Theneehead-1

   Vol:17                                                                                                                               29.10.2018

விக்கினேஸ்வரனின் புதிய கட்சி –ஒன்றும் புதிதல்ல

கவிஞர். எழுத்தாளர, சுயாதீன ஊடகவியலாளர் கருணாகரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்

நேர்கண்டவர்: ஆர். ராமகிருஸ்ணன் (இந்தியா)

 

  • கேள்வி - விக்கினேஸ்வரன் ஆரம்பித்திருக்கும் புதிய கட்சியைப் பற்றிய உங்களுடைய கருத்து என்ன?

பதில் - விக்கினேஸ்வரனைப் பொறுத்தவரை அவருக்கு அப்படியான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய சூழல் தவிர்க்க முடியாத நிலையாகும். ஆனால் அதனால் மக்களுக்கு என்னkarunakaran interview பயன் என்றே நாங்கள் பார்க்க வேண்டும். தமிழரசுக் கட்சிக்கு எதிரான ஆவேசத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழரசுக் கட்சி தனக்கு உருவாக்கிய நெருக்கடி, செய்த அநீதி என்பவற்றுக்கான பதிலடியாகவே இதைச் செய்துள்ளார். தமிழரசுக் கட்சி மீதும் கூட்டமைப்பின் மீதும் - குறிப்பாக சுமந்திரன், சம்மந்தன் போன்றோர் மேலுள்ள - அதிருப்தியாளர்கள் விக்கினேஸ்வரனின் நிலைப்பாட்டை ஏற்றிருக்கிறார்கள்.  ஆனால், விக்கினேஸ்வரன் தன்னுடைய புதிய கட்சியின் கோட்பாடு, நிலைப்பாடு, செயற்பாட்டு வழிமுறைகள், அதன் கட்டமைப்பு போன்ற எதைப்பற்றியும் தெளிவாக்கவேயில்லை.  பிராந்திய, சர்வதேச அரசியல் சூழல் பற்றியோ, உலகளாவிய பொருளாதார நிலைமைகளைப் பற்றியோ அக்கறைப்பட்டிருப்பதாகவும் தெரியவில்லை.  “தமிழ் மக்களின் விடுதலைக் குரலையும் அரசியல் அபிலாஷையையும் விட்டுக் கொடுக்க முடியாது. இன்று தமிழர்களுக்கு சுய பாதுகாப்பு அவசியம்...” என்பதை மட்டும் வலியுறுத்தியிருக்கிறார்.  இதுவொன்றும் புதிய சேதியல்ல. இதைத்தான் முன்பிருந்தவர்களும் சொன்னார்கள். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர முன்னணி (சுரேஸ் பிரேமச்சந்திரன்) போன்றோரும் இதையே இப்பொழுது சொல்லி வருகிறார்கள்.

விக்கினேஸ்வரன் இதைச் சற்று மேலே சென்று அரச எதிர்ப்பு வாதமாகவும் சிங்கள மறுப்பு வாதமாகவும் கட்டமைத்துப் பேசியிருக்கிறார். இது அரச எதிர்ப்புணர்வோடும் சிங்கள மறுப்பு நிலைப்பாட்டோடும் இருப்போருக்கு இனிப்பானது. ஆனால், இப்படிச் சொல்வதன் மூலம் சிங்களத் தரப்பின் எதிர்ப்பைக் கூர்மையாக்கவே முடியும். அப்படி சிங்களத் தரப்பின் எதிர்ப்பு உச்சமடைந்தால் அது தமிழ் மக்களைத் தன்னுடைய பக்கம் திருப்பும் என்று எதிர்பார்க்கிறார் விக்கினேஸ்வரன். அவருடைய வழிகாட்டிகளும் வியூக வகுப்பாளர்களும் இந்த உத்தியையே பயன்படுத்த விளைகின்றனர்.   இது மிகப் பழைய உத்தியாகும். இதனால் ஒரு போதுமே நல் விளைவுகள் ஏற்படாது. ஏற்கனவே தமிழ்ச்சமூகம் சந்தித்த நெருக்கடிகளை விட இன்னும் உச்சமான நெருக்கடிகளையே சந்திக்க வேண்டியிருக்கும்.

