங்களிற்கு முன் தமிழ் அவைக்காற்று கலைக்கழகம் தனது நாடகப் பயணத்தை தொடங்கியது. பின்பு பிரித்தானியாவில் 36 வருடங்களாக இயங்கி வருவதுடன் தனது தளரா உழைப்பின் துணை கொண்டு ஆண்டு தோறும் நாடக விழாக்களை1991 முதல்  நடத்தி வருகிறது. புலம் பெயர் நாடுகளில் இது வரை அறுபத்தொரு நாடக விழாக்களை தமிழ் அவைக்காற்று கலைக்கழகத்தினர் நடத்தி முடித்திருக்கின்றனர்.  தமிழ் அவைக்காற்று கலைக்கழகம் சிறுவர்களை வைத்து அரங்காடல் செய்த பேராசிரியர் மெளனகுரு அவர்களின் ஆக்கமான "வேடரை உச்சிய வெள்ளைப் புறா" நாடகம் மேடையேறி இருபத்தேழு வருடங்களாகின்றன.

இக்கலை முயற்சிகளின் தொடர்ச்சியாக இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு  தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தினரால்  சிறுவர் நாடகப் பள்ளி  லண்டனில் தொடங்கப்பட்டது. சிறுவர்கள், இளையோர்கள் என்னும் இரு பிரிவுகளில் வகுப்புகள் ஒவ்வொரு வாரமும் நடை பெறுகின்றன. "இளையவர்களே எமது எதிர்காலம்", "தொடர்ந்த மேடையேற்றங்களே தீவிர நாடக இயக்கத்தை வலுப்படுத்தும்" என்னும் விரிந்த முன்னோக்குப் பார்வையுடன் இந்த நாடகப்பள்ளி  இயங்குகிறது. கிறிஸ்மஸ் பண்டிகையின் போது ஒரு களியாட்டம், கல்வியாண்டு முடிந்து கோடைகால விடுமுறை தொடங்கும் ஆடி மாதக் கடைசியில் ஒரு சந்திப்பு, வருடாந்த நாடக விழா என ஆண்டு தோறும் மூன்று நிகழ்வுகளை பள்ளியில் பயிலும் சிறாரும், இளையோரும் அவர் தம் பெற்றோரும் ஒழுங்கு செய்து கலந்து மகிழ்கின்றனர்.Suraavavli maaruthi

பேராசிரியர் சிவசேகரத்தின் "அயலார் தீர்ப்பு", "மலைகளை அகற்றிய மூடக் கிழவன்", "பரமார்த்த குருவும் சீடர்களும்", "எல்லாம் தெரிந்தவர்கள்";  மாவை நித்தியானந்தனின் "அரசனின் புத்தாடை";  பாலேந்திராவின் "பாவி" ; பாரதியின் பாஞ்சாலி சபதம் கவிதைகளுடன் நிகழ்த்தப்பட்ட "நெட்டை மரங்கள்"; சேக்ஸ்பியரால் எழுதப்பட்ட கடைசி நாடகம் என்று கருதப்படும் "The Tempest"  நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்திரா பார்த்தசாரதி அவர்களால் எழுதப்பட்ட "சூறாவளி";  ஜேர்மானிய நாடகாசிரியர் பேர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht) எழுதிய "The Exception and the Rule"  நாடகத்தின் தமிழாக்கமான "யுகதர்மம்" என்னும் நாடகங்கள் சிறுவர்களாலும், இளையோர்களாலும் "நாடகம் என்பது நிகழ்த்திக் காட்டப்படுவது" என்னும் வரைவிலக்கணததிற்கு ஒப்ப அரங்காடிக் காட்டப்பட்டு இருக்கின்றன.

நாடகப் பள்ளியின் பயிற்சிகளும், தொடர்ந்த மேடையேற்றங்களும் அளித்த அனுபவங்களினூடாக மாணவர்கள் புதிய தளங்களிற்கு பயணம் செய்தார்கள். பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்தார்கள். அவற்றின் பெறுபேறாக "புதிய பயணம்" நாடகம் உருவானது. இரண்டாயிரத்துப் பதினாறாம் ஆண்டின் இருபத்தாறாவது ஆண்டு விழாவில் இளையோர் பிரிவினரின் பிரதி ஆக்கத்திலும், இயக்கத்திலும்  "புதிய பயணம்" முதன்முறையாக  அரங்கேறியது. ஒரு புலம்பெயர் தமிழ்க் குடும்பத்தின் குழந்தைகள் முதன்முறையாக  இலங்கைக்கு செல்கிறார்கள். புதிய சூழலிலும், தமிழ் சரியாக புரியாத நிலையிலும் தொடக்கத்தில் விருப்பமின்றி இருந்தவர்கள் பின்பு தமது பாட்டன், பாட்டியின் அன்பிலும், தமது உறவினர்களினதும்,  தம் வயதை ஒத்த பிள்ளைகளினதும் தோழமையிலும் தோய்ந்து இனி மீண்டும், மீண்டும் வர வேண்டும் என்ற முடிவோடு பிரிய மனமின்றி பிரிவதை மிக இயல்பாக நடித்துக் காட்டினார்கள். புலம்பெயர் நாடுகளில் பிறக்கும் இரண்டாம் தலைமுறையினர் எம் தாய்மொழியான தமிழ்மொழியை பேசவே சிரமப்படும் சூழலில் இவர்கள் தமிழில் ஒரு நாடகப்பிரதியை எழுதி இயக்கியிருப்பதை சிகரம் தொட்ட சாதனை என்றே சொல்ல வேண்டும்.

