Theneehead-1

   Vol:17                                                                                                                               30.10.2018

பிரேசில் அதிபர் தேர்தல்: சர்ச்சைக்குரிய வலதுசாரி தலைவர் பொல்சொனாரோ வெற்றி

பிரசாரத்தின்போது பொல்சொனாரோ.

பிரேசிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில், சர்ச்சைக்குரிய வலதுசாரி தலைவர் ஜெயிர் பொல்சொனாரோ (63) வெற்றி பெற்றுள்ளார்.பிரேசிலில் 30 ஆண்டுகளுக்கு மbrazுன்னர் நடைபெற்ற சர்வாதிகார ஆட்சியை ஆதரித்துப் பேசியதற்காக கடும் கண்டனத்துக்குள்ளான அவர், ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பின் பேரில் மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரேசிலின் புதிய அதிபர், துணை அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த மாதம் 7-ஆம் தேதி நடைபெற்றது. இதில், அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட ரியோ டி ஜெனீரோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயிர் பொல்சொனாரோ முதலிடத்தைப் பிடித்தார். எனினும், வெற்றி பெறுவதற்குத் தேவையான 50 சதவீத வாக்குகளை அவர் பெறவில்லை.

அதையடுத்து, அவருக்கும், அவருக்கு அடுத்த இடத்தைப் பிடித்த ஹெச்பிஏ கட்சி வேட்பாளர் ஃபெர்னாண்டோ ஹதாதுக்கும் இடையே இரண்டாவது சுற்றுத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 55 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று ஜெயிர் பொல்சொனாரோ வெற்றி பெற்றார். ஃபெர்னாண்டோவுக்கு 45 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே கிடைத்தன. ஏற்கெனவே, இந்தத் தேர்தலில் 18 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் பொல்சொனாரோ வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

எனினும், கடந்த சில நாள்களாக நடைபெற்ற பிரசாரத்தில் பொல்சொனாரோவுக்கும், ஃபெர்னாண்டோவுக்கும் இடையிலான போட்டி கடுமையானதாகக் கூறப்படுகிறது. கடுமையான வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட முன்னாள் ராணுவ அதிகாரியான பொல்சொனாரோ, முந்தைய சர்வாதிகார ஆட்சியைப் புகழ்ந்து பேசியது ஜனநாயக ஆதரவாளர்களிடையே கடும் கண்டனத்தை எழுப்பியது.மேலும், அவர் ஆட்சிக்கு வந்தால் பிரேசிலின் ஜனநாயகத்துக்குப் பின்னடைவு ஏற்படும் என்ற அச்சமும் எழுந்தது.

இதன் காரணமாக, கடைசி நேரத்தில் பிரேசிலின் முக்கியப் பிரமுகர்கள் பொல்சொனாரோவுக்கு எதிராக களத்தில் குதித்ததால் ஃபெர்னாண்டோவுடனான போட்டி அவருக்கு கடுமையானதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுமார் 10 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் பொல்சொனாரோ வெற்றி பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜனநாயகத்தைக் காப்பேன்: பிரேசிலில் நடைபெற்று வந்த சர்வாதிகார ஆட்சிக்கு ஆதரவாகப் பேசியிருந்தாலும், தேர்தலில் வெற்றி பெற்றதற்குப் பிறகு பிரேசிலின் ஜனநாயகத்தைக் காப்பதாக பொல்சொனாரோ வாக்குறுதி அளித்தார். பிரேசில் அதிபராக பொல்சொனாரோ வெற்றி பெற்றதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்