மகிந்த: முன்யோசனையற்ற சட்டவிரோத நடவடிக்கை

                                          எஸ்.ஐ. கீதபொன்கலன்

மகிந்த ராஜபக்ஸவை, ஸ்ரீலங்கா முன்பு ஒருபோதும் வழங்கியிராத மிகத் தந்திரமான அரசியல்வாதிகளில் ஒருவர் என்றே நான் எப்போதும் கருதுகிறேன். எனினும் சிலநேரங்களிலmahinda7் அவர் மிகத் தீவிரமாக உணர்ச்சி வசப்படுபவராகவும் மற்றும் அதீத சுயநம்பிக்கை உடையவராகவும் இருந்திருக்க வேண்டும். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் நெருக்கடியுடன் அவர் சட்டவிரோத நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறார் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது.

2009ல் எல்.ரீ.ரீ.ஈ இனை இராணுவ ரீதியாக நசுக்கியதுடன் ராஜபக்ஸவின் புகழ் சிங்கள சமூகத்தினரிடையே அளவுக்கதிகமாகப் பெருகியது மற்றும் ஒருவகையில் அவர் துட்ட கைமுனு குமாரயாவின் நவீன மறு அவதாரமாக உருவெடுத்தார். 2005 ஜனாதிபதி தேர்தலில் சுமார் 180,000 அதிகப்படியான வாக்குகளால் வெற்றிபெற்ற ராஜபக்ஸ 2010ம் ஆண்டில் சரத் பொன்சேகாவை சுமார் 1900,000 வாக்குகளால் தோற்கடித்தார். அவரது கட்சியும் தொடர்ச்சியாக பல மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி தேர்தல்களில் வெற்றியைப் பெற்றுக்கொண்டது.

அவர் அளவுக்குமீறிய தன்னம்பிக்கை உடையவராக மாறியதுடன் சிங்கள சமூகத்தினரிடையே தனது வேண்டுகோள்கள் என்றென்றும் நிலைநிறுத்தப்படும் என்று நம்பவும் செய்தார்.எந்தத் தேர்தலிலும் தன்னால் வெற்றிபெற முடியும் என்கிற அவரது தன்னம்பிக்கை, இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்கிற ஜனாதிபதியின் பதவிக்கால எல்லையை எத்தனைமுறை வேண்டுமானாலும் போட்டியிட முடியும் என்கிற வகையில் மாற்றியமைத்தார். அரசியலமைப்பின் 18வது திருத்தம் மூன்றாவது முறையும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட அவருக்கு வழியேற்படுத்திக் கொடுத்தது. அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையுடைய ராஜபக்ஸ குறிப்பிட்ட காலத்துக்கு இரண்டு வருடம் முன்பாகவே ஜனவரி 2015ல் ஜனாதிபதி தேர்தலை நடத்த திட்டமிட்டார்.

இருந்தபோதும் 2014ல் உருவான தேர்தல் வரைபடம் ராஜபக்ஸவும் அவரது கட்சியும் ஸ்ரீலங்கா வாக்காளர்களிடையே குறிப்பாக சிறுபான்மைக் குழுக்களிடையே புகழை இழந்து வருவதாக அடையாளம் காட்டியது. 2014ல் நடைபெற்ற மாகாணசபை தேர்தல்கள் - உதாரணமாக தெற்கு, மேற்கு மற்றும் ஊவா மாகாண சபை தேர்தல்கள் - பொதுசன ஐக்கிய முன்னணியின் (யுபிஎப்ஏ) வாக்கு வங்கியில் சீரான தேய்வு ஏற்பட்டிருப்பதை எடுத்துக் காட்டியது. எடுத்துக்காட்டாக ஊவா மாகாணசபை தேர்தல்களைத் தொடர்ந்து ‘ஊவா மாகாணசபை தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் போட்டிக்கான அதன் தாக்கங்கள்’ என்கிற கட்டுரை மூலம் நான் சுட்டிக்காட்டியிருந்தது “தற்போது பதவியில் உள்ள ஜனாதிபதி மூன்றாவது முறையும் வெற்றி பெறும் வாய்ப்பு ஆரம்பத்தில் போட்டியிட்டதைப் போல இலகுவாக இருக்காது என்பதை ஊவா உறுதிப்படுத்தியுள்ளது” என்று. அரசாங்கத்தின் அனைத்து வளங்களைப் பயன்படுத்தியும் ராஜபக்ஸவும் மற்றும் அவரது ஆட்களும் அதைப்பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொண்டிருக்க வேண்டும்.