கூட்டாக வேலை செய்தல்; தலைமைத்துவப் பண்புகள்; கூட்டங்களிலும், நேர்முகத்தேர்வுகளிலும் தன்னம்பிக்கையுடன் பங்கு கொள்ளுதல் போன்றவற்றை தமது நடைமுறை வாழ்க்கைக்கு நாடகப்பள்ளி அளித்த கொடையாக இள்யோர்கள் குறிப்பிடுகிறார்தள். தமிழ் மொழி வன்மை தமக்கு கைவரப் பெற்றதை தம் வாழ்நாளில் பெற்ற பெரும் செல்வமாக சொல்லி மகிழ நாடகப்பாடசாலையின் பயிற்சிகளே பெரும் காரணிகளாக இருந்தது என்று அவர்கள் பல இடங்களில் பதிவு செய்கிறார்கள். நாடகப் பாடசாலையின் சக மாணவர்கள் தமது நெருங்கிய நண்பர்களாக, தோள் கொடுக்கும் தோழர்களாக கிடைத்ததை சொல்லி நெகிழ்ந்து உருகுகிறார்கள்.

பதினைந்து வருடங்களிற்கு முன்பு சிறுவர்களாக, இளையவர்களாக நாடகப் பாடசாலையில் சேர்ந்தவர்களில் பலர் இன்றும் தமிழ் அவைக்காற்று கலைக்கழகத்தின் நிகழ்வுகளில் பங்கு கொள்கிறார்கள். வேலை, திருமணம் என்று வாழ்வின் அடுத்த கட்டங்களிற்கு சென்ற பின்பும் தொடர்ந்து வருகிறார்கள். தமது பிள்ளைகளை நாடகப் பள்ளியில் சேர்க்கிறார்கள். சிலர் தமது பிள்ளைகள் நடிக்கும் நாடகங்களில் தாமும் சேர்ந்து நடிக்கிறார்கள். "உலகமே ஒரு நாடகமேடை" என்று வாழ்க்கையையே நாடகமாக உருவகித்தான் சேக்ஸ்பியர். ஆனால் இங்கு தமிழ் அவைக்காற்று கலைக்கழகத்தின் நாடகப் பாடசாலையே மாணவர்கள் பலரின் உலகமாக அமைந்திருக்கிறது.

அவர்களின் தாய், தந்தையர் தமது குழந்தைகளிற்கு நண்பர்கள் கிடைTPAS Gettogether 2017த்தது போலவே தமக்கும் தமிழ் அவைக்காற்றுக் கழகம் என்ற குடும்ப உறவு கிடைத்துள்ளதாக  உளம் திறந்து உவகை பொங்க சொல்கிறார்கள். பள்ளிகள், கல்லூரிகளிற்கோ அல்லது வேறு வகுப்புகளிற்கோ தாய், தந்தையர் பிடித்து தள்ளினாலும் வேண்டாவெறுப்பாக செல்பவர்கள் நாடகப்பயிற்சிக்கு என்றதும் தாங்களாகவே செல்லும் அளவிற்கு அவர்களை நாடகமும்,தமிழ் அவைக்காற்றுக் கழகமும் கவர்ந்திருக்கிறது என்பதை பல முறை, பல இடங்களில் சொல்லியிருக்கிறார்கள். தமிழ் அவைக்காற்று கலைகழகத்தின் நாடக விழாக்கள், கூட்டங்கள் என்று ஒவ்வொரு நிகழ்விலும் தாங்களாகவே பல வேலைகளை பெற்றோர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

தமிழ் அவைக்காற்று கலைக்கழகத்தின் பணிகள் தமது பாடசாலயில் மட்டுமல்லாது மேர்ட்டன் தமிழ்ப் பாடசாலையிலும் தொடருகின்றது. அங்கும் வார இறுதி நாட்களில் நாடகப் பட்டறை ஒன்றினை திரு.பாலேந்திரா அவர்களும், ஆனந்தராணி பாலேந்திரா அவர்களும் நடத்தி வருகிறார்கள். வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது தான் நடிப்பு என்று இருந்த அப்பிள்ளைகள் காட்சிகளை உணர்தல்; கதாபாத்திரமாக மாறுதல் போன்ற பயிற்சி முறைகளை உள்வாங்கிய பிறகு நடத்திய நாடக விழாக்கள் முற்றிலும் வேறுபட்ட தளங்களில் இருந்ததாக அத்தமிழ் பள்ளியின் ஆசிரியர்களும், அந்தச் சிறுவர்களின் பெற்றோர்களும் நாடக விழாக்களில் பதிவு செய்தார்கள்.

மேர்ட்டன் தமிழ்ப்பாடசாலை போன்று பிரித்தானியாவில் உள்ள மற்றத் தமிழ்ப் பாடசாலைகளும் நாடகப் பாடசாலைகளை தொடங்கினால் தமிழ் அவைக்காற்று கலைக்கழகத்தின் ஒத்துழைப்பு அவர்களிற்கு என்றும் இருக்கும் என்கிறார் திரு.பாலேந்திரா. இளைய தலைமுறையினர்களின் இடையில் நாடகம் பேசப்பட வேண்டும், நாடகப் பயிற்சி மூலம் தமிழ் பேசப்பட வேண்டும் என்ற தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தின் இலட்சியத்திற்கு நாடக ஆர்வலர்கள் கை கொடுப்போம்.
40th Anniversary Drama Festival

Theneehead-1

   Vol:17                                                                                                                               28.09.2018