  • கேள்வி - தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக அமைப்பு. அதிலிருந்து விக்கினேஸ்வரன் பிரிந்து செல்வது மக்களுக்கு எதிரானதாக அமையாதா?

பதில் - மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைப்பு என்பதற்காக அதனுடைய தவறுகளையும் பொறுப்பின்மைகளையும் ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட கட்சிகளும் தலைமைகளும் பல சந்தர்ப்பங்களிலும் தவறுகளை இழைத்திருக்கின்றன. இதற்கான தண்டனையை மக்கள் அடுத்த தேர்தலில் கொடுப்பார்கள். சில சந்தர்ப்பங்களில் தாம் தெரிவு செய்த கட்சிக்கோ தலைமைக்கோ எதிராக அதே மக்கள் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துவதும் உண்டு. தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக சிறிய அளவில் அங்கங்கே நடந்து கொண்டிருக்கும் எதிர்ப்புப் போராட்டங்கள் இந்த வகையானவையே. ஆனால், இது இன்னும் வலுவான எதிர்ப்பாக மக்களிடத்திலே உருவாகவில்லை. இதேவேளை அதுவரை பொறுத்தி்ருக்க முடியாது என்று புரிந்து கொள்பவர்கள் சம காலத்திலேயே தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதுண்டு. ஒரு கட்டத்தில் வெளியேறிச் செல்வதும் உண்டு. விக்கினேஸ்வரன் வெளியேறியிருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் பல ஏற்கனவே இருந்தன. அரசியலமைப்புத் தொடர்பான விவாதங்களின் போது, மாகாணசபையை இயக்குவது தொடர்பான பிணக்குகளின்போது, தன்மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழரசுக் கட்சி கொண்டு வந்தபோது, போர்க்குற்ற விசாரணையைப் பற்றிய மாறுபட்ட நிலைப்பாட்டை கூட்டமைப்பு வெளிப்படுத்தியபோது, மைத்திரி - ரணில் அரசு ஏற்றுக்கொண்ட உடன்பாடுகளை மீறத் தொடங்கியபோது எனப் பல சந்தர்ப்பங்கள் விக்கினேஸ்வரனுக்கு இருந்தது.

இவற்றில் எதையாவது ஒன்றை அல்லது இவற்றை வரிசைப்படுத்தி, மக்களின் முன்னே இதைப்பற்றித் தெளிவாக்கிக் கொண்டு தன்னுடைய பதவியைத் துறந்திருக்கலாம். அல்லது தனியணியாகவே பிரிந்து நின்றிருக்கலாம். அதை அவர் செய்யவில்லை. ஒரு மெய்யான தலைவர், சரியான தலைமைத்துவப் பண்புடையவர் அதையே செய்திருப்பார்.

இப்பொழுது எடுத்திருக்கும் நிலைப்பாடு என்பது மிகப் பிந்தியது. இது தன்னுடைய பதவியையும் காப்பாற்றிக் கொண்டு தனக்கான அரசியல் எதிர்காலத்தையும் பெற முயற்சிக்கும் சுருங்கிய - குறுகிய எண்ணங்களின் வழியானது. ஆகவே இதற்கான பெறுமதி வரலாற்றில் குறைவாகவே இருக்கும்.

  • கேள்வி - ஒற்றுமையே பலம் என்பது தமிழ் மக்களுடைய நீண்டகால நிலைப்பாடு. இதற்கு எதிராக விக்கினேஸ்வரன் செயற்படுகிறாரா?