எச்சரிக்கை அறிக்கைகள் முறையாகப் புரிந்துகொள்ளப்பட்டு மற்றும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தால்;, ராஜபக்ஸ அவரது இரண்டாவது பதவிக்காலத்தில் எஞ்சியிருந்த இரண்டு வருடங்களையும் பயன்படுத்தி அவரது புகழை மங்கச் செய்திருந்த அந்தப் பிரச்சினைகளை தீர்த்துவிட்டு பின்னர் தேர்தலை நடத்தியிருக்கலாம். அளவுக்குமீறிய தன்னம்பிக்கை கொண்ட ராஜபக்ஸ புதிய தேர்தலுக்கான திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுகையில் அவரது முன்னாள் சகாவான மைத்திரிபால சிறிசேனவினால் மோசமாக அடி வாங்கினார். 2015ல் ராஜபக்ஸவின் தோல்வியில் அவரது பொறுமையின்மையும் மற்றும் அளவுக்குமீறிய தன்னம்பிக்கையுமே கணிசமான பங்கினை வகித்ததாக நான் நம்புகிறேன்.

2015 காலத்திலேயே அவர் பாடம் கற்றிருக்க வேண்டும். அவர் அதைச் செய்யவில்லை என்றே தோன்றுகிறது. கடந்த வருடம் எனக்கு கிடைத்த ஓய்வின்போது கிட்டத்தட்ட நான்கு மாதங்களை நான் ஸ்ரீலங்காவில் கழித்திருந்தேன். பொதுமக்களின் மனோநிலை ராஜபக்ஸவுக்குச் சாதகமாக தீவிரமாகச் சாய்ந்திருப்பதை என்னால் உணரமுடிந்தது. எல்லாயிடத்திலும் மக்கள் வானமளவுக்கு உயர்ந்திருந்த வாழ்க்கைச் செலவுகளைப் பற்றி புகார் தெரிவித்தார்கள், மற்றும் ராஜபக்ஸவாக இருந்தால் இந்தப் பிரச்சினைகளை இன்னும் திறமையாக கையாண்டிருப்பார் என்று ஆலோசனைகள் கூறப்பட்டன (ஸ்ரீலங்காவாசிகளுக்கு நினைவாற்றல் மிகவும் குறுகியது). ஏனைய சமூகப் பிரச்சினைகள் உதாரணத்துக்கு கட்டவிழ்த்து விடப்பட்ட டெங்கு நோய் பரவல், மற்றும் குப்பைகளை கொட்டுவது போன்ற பிரச்சினைகளில் மக்களின் கருத்து பெருமளவுக்கு ராஜபக்ஸவுக்கு சாதகமாகவே இருந்தது. உள்ளுராட்சித் தேர்தல்கள் முடிவுகள் மூலமாக இந்தப் போக்கு மேலும் மீள் உறுதிப்படுத்தப்பட்டது, அதில் அவரது புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (எஸ்.எல்.பி.பி) விதிவிலக்கான முறையில் மிக நன்றாகச் செய்திருந்தது.

கடந்த வருடம் நான் எழுதிய கட்டுரைகள் சிலவற்றில், ராஜபக்ஸ தலைமையிலான கூட்டணி அநேகமாக 2020 நடக்கவுள்ள பொதுத் தேர்தல்களில் பெரு வெற்றி பெறும் என்று நான் பரிந்துரைத்திருந்தேன். இருந்தபோதும் ராஜபக்ஸ பொறுமையற்றவராக உள்ளார், மற்றும் அவரால் சட்டபூர்வமான தேர்தல்கள் மூலமாக அதிகாரத்துக்கு வருவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் காத்திருக்க முடியவில்லை.

ராஜபக்ஸவை அவரது விசுவாசிகள் அழைக்கும் புரட்சியின் சிற்பி என்கிற பதத்தை கருத்தில் கொள்ள என்னால் முடியாது. பின் கதவு வழியாக அதிகாரத்துக்கு வருகிறார் என்றுகூட ஒருவரால் அழைக்க முடியும். அது ஒரு புரட்சியாக இருந்தால், அந்தப் புரட்சியின் சிற்பிகளான ஜனாதிபதி சிறிசேன மற்றும் ராஜபக்ஸ ஆகியோர் மோசமான புரட்சியாளர்களாக உள்ளார்கள். இந்த இருவருக்கும் புரட்சியை திறமையாக நிறைவேற்றவதற்கு பாராளுமன்றில் 113 வாக்குகள் தேவை என்பது மிக நன்றாகத் தெரியும். எனினும் அவர்களிடம் 113 வாக்குகள் இல்லை. இப்போது இந்த வாக்குகளை எப்படிப் பெறுவது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் பொறிக்குள் அகப்பட்டு தோற்றுவிட்டதாகத் தெரிகிறது.

