28 வருடங்கள் இராணுவ வசம் இருந்த கட்டிடம் மீண்டும் ஒப்படைப்பு

மன்னார் நகர நுழைவாயிலில் சுமார் 28 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடம் இன்று (29) mannar fort1மதியம் மன்னார் நகர உதவி பிரதேசச் செயலாளர் திருமதி. சிவசம்பு கணகாம்பிகையினால் கூட்டுறவு திணைக்கள அதிகாரியிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான அவசர கலந்துரையாடல் கடந்த சனிக்கிழமை (27) காலை 10 மணி அளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது கலந்து கொண்டிருந்த வடமாகாண ஆளுனர் ரெஜினோலட் குரே, மன்னார் நகர நுழைவாயிலில் இராணுவத்தின் வசம் காணப்பட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடத்தினை உடனடியாக பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திடம் கையளிக்குமாறு பிரதேசச் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

வடமாகாண ஆளுனரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த கட்டிடம் இன்று (29) மதியம் இராணுவத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டது.

எனினும் குறித்த கட்டிடத்தில் இருந்து இராணுவம் முழுமையாக வெளியேறாத நிலையில் எதிர்வரும் புதன் கிழமை (31) வரை இராணுவம் முழுமையாக வெளியேற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் மன்னார் நகர உதவி பிரதேசச் செயலாளர் திருமதி. சிவசம்பு கணகாம்பிகை, மன்னார் பிரதேசச் செயலக காணி அலுவலகர் க.வசந்தன், கூட்டுறவு திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கூட்டுறவு திணைக்கள கட்டிடம் அமைக்கப்பட்டு 1969 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி அன்று அப்போதைய விவசாய உணவு அமைச்சர் எம்.டி.பண்டாரவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக குறித்த கட்டிடத்தினை 1990 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 28 வருடங்கள் இராணுவத்தின் வசம் குறித்த கட்டிடம் காணப்பட்டது.

இந்த நிலையிலே சுமார் 28 வருடங்களின் பின்னர் குறித்த கட்டிடம் இராணுவத்திடம் இருந்து மீள பெற்றுக்கொள்ளப்பட்டு கூட்டுறவு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Theneehead-1

   Vol:17                                                                                                                               30.10.2018