பதில் - ஒற்றுமை, ஒருங்கிணைந்த செயற்பாடுகள் அவசியமானவையே. அதற்காக அது சம்பிரதாயமான ஒற்றுமையாக, ஒருங்கிணைவாக இருக்க முடியாது. கூட்டமைப்பின் ஒற்றுமை, ஒருங்கிணைவு என்பதெல்லாம் எவ்வளவு தூரம் உண்மையானது என்பது மக்களுக்கும் தெரியும். ஏன் கூட்டமைப்பில் பங்காளிகளாக இருந்த கஜேந்திரகுமார், சுரேஸ் பிரேமச்சந்திரன் தரப்பினருக்கும் தெரியும். இன்னும் கூட்டமைப்புடனிருக்கும் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் தரப்பினர்களுக்கும் நன்றாகவே தெரியும். இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ் மக்களின் பலம் சிதறி விடக்கூடாது. ஒற்றுமையே பலம். நாமெல்லாம் ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர்களே ஒவ்வொரு கட்டத்திலும் ஒற்றுமைக்கு எதிராக உடைத்துக் கொண்டு வெளியேறிச் சென்றிருக்கிறார்கள். முன்பு கஜேந்திரகுமார் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) பிறகு சுரேஸ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) அண்மையில் அனந்தி சசிதரன் (ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்) போன்ற எல்லாரும் ஒற்றுமையைத் தீவிரமாக வலியுறுத்தியவர்களே.

இப்படிக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் தாம் நம்பிய, தாம் கருதிய ஒற்றுமை என்ற எண்ணக்கருவுக்கு (சனங்களின் கூட்டுணர்வுக்கு) விசுவாசமாக இருந்திருந்தால் வெளியில் நிச்சயமாக ஒன்றுபட்டிருப்பார்கள். இப்படி ஆளுக்கொரு கட்சி - கன்னை - கட்டியிருக்க மாட்டார்கள்.

இப்பொழுது விக்கினேஸ்வரனும் இந்தத் தவறையே செய்திருக்கிறார். ஏற்கனவே இருக்கும் எந்தத் தரப்போடும் இணைந்து கொள்ளவில்லை. அதற்கு விரும்பவும் இல்லை. பதிலாக புதியதொரு கட்சியை - புதிய அணியை உருவாக்கியிருக்கிறார். இது மக்களின் கூட்டுப் பிரக்ஞைக்கும் கூட்டு நம்பிக்கைக்கும் எதிரானது ஆகவே இதெல்லாம் சுய முனைப்பு அரசியல் வெளிப்பாடு என்பதன்றி வேறென்ன? இதற்கு மேலும் இதைப் பற்றிப் புரியாது, இதையெல்லாம் ஏற்றுக் கொள்வோரை என்ன என்று சொல்வது? .

மறுவளமாக கூட்டமைப்பும் தான் வலியுறுத்திய ஒற்றுமைக்கு எதிராகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. தன்னைத் தானே சிதைக்கும் விதமாக அது செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. கட்டமைப்பிற்குள்ளே ஜனநாயகமின்மையே இதற்கெல்லாம் பிரதான காரணம். இன்னொரு காரணம், தெளிவான கொள்கையும் அதற்கான வழிமுறை பற்றிய விளக்கமின்மையும் எதையும் நடைமுறைப்படுத்தக்கூடிய மனப்பாங்கும் உழைப்பின்மையுமாகும்.

  • கேள்வி - விக்கினேஸ்வரனுடைய வெளியேற்றமும் புதிய கட்சி உதயமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு என்னமாதிரியான விளைவுகளை உண்டாக்கும்?