செயல்முறையில் எந்தமாதிரியான குறைபாடுகள் இருப்பினும், ஐதேக அனுசரணை வழங்கிய நம்பிக்கையில்லாப் பிரேரணைகள், மைத்திரி - மகிந்த இணைக்கு நிருவாகத்தை கொண்டு நடத்துவதற்கான பெரும்பான்மை கிடையாது என்பதை சிறப்பாக நிரூபித்துள்ளன. பாராளுமன்றத் தெரிவுக்குழுவை வெற்றிகரமாக உறுதி செய்ததின் மூலம், ஐதேக தலைமையிலான கூட்டணி பாராளுமன்றில் கட்டளையிடும் எண்ணிக்கை தங்களிடமே உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ஐதேக புதிய சக்தி பெற்று திட்டங்களை மிகத் திறமையாகக் கையாளுவது “புரட்சி”க்கு அடிமேல் அடி விழுவதன் மூலம் நன்கு தெரிகிறது.

இப்போது ராஜபக்ஸ அரசாங்கம் பாராளுமன்றத்தை புறக்கணிக்கப் போவதாகச் சபதம் செய்துள்ளது. எங்காவது அரசாங்கங்கள் பாராளுமன்றத்தைப் புறக்கணிக்குமா? இந்தப் புறக்கணிப்புக்கூட தேசிய சட்டமன்றத்தில் ராஜபக்ஸ குழுவினருக்கு தேவையான எண்ணிக்கையிலான அங்கத்தவர்கள் இல்லை என்பதை மீள் உறுதி செய்துள்ளது. இந்தப் புறக்கணிப்பு ஐதேகவுக்கு பாராளுமன்றில் தனது பெரும்பான்மையை தொடர்ந்து மீள் உறுதி செய்வதற்கு இலகுவாக வழியமைப்பதால், அவர்கள் அதைக் குழப்புவதற்கு திரும்பவும் வந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

நாட்டிலும் மற்றும் பாராளுமன்றிலும் என்ன நடக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல் ராஜபக்ஸவும் மற்றும் அவரது குழுவும் தாங்கள்தான் அரசாங்கம் என்று எல்லா இடத்திலும் சொல்லித் திரிகிறார்கள். அதே நேரத்தில் இது வேடிக்கையாகவும் மற்றும் அபத்தமாகவும் உள்ளது. இருந்தபோதும் எனது கருத்து என்னவென்றால் ராஜபக்ஸ  பலவீனமானவராகவும் அப்பாவியாகவும் இருக்கிறார் என்பதே. சிறினேவின் அழைப்பை ஏற்றுக்கொள்வதில் அவர் அதிகம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். பாராளுமன்றில் அவர்களுக்கு 113 வாக்குகள் இல்லையென்பது தனக்குத் தெரியாது என்று அவர் சொல்ல முடியாது. அவர் கட்டளையை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

பாராளுமன்றில் போதிய ஆசனங்கள் இல்லாமல் ஒருவர் அதிகாரத்தில் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும் அது ஜனநாயகமும் இல்லை. தற்போது வெளிப்படும் காட்சிகள் என்னைச் சிந்திக்க வைக்கின்றன ஒருவேளை ராஜபக்ஸ தன்னை இன்னமும் புனரமைத்துக் கொள்ளவில்லையோ என்று. அவர் அதிகாரத்தில் இருந்தபோது கிட்டத்தட்ட ஒவ்வொரு சமூக மற்றும் அரசியல் நிறுவனங்களையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொண்டு ஒரு அரை - சர்வாதிகாரியாக நடந்துகொண்டார். அவரது சர்வாதிகார அல்லது ஜனநாயகமற்ற ஆட்சிப் பாணி, 2015ல் அவர் ஏன் தோற்கடிக்கப் பட்டார் என்பதற்கான ஒரு காரணம் ஆகும். இடையில் உள்ள காலத்தில் அவரது அரசாங்கத்தின் இடறுகுழிகளை இனங்காண்பதுடன் தன்னைப் புனரமைத்துக் கொள்வதற்கும் உதவுவதற்கு எப்போதும் சாத்தியம் உள்ளது.

அத்தகைய ஒரு சூழ்நிலை சிறப்பானதாக இருக்கும், ஏனென்றால் ஒருநாள் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும் ராஜபக்ஸவால் திரும்பவும் பதவிக்கு வரமுடியும். எப்போதுமே அவர்களை பதவி இல்லாமல் வைத்திருப்பதற்கு நாட்டிற்குத் திறமையில்லை. அப்போது நாங்கள் யுத்தத்துக்குப் பின்னான உடனடிக்காலத்தின் மகிழ்ச்சியற்ற அரசியலுக்கு திரும்பவும் செல்வதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இப்போது ராஜபக்ஸ குழுவினர் சட்டவிரோதமாக அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் வழியும் மற்றும் பொதுவாக நடந்துகொள்ளும் வழிமுறையும் அவர்கள் தங்களை இன்னமும் புனரமைத்துக் கொள்ளவில்லையோ என்கிற தோற்றத்தையே கொடுக்கிறது.


தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Theneehead-1

   Vol:17                                                                                                                               28.11.2018