பதில் - விக்கினேஸ்வரனின் மீது பாரம்பரியமான முறையில் அரச ஒத்தோடி, காட்டிக் கொடுத்தவர், துரோகி, ஊழலுடன் தொடர்பு பட்டவர் என்றவாறான குற்றச்சாட்டுகளை எளிதாகச் சொல்லிவிட முடியாது. ஆனால், கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் அவ்வாறே கட்டமைக்க முயற்சிக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் அந்த வகையான பரப்புரை நடக்கிறது.   அதேவேளை அரசியல் செயற்பாட்டு விளைவைப் பொறுத்தவரையில் தன்னை ஒரு தலைவராகவோ அரசியல் ஆளுமையாகவோ விக்கினேஸ்வரன் நிரூபிக்கத் தவறி விட்டார். அவருடைய மாகாணசபை ஆட்சி தோற்றுப்போன ஒன்று. அதைப்பற்றிய பகிரங்க விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் பலராலும் முன்வைக்கப்பட்டுள்ளன. புதிய கட்சி உருவாக்கத்தின் போது கூட செயற்றிறன் மிக்கவராகவும் பலரையும் ஒருங்கிணைத்துச் செல்லக் கூடியவராகவும் விக்கினேஸ்வரன் தன்னை நிரூபிக்கவில்லை. முக்கியமாக தமிழ்த்தேசியக் கூட்மைப்பிற்குள்ளிருக்கும் புளொட், ரெலோ மற்றும் வேறு அதிருப்தியாளர்களையும் வென்றெடுப்பதற்கு விக்கினேஸ்வரன் தவறி விட்டார். அதைப்போல, ஏற்கனவே வெளியேறிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும் இணைக்கவில்லை. இதை விட இன்னும் பல தமி்ழ்க்கட்சிகளும் வெளி அரங்கில் உள்ளன. அவற்றோடு எந்தத் தொடர்புகளையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. மட்டுமல்ல, கிழக்கைப்பற்றிய சிரத்தையும் சிந்தனையும் இங்கே எடுக்கப்படவில்லை என்பது பெரிய குறைபாடு. இது விக்கினேஸ்வனை வடக்கிற்குள் மட்டுமே முடக்கியுள்ளது.

ஆனாலும் கூட்டமைப்புக்கு விக்கினேஸ்வரன் ஒரு தவிர்க்க முடியாத நெருக்கடியாளராகவே இருப்பார். விக்கினேஸ்வரனுடன் இணக்கமாக இருக்கும் சக்திகளில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு மட்டுமே கட்டமைப்பும் வலுவான ஆதரளவுத்தளமும் உண்டு. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தடுமாற்றத்திலிருக்கிறது. ஆனால், ஒரு கட்டம் வரையில் புலம்பெயர் தமிழர்கள் விக்கினேஸ்வரனை ஆதரிப்பார்கள். ஒரு தேர்தல் காலம் வரையில் இந்த ஆதரவை அவர்கள் வழங்குவர். பிறகு அவர்களுக்கும் கசந்து விடும்.


  • கேள்வி - தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?

பதில் - தற்போதைய நிலை என்பது குழப்பங்கள் நிறைந்தது. சிங்களத்தரப்புக்கு வெற்றியாக அமைந்தது. இந்தச் சூழல் ஏறக்குறைய மேலும் பத்தாண்டுகள் வரையில் நீடிக்கலாம். ஆனால் நிச்சயமாக மேலும் இருபது ஆண்டுகாலம் தமிழர்கள் பின்னடைந்துள்ளனர். 

  • கேள்வி – கொழும்பில் புதிய அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. விக்கினேஸ்வரனும் அவருடைய புதிய கட்சியும் இதில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கக் கூடும்?

பதில் – கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் உறுதியானவை என்று சொல்ல முடியாது.  குழப்பகரமானவையாகவே உள்ளன. ஆனாலும் உருவாகும் அரசியல் மாற்றங்கள், புதிய நிகழ்வுகளுக்கு ஏற்ப விசயங்களைக் கையாளக்கூடிய தொடர்பும் அவதானிப்புகளும் உறவுகளும் ஒரு கட்சிக்கும் தலைமைக்கும் இருக்க வேண்டும். விக்கினேஸ்வரனுடைய அரசியலிலும் கட்சியிலும் இதற்கான சாத்தியங்கள் குறைவே. தென்பகுதியோடு மட்டுமல்ல, முஸ்லிம், மலையகத் தரப்பிரோடும் சரி, பிராந்திய சக்திகளான இந்தியா, சீனா போன்றவற்றோடும் சரி, மேற்குலகத்தோடும் சரி அப்படியான உறவாடல்களைக் கொள்ளக்கூடிய அடையாளங்கள் தென்படவில்லை. இதற்குப் பன்முகச் சிந்தனை அவசியம். இங்கே விக்கி்னேஸ்வரன் தரப்பில் ஒருமைப்பட்ட சிந்தனையே மையமாகியுள்ளது.